சென்னை – 2 ! விழித்துக்கொள்ளுமா இந்தியா ?

நாளை (13/2/21) ஆரம்பிக்கிறது அதே சென்னையில் இரண்டாவது டெஸ்ட். இந்தமுறை கருப்புமண்ணால் நிரப்பப்பட்டிருக்கும் பிட்ச் நம்பர் 5-ல் ஆட்டம். முதல் நாளிலேயே வேலையைக் காண்பிக்க ஆரம்பிக்கும், பந்து திரும்பும்.. என்றெல்லாம் கணிப்புரை தொடங்கிவிட்டது. இங்கிலாந்து அணியில் உற்சாகம். நேர்மாறான மனநிலையில் கோஹ்லியின் அணி. இந்தியா டாஸ் ஜெயிக்க… சரி, இது வேண்டாம். முதல் இன்னிங்ஸில் ரன் சேர்ப்பதே சிரமமாக இருக்கக்கூடும், பிட்ச் பற்றிய கணிப்பு சரியாக இருந்தால். இந்தியாவின் டாப்-5 – ரோஹித், கில் (Gill), புஜாரா, கோஹ்லி, ரஹானே இந்தப் பிட்ச்சில் எப்படி ஆடுவார்கள் என்பதைப் பொறுத்துத்தான் ரிசல்ட் அமையும்.

இங்கிலாந்து அணியில் மாறுதல்கள் அறிவிக்கப்பட்டுவிட்டன. வேகப்பந்துவீச்சில் அதிரடி மாற்றம். ஜோஃப்ரா ஆர்ச்சருக்குக் காயம். ரிவர்ஸ்-ஸ்விங் காட்டிய ஆண்டர்ட்சனும் ஆடவில்லை. மாற்றாக ஸ்டூவர்ட் ப்ராட் (Stuart Broad) மற்றும் ஓல்லி ஸ்டோன் (Olly Stone) / க்றிஸ் வோக்ஸ் – இருவரில் ஒருவர் வேகப்பந்துவீசக்கூடும். ஏனோ ஸ்பின்னர் டாம் பெஸ்ஸை (Dom Bess) எடுத்துவிட்டார்கள். பதிலாக இந்தியாவில் சிறப்பாக  பேட்டிங் செய்யும் ஸ்பின்னரான மொயீன் அலி உள்ளே. விக்கெட்கீப்பர் பட்லருக்கு ஓய்வாம். ரிசர்வ் விக்கெட்கீப்பர்  பென் ஃபோக்ஸிற்கு (Ben Foakes) வாய்ப்பு.

Axar Patel
Left-arm orthodox Spinner

இந்திய அணி? குழப்பம் தீர்ந்ததா கோஹ்லி-சாஸ்திரி ஜோடிக்கு? தெரியவில்லை. ஃபிட்டாகிவிட்ட ஆல்ரவுண்டர் அக்‌ஷர் பட்டேல்,( நதீமின் இடத்தில் ) தன் முதல் டெஸ்ட்டை ஆட வாய்ப்பிருப்பதாகத் தோன்றுகிறது. அது அணிக்கு வலிமை சேர்க்கும். பந்தை உள்ளே திருப்பும் இடது கை ஸ்பின்னர். பேட்டிங் திறமையும் உண்டு. இது மிக முக்கியம் இந்திய அணிக்கு இப்போது. ஆரம்பமே நொறுங்கினால் 7, 8-ஆவது ஆளாவது கவனமாக ஆடி, 30-40 சேர்த்து அணியை கௌரவமான நிலைக்குத் தள்ளவேண்டியிருக்கும். குல்தீப் யாதவும் வரலாம் எனவும் சிலர் யூகம். யாரிடத்தில்? வாஷிங்டன் சுந்தரின் இடத்தில்! குல்தீப் உள்ளே வருவது உபயோகமாக இருக்கும். ஆனால் போன டெஸ்ட்டில் அருமையாக பேட்டிங் செய்த சுந்தரை வெளியே போகச்சொல்வது, அபத்தக் கதையின் அடுத்த அத்தியாயமாக அமையும்.

முகமது சிராஜ் நல்ல ஃபார்மில், துடிப்போடு இருக்கும் வீரர். விக்கெட் வீழ்த்தும் ஆவேசத்தோடு, ஸ்விங் திறனும் காண்பித்தவர். அவர் அணிக்குள் நுழைவது அணிக்கு பலம் கொடுக்கும். யார் வெளியே போகவேண்டியிருக்கும்? பும்ராவின் யார்க்கர்கள்  சரியாக விழுகின்றன. விக்கெட்டுகளும் பரவாயில்லை. அதனால்  இஷாந்தின் இடத்தில், சிராஜ் ஆடினால் நாளைய பிட்ச்சில் எடுபடும் எனத் தோன்றுகிறது.

நமக்குத் தோன்றி என்ன செய்ய! ‘Ko-Sha’-வுக்குத் தோன்றவேண்டுமே..

**