தென்னாப்பிரிக்காவை ‘வெள்ளையடித்த’ இந்தியா

இவ்வளவு பரிதாப டெஸ்ட் தொடர் தோல்வியை, தென்னாப்பிரிக்கா அந்நிய மண்ணில் இதுவரை சந்தித்ததில்லை. உண்மையில், வெளிநாட்டுத் தொடர்களை நன்றாகவே ஆடும் அணி என்கிற நல்லபெயர் கொஞ்சகாலம் அதற்கு இருந்திருக்கிறது. இந்தியா வந்து, ஆடமுடியாமல் தடுமாறி, இப்படித் தலைகுப்புற விழுவோம் என அவர்களே எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். இந்தத் தொடரில் இந்தியாவிடம் இரண்டாவது ஃபாலோ-ஆன் வாங்கி இறுதியில்,  0-3 whitewash ! இந்த அணி நாடு திரும்பி, தங்களின் கிரிக்கெட் போர்டுக்கு என்ன பதில் சொல்லுமோ?

தென்னாப்பிரிக்க டாப்-ஆர்டர் பேட்ஸ்மன்கள், கொஞ்சம் க்ரீஸில் நின்று,, ஓடி, ஆடி ரன் சேர்த்திருந்தால் இந்த அவலம் ஏற்பட்டிருக்காது. இந்திய பௌலர்கள் அப்படி ஒன்றும் சூப்பர் ஸ்டார்களாகத் தெரியவில்லை. தென்னாப்பிரிக்கர்கள் எதிர்பார்த்து மிரண்டது இந்திய ஸ்பின்னர்களை.  ஆனால், விக்கித்திக்கி விளையாடமுடியாமல் நொறுங்கியது வேகப் பந்துவீச்சாளர்களிடம்! குறிப்பாக முகமது ஷமியும், உமேஷ் யாதவும் தென்னாப்பிரிக்கர்களை துவைத்துக் காயப்போட்டுவிட்டார்கள். இதை கோஹ்லியே எதிர்பார்த்திருந்திருக்கமாட்டார்! ஏனெனில் இந்தியாவுக்கு ஆடவரும் வெளிநாட்டு அணிகளுக்கு, வேகப்பந்துகள் ஒரு பிரச்னையே கிடையாதே. இந்திய பிட்ச்சுகள் வேகப்பந்துவீச்சுக்குத் தோதானதாக என்றும் இருந்ததில்லையே.

ராஞ்சியில் நான்காவது நாளான இன்று (22/10/19), மிச்சமிருந்த இரண்டு விக்கெட்டுகளுடன் ஆடிய தென்னாப்பிரிக்க அணியின் சோகக்கதையை முடிக்க, இந்தியர்களுக்கு இரண்டு ஓவர்களே போதுமானதாக இருந்தது. முதல் ஓவர் ஷமியின் மெய்டன். இரண்டாவது ஓவர் இடதுகை சுழல்வீச்சாளர் ஷாபாஸ் நதீம். அவருடையை கடைசி இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட்டும் காலி! தென்னாப்பிரிக்காவிற்கு நேரமே சரியில்லை என்பதைக் கடைசி விக்கெட் விழுந்த விதம் மேலும் உறுதி செய்தது. நதீமின் அந்த ஓவரின் கடைசி பந்து விக்கெட் எடுக்கும் பந்தே இல்லை. அதை அவர்களது கடைசி பேட்ஸ்மன் லுங்கி இங்கிடி ஒரு க்ராஸ்-பேட் ஷாட் அடிக்கிறார். Powerful shot. ஆனால் பந்து என்ன செய்தது? பௌலருக்கு இடது புறமாகப் பாய்ந்த பந்து, நேராக எதிரே நின்ற ஆன்ரிக் நோர்த்யாவின் கையில் பட்டுத் தெறித்துத் திரும்பியது – பௌலர் நதீம் நின்ற திசையில்! கணநேர எதிர்பார்ப்பில் கையேந்த, அந்த rebound நதீமின் கையில் லட்டுபோல் இறங்கியது. Ngidi.. caught and bowled Nadeem ! தென்னாப்பிரிக்கா 133-ல் ஆல் அவுட். அதன் ’டெஸ்ட்’ போராட்டம் அதிரடியாக முடிவுக்கு வந்தது. இன்னிங்ஸின் டாப் ஸ்கோர் 30. நேற்று (21/10/19) எல்கருக்கு (Dean Elgar) உமேஷ் யாதவின் பௌன்ஸரில் காதுக்குமேல் பட்ட அடியினால், அவர் சுருண்டு கீழே விழ, மெடிக்கல் ஸ்டாஃப் அவரை அழைத்துக்கொண்டு வெளியேறினார்.  அவருக்கு பதிலாக concussion substitute -ஆக வந்த டி ப்ருய்ன் (T. de Bruyn) எடுத்த ரன்கள், அந்த 30.

சில நிமிடங்களில், ‘Freedom Trophy’ என அழைக்கப்படும் ‘காந்தி-மண்டேலா’ கோப்பை விராட் கோஹ்லியின் கையில் ! கோஹ்லிக்கு அவருடைய ஸ்டாரோ, அல்லது தர்ம பத்தினி அனுஷ்கா ஷர்மாவின் ஸ்டாரோ – ஏதோ ஒன்று வெளுத்துவாங்கிக் கொண்டிருக்கிறது, சந்தேகமில்லை. ஆனால் இப்படிச் சொல்லி தென்னாப்பிரிக்கக் கேப்டன் டூ ப்ளஸீயைத் தேற்றமுடியாது!

சுருக்கமாக ஸ்கோர்: இந்தியா: 497/9 (ரோஹித் 212, ரஹானே 115, ஜடேஜா 51)

தென்னாப்பிரிக்கா 1st Innings  :   162 (ஹம்ஸா 62, லிண்ட(Linde) 37)

2nd Innings :  133 (டி ப்ருய்ன் 30)

தொடரில் இந்தியாவுக்கு மூன்று இரட்டைச் சதங்கள். ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. மயங்க் அகர்வால், விராட் கோஹ்லி மற்றும் ரோஹித் ஷர்மா – விளாசித் தூள்கிளப்பி,  ரசிகர்களைக் குஷிப்படுத்தினார்கள்.

இந்த மேட்ச்சில் சொல்லிவைத்தாற்போல் ஆளுக்கு ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள் முகமது ஷமியும், உமேஷ் யாதவும். ஸ்விங் மற்றும் துல்லியம் எதிரிகளைப் புரட்டிப்போட்டது. அஷ்வின், ஜடேஜா, நதீம் ஆகிய ஸ்பின்னர்கள் இவர்களுக்கு second fiddle-தான் வாசித்தார்கள். ( தென்னாப்பிரிக்காவுக்கு டேல் ஸ்டெய்ன் இல்லாததுபோல், இந்தியாவுக்கு ஜஸ்ப்ரித் பும்ரா  அணியில் இல்லை. ) இருந்தும் ஏன் துவண்டது தென்னாப்பிரிக்கா என்பது இப்போதைய million dollar question.

100-க்கும் மேல் first class matches விளையாடிய அனுபவத்தோடு, தாமதமாக வாய்ப்புப் பெற்றுத் தன் முதல் டெஸ்ட் ஆடிய ஸ்பின்னர் ஷாபாஸ் நதீமுக்கு போட்டியில் 4 விக்கெட்டுகள். மனுஷன் நன்றாக சுழற்றினார் பந்தை. இந்திய டீமுக்கு நல்லதொரு சேர்ப்பு. இந்த மேட்ச்சில் 212 அடித்தார் ரோஹித். இரண்டு சதங்களை முதல் மேட்ச்சில் சாத்தியிருந்தார். அவருக்கே இரண்டு விருதுகளும் – ஆட்டநாயகன், தொடர் நாயகன். குறைந்த ஓவர் போட்டிகளில் ‘ஹிட்மேன்’ என ரசிகர்களால் சிலாகிக்கப்படும் ரோஹித், டெஸ்ட் அரங்கிலும் நான் சளைத்தவனில்லை எனக் காண்பித்துவிட்டார். ரோஹித்தைக் குறை சொல்லியே பொழுதுபோக்கும் பத்திரிக்கையாளர்கள் /விமரிசகர்கள் இந்தப் புள்ளியில் விலகிக்கொள்ளவும்.. வேறுபக்கமாக ஓடிவிடவும் !

**

4 thoughts on “தென்னாப்பிரிக்காவை ‘வெள்ளையடித்த’ இந்தியா

  1. ஆட்டம் நேரடியாகப் பார்க்காததால் கடைசி விக்கெட் வீழ்ந்த விதம் அறியாமல் இருந்தேன்.   நீங்கள் சொல்லி தெரிந்தது.  மொபைலில் ஏதோ ஹைலைட் போல வந்ததை பார்த்து குழம்பி இருந்தேன்.  கோஹ்லிக்கு அதிருஷ்டம்!   இன்றைய செய்தித் தாளில் மேட்சுக்கு நடுவே ரவி ஷாஸ்திரி தூங்கிக் கொண்டிருக்கும் படத்தைப் போட்டிருந்தார்கள்.

    Like

    1. @ ஸ்ரீராம்:
      கோஹ்லியைவிட சாஸ்திரிக்கு அதிர்ஷ்டமோ அதிர்ஷ்டம். நீங்களோ, நானோ மூலையில் உட்கார்ந்து இப்படித் தூங்கினால் எவனாவது 10 கோடி தருவானா!

      Like

  2. முற்றிலு ம் எதிர்பார்க்காத தொல்வி

    Like

    1. @ பாலசுப்ரமணியம் ஜி.எம். :

      ஆம். தென்னாப்பிரிக்கா தொடர் முழுதும் இப்படி வழிந்து பார்த்தது, இதுவே முதல் தடவை.

      Like

Leave a comment