விராட் கோஹ்லி 149 !


இங்கிலாந்தின் எட்ஜ்பாஸ்டனில் (Edgbaston, Birmingham) இந்தியா விளையாடிவரும் தொடரின் முதல் டெஸ்ட் மேட்ச்சின் இரண்டாவது நாள்தான் நேற்று. இனி என்னென்ன வரப்போகின்றன என்பதற்கான அறிகுறிகள், அதற்குள்ளாகவே தென்பட ஆரம்பித்துவிட்டன.

2014-ல் இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரில், தோனியின் தலைமையில் ஆடிய இந்தியா 1-3 என்ற கணக்கில் மண்ணைக் கவ்வியது. ஆண்டர்சன் (Anderson), ப்ராட்(Broad) போன்றோரின் ஸ்விங் பௌலிங்கைத் தாங்கமாட்டாமல் ஏற்பட்ட தலைக்குனிவு. முரளி விஜய்யைத் தவிர வேறு எந்த இந்திய பேட்ஸ்மனின் சராசரியும் 40 ஐத் தாண்டவில்லை. அந்தத் தொடரில், நடப்புக் கேப்டனான விராட் கோஹ்லியின் பேட்டிங் சராசரி 13.40. இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளரான ஆண்டர்சன் திரும்பத் திரும்ப கோஹ்லியை அவுட்டாக்கி அவரது மானத்தை வாங்கிவிட்டார் அப்போது. இத்தகைய நினைவுகளோடுதான் இந்தமுறை இங்கிலாந்தில் நுழையவேண்டியிருந்தது கோஹ்லிக்கு.

இரண்டு நாட்களாக நடந்துகொண்டிருக்கும் முதல் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்தின் 287 என்கிற முதல் இன்னிங்ஸிற்கு பதிலாக இந்தியா நேற்று பேட்டிங் செய்தது. கோஹ்லி ஆடவந்தபோது, இந்தியாவின் நிலை பரிதாபம். முதலில் விஜய்யும், ராகுலும், பிறகு தவணும் பெவிலியனுக்குத் திரும்பிவிட்டிருந்தார்கள். 59 க்கு 3 விக்கெட். கோஹ்லியைக் கடித்துத் தின்னத் துடித்துக்கொண்டிருக்கும் ஆண்டர்சன். ஒரு பக்கம் ரன்கள் ஏற மறுக்க, இந்திய மிடில் ஆர்டர் விக்கெட்டுகள் சீட்டுக்கட்டாய் சரிந்துகொண்டிருந்தன. 3 ஸ்லிப்புகள், கலி (Gully) என்று நிறுத்திவைத்து, ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வேகத்தாக்குதல் நடத்தி கோஹ்லியைத் திக்குமுக்காடவைத்துக்கொண்டிருந்தார் அவரது பரம வைரி ஆண்டர்சன். போறாக்குறைக்கு 20 வயதுப் பொடியன் ஒருவன் 3 இந்திய விக்கெட்டுகளை அனாயாசமான ஸ்விங்கில் சுருட்டி, அவன்பாட்டுக்கு வித்தை காண்பித்துக்கொண்டிருந்தான். ஸாம் கர்ரன் (Sam Curran). ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes) வேறு இடையே புகுந்து கலக்கிக்கொண்டிருக்க இந்தியாவுக்கு ஆக்ஸிஜன் தேவைப்பட்டது. கார்த்திக் அவுட் ஆகையில் இந்திய ஸ்கோர் 5 விக்கெட் இழப்புக்கு 100 என வயிற்றில் புளியைக் கரைத்தது. விராட் கோஹ்லி தனி ஒரு மனிதனாக எதிர்த்து நிற்பதாகவே தோன்றியது. மூழ்கும் கப்பலின் அப்பாவிக் கேப்டனா?

ஏற்கனவே முடிவுகட்டியே வந்திருந்தார் போலும் கோஹ்லி. விஜய் பாணியில் ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே சீறி எழும் ஆண்டர்சன் பந்துகளை அடிக்காது பின்பக்கம் போகவிட்டார். இடையிடையே ஏதோ தொடப்போய் ஸ்லிப்பிற்கு கேட்ச் பறந்தது. ஆனால், கோஹ்லிக்கோ இந்தியாவுக்கோ அப்போது நல்ல நேரமாக இருந்திருக்கிறது. தொடை உயரத்தில் வந்த கேட்ச்சைப் பிடித்து நழுவவிட்டார் டேவிட் மலான் (David Malan). பிழைத்தார் கோஹ்லி. அதற்குப்பின் வெகுநேரம் கோஹ்லியின் ஸ்கோர் 21-ஐவிட்டு நகர்வேனா என்று அடம்பிடித்தது. ஆல்ரவுண்டர்களில் ஹர்திக் பாண்ட்யா கொஞ்ச நேரம் கோஹ்லிக்கு கம்பெனி கொடுத்தார். அவர் போனதும் வந்த அஷ்வினை, காலந்தாழ்த்தாது காலி செய்தார் ஆண்டர்சன். 169-க்கு 7 விக்கெட். ம்ஹூம்! தேறாது இந்தியா என்று தெரிந்துவிட்டது. ஆனால் கேப்டன் விடுவதாக இல்லை. தடுத்தாடியும், நெருக்கித்தள்ளியும் சிங்கிளும், இரண்டுமாக ஓடிக்கொண்டிருந்த கோஹ்லிக்கு கூட ஆடுவது இருக்கட்டும், ஓடக்கூட ஆளில்லை என்றே தோன்றியது. ஏனெனில் இனி வந்தவர்கள் பேட்ஸ்மன்கள் என்று சர்வதேசத் தரத்தில் சொல்ல லாயக்கற்றவர்கள். இந்தியக் கணக்குப்படியேகூட வெறும் பௌலர்கள். முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ் இந்தியாவின் 9, 10, 11-ல் வரும் காகிதப் புலிகள். இவர்களை வைத்துக்கொண்டா கோஹ்லி மேற்கொண்டு ஏதாவது செய்யமுடியும்?

ஷமி விரைவிலேயே வெளியேறிவிட்டார். பின் வந்த இஷாந்த் நிற்பதற்கே தடுமாறினார். தைரியப்படுத்தி, தட்டிக்கொடுத்து, சீறும் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சுக்கு பலியாக்கிவிடாமல் அவரைப் பாதுகாத்து, தானே நிறையப் பந்துகளை எதிர்கொண்டு சாமர்த்தியம் மிகக் காட்டி ஆடினார் கோஹ்லி. இந்த சமயத்தில், ஒரு பக்கமாக கோஹ்லியின்மீது ஆண்டர்சனின் அதிரடி தாக்குதல் தொடர்ந்தவாறே இருந்தது. எப்படியாவது கோஹ்லியைத் தூக்கி வெளியே வீசாமல் ஆண்டர்சனும் போவதாக இல்லை. இன்னொரு பக்கம் ஸ்டோக்ஸ் தன் இன்–ஸ்விங்கர்களைத் தெளித்துக்கொண்டிருந்தார். இக்கட்டான நிலையிலும், சந்தடிசாக்கில் அவ்வப்போது பௌண்டரி விளாசியதில், கோஹ்லியின் ஸ்கோர் 70, 80 என மேலேறி வந்துகொண்டிருந்தது. ஆயினும், ஒரு கட்டத்தில் இங்கிலாந்தின் 287 என்கிற முதல் இன்னிங்ஸ் ஸ்கோருக்கெதிராக, இந்தியாவால் 187 கூட எடுக்க முடியாது எனவே தோன்றியது. இஷாந்தைப் பொத்திப் பொத்திப் பாதுகாத்து, தானும் அவுட்டாகிவிடாமல் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு ஆடிய கோஹ்லி, இந்தியாவின் ஸ்கோரை 200-க்கும் தாண்டிக் கொண்டுவந்துவிட்டார். இரண்டு எல்பிடபிள்யூ-க்களில் டிஆர்எஸ்-இல் தப்பித்த இஷாந்த், ரஷீத்தின் பந்தில் வெளியேறினார். அதுவும் உண்மையில் அவுட் இல்லை என ரீப்ளேயில் தெரிந்தது. இந்திய ஸ்கோர் 217. 9 விக்கெட்டுகள் காலி. இருந்தும், கோஹ்லி இன்னும் போய்த்தொலையவில்லையே என இங்கிலாந்தின் எரிச்சல் எகிறியது. தொண்ணூறை நெருங்கிவிட்டிருந்தார் இந்தியக் கேப்டன். சதம் கூட அடித்துவிடுவாரோ?

இந்தியாவின் கடைசி ஆளாக, கையில் மட்டையுடன் வந்து நின்றார் உமேஷ் யாதவ். யாதவிடம் போய்ப்பேசித் தட்டிக்கொடுத்தார். பதற்றத்தைத் தணிக்க முயற்சித்தார் கோஹ்லி. இந்தியக் கேப்டனுக்கு, தான் பொறுப்பாக ஆடுவதோடல்லாமல், வேறென்னென்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது மைதானத்தில்? ஃபீல்டர்கள் எனும் பெயரில், கொத்தித் தின்ன இங்கிலாந்துக் கழுகுகள் விழித்துக் காத்திருந்தன. அவர்களுக்குத் தேவை இன்னும் ஒருவிக்கெட். யார் அவுட்டாகித் தொலைந்தால்தான் என்ன? இந்தப் பதற்றத்துக்கு நடுவே இரண்டு பௌண்டரிகளைப் பறக்கவிட்டு, கோஹ்லி சதம் கடந்தார். இந்திய ரசிகர்கள்-அதில் சிலர் கொடி பறக்கவிட்டுக்கொண்டிருந்த சீக்கிய இளைஞர்கள், குழந்தைகள் குதூகலித்தனர். அவர் சதத்தைக் கொண்டாடினாரே தவிர, கவனமெல்லாம் உமேஷை வைத்துக்கொண்டு இன்னும் கொஞ்சம் ஓட்ட வேண்டும். இங்கிலாந்தின் ஸ்கோரை நெருங்கிவிடவேண்டும் என்கிற சிந்தனைதான். கோஹ்லியை விட்டுவிட்டு, உமேஷை உற்றுப் பார்த்தது இங்கிலாந்து. இதை அறிந்திருந்த கோஹ்லி ஒவ்வொரு ஓவரிலும் முதல் நாலைந்து பந்துகளைத் தானே ஏற்று ஆடினார். ரன் எடுக்க வாய்ப்பிருந்தும் சிங்கிள்களை எடுக்கவில்லை. எங்கே உமேஷ் வந்து இந்தப் பக்கம் நிற்க, அவரை ஓரிரண்டு பந்துகளிலேயே காலி செய்துவிடுவார்களோ என்கிற பதற்றம். ஓவரின் ஐந்தாவது அல்லது கடைசி பந்தில் சிங்கிள் எடுத்து அடுத்த பக்கம் ஓடுவார் கோஹ்லி. அடுத்த ஓவரையும் தானே எதிர் கொள்வார். இப்படி கயிற்றின்மேல் வித்தை காண்பித்துக்கொண்டிருந்தார் அவர். இடையிடையே லூஸாக வந்த பந்துகள் அவர் மட்டையை வேகமாகச் சந்தித்து பௌண்டரிக்குப் பறந்தன. அணிக்கு ரன்னும் சேர்த்தாக வேண்டுமே, நின்றால் போதுமா?

இப்படியாகத்தானே, ஒரு சாகஸ ஆட்டத்தை வெளிப்படுத்தி, இந்திய ஸ்கோரை, 274 வரை கொண்டு வந்து, இங்கிலாந்தைத் திணறவைத்துக் காட்டினார் கோஹ்லி. 149 எனும் இங்கிலாந்துக்கெதிரான தன்னுடைய அதிகபட்ச ஸ்கோரில் அவுட்டானார் இந்தியக் கேப்டன். நிச்சயமாக கோஹ்லியின் அதிஜோரான இன்னிங்ஸ்களில் ஒன்றாக இது கருதப்படும். துணிச்சலுக்கும், சாமர்த்தியத்திற்கும் பேர்போன ஒரு தலைவனின் பங்களிப்பு. உமேஷ் யாதவுடனான, பத்தாவது விக்கெட்டுக்கு அவர் கொடுத்த பார்ட்னர்ஷிப் 57 ரன்கள். அதில் உமேஷின் பங்கு 1 ரன். மிச்சமெல்லாம் கோஹ்லியின் சர்க்கஸ்!

தொடர் இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறது. முதல் போட்டியிலேயே இன்னும் 3 நாட்கள் பாக்கி. மேலும் மேலும் விரியும். காட்சிகள் அரங்கேறும். கேப்டனின் இந்த ஒப்பற்ற ஆட்டத்திலிருந்து நமது மற்ற வீரர்கள் ஏதாவது கற்றுக்கொண்டார்களா என்பதும் போகப்போகத்தான் தெரியும்.

**

13 thoughts on “விராட் கோஹ்லி 149 !

 1. இந்திய மட்டை வீச்சாளர்கள்எதிர்பார்ப்புகளை உணர வேண்டும் மேலும்கன்சிஸ்டென்சியாகவும் ஆடவேண்டும்

  Liked by 1 person

  1. @Balasubramaniam G.M :
   நீங்கள் சொல்கிற கன்சிஸ்டென்சி இந்திய பேட்ஸ்மன்களுக்குப் பெரிய ப்ராப்ளம். இந்திய இரண்டாவது இன்னிங்ஸ் துவங்கிவிட்டது.. என்ன நடக்குமோ!

   Like

 2. நேற்று கோஹ்லியின் ஆட்டம் கண்களில் ஒற்றிக்கொள்வது போல ஒரு ஆட்டம். இங்கிலாந்து ரசிகர்களின் கிண்டல் “பூ……….”க் கூக்குரல்களை மீறி அவர் ஆடியது அவரது தீர்மானத்தைக் காட்டியது.

  Liked by 1 person

 3. இந்த ஷிகர் தவானை (சனியன்) ஏன் எடுக்கிறார்கள் என்றே தெரியவில்லை. இதோ இப்போது கூட ரஷீதின் கேட்சை இரண்டுமுறை நழுவ விட்டு விட்டு பெருமையாக சிரிக்கிறார். கோஹ்லி சிபாரிசு போலும். எரிச்சல் வருகிறது. அதே 20 வயஸி கரன்தான் இப்போதும் இங்கிலாந்தைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்.

  Like

 4. ரஷீத் பந்தில் இஷான் அவுட் என்று வெளியேறினாலும் அதற்கும் ரெவியூ கேட்டிருந்தால் பிழைத்திருப்பார். அநியாயத்துக்கு வெளியே சென்ற பந்து.

  Like

 5. நடுவர்கள் இங்கிலாந்துக்கே குடை பிடித்துக் கொண்டிருப்பது போலத் தோன்றியது அவர்கள் இஷானுக்கு மறுபடி மறுபடி அவுட் கொடுத்துக் கொண்டிருந்தபோதும், கோஹ்லி, கேட்ச் பிடித்த பந்தை நழுவ விடுவது போல ரூட்டை கலாய்த்ததற்கு நடுவர்கள் எச்சரிக்கை தர, ரூட்டும் இன்னொரு ஆட்டக்காரரும் இதில் என்ன இருக்கிறது என்று சொல்லி நடுவர்கள் மூக்கை உடைத்தனர்.

  Like

  1. @ ஸ்ரீராம்:
   இஷாந்த் ஷர்மாவை வீட்டுக்கு அனுப்புவதில் அந்த இங்கிலீஷ் அம்பயர் குறியாக இருந்ததை நானும் கவனித்தேன். நீங்கள் சொல்கிறபடி அவர் ரஷீத் பந்திலும் அவுட் இல்லை
   .
   நமது ஸ்லிப் ஃபீல்டிங் ஆக மோசமான ஃபீல்டிங்குகளில் ஒன்று. தவண் கேட்ச்சை நழுவ விட்டதையும், அசட்டு சிரிப்ப்பு சிரித்ததையும் கண்டேன். க்ரிக்கின்ஃபோ வர்ணனையாளரும் தவண் பற்றி ‘இப்படி கேட்ச்சை விட்டுவிட்டு வாயைத்திறந்து பெரிதாக சிரிக்கும் ஃபீல்டர் இவர் ஒருவராகத்தான் இருக்கும்’ என்று எழுதியிருந்ததைப் படித்தேன்.

   இங்கிலாந்தின் ரியல் ஸ்டார் , ஸாம் கர்ரன் தான். 20 வயதில் என்ன ஒரு பேட்டிங் டேலண்ட். அவர் அஷ்வினை ஆடிய விதம் ப்ரமாதம். அடுத்த மேட்ச்சில் அவரை ப்ரொமோட் செய்து 6 அல்லது 7-ல் அனுப்புவது நல்லது. ஆண்டர்சன், ப்ராட் என எண்ணியே களம் இறங்கிய இந்தியர்களைத் திணற அடித்துவிட்டார். மேலும் இந்த தொடரில் அவரிடமிருந்து நிறைய எதிர்பார்க்கலாம்.

   புஜாராவை எடுத்ததே சரியில்லை எனத்தான் தோன்ற்கிறது – என்னதான் அவர் ஃபார்மிலில்லை என்றபோதிலும். இரண்டாவது இன்னிங்ஸில் கோஹ்லியை நம்பியிராமல் மற்றவர்கள் பொறுப்பாக அடித்தால் இந்தியா தப்பிக்கும். இல்லையெனில் 194 என்பது 294 போலத் தெரிய ஆரம்பித்துவிடும்.

   Like

 6. அருமையான தொகுப்பு. ஆட்டத்தை நேரில் பார்த்த உணர்வைத் தந்தது. ஆங்கில உபயோகத்தைக் குறைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

  நமது வலைத்தளம் : சிகரம்
  இலக்கியம் | அரசியல் | விளையாட்டு | பல்சுவை | வெள்ளித்திரை | தொழிநுட்பம் -அனைத்துத் தகவல்களையும் அழகு தமிழில் தாங்கி வரும் உங்கள் இணையத்தளம் – #சிகரம்

  https://newsigaram.blogspot.com/

  Liked by 1 person

  1. @ நியூசிகரம்:
   க்ரிக்கெட் என்னதான் உலகின் எல்லா மூலைகளிலும் பரவிவிட்டாலும், ஆடப்பட்டாலும், அடிப்படையில் அது ஒரு ஆங்கிலேய விளையாட்டுதான்! ஆங்கில வார்த்தைகள், மொழியாடல் அதனோடு இரண்டறக் கலந்திருப்பதால், இயற்கையாக இருப்பதை முழுதுமாய்த் தவிர்த்து எழுதினால், மிகச் செயற்கையாக இருக்கும். வாசிப்பின்பமும் வாசலுக்குப் போய்விடும்!

   Like

 7. எனக்கு எப்போதுமே லைவ் மேச் பார்க்கமுடியாது. அப்போ அப்போ ஸ்கோர் பார்ப்பதோடு சரி. இருந்தாலும் அவ்வப்போது நேற்று கோஹ்லியின் ஸ்கோர் பார்த்துக்கொண்டே இருந்தேன். இன்னும் ஒரு ரன் அடித்திருக்கலாமோ என்று தோன்றியது. இருந்தாலும், கோஹ்லி திறமைசாலிதான்.

  கோஹ்லி இரண்டாவது இன்னிங்ஸில் ரன் எடுத்து வெற்றிக்கு வழிவகுப்பாரா இல்லை எல்ளோரும் மள மளவென அவுட்டாவார்களா என்பது தெரியவில்லை.

  Liked by 1 person

  1. @நெல்லைத்தமிழன் :
   கோஹ்லியின் ஆட்டம் masterclass
   என்பதில் சந்தேகமில்லை. ஒரு கிரிக்கெட் ரசிகனாக இருந்துகொண்டு நேற்று அதைத் தவறவிட்டிருந்தால் வருந்தியிருப்பேன்.

   அதற்காக இரண்டாவது இன்னிங்ஸிலும் கோஹ்லியே காப்பாற்றுவார் என எதிர்பார்க்கமுடியாது. கிரிக்கெட்டில் அப்படியெல்லாம் தொடராது! வேறு யாராவது ஹீரோ, அல்லது saviors இந்தியாவுக்குத் தேவைப்படும்

   Like

 8. ஷிகர் தவான் எனும் தண்டத்தை யார் ஸார் அணியில் சேர்க்கிறார்கள்? இப்போதும் முரளி விஜய் ரெவியூ கேட்டிருந்தால் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பிட்ச் ஆனா பந்து என்று நாட் அவுட் கொடுத்திருப்பார்கள். தவானை (போயும் போயும்) யோசனை கேட்டார் முரளி விஜய். தண்டம்!

  Liked by 1 person

  1. @ ஸ்ரீராம்:
   ஷிகர் தவணின் மீது உங்களது எரிச்சல் புரிகிறது. விஜய் அவுட்டானதை நான் பார்க்கவில்லை. ப்ளாகில் பதிலெழுதிக்கொண்டிருந்த நேரம். தவணிடம் யோசனை கேட்டாரா? விஜய்க்கு நேரம் சரியில்லையோ.

   இந்த இன்னிங்ஸில் விஜய், ராஹுல் போன்றோர் நின்று விளையாடுவது முக்கியமாகத் தோன்றுகிறது. அதற்காக ஒரேயடியாக தடுப்பாட்டம் ஆடினாலும் ஆபத்து. பாண்ட்யாவை அவர் இயல்புப்படி விளையாடவிட்டால் நன்றாக இருக்கும். என்ன செய்யப் போகிறார்களோ..

   Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s