டி-20 கிரிக்கெட்: விசித்திர வெற்றி

கேன்பர்ராவில் நேற்று (4-12-20) நடந்த முதல் டி-20 போட்டியை 11 ரன்னில் ஆஸ்திரேலியாவைத் தகர்த்தி,  இந்தியா கைப்பற்றியது. அதுவும் எப்படி! Concussion Subtitute-ஆக உள்ளே நுழைந்தார் யஜுவேந்திர சாஹல், லெக்-ப்ரேக் பௌலர். ஆட்டத்தின் ஆரம்பத்தில் இந்திய அணியில் இல்லாது, அதுவரை பெஞ்சிலே உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவர்! அவரது அசத்தலான பௌலிங்கும் ஒரு பிரதான காரணம், இந்திய வெற்றிக்கு. ஆஸ்திரேலியாவின் கொதிப்புக்கு. ஜடேஜாவுக்குப் பதிலாக சாஹல்  உள்ளே வந்ததை ஆட்சேபித்து, மேட்ச் ரெஃப்ரீ டேவிட் பூனோடு (David Boon) உரசிப்பார்த்தார் ஆஸ்திரேலிய கோச் ஜஸ்டின் லாங்கர். ’ரூல் என்றால் ரூல்தான். ஒன்றும் செய்யமுடியாது’ என்பது ரெஃப்ரீயின் கடுமையான பதில்.

Jadeja, Chahal

சென்ற ஆகஸ்டில் ஐசிசி கொண்டுவந்த புதிய நியதிப்படி ஒரு அணியின் வீரர், தலையில் அடிபட்டுக் காயமடைந்து மேற்கொண்டு அந்த ஆட்டத்தைத் தொடரமுடியாமல் போனால்,  அவருடைய இடத்தில் like-for-like substitute-ஐ மேட்ச் ரெஃப்ரீ அனுமதிக்கலாம். அத்தகைய நிலையில் ரெஃப்ரீயின் முடிவே இறுதியானது என்கிறது. அதுதான் நடந்தது. ஜடேஜா வெளியே, சாஹல் உள்ளே. போதாததற்கு, தன் முதல் டி-20 ஆடவந்த நடராஜனும்  ’யார்க்கர்’ சாகஸம் காட்ட,  பௌலிங் தூள்கிளப்பியது.  இந்தியாவுக்கு அடித்தது யோகம், கேட்ச்சுகளை நழுவவிட்டுக்கொண்டு அவ்வப்போது அசடு வழிந்தும்!

முன்னதாக இந்திய பேட்டிங்கில் ராஹுல் மட்டுமே பொறுப்பாக ரன் சேர்த்தார் (51). பாண்ட்யா (16) அவுட் ஆகையில், 17-ஆவது ஓவரில்  ஸ்கோர் 112/6. 135-க்குக் கொண்டுவந்தாலே அதிசயம் என்கிற அவலநிலை.  ஜடேஜாதான் கைகொடுத்தார்.  23 பந்துகளில் 44 நாட்-அவுட் விளாசி மானத்தைக் காப்பாற்றினார். ஆனால் ஸ்டார்க் போட்ட கடைசி ஓவரில் தலையில் அடி. தசைப்பிடிப்பு. இடைவேளையின்போது அவரது தலைக்காயம் (concussion) மேலும் மருத்துவர்களால் சோதிக்கப்பட இருந்ததால், ஆடவாய்ப்பில்லை என அறிவிக்கப்பட்டது. அவரின் இடத்தில், இந்தியா பௌலிங் செய்கையில் சேர்ந்துகொள்ள அனுமதிக்கப்பட்டார் லெக்-ஸ்பின்னர் சாஹல்.

55/0 என ஜோராகப் போய்க்கொண்டிருந்தது ஆஸ்திரேலியா. பவர்-ப்ளேயில் பந்துபோட்ட வாஷிங்டன் சுந்தர் விக்கெட் எடுக்கவில்லை எனினும், 4 ஓவர்களில் கஞ்சத்தனமாக வெறும் 16 ரன் கொடுத்துப் பிடியை இறுக்கினார். எதிரியை மடக்கித் தாக்கினர் சாஹலும், நடராஜனும்.  ஃபின்ச், ஸ்மித், வேட் (Mathew Wade) ஆகியோரை சாஹல் பெவிலியனுக்குத் திருப்ப, ஆஸ்திரேலியா அதிர்ந்தது. காட்டிக்கொள்ளவில்லை.  மேக்ஸ்வெல், டார்சி ஷார்ட் (D’Arcy Short), ஸ்டார்க் எனப் பாய்ந்து குதறினார் நடராஜன். ஆஸ்திரேலியா நிலைகுலைந்தது. 150-ல் தலைசுற்றிக் கீழே விழுந்தது.

இப்போதைய நியூஸ். மிச்சமிருக்கும் இரண்டு  டி-20 போட்டிகளில் ரவீந்திர ஜடேஜா இல்லை. Concussion under medical observation. மிதவேகப்பந்துவீச்சாளர் ஷர்துல் டாக்குர் உள்ளே. அதேபோல் டெஸ்ட் ஆஃப்ஸ்பின்னர் நேதன் லயனை உள்ளே வரச் சொல்லியிருக்கிறது ஆஸ்திரேலியா. சிட்னியின் பெரிய, இந்தியாவுக்கு சிரமம் தரும் மைதானத்தில், ஸ்பின் வேறு வம்புக்கு இழுக்குமோ!

**

2 thoughts on “டி-20 கிரிக்கெட்: விசித்திர வெற்றி

  1. எதிர்பாராத வெற்றி மகிழ்ச்சி அளித்தது.  ஆட்டம் பார்க்கவில்லை.  அலுவலகம்!  நடராஜனின் வெற்றியும் சந்தோஷம் தந்தது.

    Liked by 1 person

    1. @ Sriram:
      மேட்ச்சின் நடுவில், கல்கத்தாவிலிருந்து நண்பர் ஃபோன் பண்ணி எரிச்சலை வெளிப்படுத்தினார்!’ என்ன வெளயாட்றானுங்க..சே!’ 135-40 வந்தாலே ஆச்சரியம் எனவும், இந்த மேட்ச்சில் நாம் காலி எனவும் பேசிக்கொண்டோம் சாம்ஸன், ராஹுல் அவுட் ஆனபின். இடைவேளைக்குப்பின் வேறொரு ஸ்க்ரிப்டை விதி வைத்திருந்தது எனத் தெரியாமல்! Cricket is a strange sport !

      Like

Leave a comment