கிரிக்கெட்: நான்காவது டெஸ்ட்டில் ப்ரித்வி ஷா ?

.

இங்கிலாந்துக்கெதிரான நாலாவது டெஸ்ட் மேட்ச் நாளை (30-8-1918) தொடங்குகிறது. தொடரின் கடைசி இரண்டு போட்டிகளுக்கான 18-பேர் கொண்ட அணியிலிருந்து, இந்திய கிரிக்கெட் போர்டின் தேர்வுக்கமிட்டி இரண்டு பேர்களை தூக்கிவிட்டார்கள் -துவக்க ஆட்டக்காரர் முரளி விஜய் மற்றும் சுழல்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ்.

முதல் இரண்டு போட்டிகளில் பிட்ச்சுகள் இருந்த லட்சணம், ஒவ்வொரு நாளிலும் விடாது விரட்டிய மழை, நம் வீரர்கள் (விராட் கோலி தவிர்த்து) விளையாடிய அழகு என்றெல்லாம் தோல்விக்கான காரணங்களை முழுதுமாக ஆராய்ந்தால் உண்மையான படம் தேர்வுக்கமிட்டிக்குத் தெரிந்திருக்கும். அப்படியில்லாமல், தோல்விக்கு என்னவோ அவர்தான் காரணம் என்பதுபோல், இந்தியாவின் நம்பர் 1 துவக்க ஆட்டக்காரரான முரளி விஜய்யை மூன்றாவது டெஸ்ட்டிலிருந்து நீக்கியதோடு, மீதமிருக்கும் இரண்டு போட்டிகளிலிருந்தும் அவரைக் காவு வாங்கியிருப்பது சரியில்லை. ட்ரெண்ட் ப்ரிட்ஜ் (Trent Bridge)-ல் நடந்த மூன்றாவது டெஸ்ட்டில் அவர் ஆடியிருந்தால், பிட்ச் பேட்ஸ்மன்களுக்கு சரியான ஆடுகளமாக அமைந்திருக்கையில், மற்றவர்களைப்போல் அவரும்தான் அடித்திருப்பார். நல்ல பிட்ச்சில் வாய்ப்பு தராமல், தொடரிலிருந்தே ஒருவழியாகக் கழட்டிவிட்டதுபோல் தோன்றுகிறது. குல்தீப் யாதவையும் அவருக்கு ஒத்துவராத பிட்ச்சில் ஆடச்செய்து, இப்போது ஒரேயடியாகத் தூக்கிவிட்டார்கள். என்ன லாஜிக் இது ?

சரி, உள்ளே வந்திருக்கும் இளம் வீரர்கள்? துவக்க ஆட்டக்காரரான ப்ரித்வி ஷா (Prithvi Shaw) மற்றும் மிடில்-ஆர்டர் பேட்ஸ்மனான ஹனுமா விஹாரி (Hanuma Vihari). (இன்னும் கொஞ்ச நாட்களில் நமது தமிழ் மீடியா அவரது பெயரை ஹனுமான் விகாரி என்றோ அல்லது அனுமார் விகாரி என்றோ குறிப்பிடலாம். அதிர்ச்சியடையாதீர்கள்! எல்லாம் அனுமார் செயல் என்று பொறுத்துக்கொள்ளுங்கள். நாம் கவனிக்கவேண்டியது கிரிக்கெட்டை!) இருவரும் திறனான பேட்ஸ்மன்கள் என்பதில் சந்தேகமில்லை. இதுவரை அவர்களுக்கு கொடுக்கப்பட்ட முதல்தர (First Class matches) மற்றும் லிஸ்ட்-ஏ போட்டிகளில் இந்திய மற்றும் வெளி நாட்டணிகளுக்கெதிராக விளாசியவர்கள். வாய்ப்பு கிடைத்தது சரிதான்.

இருவரில் ஒருவரான 24-வயது ஹனுமா விஹாரி இந்திய ரஞ்சி ட்ராஃபி போட்டிகளில் ஆந்திராவுக்காக நல்ல சராசரியுடன் அருமையாக ஆடிவருபவர். ஐபிஎல் –இல் பெரிதாக சோபிக்கவில்லை எனினும் கடந்த சில வருடங்களாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டணிகளுக்கெதிராக சிறப்பான திறமை காட்டி ஆடிவரும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மன். ஒருவேளை, கோஹ்லி காயம் காரணமாக ஆடமுடியாது போனால், அவருக்குப் பதிலாக இருப்பில் இருக்கட்டும் என இவர் இணைக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. (அணியின் பெஞ்சில் கருண் நாயரும் உட்கார்ந்திருக்கிறார்).

இரண்டாவது புதுமுகமான ப்ரித்வி ஷா மிகவும் குறிப்பிடத்தகுந்தவர் எனத் தோன்றுகிறது. சிறுவனாக, பள்ளிக்கூடக் கிரிக்கெட்டில் அதிரடி பேட்டிங் சாதனைகளை நிகழ்த்தி தூள் கிளப்பியவர். எட்டு வயது சிறுவனாக இருக்கும்போது மும்பையில், சச்சின் டெண்டுல்கரால் கவனித்துக் குறிப்பிடப்பட்ட இளம் புயல். வரனாக வந்திருக்கும் திறன் (Prodigious talent) என்பதாக வர்ணிக்கப்படும் 18 வயது ஷா, வேகப்பந்துகளை லாவகமாக, துல்லியமாக ஆஃப் சைடில் திருப்புதல், அழகான கவர் ட்ரைவ்கள் என சிறப்புத்திறன் காண்பித்துவருபவர். இந்தியாவின் Under-19 உலகக்கோப்பை அணியின் கேப்டனாகத் தலைமை தாங்கி கோப்பையை வென்றுகொடுத்தவர். சமீபத்தில் இந்தியா ‘ஏ’ அணிக்காக, வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிக்கெதிராக (சதம்-188 ரன்) என அபாரமாக ஆடிய பேட்ஸ்மன். ரஞ்சிக் கோப்பையில் மும்பை அணிக்காகவும், அதிரடி டி-20 ஆட்டமான ஐபிஎல்-இல் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காகவும் கடந்த சீசனில் நன்றாக விளையாடியிருக்கிறார் என்பதும் அவரது பலம். சில வல்லுனர்களால் டெண்டுல்கர், கோஹ்லிக்கு அடுத்தபடியாக பெரிதும் கவனிக்கப்பட வேண்டிய திறன்மிகு பேட்ஸ்மன் எனக் குறிப்பிடப்பட்டிருப்பவர் ஷா. ஒரேயடியாக காத்திருக்க வைக்காமல், 18 வயதிலேயே, நல்ல ஃபார்மில் இருக்கையில், அவர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி தரும் விஷயம்.

இப்படி ப்ரித்வி ஷாவை புத்திசாலித்தனமாக 18-பேர் கொண்ட அணியில் சேர்த்துவிட்டு, கடைசியில், நாளை துவங்கவிருக்கும் 4-ஆவது டெஸ்ட்டிலோ, கடைசி டெஸ்ட்டிலோ அவரை ஆட விடாமல் வேடிக்கை பார்க்கும்படி பெஞ்சில் உட்காரவைத்தால், அது அடிமுட்டாள்தனமாக இருக்கும். தவன் அல்லது ராஹுல் – இருவரில் ஒருவரது இடத்தில் நாளைய டெஸ்ட்டில் ப்ரித்வி ஷா விளையாடவேண்டும். அதுதான் அணிநலனுக்கான சிறந்த முடிவாக இருக்கும். கோஹ்லி செய்வாரா?

நாளைய டெஸ்ட்டில் இந்தியாவுக்காகக் காத்திருக்கிறது பச்சை நிற பிட்ச்! தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்கில் ஆடியதுபோல் 5 வேகப்பந்துவீச்சாளர்களுடன் இறங்குவாரா கோஹ்லி? அல்லது, அஷ்வின் அல்லது ஜடேஜா என ஒரு ஸ்பின்னரையாவது கைவசம் வைத்துக்கொண்டு உள்ளே வருவாரா? பார்ப்போம்..

*

4 thoughts on “கிரிக்கெட்: நான்காவது டெஸ்ட்டில் ப்ரித்வி ஷா ?

  1. மனிஷ் பாண்டே நன்றாக விளையாடவில்லை என்று எடுக்காமல் விட்டார்கள். அவர் ரோஷத்தில் அடி அடி என்று அடித்துக் கொண்டிருக்கிறார் இந்தியா பி அணியில்…

    Liked by 1 person

    1. @ஸ்ரீராம்:
      ஆம், பாண்டே நல்ல ப்ளேயர்தான். அவர் இதுவரை டெஸ்ட் விளையாடியதில்லை. அவரது ஃபார்ம் உலகக்கோப்பை தேர்வுக்கு உதவலாம். அதேபோல் அம்பத்தி ராயுடு. அருமையான ஒரு-நாள் மற்றும் டி-20 வீரர். இப்போது யோ-யோ -வையும் பாஸ் செய்துவிட்டார். தேர்வு செய்யாமலிருக்க, இன்னும் என்ன சாக்கு சொல்வார்களோ?

      Like

    1. @முத்துசாமி இரா:
      பயணத்திலிருந்து இப்போதுதான் திரும்பியுள்ளேன். உங்கள் கருத்தை இன்றுதான் பார்த்தேன்

      ஆமாம். ஹனுமா விஹாரி மிடில் ஆர்டருக்காகத் தேர்வு செய்யப்படும் அளவிற்கு சிறந்த பேட்ஸ்மன்தான். இந்தக் கடைசி டெஸ்டில் அவர் விளையாடுகிறார்.ஒரு அரைசதமாவது இங்கிலாந்திற்கெதிராகத் தட்டினால் நன்றாக இருக்கும். பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

      Liked by 1 person

Leave a comment