தமிழ்ப் படம் ‘To Let’

தமிழின் சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவராகக் கருதப்படுபவர் செழியன். சிவகங்கையில் பிறந்தவர். பொறியியல் பட்டம் முடித்ததும், புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமிடம் தன்னை இணைத்துக்கொண்டு தமிழ்ப்படங்களில் ஒளிப்பதிவு செய்துகொண்டிருந்தார். குறுகிய காலத்திலேயே வர ஆரம்பித்தன அங்கீகாரமும், புகழும். 2012-ல் நார்வே தமிழ்ப்பட விழாவில் ‘கள்ளத்தோணி’ என்கிற குறும்பட ஒளிப்பதிவிற்காகப் பரிசளிக்கப்பட்டார். அடுத்த ஆண்டே பாலாவின் ‘பரதேசி’ படத்துக்காக லண்டன் திரைப்படவிழா வழங்கிய சிறந்த ஒளிப்பதிவாளர் விருது ஒரு முக்கிய அங்கீகாரமாக அமைந்தது. ’கல்லூரி’-யில் ஆரம்பித்து ரெட்டச்சுழி, மகிழ்ச்சி, தென்மேற்குப் பருவக்காற்று, தார தப்பட்டை, ஜோக்கர் போன்ற குறிப்பிடத் தகுந்த தமிழ்ப்படங்களுக்கு ஒளிப்பதிவுசெய்துள்ளார்.

இலக்கிய ஈடுபாடும் உண்டு செழியனுக்கு. உலகசினிமா குறித்த தொடர் ஒன்றை ஆனந்த விகடனில் எழுதி, பின்னர் ‘உலக சினிமா’ என்கிற நூலாகவும் அது வெளிவந்தது. சிறுகதை எழுத்தையும் முயற்சித்தவர். ‘ஹார்மோனியம்’ என்கிற சிறுகதைக்காக செழியன் ‘கதா’ விருது பெற்றிருக்கிறார். ’தமிழ்ச் சிறுகதைகளில் உளக்காட்சிகள்’ என்கிற இவரது ஆய்வு நூலுக்கு இந்திய கலாச்சார அமைச்சகம் விருது வழங்கி கௌரவித்துள்ளது. கூடவே, இலக்கிய ஆளுமையான ஜெயகாந்தனை சித்தரிக்கும் ஆவணப்படமான ‘எல்லைகளை விஸ்தரித்த எழுத்துக்கலைஞன்’ படத்திலும் ஒளிப்பதிவுப்பணி.

எதற்காக இவ்வளவு செழியன் புராணம்? இவர் முதன்முதலாக கதைவசனம் எழுதி, இயக்கியும் வெளியிட்ட ‘டு லெட்’ (To Let) என்கிற தமிழ்ப்படத்திற்கு இந்த ஆண்டு தேசியவிருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இன்னும் திரைஅரங்குகளில் வணிகரீதியாக வெளிவரவில்லை இந்தப் படம். ஐ.டி. எனும் பெரும்பூதம் நகர வாழ்வை நாள்தோரும் கபளீகரம் செய்துகொண்டிருக்கும் காலகட்டத்தில், வாடகைவீட்டுக்காரர்களான ஒரு இளம் தம்பதி, திடீரென வீட்டுக்காரரால் வீட்டைக் காலிசெய்யும்படி சொல்லப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் நல்ல குடித்தனக்காரர்களாகத்தானே இருந்தார்கள். சண்டை, சச்சரவு ஏதுமில்லையே? வீடும் பழகிவிட்டதே. இப்போது ஏன் திடீரென விரட்டவேண்டும்? அதிக வாடகை தருவதாக வீட்டுக்காரருக்கு ஐடி-க்காரர்கள் ஆசைகாட்டிவிட்டார்கள். பணத்துக்காக ஆடாத மனமும் உண்டோ? வீட்டுக்காரர் விட்டார் நோட்டீஸு. தம்பி! வேறு வீட்டைப்பார். ஓடிவிடு இங்கிருந்து ஒருமாதத்துக்குள்! ஒரு போக்கிடமில்லா ஊரில், ஏனோதானோ சம்பளத்தில் குடும்பம் நடத்தப் பிரயாசைப்படும் அந்த இளைஞன் பாவம், என்ன செய்வான்? தன் மனைவியையும் சின்னப்பிள்ளையையும் மோபெடில் வைத்துக்கொண்டு சென்னையின் வெயில், தூசிப்படலத்துக்கிடையில் வேர்க்க விறுவிறுக்க நாள்முழுக்க அலைகிறான். படிப்படியாய் ஏறி இறங்குகிறான். தேடுகிறான் நகரின் ஏதோ ஒருமூலையில் தனக்கான ஒரு இருப்பிடத்தை. கேள்விகள், எதிர்க்கேள்விகள், ஏளனம், அவமானம் .. நகரில் மாட்டிக்கொண்ட வீடற்ற ஒரு குடும்பத்தின் தடுமாற்றங்கள், போராட்டங்களை, உயிரோட்டத்துடன், உணர்வுபூர்வமாகத் திரைக்குக் கொண்டுவந்திருப்பதாகச் சொல்லியது திரைவிழாவின் ஜூரி. பாலிவுட், ஹாலிவுட் எனக் கலக்கிய புகழ்பெற்ற இயக்குனரான ஷேகர் கபூரைத் தலைவராகக்கொண்டு, இம்தியாஸ் ஹுசேன், மெஹ்பூப், கன்னட இயக்குனர் சேஷாத்ரி, தமிழ் நடிகை கௌதமி போன்ற பத்துபேர் அடங்கிய தேர்வுக்குழு இப்படத்தை சிறந்த தமிழ்ப்படமாகத் தேசிய விருதுக்குத் தேர்வு செய்துள்ளது. சிலமாதங்கள் முன்பு நடந்த கல்கத்தா திரைப்படவிழாவிலும், ’டு லெட்’ படத்திற்கு சிறந்த பிராந்திய மொழிப்படத்திற்கான விருது கொடுக்கப்பட்டது.

முற்றிலும் புதியவர்களைக்கொண்டு செழியன் இப்படத்தை இயக்கியிருப்பதாய்த் தெரிகிறது. கவிஞர் விக்ரமாதித்யனின் மகன் சந்தோஷ் நம்பிராஜன் முக்கியப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர் செழியனிடம் அசிஸ்டெண்ட்டாக இருந்தவர். செழியன் இந்த ரோலைக் கொடுத்தவுடன் ’நானா?’ என்று ஆச்சரியப்பட்டிருக்கிறார் சந்தோஷ். சர்வதேச அளவில் படம் போகக்கூடும் என்பதால், நடிக்காமல் இயல்பாகக் கேரக்டருக்குப் பொருந்தக்கூடிய ஆள்தான் சரியா இருக்கும். நீ சரியா இருப்ப! என்றாராம் செழியன். சரிதான். இத்தகையப் படத்திற்கு புதியவர்கள்தான் லாயக்கு. ஒத்துவரும். அப்போதுதான் ஒரு உண்மைத்துவம், உயிர்த்தன்மை கதையோட்டத்தில் காணப்படும். ஆட்டம், பாட்டம், அடி, குத்து, வெட்டு, ஆபாசம் என்பதுதான் படம் எனப் பழகிப்போனவர்களுக்கு, செழியன் இந்தப்படத்தில் என்ன சொல்லவருகிறார் எனப் புரிய வாய்ப்பில்லைதான். அவர்களைப் பொறுத்தவரை –தமிழின் மெஜாரிட்டி ரசிகர்கள் அப்படித்தான்– இதெல்லாம் படமே இல்லை! நல்லது. மற்றவர்கள், அதாவது தரமான வித்தியாசமான திரைமுயற்சிக்காக ஏங்குபவர்கள் -கொஞ்சப்பேர்தான் அவர்கள், தமிழில் எப்போதாவது நிகழும் இத்தகைய கலைப்படைப்பு, எப்போது திரையரங்குகளில் வெளிவரும் எனக் காத்திருந்து பார்க்கவேண்டியிருக்கும். என்ன செய்வது, நல்ல விஷயங்களுக்காக, இந்த நாட்டில் காத்துக்கிடக்கத்தான் வேண்டியிருக்கிறது.

**

9 thoughts on “தமிழ்ப் படம் ‘To Let’

  1. கால் பதித்த இடங்களில் எல்லாம் ஜெயக்கொடி நாட்டி இருக்கிறாரே செழியன்… நீங்கள் எங்கு பார்த்தீர்கள்? இணையத்திலா?

    Liked by 1 person

    1. @ஸ்ரீராம் :
      செழியனைப்பற்றி முன்பே ஒரு எழுத்தாளர் பக்கத்தில்
      வித்தியாசமாகப் படித்திருந்தேன். அதற்கு அப்புறம் ஒன்றும் தெரியவில்லை. பிறகு நவம்பரில் கல்கத்தா விழா. இப்போது தேசியவிருது. நெட்டில் தோண்டித்தான் போட்டேன். படம் சிக்கவில்லை இன்னும்.

      Like

  2. ஏகாந்தன் அண்ணா, செழியனைப் பற்றி நெட்டில் நிறையத் தெரிந்து கொண்டதுட்னு. இப்போது இந்தத் தேசிய விருதுச் செய்தி புதியது. படம் இன்னும் வரவில்லையா? ஏன் வெளிவரவில்லையோ? பார்க்கணும் கண்டிப்பாக. அதுவும் வழக்கமான மசாலா இல்லாமல் என்பதால் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும்…

    கீதா

    Liked by 1 person

    1. @கீதா :
      நான் எழுதியிருப்பது To Let என்கிற தமிழ் feature film பற்றி. நீங்கள் கொடுத்திருக்கும் சுட்டி இதே பெயருடைய short film ஒன்றிற்கானது- ஜெயச்சந்திர ஹஷ்மி இயக்கிய வீடுதேடல் பற்றிய சில நிமிடம் மட்டுமே ஓடும் படம். இரண்டையும் போட்டுக் குழப்பிக்கொள்ளவேண்டாம்!

      ..படம் இன்னும் வரவில்லையா? ஏன் வெளிவரவில்லையோ?//

      சொந்தக்காசில் போட்டு எடுத்த செழியன் படத்தை அவ்வளவு எளிதில் வணிகத் திரையில் வெளியிடமுடியுமா? ஊர்பேர் தெரியா நடிகர், நடிகையுள்ள படத்தை நம்பி எந்த டிஸ்ட்ரிபியூட்டர் பணம் போடுவார்? அவருக்கு காசு முக்கியமா, உங்கள் ‘கலை’முக்கியமா! முதலில் இத்தகைய படத்தை காசுகொடுத்து ‘தமிளன்’ பார்ப்பானா!

      புகழ்பெற்றுவருவதால், ஒருவேளை சில தியேட்டர்களில் சென்னை போன்ற நகரங்களில் திரையிடப்படலாம் -போனால் போகிறதென்று. மற்றப்படி, இந்தப்படத்தைப் பார்ப்பது அவ்வளவு எளிதென எனக்குத் தோன்றவில்லை.

      Like

  3. குறும்படம் போலத் தெரியுது. அதான் வணிக ரீதியா வரலை போல….இதுதான் என்று யுட்யூப் சொல்லுது……

    கீதா

    Like

  4. காத்திருப்போம் வெளியாகட்டும்.. இதுக்கு மேல ஒன்றும் சொல்லத் தெரியவில்லை இன்று..

    Liked by 1 person

    1. @ athiramiya :

      ’காத்திருந்தேன்…காத்திருந்தேன்.. காலமெலாம் காத்திருந்தேன்…’ -என்று ஆகிவிடலாம். மேலே கீதாவுக்கு எழுதியிருக்கும் பதிலையும் பாருங்கள் அதிரா.

      Like

  5. வாழ்த்துக்கள்..

    வணக்கம்,

    http://www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தமிழ்US

    உங்களது பதிவு பகிரப்பட்டுள்ளது. உங்களின் பயனுள்ள இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவை பலரைச் சென்றடைய இத் திரட்டியில் பகிர்ந்து உங்களின் ஒத்துழைப்பை நல்குவீர்கள் என நம்புகிறோம்.

    நன்றி..
    தமிழ்US

    Liked by 1 person

Leave a comment