ஒன்று கேட்டால் .. நான்கா ?

 

புத்திரனால், விடாது விரட்டியது வேதனை, தசரத சக்ரவர்த்தியை. அப்படியா.. எப்படி? அழகான, குணவதிகளான மனைவிகள் இருந்தும், புத்திரன் ஒருவனும் இல்லையே என்று ஆரம்பத்தில் ஏங்கியிருந்தான். பெரும் துன்பத்துக்குள்ளானான். மகன் என்று ஒருவன் வருவதற்கு முன்பே மனக்கஷ்டம். இன்னும் வராத பிள்ளைக்காக அனுபவித்த வேதனை. ஒரு பிள்ளைக்காக உருகி, தவமிருந்து யாசித்தான், அந்த பகவானிடம். இந்தா பிடியென அவன் கொடுத்தது ஒன்றுக்கு நான்காக பிள்ளைகள். நான்கு பேரும் எப்படி? ரத்தினங்கள். அவனுக்கு மனதிற்கு மிகவும் இதமான சத்புத்திரர்கள். ஆஹா, என்னே அவன் கருணை என லயித்திருந்தான் தசரதன்.  ஆனால், அந்த சந்தோஷமும் வெகுநாள் நீடிக்கவில்லை. வினைப்பயனால் தன் கண்ணின் மணியான மூத்தவனை, பேரழகனான ராமனை, அவனது இளம்பிராயத்திலேயே கொடிய விலங்குகள் உலாவும் வனத்துக்கு அனுப்பும்படியாயிற்று. ஒன்றல்ல, இரண்டல்ல, பதினான்கு வருடங்கள். ’அண்ணன் தனியாகவா போவான் வனத்துக்கு, தன் மனைவியோடு, நானும் போவேன் அவர்களுக்குப் பாதுகாப்பாக..’ என்று இளையவனும் தந்தையைப் பிரிந்து, தமையனோடு சென்றான். இப்படி, இருந்தும் அருகில் இல்லாத பிள்ளைகளினால், வயசான காலத்திலும் தசரதனை விடாது விரட்டியது துக்கம்.

அது ஒரு பக்கம். ஒன்றுதானே கேட்டான் தசரதன்.  இறைவன் ஏன் நான்கு கொடுத்தான்? பக்தன் கேட்டது ஒரு புறமிருக்க, அவனுக்கு எப்பொழுது, என்ன கொடுக்கவேண்டும் என்று அந்த பகவான் நினைக்கிறான்; முடிவெடுக்கிறான். நான்கு உத்தம மனிதர்கள் மூலம் முக்கியமாக சில விஷயங்களை உலகிற்குச் சொல்ல என, தசரதனுக்குப் பிள்ளைகளாக அவர்களை அனுப்பிவைத்தான். அப்படியென்ன சீரிய விஷயங்கள் அவை?

அன்பாகப் பெற்று, ஆசை ஆசையாய் வளர்த்த பெற்றோரிடம், பிள்ளைகள் எப்படி நடந்துகொள்ளவேண்டும்? ஞானவழிகாட்டும் குருவுக்கு, சிஷ்யர்கள் ஆற்றவேண்டிய கடமைகள், காண்பிக்கவேண்டிய மரியாதைகள் என்னென்ன? தன்மீது ஆழ்ந்த அன்புகாட்டி, தன்னைக் கண்போல் பாதுகாக்கும் கணவனிடம், மனைவியானவள் எப்படியிருக்கவேண்டும்? சாமான்யர்களுக்கான இப்படிப்பட்ட வாழ்வியல் நெறிமுறைகள் ‘சாமான்ய தர்மம்’ எனப்பட்டது. இந்த அறநெறிகளை, எத்தனையோ இன்னல்கள், சோதனைகளின் ஊடேயும்  வாழ்வு நெடுக நிலைநாட்டி, மனிதகுலத்திற்கே வழிகாட்டியாக நின்றான் தசரதனின் பிள்ளைகளில் மூத்தவனான ராமன்.

சாதாரணமாக செய்யவேண்டிய இத்தகு தர்மங்களை சீராக, சிறப்பாக செய்துவரும் நிலையில், ஒருவனது வாழ்வில் ஒரு கட்டத்தில், எல்லோருக்கும் விதவிதமாய்க் கடமை பல செய்துவிட்டேன்;  இனி பகவானின் திருவடிகளில் விழுந்து கிடப்பதைத் தவிர வேறு ஒன்றும் வேண்டாம் எனத் தோன்ற ஆரம்பிக்கும். இவ்வாறு தெய்வமே எல்லாம் என்று ஒருவன் இறுதியாக வந்துவிட, அவன் அந்நிலையில் மனமொன்றி வாழ்வது ’சேஷ தர்மம்’. இந்த தர்மத்திற்கு சிறந்த வாழ்வியல் உதாரணமாக விளங்கியவன் ராமனின் இளவலான லக்ஷ்மணன். ’எத்தனையோ கடமைகளை சிறுவயதிலிருந்தே ஆற்றியாகிவிட்டது. இனி  அண்ணன் ராமனே எனக்கு எல்லாம்’ என்று அவன் பின்னேயே போய்விட்டவன் லக்ஷ்மணன்.

எல்லாவற்றையும் சிருஷ்டித்து ரட்சித்து, நிர்வகித்து, வரும் அந்த பகவான், கண்ணிலேயே தட்டுப்படுவதில்லை; கண் எட்டா, மனம்கூட நெருங்கா தூரத்தில் இருந்தபோதும், அதனால் மனம் சோர்ந்துவிடாது,  எப்போதும் அவன் நினைவாகவே  வாழ்க்கையை வாழ்வது ’விசேஷ தர்மம்’ எனப்படும். லௌகீக வாழ்விலிருந்து விலகி, எங்கோ தூரத்து வனத்தில் வசிக்கும்  அண்ணனையே நினைந்துருகி, அரண்மணையில் வாழ்ந்தும் அவனைத் தவிர வாழ்வில் வேறொரு சிந்தனையில்லை என தவம்போல் வாழ்ந்து, கண்டோரை, கேட்டோரை பிரமிக்கவைத்தவன் பரதன். விசேஷ தர்மத்திற்கு உன்னத உதாரணம் இவனே.

நான்காவது தர்மம் இருக்கிறதே அது  மற்ற மூன்றிலிருந்து வித்தியாசமானது. பகவானின் புகழ் சொல்வது, வணங்கிவருவது ஒருபுறமிருக்கட்டும். அவனிலேயே ஆழ்ந்து, பித்தர்களாய் அலைந்து திரியும் அடியவர்களுக்கு மனமார்ந்த சேவை செய்து வாழ்வதே உயர்ந்தது என ஒருவன் நினைத்து,  தன் வாழ்வை அதற்கேற்றவாறு பரிபூரணமாக அமைத்துக்கொண்டால், அவன் கடைப்பிடிக்கும் தர்மம் ’விசேஷத தர்மம்’ ஆகும். ராமனில்லா அரண்மனையில் சோகம் கண்டு, அவன் நினைவாகவே நல்லாட்சி செய்துவரும் பரதனைப் பார்த்து உருகுகிறான் அவன் தம்பி ஷத்ருக்னன். இத்தகைய மென்மையும், மேன்மையும் உடைய பரதனுக்கு நான் என்ன செய்வது என சிந்தித்தான். அவனுக்கு இடையறாது பணிசெய்து கிடப்பதே எனக்கு உகந்தது; உத்தமமானது எனப் புரிந்தவனாய்,  அப்படியே தன் வாழ்வை அமைத்துக்கொண்டான்  ஷத்ருக்னன். விசேஷத தர்மத்தை இவனைத் தவிர வேறு எவனும் விளக்கிவிடமுடியாது.

இத்தகைய நான்குவகையான வாழ்வியல் அறங்களை, சாதாரண மனிதரும் சரிவரப் புரிந்துகொள்ளுமாறு செய்யவேண்டும் ; அதவும் சக்ரவர்த்தி தசரதனின் பிள்ளைகள் மூலமாகவே தெரிவிக்கவேண்டும் என மனங்கொண்டான்  பரந்தாமன்.  ’எனக்கும் ஒன்று கொடேன்!’ என்று ஒரு குழந்தைக்காக மன்றாடிய மன்னனுக்கு, ஒன்றுக்கு பதில் நான்கு புத்திரர்களை இப்படித்தான் அருளினான் அந்தக் கருணாமூர்த்தி.

**

கேன உபநிஷதம்

தனால் இந்தப் பயணம்? – எனக் கேள்வி கேட்டுக்கொண்டே சாமவேதத்தில் வரும் இந்த உபநிஷதம் உள்ளார்ந்த ஆராய்ச்சியில் இறங்குகிறது. அதாவது ’தேடுகிறவனை’ ’உள்ளே’ இறக்கிவிட்டுப் பயணிக்கவிடுகிறது.

’ஓம். . கேனேஷிதம் பததி ப்ரேஷிதம் மன:’ என்கிறது ஆரம்பத்திலேயே.’(கேன’ என்பதற்கு ’எதனால்’ (எந்த சக்தியினால்) என்று அர்த்தம். எந்த சக்தியினால் விரும்பப்பட்டு, ஏவப்பட்டு, மனம் இப்படியெல்லாம் செல்கிறது, பயணிக்கிறது? என்கிற ஒரு அடிப்படைக் கேள்வியைக் கேட்கிறது. ’இறுதிஉண்மைக்கான தேடுதலில்’ இருப்பவன், தன் மனத்தின் தன்மைகண்டு கூர்மையாகி, தன்னைத் தானே கேட்டுக்கொள்கிறான் இப்படி. மேலும் கேள்விகள் வருகின்றன: முக்கியமாக, பிராணன் என்று ஒன்றிருக்கிறதே நமக்குள்.. அதனை இயக்குவது, யாரோ? வாக்கு எனப்படும் சொல், பேச்சு என்பதெல்லாம் நம்மிலிருந்து எப்படிப் புறப்படுகின்றன? புலன்களை செயல்படுத்தும் சக்தி எது? என்கிற ரீதியில் மேலும் மேலும் கேள்விகள் துளைக்கின்றன..

பிராணன் எனப்படும் உயிர்சக்தி சூட்சுமமாக எங்கும் நிறைந்திருக்கிறது. உலகை இயக்குகிற ஆற்றல்படைத்தது. அதன் ஒரு துகள் – துகளினும் துகள் நமக்குள்ளும் இருக்கிறது. அதனாலேயே இயங்குகிறோம். எனச் சிந்திக்கையில், ஜீவனின் (மனிதனின்) ஸ்தூல உடம்பு, மனம் எனும் சூட்சும வடிவம், இவற்றோடு பிராணனும் யாரால் இயங்குகின்றன என்கிற கேள்வியில் வந்து நிற்கிறது. இன்னுமொரு ஸ்லோகம் ’ஸ்ரோத்ரஸ்ய ஸ்ரோத்ரய் மனஸோ மனோ யத்’ என ஆரம்பித்து விஷயத்துக்கு வருகிறது. அதாவது காதின் காதாக.. மனதின் மனமாக.. என்று செல்லும் அது, தெளிவான ஒரு புள்ளியில் வந்து நிற்கிறது. காதின் காதாக, கண்ணின் கண்ணாக, வாக்கின் வாக்காக, மனதின் மனதாக, பிராணனின் பிராணனாகவும் இருப்பது ஒன்றே. அதுவே அது (பிரும்மம்) என நிற்கிறது இறுதியாக. தன் கடுமையான தவத்தினால், ஆழ்ந்த அக ஆய்தலில் உச்சம்பெற்று, உணர்வுநிலை திறக்கப்பட்டவன் இதனை உணர்கிறான். அவ்வாறு கண்டடைந்தவன் எவனோ அவன், இந்த புலன்களின் உலகிலிருந்து விடுபட்டுவிடுகிறான். பிறப்பு-இறப்பற்ற மேன் நிலையை எய்துகிறான் – என்கிறது.

மனதின் இயக்கத்தை, செயல்பாடுகளை துரத்திச்சென்று ஒரு பயனும் இல்லை என விழிப்புணர்வுபெற்றவன் புரிந்துகொள்கிறான். ஆதலால் அவன் மனதின்பின்னே இருக்கும் ஆன்மாவை அறிய முற்படுகிறான். மேலும் தொடர்கிறது. உடம்பு-மனம் என்கிற அமைப்பின் ஊடே, அழியாத உண்மைப்பொருளாக இருப்பது ஆன்மா. தானாகவே நிற்கும் அது உண்மையில் எத்தகையது என்கிற கேள்விக்கு குரு பதில் சொல்வதாக வருகிறது இந்த ஸ்லோகம்:

ந தத்ர சக்ஷூர்கச்சதி ந வாக்கச்சதி நோ மன:
ந வித்மோ ந விஜானீமோ யதைத தனுசிஷ்யாத்

அது கண்ணால் நோக்கப்பட முடியாதது; வாக்கும் (பேச்சு, சொற்களும்) மனமும் (சிந்தனைகளும்) அதனை நெருங்கமுடியாது. எனவே, எத்தகைய குணம்கொண்டது அது எனத் தெரியாது.. சொற்களில் சிக்காத ஒன்றை எப்படிப் புரியவைப்பது என எங்களுக்கும் தெரியாது (ஆனால் அவசியம் புரிந்துகொள்ளவேண்டியது) என்று ஆன்ம அனுபூதிபெற்ற குரு (ரிஷி) தன் சீடனுக்கு சொல்லும் வகையில் இது அமைந்துள்ளது. நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் ஐம்புலன்கள் வெளிஉலகை அறிவதற்காக, தொடர்புகொள்வதற்காக மட்டுமே. அவற்றால் அகத்தினுள் உறைகின்ற ஒன்றை அறியமுடியாது. புலன்களால் அறியமுடியாததை, புலனைக்கொண்டு எப்படி சொல்வது? அதனால்தான் அதைப்பற்றி வார்த்தைகளில் தன்னால் சொல்லமுடியவில்லை என சீடர்களுக்குப் புரியுமாறு விளக்குகிறார் வேதகால ரிஷி. மேலும் சொல்கையில், அது மனிதனுக்குத் தெரிந்த எல்லாவற்றையும் விட வித்தியாசமானது. எதையெல்லாம் அவன் இன்னும் அறியவில்லையோ அவற்றைவிடவும் மேலானது. ஞானநிலை அடைந்து அதனை ‘அறிந்த’ எங்களது பூர்வாச்சாரியர்களால் (ரிஷிகள்) இப்படி சொல்லப்பட்டிருக்கிறது என்கிறார்.

’யத் வாசானத்யுதிதம் யேன வாகப்யுத்யதே..’ எனத் தொடங்கும் ஸ்லோகம் இப்படி விளக்க முற்படுகிறது: ’எது சொல்லால் (வாக்கினால்) விளக்கப்படமுடியாதோ, ஆனால் எதனால் சொல்லப்படுகின்ற சொல் விளக்கம், ஒளி பெறுகின்றதோ அதுவே பிரும்மம். எதனைக் கண்கள் பார்ப்பதில்லையோ, ஆனால் எதனால் கண்கள் பார்க்கின்றனவோ அதுவே அது. எதனைக் காதுகள் கேட்கமுடியாதோ, ஆனால் எதனால் காதுகள் கேட்கின்றனவோ அதுதான் அது.. மேலும், எதனை மூச்சு தீண்டமுடியாதோ, நுகரமுடியாதோ, ஆனால் எதனால் மூச்சுவிடுதல் (மனிதனுக்கு/உயிர்களுக்கு) சாத்தியமாகிறதோ, அதுவே பிரும்மம்’ என அறிவாயாக என்று சீடனுக்கு உபதேசிக்கிறார் குரு. கூடவே ’..அதுதான் பிரும்மம்’ என விளக்கும் ஒவ்வொரு ஸ்லோகதுக்கு அடியிலும் ஒரு வாக்கியம் வருகிறது. அது: இங்கே வணங்கப்படுவது அது அல்ல!’
இங்கே கொஞ்சம் விளக்கம் தேவைப்படுகிறது. ஆன்மா என சூட்சுமமாக அறியப்படுவது பிரும்மம், பரம்பொருள், பரப்பிரும்மம். ஆனால் சாமான்யன் எதை வணங்குகிறான்? ஒரு உருவத்தை, பிம்பத்தை – அது விக்ரஹ (சிலை) வடிவிலோ, ஓவிய (பட) வடிவிலோ இருக்கிறது. ஏனெனில், சாதாரண மனிதனால் சூட்சும வடிவில் , அதாவது வடிவில்லா வடிவில் இருக்கும் இறையை வணங்க, தியானிக்க முடியவதில்லை. ஆனால் அவனும் இறைவழி செல்லவேண்டுமே – உய்வதற்கு, கடைத்தேறுவதற்கு. அதற்கான ஒரு எளிய முதற்படியாக, வழிபட ஏதுவாக கோவில்களில் இந்த விக்ரஹங்கள், வீடுகளில், ஆசிரமங்களில், மடங்களில் கடவுள்களின் சித்திரங்கள், படங்கள் ஆகியவை. ஆரம்பப் படிநிலைதான் இது. ஸ்தூல வடிவத்தில் அகப்படாத, ஆனால் எங்கும் நிறைந்திருக்கும் இறையை, பிரும்மத்தை மனிதன் தன் புற அங்கங்களைக் கொண்டு காண இயலாது. ஆனால் அதற்காக அவன் தன்னை இயக்கும் தெய்வசக்தியை, பரம்பொருளை விட்டுவிடமுடியுமா? புறத்தே சுற்றித் திரிந்தவன், தன் அகத்துக்குள் பார்க்கிறான். பயணிக்க ஆரம்பிக்கிறான். அதற்கான சாதனாக்களை (தீவிர, தொடர்ந்த இறைசிந்தனை, மனம் ஒருநிலைப்படல், தியானம் போன்றவை) அவன் செய்யவேண்டியிருக்கிறது. கடும் சோதனைகள் நிறைந்த அந்தப் பாதையிலோ செல்லவேண்டிய தூரம் மிக அதிகம். தேடுபவன் அதற்காக அந்தப்பாதையை விட்டு விலகுவானா? சைவசமய முதன்மை நாயன்மார்களில் ஒருவரான அப்பர், இறுதியில் தான் அடைந்த அனுபூதி நிலையைப்பற்றி ‘தேடொணா தேவனை என்னுள்ளே தேடிக் கண்டுகொண்டேன்’ எனக் குறிப்பிடுகிறார்.

பிரும்மத்தை (இறுதி உண்மை) நோக்கிய கரடுமுரடான பாதையில் மேலும் முன்னேறுகிறது கேன உபநிஷதம். ஆன்மீகத் தேடலின் ஆரம்பநிலைகளில் சீடனுக்குத் தனக்கு அது தெரிந்துவிட்டது என்பதான மயக்கம் உண்டாகிறது. அதனைத் தன் குருவுக்கு சொல்கிறான். அவர் சொல்கிறார்.: ’அதற்குள் பிரும்மத்தைக் கண்டுவிட்டதாக உனக்குத் தோன்றினால், நீ அறிந்தது மிகக்குறைவுதான். மீண்டும் தொடர்ந்து தியானத்தில், உண்மை வழியில், சாதனாவில் இரு. தேடுதல் தீவிரமாகட்டும்’ என்று ஊக்குவிக்கிறார். மேலும் மேலும் சீடன் சிரத்தைகாட்டி, தியானித்து நாட்கள் கடந்தபின் அவனின் சலசலப்புக்கு குரு (வேதரிஷி) தெளிவுபடுத்துகிறார். ‘ என்னை எனக்குத் தெரியும்.. ஆனால் எனக்குள்ளிருக்கும் பிரும்மத்தை (ஆன்மா) தெரியாது . அதே சமயத்தில், தெரியவில்லை என்றும் உறுதியாகச் சொல்லமுடியாதுபோலிருக்கிறதே’ என்கிற நிலைக்கு நீ வந்திருந்தால், இறை அறிதலில் நெருங்குகிறாய் என அர்த்தம். மேலும் ‘யார் நன்றாகத் தெரிவதாகச் சொல்கிறானோ அவன் அறியாதவன். யார் தனக்குச் சரியாகத் தெரியவில்லை எனும் நிலையிலிருக்கிறானோ, அவனே அறிபவன். மேலும் மேலும் சாதனாக்கள் மூலம் தன்னை ஈடுபடுத்தி உணர்வின் படிப்படியான நிலைகளில் எவனொருவன் முன்னேறுகிறானோ, அவன் அந்த ஆன்மாவிலிருந்தே(பிரும்மத்திலிருந்தே) மேன்மேலும் ஆற்றல் பெற்று, மரணமில்லாப் பெருவாழ்வடைகிறான் என்கிறது இந்த உபநிஷதம். மேலும் எச்சரிக்கவும் செய்கிறது: ’இங்கேயே, இந்த பிறவியிலே ஒருவன் பிரும்மத்தை இவ்வாறு அறிந்துகொண்டானேயானால், அவன் எல்லா உயிர்களிலும் பிரும்மத்தின் இருத்தலை உணர்கிறான். ஒருவேளை, இந்த பிறப்பில் அப்படி அறியமுடியாதுபோனால், அது அந்த ஜீவனுக்கு மாபெரும் இழப்பு’ என்கிறது.

மூன்றாவது அத்தியாயத்தில் பிரும்மமே அனைத்திற்கும் ஆதாரமாக விளங்குகிறது என்பதைக் கதையாக விளக்குகிறது இந்த உபநிஷதம்.

அரக்கர்களுடனான ஒரு யுத்தத்தில் வென்றபின் களித்திருந்தனர் தேவர்கள். தங்களைத் தாங்களே மெச்சி மகிழ்ந்திருந்தனர். கர்வம் தலைக்கேறிவிட்டதை பிரும்மம் அறிந்தது. அவர்களுக்குப் பாடம் புகட்ட நினைத்து, ஒரு யக்ஷனாக உருவெடுத்து அவர்கள் இருக்கும் பகுதியில் உலவியது. தேவர்கள் தங்கள் உள்ளுணர்வினால், ஏதோ ஒரு அதீத சக்தி இங்கு வந்திருக்கிறது என அறிந்தனர். ஆனால் என்ன அது என்று தெரியாது திகைத்தார்கள். அவர்களுக்குள் பேசிக்கொண்டிருக்கையில் தேவேந்திரனான இந்திரன் அக்னிதேவனை அழைத்து ’நீர் போய் அது யார், என்ன எனத் தெரிந்துகொண்டுவாரும்..’ என அனுப்பினான்.

அக்னிதேவன் யக்ஷனின் முன் வந்து நின்றான். யக்ஷ உருவிலிருந்த பிரும்மம் அக்னியைப் பார்த்து ’யார் நீ’ என்றது. ’அக்னியே நான்!’ என்றான் அவன். ’உன்னால் என்ன செய்ய முடியும்?’ என்றது பிரும்மம். ’எதனையும் நொடியில் எரித்து சாம்பலாக்கிட என்னால் முடியும்!’ என்றான் அக்னிதேவன். ’ஓ.. அப்படியா!’ என்றது பிரும்மம். ஒரு உலர்ந்த புல்லை அக்னியின் முன்னால் போட்டது. ’எரி இதனை!’ என்றது. அக்னி புல்லைப் பார்த்தான். ப்பூ! என்று நினைத்தான். கடும் தனலாக உலர்ந்தபுல்லின் மீது பாய்ந்தான். புல்லுக்கு ஒன்றும் ஆகவில்லை. நிறம்கூட மாறவில்லை. அக்னியால் புல்லை எரிக்க முடியவில்லை.மீண்டும் முயன்றான். தோற்றான். சோர்ந்தான். என்னால் புல்லைக்கூடவா எரிக்கமுடியவில்லை என்று முணுமுணுத்துக்கொண்டே தேவர்களிடம் வந்து நடந்ததைச் சொன்னான். ’அந்த யக்ஷன் யாரென அறியமுடியவில்லை’ என்றான்.

இந்திரன் வாயுவை நோக்கினான். ’நீர் போய் அறிந்து வாரும்!’ என்றான். வாயுதேவன் விரைந்து வந்து யக்ஷன் முன் நின்றான். அதே கேள்வி. ‘நான் வாயு!’ என்றான் இவன். ’என்ன செய்ய முடியும் உன்னால்?’ என்று யக்ஷன் கேட்டதற்கு, ’இங்குள்ள எதனையும் காற்றாக வீசித் தூக்கி எறியும் சக்தி எனக்குண்டு!’ என்றான் சிரித்துக்கொண்டே. ’ஓ! அப்படியா.. எங்கே இந்தப் புல்லைத் தூக்கி வீசு!’ என்றது யக்ஷனாய் நின்ற பிரும்மம். வாயுதேவன் அற்பப் புல்லைப் பார்த்து மனதில் சிரித்துக்கொண்டான். அலட்சியமாக அதன்மீது வீசினான். அசைந்துகொடுக்கவில்லை அது. ஆச்சரியமுற்று, உக்கிரமாக வீசி, அதனைத் தூக்கிவீசப் பார்த்தான். ம்ஹூம்! ஒன்றும் நடக்கவில்லை. புல் அசைவற்று போட்டது போட்டபடிக் கிடந்தது. யக்ஷனைக் குழப்பத்துடன் பார்த்தவன் திரும்பிச் சென்று தேவர்களிடம் நடந்ததைச் சொன்னவன். ’என்னாலும் அந்த சக்தியைப் புரிந்துகொள்ளமுடியவில்லை’ என்றான்.

இந்திரன் ஆச்சரியம் மிகக்கொண்டான். இதில் ஏதோ பெரும் சூட்சுமம் இருக்கிறது. நமக்குப் புரியவில்லை. புரிந்துகொள்ளும் சக்தி நமக்கில்லையோ எனக் கலங்கியவாறு அவனே சென்றான். யக்ஷன் மறைந்துவிட்டிருந்தான். அங்கே வானில், பொன்னொளி எங்கும் ஜொலித்து வீச, பேரழகுடன் ஒரு பெண்சக்தி உருவந்தாங்கி காட்சிதந்தது. உமாதேவி! இந்திரனின் கண்கள் பனித்தன. பணிந்து வணங்கினான். மனதில் அவளை முழுதுமாக நிறுத்திப் பிரார்த்தித்தான். ‘எனக்கு ஒன்றும் புரியவில்லையே.. யார், எது இந்த மர்மசக்தி? அன்னையே, அருள்வாய்’ என மனதாரத் தாழ்ந்து இறைஞ்சினான். உமாதேவி முகமலர்ந்தாள். ’தேவேந்திரா! தேவர்களான உங்கள் சக்தியினால் உணரமுடியாது அதை எனக் கண்டுகொண்டாய். பிரும்மாண்டம், சூட்சுமத்தின் சூட்சுமம் அது. பிரும்மம். பிரபஞ்சத்தின் எல்லா செயல்களுக்கும், ஏன், உங்கள் வெற்றிகளுக்கும்கூட அதுவே ஆதாரம். அது தன் சக்தியை பின்னிழுத்துக்கொண்டால், நீங்கள் தளர்ந்து வீழ்வீர்கள். நீங்கள் யாரும் எதுவும் இல்லை என்றாகிவிடும் என அறிவாயாக!’ என்றாள் தேவி. தேவேந்திரன் அவளை நோக்கித் தலைதாழ்த்தினான். புத்தி தெளிவாகி, தேவியை வணங்கி நன்றி சமர்ப்பித்து, அங்கிருந்து அகன்றான்.

மேலும், பிரும்மத்தின், பரம்பொருளின் அதீத சக்தியை, எல்லையில்லா இருப்பை உணரவேண்டும். ’மின்னல் மின்னுவதும், இமை இமைப்பதெல்லாமும் அதனால்தான்’ என்கிற இந்த உபநிஷதம், தொடர்கிறது: மனமானது கற்பனை செய்வதும், வெளிஉலகில் பொருள்களை, உணர்வுகளை நாடிச்செல்வதும், ஆன்மா என அறியப்படும் பிரும்மத்தின் காரணமாகவே. ’அத்தகைய பிரும்மமானது எல்லா உயிர்களிலும் நிறைந்திருப்பதாக உணர்ந்து, எவனொருவன் அதை உண்மையாக தியானிக்கிறானோ, அவனை எல்லா உயிர்களும் நேசிக்கின்றன’ என்கிறது.

ஆழ்ந்த தேடலில் இப்போது முன்னேறியிருக்கும் சீடன், ’குருவே! அத்தகைய ஞானநிலைக்கான ரகசிய அறிவை அருள்வீராக’ எனப் பிரார்த்திக்கிறான். ’இதுவரை நான் உனக்கு சொன்னதெல்லாம் அதுபற்றியதே’ என்கிறார் குரு. இறை உணர்வோடு புலன்களின் கட்டுப்பாடு, உண்மைவழி செல்லுதல், சிரத்தையுடன் கூடிய கடும் தியானம் (தவம்) ஆகியவைதான் அந்த ரகசிய அறிவிற்கான சாதானாக்கள் எனச் சொல்கிறார். வேதங்கள் அந்த ரகசிய அறிவின் அங்கங்களாய் உள்ளன என சீடனுக்கு அவர் தெளிவுபடுத்துவதாய் இந்த உபநிஷதம் நிறைவு பெறுகிறது.

இந்த இடத்தில் நினைவு கூரவேண்டிய ஒன்று: ’உண்மைவழி நிற்றல் என்பதில், பேச்சு என்பது, விளைவு எதுவாயினும் பிடிவாதமாக உண்மை சொல்லல் என்றாகாது. பிறர் மனதை கலங்கடிக்காத, புண்ணாக்காத உண்மைகளையே ஒருவன் எப்போதும் பேசவேண்டும். அத்தகைய பேச்சு என்பது, வாக்கினால் செய்யப்படுகிற தவம்’ என்கிறது பகவத் கீதை.

(Picture courtesy: Internet)

**

கபீர்தாஸ்: ஆன்மீகத் தேடல்

(‘காசியில் உயிர்நீத்தால்தான் மோட்சமா?’-விலிருந்து தொடர்ச்சி..)

கபீரின் கவிதைகளுக்குள் நுழையுமுன், அவருடைய ஆன்மீகப் பயணத்தின் ஆரம்ப அத்தியாயத்தைக் கொஞ்சம் பார்த்துவிடலாம்.

15-ஆம் நூற்றாண்டில் பனாரஸ் எனப்படும் இன்றைய வாரணாசி (காசி) உன்னதமாயிருந்தது. அங்கு ஹிந்து, இஸ்லாமிய மற்றும் ஏனைய மதங்களைச் சார்ந்த சாஸ்திரம் அறிந்த, கற்றறிந்த பண்டிதர் நிறையப்பேர் வசித்துவந்தனர். சாதுக்களும், சந்நியாசிகளும் ஏகாந்தமாய் சுற்றித்திரியும் ஊரானது அது. கூடவே முல்லாக்களும், மௌல்விகளும், சித்துவேலை செய்பவர்களும், யோகிகளும் ஏகமாய் நடமாடிய காலம். வசதியாய் வாழும் குடும்பத்துச் சிறுவர்கள் நல்ல ஆச்சார்யர்களிடம், குருக்களிடம் கல்வி பயில அனுப்பப்பட்டனர். அப்படி அனுப்பப்பட தன் குடும்பநிலை அனுபதிக்காதபோதும், நல்லதொரு குரு தனக்கு வேண்டுமே, குருவின்றி அவனை அறிவதெப்படி என அந்தச் சின்னஞ்சிறு வயதிலேயே தவிக்கிறான் கபீர். அம்மா, அப்பாவின் பேச்சைக்கேட்டு, அவர்களுக்கு உதவியாக வீட்டுத்தொழிலைச் செவ்வனே செய்துவந்தாலும், அவன் உள்ளம் தேடுதலைத் தீவிரமாகத் தொடங்கிவிட்டது. குருவேயே சிந்தனைக் கருவாகக் கொண்ட அவன் மனம், கிடைக்காத குரு நினைந்து அன்றாடம் அல்லலுற்றது.

அப்போது காசியில் ஸ்ரீராமானந்த தீர்த்தர் என்னும் ஆச்சார்யர் வாழ்ந்துவந்தார். பேருக்கேற்றபடி சீரிய ராம பக்தர். எளிய வாழ்வும் ராம ஜபமும் தவிர, வேறு ஒன்றும் அறியாதவர். அவருடைய உன்னத பக்தியும், பாடம் கற்றுத்தரும் முறையும் அவருக்கு புகழ் சேர்த்தது. கற்றோரும், சாதாரண மக்களும் அவரை காசியின் உயர்ந்த குரு என மதித்தனர், போற்றினர். இதுபற்றியெல்லாம் ப்ரக்ஞை ஏதும் இன்றி எளிமையாய் அவர் வாழ்ந்து வந்தார். தன் சிஷ்யர்கள் சிலருக்கு ஆன்மீகப் பாடங்கள் கற்பித்துவந்தார். சிறுவனான கபீர்தாஸ் ஸ்ரீராமானந்தர்பற்றிக் கேள்விப்பட்டு மனம் மிக மகிழ்ந்தான். எப்படியும் அவருடைய சிஷ்யனாகி, உபதேசம் பெற்றுவிடவேண்டும் என்கிற வேட்கை அவன் மனதில் தீயாய்ப் பற்றிக்கொணடது.

தான் ஒரு முஸ்லிம் குடும்பத்திலிருந்து வந்தவனாயிற்றே, பாலபாடம் கூட பயிலாதவனாயிற்றே, தன்னை ஸ்ரீராமானந்தர் சிஷ்யனாக சேர்த்துக்கொள்வாரோ என்கிற அச்சமும், கவலையும் சிறுவனான கபீரிடம் இருந்தது. ராமானந்தரின் சிஷ்யர்கள் , பெரும்பாலும் பிராமண அல்லது ஹிந்து உயர்குலப்பிள்ளைகள். நகரின் ஒதுக்குப்புறத்தில், ஒரு மரத்தின் அடியில் மாலையில் கூடி அவர் வருகைக்காகக் காத்திருப்பார்கள். அப்படி ஒருநாள் காத்திருக்கையில், மரங்களின் பின்புறத்திலிருந்து நிழலோடு நிழலாக வெளிப்பட்டான் சிறுவன் கபீர். அந்த குருவின் சிஷ்யர்களின் கடைசி வரிசையில் தான் போய் உட்கார்ந்து கொள்ளலாம், பாடம் கேட்கலாம் என நினைத்து, தயங்கித் தயங்கி முன்னேறினான். அவனைக் கவனித்துவிட்ட குருவின் சிஷ்யர்கள், அவனுடைய முஸ்லிம் தோற்றம் கண்டு குழம்பி, ‘’டேய்! யார் நீ! ஏன் இங்கே வந்திருக்கிறாய்?’ என்று எரிச்சலுடன் கேட்டனர். அதற்கு கபீர், தான் அவர்களின் குருவிடம் தன்னை சிஷ்யனாக ஏற்குமாறு வேண்டிக்கொள்ள வந்திருப்பதாகவும், அவரிடம் பாடம் கற்க விருப்பம் கொண்டிருப்பதாகவும் கூறினான். இதைக்கேட்ட அவர்கள் பெரிதாகச் சிரித்துக் கபீரைக் கேலி செய்ததோடு “ நீயெல்லாம் இங்கே வரப்படாது. போ..போய்விடு உடனே ” எனத் துரத்திவிட்டனர். அவமானமும் அழுகையும் மேலிடக் கபீர்தாஸ் அந்த இடம் விட்டு அகன்றான். வீடு செல்லவும் மனமில்லாமல், என்ன செய்வது இனி என்கிற மன உளைச்சலில் கங்கைக்கரைப் பக்கம் சென்றான். அங்கே படித்துறையில் உட்கார்ந்து, அலைந்து திரியும் சாதுக்களை, தியானத்திலிருந்த சந்நியாசிகளை, நேரம் போவது தெரியாமல் பார்த்துக்கொண்டிருந்தான். தனக்கு ஒரு குரு கிடைக்கும் பாக்யமே இல்லையோ என நினைத்து் மனம் வெம்பி அழுதான். பொழுது போகப்போக, பசியும், தூக்கமும் மேலிட, படியிலேயே படுத்து உறங்கிப்போனான்.

மாலை பாடம் எடுத்த ராமானந்தரிடம், முஸ்லிம் சிறுவன் ஒருவன் அவருடைய சிஷ்யனாக முயன்ற கதைபற்றி அவருடைய சிஷ்யர்கள் யாரும் வாய் திறக்கவில்லை. இரவு வீடு திரும்பிய அவர் ஒரு மாதிரி உணர்ந்தார். படுத்தபின்னும் சரியாகத் தூக்கம் வரவில்லை. பின்னிரவின் சிறுதூக்கத்தில், கனவு ஒன்று கண்டார் ராமானந்தர். அதில் அழகான, தேஜஸ் மிகுந்த முகத்துடன், துடிப்பு மிக்க இரண்டு இளைஞர்கள் தன் வீடு விட்டு வெளியேறியதாகத் தோன்றியது. திடுக்கிட்டு எழுந்தார் ராமானந்தர். வீடு விட்டு அகன்ற சகோதரர்கள் போல கனவில் வந்தவர் யார்? ராம, லக்ஷ்மணர்களா அவர்கள்? செய்வதறியாது குழம்பினார். ஏதாவது பகவத் அபச்சாரம் (கடவுட்குற்றம்) நிகழ்ந்துவிட்டதோ என நெஞ்சில் பயம் கொண்டார். மேலும் தூக்கம் பிடிக்காமல், ஸ்நானம் செய்து வருவோம் என அவ்வதிகாலையில் கங்கைக்கரை நோக்கிச் சென்றார் அவர். இருள் இன்னும் சரியாக விலகாத நிலையில் குளித்துறைப் படிக்கட்டுகளில் தடுமாறி இறங்கினார் ராமானந்தர். திடீரென எதையோ மிதித்துவிட்டதாகப் பதற்றமடைந்த அவர், ‘ஹே ராம்! ஹே ராம்!’ என்று அவன் பெயரைச் சொல்லியவாறே இன்னும் இருந்த இருளினால், சரியாகப் பார்க்கமுடியாமல் தண்ணீரை நோக்கிச் சென்றார். அவர் பாதம்பட்ட, தூங்கிக்கொண்டிருந்த சிறுவனோ, திடீரென விழித்தெழுந்து, தன்னைக்கடந்து செல்பவர் ஸ்ரீராமானந்தர் என உணர்ந்து தெய்வதரிசனம் கண்டதாய் பரவசமானான். “ஹே ராம்! ஹே ராம்! எனத் தானும் சொல்லியே அவர் போகும் திசைநோக்கிக் கைகூப்பினான் சிறுவனான கபீர்.

அன்று மாலை ராமானந்தரின் வருகைக்காக அவருடைய சிஷ்யர்கள் காத்திருந்தபோது, தூரத்தில் ஏதோ நிழலாடியது. வந்துகொண்டிருப்பது அதே முஸ்லிம் சிறுவன் எனக்கண்டு, சினம் கொண்டு சிஷ்யர்கள் விரட்ட முயன்றனர். இந்தமுறையோ கபீர் அங்கிருந்து நகல்வதாக இல்லை. குருவைத் தரிசிக்காமல் தான் செல்வதற்கில்லை என்று அடம்பிடித்து அங்கேயே இருந்தான். வயதான குருவும் வந்துசேர்ந்தார் கொஞ்ச நேரத்தில். சிஷ்யர்கள் கபீரை தள்ளிக்கொண்டுபோய் அவரெதிரே நிறுத்தினார்கள். அப்பாவிச் சிறுவனுக்கெதிராகப் போட்டுக்கொடுத்தார்கள். ராமானந்தர் கோபமுற்றார். ”யார் நீ? எதற்காக இங்கு வந்து தொல்லை தருகிறாய்?” என்று சிறுவன் கபீரிடம் வினவினார் குரு. அதற்குப் பதிலாக, தான் அவரையே குருவாக மனதில் கொண்டிருப்பதாகக் கூறிய கபீர், முதல்நாள் மாலையும், அன்று அதிகாலையும் நடந்தவற்றை மெல்லப் பணிவுடன் கூறினான். அவர் பாதம் தன் மேல் பட்டதால் குருவின் பாத தீட்சை தனக்குக் கிடைத்துவிட்டதாகவும், அவர் சொன்ன ராம நாமமே தனக்கு குருவிடமிருந்து தரப்பட்ட மந்திரமாகத் தன் மனதில் கொண்டு, அதை ஜெபித்தே, அவரிடம் வந்துள்ளதாகவும் சொன்னான். சிறுவனின் வார்த்தைகளைக் கேட்டு ஆச்சரியமானார் ராமானந்தர். இருந்தும், முகத்தில் கோபம் காட்டி, ’இதுதான் குருவிடம் வந்தடைகின்ற முறையா’ எனக் கேட்டார். குருவின் கோபம்கண்டு பயந்த சிறுவன், அவர் பாதம் பணிந்து, தான் ஒன்றும் அறிந்திராதவன் என்றான்; எனினும் தான் கூறியது அனைத்தும் உண்மைதான் என்றும் சொல்லிக் கலங்கிய கண்களுடன் அவர் முன் கைகட்டி நின்றான் கபீர். கோபம் தணிந்த ராமானந்தர் சிறுவனைக் கூர்ந்து நோக்கினார். ஏதோ உள்ளுணர்வு தாக்க, அவர் மனம் கனிந்தது. அவனை மற்ற சிஷ்யர்களுடன் உட்கார்ந்து பாடம் கேட்க அனுமதி அளித்தார். இதுவே என் பாக்யம் என மனதில் நினைத்து குருவை சாஷ்டாங்கமாக வணங்கிவிட்டு, மற்றவர்களுடன் உட்கார்ந்து கொண்டான் கபீர். அவர் சொல்லிக்கொடுத்த ராம மந்திரத்தை மனதில் தீபமென ஏற்றினான். அவரையே தெய்வம் எனக்கொண்டது அவனுடைய பிள்ளை உள்ளம். அவருடைய போதனைகளை வெறும் வார்த்தைகளாகக் கேட்காமல், உணர்வுபூர்வமாகக் கேட்டறிந்து, விரைவிலேயே குருவின் ஆத்மார்த்தமான சிஷ்யர்களுள் ஒருவனாக மாறினான் சிறுவன் கபீர். இப்படித் துவங்கியது கபீர் தாஸின் ஆன்மீகப் பயணம்.

ஸ்ரீ ராமானந்தரின் உபதேசத் தாக்கம் கபீரின் மனதை எப்போதும் நிறைத்திருந்தது. தன் குருவை நினைத்து சில கவிதைகளில் அவர் உருகுவது தெரிகிறது. ஒரு முறை இப்படி ஒரு சிந்தனை அவர் மனதில் எழுந்து திடுக்கிடவைத்தது: ”குருவும், கோவிந்தனும் (பரம்பொருளைச் சொல்கிறார்) ஒருசேர, ஒரே நேரத்தில் என்முன் தோன்றிவிட்டால், நான் யாரை முதலில் வணங்குவேன்? ஐயகோ! யாரை முதலில் வணங்குவேன்!’ எனச் சிந்தித்துப் பதறுகிறது அவர் மனம். பிறகு சட்டெனத் தெளிந்து அவரே தொடர்கிறார்: ”குருவுக்குத்தான் என் முதல் வணக்கம். ஒன்றும் அறிந்திராத இந்த அப்பாவிக்கு கோவிந்தனைக் காட்டியவர் அவரே அல்லவா?” என்கிறார். (தொடரும்)

**