ஜொலித்த சூர்யா. விக்கித்துப்போன லங்கா !

ஸ்ரீலங்காவுக்கு எதிரான டி-20 தொடரை முடிவு செய்யும் 3-ஆவது போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது, அதுவும் ரொம்பச் சரியாகச் செய்தது திருப்திகரமாய் அமைந்தது. இஷான் கிஷன் எளிதாக விழுந்தாலும், தன் இரண்டாவது மேட்ச்சை ஆடிய ராஹுல் த்ரிப்பாட்டி (Rahul Tripathi) லங்கா கேம்ப்பின் மீதான தாக்குதலை ஆரம்பித்துவைத்தார். 16-இல் 35 விளாசி வெளியேறிய த்ரிப்பாட்டிக்குப் பின்  உள்ளே நுழைந்தார் ஸ்கை (SKY). அடுத்த முனையில் ஷுப்மன் கில் (Shubman Gill) நிதானம்.

A hint of Surya’s fireworks !

சில பந்துகளை கவனித்துவிட்டு கில், சூர்யா சில பௌண்டரிகளை அடிக்க, பதற்றத்தில் வேகவேகமாக பௌலிங்கை மாற்றினார் லங்கா கேப்டன் ஷனகா. சூர்யாவுக்கு ஆவேசம் வந்துவிட்டால், எதிரி பௌலர்கள் மைதானத்தை விட்டு ஓடிவிடுவதே நல்லது! ஆனால் அவர்கள்,  ஸ்பின், ஸ்லோ டெலிவரி, wide outside the off-stump என்றெல்லாம் வெரய்ட்டி காண்பிக்க முயல, வந்ததே கோபம் சூர்யாவுக்கு. சுற்ற ஆரம்பித்துவிட்டார் பேட்டை. ஸ்கோர் திடீரென எகிற, ஸ்ரீலங்கா பௌலர்கள், ஃபீல்டர்கள் அடிக்கடி ஆகாசம் பார்க்கவேண்டியதாயிற்று. குறிப்பாக, மதுஷன்காவையும் கருணரத்னேயையும் ஒரு பிடி பிடித்தார் அவர். உட்கார்ந்தவாறும், தரையில் படுத்து உருண்டும் பறக்கவிடப்பட்ட சிக்ஸர்கள், குஜராத் ரசிகர்களை போதையில் கிறுகிறுக்கவைத்தன. மொத்தம் 7 பௌண்டரிகள், 9 சிக்ஸர்கள். வெறும் 45 பந்துகளில் பிடி, சதம் என்றார் சூர்யா. கிடுகிடுத்துப்போனது லங்கா. ஒரு பக்கம் கில் (46), ஹூடா (4), பாண்ட்யா (4) என வெளியேற, அக்‌ஷர் பட்டேலின் (21, 9 பந்துகள்) துணையோடு இறுதிவரை அவுட் ஆகாமல் விளாசிய சூர்யா 112 நாட் அவுட் (51 பந்துகள்)..

ஸ்ரீலங்காவுக்கு இலக்கு 229 ! நாங்களும் காண்பிப்போம் அதிரடி என்பதாக ஆரம்பித்தது லங்கா. கொஞ்சம் ரன் ஏற, விக்கெட்டுகள் ஒருபக்கம் சரிய ஆரம்பித்தன. இந்த மேட்ச்சிலும் ஆடவைக்கப்பட்ட அர்ஷ்தீப் சிங் பௌலிங்கில் கொஞ்சம் முன்னேற்றம் காண்பித்ததாகத் தோன்றியது. 5 நோபால்களுக்கு பதில் 4 வைட் ! அவ்வப்போது பாண்ட்யா எச்சரிப்பது தெரிந்தது. எனினும் 2.4 ஓவர்தான் அவருக்கு வந்தது அதில் 3 விக்கெட்! ஆச்சர்யம். பாண்ட்யா, சாஹல், மாலிக் ஆளுக்கு 2 எடுக்க, ஸ்ரீலங்கா நிலைகுலைந்தது. 17-ஆவது ஓவரில் 137 ரன்களில் அதன் ஸ்கோர் மடிந்தது.

ஒரு கட்டத்தில் இது Surya Vs Sri Lanka என்று ஆகிவிட்டிருந்தது என்றார் கேப்டன் பாண்ட்யா. கோச் ராஹுல் ட்ராவிட் புகழ்ந்தார் சூர்யாவை இப்படி: ”சிறுவயதில், இளம் கிரிக்கெட் வீரனாக வளர்ந்துகொண்டிருக்கையில், நல்லவேளையாக நான் ஆடியதை நீ பார்த்திருக்கமாட்டாய் என நினைக்கிறேன். நிச்சயம் என் ஆட்டத்தைப் பார்த்திருக்கமாட்டாய்! “

இந்தியாவுக்கு தொடர் வெற்றி. இதுவரை உள்நாட்டு டி-20 தொடரை ஸ்ரீலங்காவிடம் தோற்றதில்லை இந்தியா.

ஆட்டநாயகன் விருதை எதிர்பார்த்தாற்போல் சூர்யா சுருட்ட, தொடர்நாயகன் விருதை வென்றார் அக்‌ஷர் பட்டேல். Consistent performance.

ஒருநாள் தொடர் ஜனவரி 10-ல் அஸாம் தலைநகர் குவஹாட்டியில் ஆரம்பம். இரவு-பகல் கூத்து!

**

4 thoughts on “ஜொலித்த சூர்யா. விக்கித்துப்போன லங்கா !

  1. அடடா…   பார்க்காமல் விட்டேனே…   நான் பார்த்திருந்தால் சாதாரணமான ஆட்டமாய் மாறியிருந்திருக்குமோ என்னவோ…

    Liked by 1 person

    1. @ஸ்ரீராம்: என்ன இப்படிச் சொல்கிறீர்கள்! ஆட்டம் ஆட்டம்தான்.. பாட்டம் பாட்டம்தான்! டி-20 யா, கொக்கா!

      Like

  2. மூத்த கிரிக்கெட் வீரர்கள் எவரும் ஒழுங்காக ஆடவில்லை. ஏதோ சூர்யகுமார் இருந்ததால் மானம் தப்பித்தது. என்னைக் கேட்டால், மூன்று மேட்சுகளில் அடிக்கவில்லை என்றால், விக்கெட் எடுக்கவில்லை/ரன் லீக் செய்கிறார் என்றால், 20 மேட்சுகளுக்கு உட்கார வைத்துவிடவேண்டியதுதான்

    Liked by 1 person

    1. @ நெல்லைத்தமிழன் :

      கிட்டத்தட்ட இப்படித்தான் சொல்லியிருக்கிறார் ஒரு இடத்தில் கவாஸ்கர்! ரொம்ப செல்லம் கொடுக்கவேண்டியதில்லை, பொறுப்பாக ஆடத்தெரியவில்லையென்றால், வெளியேற்றிவிட வேண்டியதுதான் என்பதாக.

      Like

Leave a comment