கிரிக்கெட்: நோ-பால் ஸ்பெஷலிஸ்ட்?

16 ரன்னில்  இரண்டாவது மேட்ச்சைத் தோற்றதில், இந்தியாவின் பரிதாப டி-20 கதையின் திரை விலகுகிறது. ஆரம்ப ஆட்டக்காரர்கள் சொதப்ப, மிடில் ஆர்டர், லோயர் ஆர்டர் என இந்தியாவைத் தாங்குதாங்கெனத் தாங்கிற்று. முதல் போட்டியில் தீபக் ஹூடா–அக்‌ஷர் பட்டேல் ஜோடி. இரண்டாவதில் சூர்யகுமார் யாதவ்-அக்‌ஷர் பட்டேல் இணை. அக்‌ஷரின் ஆக்ரோஷ பேட்டிங் லங்காவின் வயிற்றில் புளியைக் கரைத்தது. இன்னுமொரு போட்டியை குறுகிய மார்ஜினில் தோற்கப்போகிறோமோ எனப் பதற்றம்கொள்ளவைத்தது. கடைசி ஓவரில் அக்‌ஷர் அவுட் ஆகிவிட, லங்கா சமாளித்து வென்றுவிட்டது.

ஆனால் பேச வந்தது அக்‌ஷரின் அபார ஆட்டம்பற்றியல்ல. இந்தியாவின் ஆபாச வேகப்பந்துவீச்சுபற்றி. முதல் ஓவரில் ஹாட்ரிக் நோ-பால். 16 ரன்கள் எதிரிக்குத் தானம். 19-ஆவது ஓவரை இவரை நம்பி கேப்டன் கொடுக்க, இன்னும் ரெண்டு நோபால் எடுத்துக்கோ. 18 ரன்னும் ஒனக்குத்தான் என கேவலப் பந்துவீசிய அர்ஷ்தீப் சிங். இந்த மாதிரி பௌலர்களை வைத்துக்கொண்டு, என்னதான் மாத்தி யோசிக்கும் கேப்டனாக இருந்தாலும் எப்படி ஜெயித்துக்கொடுக்கமுடியும்? போதாக்குறைக்கு ஷிவம் மாவியின் மோசமான கடைசி ஓவரில் 20 ரன்கள் லங்காவுக்கு அன்பளிப்பு. இப்படித்தான் இந்தியா உதவியது லங்காவுக்கு ஸ்கோர் 200-ஐத் தாண்ட!

Pathetic bowling

அர்ஷ்தீப் சிங்கிற்கு பாண்ட்யா தந்தது இரண்டே ஓவர்தான். அதில் 37 ரன். முதல் ஓவரில் வரிசையாக 3 நோபால்கள். டெத் ஓவரில் 2 நோபால்கள். நோ-பால் என்றால் அதற்கு அடுத்து பேட்ஸ்மனுக்கு கிடைக்கும் ஃப்ரீ ஹிட்டும் நினைவில் வரவேண்டும். அர்ஷ்தீப்பின் இந்த வீரதீர சாதனைபற்றி எதிர்பார்த்ததுபோல் கடும் விமர்சனம். காயத்திலிருந்து மீண்டு வந்ததால் இப்படித்தான் இருக்கும், அவரை விமரிசிப்பதற்கு பதிலாக தட்டிக்கொடுக்கவேண்டும் கேப்டன் –  என சப்பைக்கட்டு கட்ட சில வர்ணனையாளர்கள்.. தூக்கு இந்தமாதிரி ஆட்களை அணியைவிட்டு! – எனப் பாயும் கவாஸ்கர், கம்பீர் போன்ற முன்னாள் வீரர்கள்/வர்ணனையாளர்கள். பௌலர் என்பவர் மோசமான பந்துகளை சில சமயங்களில் வீசக்கூடும். அதனால் பேட்ஸ்மனால் விளாசப்படக்கூடும். இதெல்லாம் சர்வதேச கிரிக்கெட்டில் நடப்பதுதான். ஆனால் பௌலிங் க்ரீஸே கண்ணுக்குத் தெரியாதவன் எல்லாம் பௌலிங் போட, நேஷனல் டீமுக்கு ஏன் வரணும்? நோ-பால் போட்டால் என்ன? என் ரெப்யுடேஷன் தெரியும்ல? – என்பதுபோன்ற attitude. கேப்டன் பாண்ட்யா முகத்தைக் கைகளால் மூடிக்கொண்ட காட்சி! இந்த சமயத்தில் தேவை – அனில் கும்ப்ளே போன்ற ஒருவர் கோச்சாக.

Pandya’s plight !

இதே அணியில்தான் வலிமையான வெஸ்ட் இண்டீஸுக்கெதிராக அகமதாபாத் டெஸ்ட் ஒன்றில் விக்கெட் மேல் விக்கெட் சாய்த்த பின்னும்  குதித்துக் கொண்டாடாமல், ஒரு சிரிப்பைக் கூட உதிர்க்காமல்,  கடமையே என அடுத்த பந்தை ஓடிவந்து வீசிய கபில்தேவ் என்றொருவனும் இருந்தான் ஒருகாலத்தில். முதல் இன்னிங்ஸில் மீடியம் பேஸ் வீசி, அடுத்த இன்னிங்ஸில் ஸ்பின் பந்துபோட்டு க்ரெக் சாப்பலை அனாயசமாகத் தூக்கி வீசிவிட்டு, ஏதும் நடக்காததுபோல் ஃபீல்டிங் செய்யப்போன கர்ஸன் காவ்ரி (Karsan Ghavri) என்றொரு ஆல்ரவுண்டரும் இதே அணிக்காக ஆடியவன் தான். தன்னுடைய ஃபார்வர்ட் ஷார்ட்லெக் ஃபீல்டிங் திறமையை மட்டுமே பிரதான ஆயுதமாகக் கொண்டு, எதிரணியைப் பதற்றத்திலே வைத்த ஏக்நாத் சோல்கர் என்பவனும் அப்போது இந்தியாவுக்காக ஆடிக்கொண்டிருந்தான். இவர்களெல்லாம்  சொற்ப சம்பளத்திலும்,  நாட்டுக்காக நாலு மேட்ச் ஆடினாலும் போதும் என்ற பெருமையோடு ஆடியவர்கள். இன்றும் மனதில் நிறுத்தி ரசிகர்களால் கொண்டாடப்படும் தீர்க்கமான வீரர்கள். இப்போதெல்லாம் சிலருக்கு,  முயற்சி அதிகம் இல்லாமலேயே, கோடிக்கணக்கில் வந்து அதுமாட்டுக்கு கொட்டினால் இப்படி அதுகள் அணிக்குள் வந்து நாசம்பண்ணிவிடும் வாய்ப்பும் நிகழ்ந்துவிடுகிறது. காலத்தின் கோலம்..

இன்றைய மேட்ச்சில் அர்ஷ்தீப் சிங்கை பெஞ்சில் உட்காரவைக்கவேண்டும்.  அவரிடத்தில் மீண்டும் ஹர்ஷல் பட்டேல் (முந்தைய மேட்ச்சில் ரன் அதிகம் கொடுத்திருந்தாலும் 2 விக்கெட் வீழ்த்தியவர், பேட்டிங் செய்யவும் தெரியும்) வரவேண்டும். இல்லையெனில் ஆஃப் ஸ்பின் போடுவதோடு, லோயர் ஆர்டரில் ரன் சேர்க்கும் திறமைகொண்ட வாஷிங்டன் சுந்தர் அணிக்குள் கொண்டுவரப்படவேண்டும் – (சுந்தரை எதற்காக பெஞ்சில் உட்காரவைத்து வேடிக்கைபார்க்கிறார்கள் என்பது தெரியவில்லை) மூணாவது மேட்ச்சிலாவது தேறவேண்டும், தொடரைக் கைப்பற்றவேண்டும் என கோச் நினைத்தால். பார்ப்போம், ராஜ்கோட்டில் இன்று என்ன நடக்கப்போகிறது என்று.

**

One thought on “கிரிக்கெட்: நோ-பால் ஸ்பெஷலிஸ்ட்?

  1. Series கோவிந்தாவா? என்ன விளையாடுகிறார்களோ… பொறுப்பில்லாத ஆட்டம். நீங்கள் சொல்வது போல கிரீஸ் கொடு கண்ணில் தெரியாதவன் எல்லாம் பந்து வீச வந்து விட்டார்கள்.

    Like

Leave a comment