’சொல்வனம்’ இதழில் இரண்டு கவிதைகள்

மேலெழுந்தபோது

குப்பைகூளங்களைத்
திமிறித் தள்ளிவிட்டு
குதூகலமாய் எழுந்து
கொஞ்சமாக உயர்ந்திருந்தது
அந்தச் செடியின் ஜீவன்
வானம் பார்க்கும் இளமிலைகளில்
தீரா நடனமாடிக்கொண்டிருந்தது
குருத்தொன்று தலையில்
பொங்கியெழத் தயாராய்.
தன்னைத் தீண்டப்பார்க்கும்
தென்றலின் விஷம விரல்களை
மெல்ல விலக்கியது செடி
சீண்டும் ஸ்பரிசமேபோல்
தன்மேல் படரும் சூரியகிரணங்களை
காணாததுபோல் இருந்தும்
மெல்ல மெல்ல மேல்வந்து
ஒரு நாள் உன்னைத் தொடுவேன்
எனத் தனக்குள் சொல்லிக்கொண்டது
இவ்வளவையும் நான்
ஆசையாக அள்ளிக்கொண்டிருக்கும்
அபூர்வ வேளையில் நல்லவேளை
யாரும் பின்னால் வந்து நின்று-
இந்தச் செடியின் இலையை
அரைச்சுக் குடிச்சா
இடுப்புவலி போயிரும் சார்
என்று இன்னும் சொல்லவில்லை

**

முகநாடகம்

சரியாக அணிந்துகொள்ளவில்லை
என்பதான திடீர் உணர்வினால்போல்
முகக்கவசத்தை மெல்ல அவிழ்த்து
மீண்டும் போட்டுக்கொள்வதாய்
ஒரு தருணத்தை அமைத்து
எதிரே கடக்கப்போகும்
எனக்குன் தளிர் முகத்தை
காண்பித்து மறைத்த
உன் குறுநாடகம்
கொரோனாவின் பின்புலமின்றி
சாத்தியமாகியிருக்குமா என்ன?

**

என் மேற்கண்ட இரு கவிதைகள் ’சொல்வன’த்தின் நடப்பிதழில் வெளிவந்துள்ளன. நன்றி: சொல்வனம்.

மேலும் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகளுக்கு, சென்று வாசியுங்கள் : https://solvanam.com

6 thoughts on “’சொல்வனம்’ இதழில் இரண்டு கவிதைகள்

  1. நல்லவேளை
    யாரும் பின்னால் வந்து நின்று-
    இந்தச் செடியின் இலையை
    அரைச்சுக் குடிச்சா
    இடுப்புவலி போயிரும் சார்
    என்று இன்னும் சொல்லவில்லை//

    ஹாஹாஹாஹா சிரித்துவிட்டேன்!!! நச்! கவிதையின் …கூடவே அச்செடியின் உயிர்நாடி!

    ரசித்தேன்!

    கீதா

    Like

  2. எதிரே கடக்கப்போகும்
    எனக்குன் தளிர் முகத்தை
    காண்பித்து மறைத்த
    உன் குறுநாடகம்//

    ஹாஹா…இப்படி ஒரு டெக்னிக்கா!! மாஸ்க்ல!! நல்ல கற்பனை. ரசித்தேன் அண்ணா

    அது சரி…
    //கொரோனாவின் பின்புலமின்றி
    சாத்தியமாகியிருக்குமா என்ன?//

    கொரோனா இல்லைனா எப்பவுமே பர்த்துக் கொண்டேயிருக்கலாமல்லோ? இந்த இரண்டு வரிகள் இல்லாமல் குறுநாடகம் வேறு வகையில் முடித்திருக்கலாமோ அண்ணா?

    உன் குறுநாடகம்
    எனக்குத் தெரியாதென்று
    நினைக்காதே…அல்லது நினைத்தாயோ அல்லது…என்னவோ தோன்றுகிறது ஆனால் எனக்குக் கவிதை எழுத வராதே..

    எப்படியோ வயசான???!!!!! நீங்க, ஸ்ரீராம், துரைசெல்வராஜு அண்ணா எல்லாம் ரொம்பவே இளமைக் கவிதைகள் ரசனையாய் எழுதறீங்க…உங்கள் எல்லார் உள்ளமும் இளமையாய்…

    கீதா

    Like

  3. இரண்டு கவிதைகளுமே நன்றாய் இருக்கின்றன.  குப்பையில் முளைக்கும் செடி நல்ல கற்பனை.

    Like

Leave a comment