கிரிக்கெட் உலகக்கோப்பை, 2019 :  இந்திய அணித் தேர்வுகள்

கிரிக்கெட் உலகின் முக்கிய பத்து  நாடுகள் பங்கேற்கும் கிரிக்கெட் உலகக் கோப்பை இங்கிலாந்தில் ஆரம்பிக்கவிருக்கிறது, மே இறுதியில். அதற்கான தயார்நிலைக்காக, பங்கேற்கும் நாடுகள் தங்களுக்குள் ஒருநாள் போட்டித் தொடர்களை விமரிசையாக ஆடிவருகின்றன. இதுவரை கோப்பையை ஒருமுறைகூட வெல்லாத நாடுகளான இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, நியூஸிலாந்து ஆகியவை, போர்க்காலநடவடிக்கைபோல் கோப்பையைக் கைப்பற்றுவதற்கான முனைப்புகளில் ஈடுபட்டிருக்கின்றன. நடப்பு சேம்பியனான ஆஸ்திரேலியா, வார்னர்-ஸ்மித் சர்ச்சை/தடைக்குப் பின் வெகுவாக ஆட்டம் கண்டிருக்கிறது எனினும், ஒரு-நாள் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை ஒன்றும் சொல்வதற்கில்லை. செலக்‌ஷன் பாலிட்டிக்ஸில் சிக்கிக்கொண்டிருக்கும் ஸ்ரீலங்காவின் நிலையும் மோசம்.  அதிரடி ஆட்டத்துக்குப் பேர்போன வெஸ்ட் இண்டீஸ், எப்போதும்போல ஹாயாக இருக்கிறது.. பாகிஸ்தான் சமீபத்திய தொடர்களில் கொஞ்சம் ஜெயித்தும், கொஞ்சம் தோற்றும், ஒரேயடியாக வாயடி அடித்துக்கொண்டும் திரிகிறது. சிலநாட்கள் முன்பு, அதன் முன்னாள் வீரர் மொய்ன் கான், உலக்கோப்பைத் தொடரில் இந்தியாவை வென்று சரித்திரம் படைப்போம் என்றிருக்கிறார். கவனியுங்கள் – உலகக்கோப்பையை வென்றல்ல. பங்களாதேஷ் சமீப காலத்தில் வெகுவாக முன்னேறியிருக்கிறது. புதிதாக இந்த முறை உலகக்கோப்பை வட்டத்துக்குள் வந்திருக்கும் ஆஃப்கானிஸ்தான், ஆர்வத்துடன் கவனிக்கப்படவேண்டிய அணி. பெரிய அணிகளில் எதனையும் கவிழ்க்கும்  திறன் உடையது. கிரிக்கெட் உலகின் ஒவ்வொரு பகுதியையும், ஒவ்வொரு விதமாக உலகக்கோப்பை ஃபீவர் சூடேற்றிக்கொண்டிருக்கிறது.
சரி, இந்தியாவின் தயார்நிலை எப்படியிருக்கிறது? ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து மண்ணில் சமீபத்தில் அது ஒருநாள் தொடர்களை வென்றிருக்கிறது என்பது ஒரு உற்சாகத்தை அணியினரிடையே ஏற்படுத்தியுள்ளது. மனோபலம், தன்னம்பிக்கை கொஞ்சம் அதிகம்தான். இருந்தும் உலகக்கோப்பை என்று வரும்போது,  ஓரிரு கடும்போட்டிகளிலேயே நிலைமை தலைகீழாக மாறிவிடக்கூடும்.
தன்னைக் கூர்மையாக்கிக்கொள்ளவென மார்ச் மாதத்தில் இந்தியா ஆஸ்திரேலியாவுக்கெதிராக இன்னுமொரு தொடர் விளையாடவிருக்கிறது. இது நடக்கவிருப்பது இந்தியாவில். ஆதலால் நமது ஆட்டக்காரர்கள் பிரமாத ஸ்கோரை நிறுவி, சூரப்புலிகளாகத் தெரிவார்கள்தான். உலகக்கோப்பை நடக்கப்போவதோ பந்து அதிரடியாக ஸ்விங்காகித் தெறிக்கும் இங்கிலாந்தில். இந்தப் பாச்சா அங்கே பலிக்காது. இருப்பினும் பயிற்சி எனும் நிலையில் போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
உலகக்கோப்பைக்கான இந்திய அணி எப்படி இருக்கும்?  யார் யார் உள்ளே, யார் யார் வெளியே என்பதே இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் உச்சகட்ட எதிர்பார்ப்பு இப்போது. அனேகமாக பதினைந்து பேர் கொண்ட அணி,  தேர்வுக்கமிட்டியால் தேர்வு செய்யப்படும். காயம் மற்றும் வேறு வம்புகளில் சிக்காதிருந்தால், முதல் பத்து வீரர்கள் அனேகமாக உறுதியாக உள்ளே வருவார்கள் எனலாம். அவர்கள் இவர்கள்:
ரோஹித் ஷர்மா, ஷிகர் தவன், விராட் கோலி (கேப்டன்), எம்.எஸ். தோனி, ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், யஜுவேந்திர சஹல் ஆகியோர். இவர்களோடு பேட்டிங் வரிசையில் நான்காவதாக வர, அனேகமாக ஹைத்ராபாதின் (சென்னை சூப்பர் கிங்ஸ்) அம்பத்தி ராயுடு தேர்வு செய்யப்படுவார் எனவும்  எதிர்பார்க்கலாம். அந்த வரிசைநிலையில் வந்து, பந்துவீச்சு எப்படியிருப்பினும் நிலைமைக்கேற்ப, நிதானமாக அல்லது தாக்கி ஆடும் திறன் அவருக்குண்டு.
மேலே குறிப்பிட்ட முதல் பத்தில், கடைசி ஆறு வீரர்கள் இந்திய அணியின் பௌலிங் துறையைத் திறம்படக் கவனித்துக்கொள்வார்கள். நம்பலாம். BCCI மேலும் ஒன்றிரண்டு ஆல்-ரவுண்டர்களை அணியில் சேர்க்கப் பார்க்கும். ஆரம்ப விக்கெட்டுகள் ஒரேயடியாக சரிந்தால் நின்று ஆட, தேவைப்பட்டால் எகிறிப் பாய, மிடில் ஆர்டரில் ஸ்கோரை வேகமாக ஏற்றும் திறன் வாய்ந்தவர்களாக மேலும் இரண்டு பேட்ஸ்மன்களாவது ரிசர்வில் அவசியம் இருக்கவேண்டும். தோனியைத் தாண்டியும் ஒரு ஃபினிஷர் – ஆறாவது அல்லது ஏழாவது என்கிற பேட்டிங் வரிசையில் இருப்பதே அணிக்கு வலு சேர்க்கும். இந்த நிலைகளில் யார் யாருக்கு வாய்ப்பு தரப்படலாம் என்பதே தலையைப் பிய்த்துக்கொள்ளவைக்கும் கேள்விகள்.
ஹர்திக் பாண்ட்யாவைத் தவிர, மேலும் ஆல்ரவுண்டர்கள் இந்திய உலகக்கோப்பை  அணியில் வேண்டும்  எனில், அதற்காக மூன்று வீரர்கள் வரிசைகட்டி நிற்கிறார்கள். கேதார் ஜாதவ்(மஹாராஷ்ட்ரா) , விஜய் ஷங்கர்(தமிழ்நாடு), க்ருனால் பாண்ட்யா(மும்பை)  ஆகியவர்கள். இவர்களில், ஜாதவ் ஆறாவது, ஏழாவது நிலைகளில் வந்து ஆடி, ஏற்கனவே தன்னை நிரூபித்துள்ளார். ஸ்பின் பௌலிங் போட்டு விக்கெட்டைத் தூக்கும் திறனுமுண்டு. விஜய் ஷங்கர் ஒரு பேட்டிங் ஆல்ரவுண்டர். முதன்மையாக, நல்லதொரு பேட்ஸ்மன். சமீபத்திய நியூஸிலாந்து தொடரில் இது தெரிந்தது.  மீடியம்-பேஸ் பௌலிங் அவ்வப்போது போட்டு எதிரியின் ரன் விகிதத்தைக் குறைக்கமுடியும். திறன்மிகு ஃபீல்டர் என்பது இன்னுமொரு ப்ளஸ். ஹர்திக்கின் அண்ணாவான க்ருனால் பாண்ட்யா, ஸ்பின் பௌலிங்-ஆல்ரவுண்டர். கீழ்வரிசையில் அதிரடி பேட்டிங்கிற்கு (மும்பை இந்தியன்ஸ்) பேர்போனவர். உள்ளே வரும் தகுதி இவருக்கும் உண்டு. மேற்சொன்ன மூவரில் ஒரேயொரு ஆல்ரவுண்டரைத்தான் தேர்வு செய்வார்கள் எனில், பெரும்பாலும் கேதார் ஜாதவ் தேர்வுசெய்யப்படவே வாய்ப்பிருக்கிறது. இரண்டு ஆல்ரவுண்டர்கள் தேர்வு செய்யப்பட்டால்,  விஜய் ஷங்கருக்கு வாய்ப்பு  கிடைக்கலாம். கிரிக்கெட் போர்டின் தேர்வுக்குழு தலைவரான எம்.எஸ்.கே. பிரசாதிற்கு இப்போதெல்லாம் ஏகப்பட்ட தலைவலி!
மாறும் நிலைமை மற்றும் களவியூகத்தின்படி திடீரென இறக்க, இன்னும் இரண்டு மிடில்-ஆர்டர் பேட்ஸ்மன்கள், அணிக்கு அவசியம் தேவை. இங்கே காட்சி தருபவர்கள் டெல்லியின் ரிஷப் பந்த், தமிழ்நாட்டின் தினேஷ் கார்த்திக், கர்னாடகாவின் கே.எல்.ராஹுல் மற்றும் மும்பையின் அஜின்க்யா ரஹானே. இங்கிலாந்து தொடரில் ஸ்பின், பேஸ் (pace) என எதனையும் அடித்து அதிரடி காண்பித்த ரிஷப் பந்த் தேர்வாகும் வாய்ப்போடு நிற்கிறார். ஒரு ஸ்பெஷல் டேலண்ட்  எனவே வல்லுனர்களால் பார்க்கப்படுகிறார், இருபத்தோரு வயதாகும் பந்த். முக்கியமான போட்டிகளில் பந்த், ஒரு பத்து ஓவர் விளையாடினாலே போட்டியின் திசை மாறிவிட வாய்ப்புண்டு. இவர் அணியில் நிச்சயம் வேண்டும். கடந்த ஆண்டில் சர்வதேசப் போட்டிகளில் ஆக்ரோஷம் காண்பித்தும், ஸ்ரீலங்காவில் லாவகமாக ஃபினிஷ் செய்தும் வெற்றியைக் கொணர்ந்த  தினேஷ் கார்த்திக் உலகக்கோப்பை அணியில்   இருக்கவேண்டியவர். இந்தியாவின் முன்னாள் கேப்டனும், கிரிக்கெட் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர், இந்தியா கார்த்திக்கை துவக்க ஆட்டக்காரராகவும் இறக்கலாம்-ஏனெனில் முன்பு இங்கிலாந்தில்  துவக்க ஆட்டக்காரராக இறங்கி ஆடிய அனுபவம் அவருக்குண்டு என்கிறார். ஆனால் தேர்வுக்குழுக்காரர்கள் என்ன நினைக்கிறார்களோ? ராஹுலையோ, ரஹானேயையோ உள்ளே சேர்த்துவிட்டு, இவ்வளவு நாளும் உழைத்துக் காத்திருக்கும் கார்த்திக்கைக் கழட்டிவிட்டுவிடுவார்களோ? ஒன்றும் சொல்வதற்கில்லை.
**

11 thoughts on “கிரிக்கெட் உலகக்கோப்பை, 2019 :  இந்திய அணித் தேர்வுகள்

  1. //இந்தியாவை வென்று சரித்திரம் படைப்போம் என்றிருக்கிறார். // – ஆமாம்… கோஹ்லி மற்றும் ரோஹித் போன்று சீரியஸ்னெஸ் இல்லாதவர்கள் இருந்தால் இதுவும் நடக்கும். முதல் முறையாக இங்கிலாந்த் மண்ணில் பாகிஸ்தானிடம் கடும் தோல்வியுற்ற பெருமை கோஹ்லிக்கு. டாஸ் வென்றும், 300+ அடிக்க விட்டு படுதோல்வியுற்ற பெருமை ரோகித்துக்கு.

    முன்பெல்லாம் பாகிஸ்தானுடன் மேட்ச் என்றால் முழு அணியும் சீரியசா இருக்கும். இப்போ உள்ளவங்கள்லாம் விளையாட்டுப் பசங்க என்ற நினைவு வருவதைத் தடுக்க முடியலை.

    எனக்கென்னவோ ராகுல், ரஹானே மேல் நம்பிக்கையே இல்லை. இதுக்கு கழட்டி விடப்பட்ட தினேஷ் கார்த்திக் எவ்வளவோ மேல். சும்மா இந்தியாவில் பெறும் பெர்ஃபார்மன்சை வைத்து (ஆஸ்திரேலியாவுடன்) ஆட்களை முடிவு செய்தால் தோல்விதான் மிஞ்சும்.

    Liked by 1 person

    1. @ நெல்லைத் தமிழன்:

      பாக்-கிற்கு எதிரான போட்டி விஷயத்தில், நீங்கள் சொல்வதைப்போல்தான் கிட்டத்தட்ட ரொம்பப்பேர் நினைப்பார்கள் எனத் தோன்றுகிறது. Some of our boys are too casual, though talented.
      ஆமாம். ஆஸ்திரேலியாவுக்கெதிராக இந்தியாவில் நம் வீரர்கள் நிகழ்த்தும் ஸ்கோர்களை மட்டும் மனதில் வைத்து , டீம் செலெக்ட் ஆனால் ஏமாற்றமே மிஞ்சும். பங்களாதேஷ், ஆஃப்கானிஸ்தான் போன்ற நாடுகள்கூட, ஒரு கை பார்த்துவிடும். Cautious and judicious selection of players is the need of the hour.

      Like

  2. பாகிஸ்தானோடு இந்தியா விளையாடக்கூடாது என்கிற கோஷம் தொடங்கி இருக்கிறது. எனக்கும் அதில் ஆதரவு இருக்கிறது.

    தினேஷ் கார்த்திக் தேவை இல்லை என்றே நினைக்கிறேன்.

    Liked by 1 person

    1. @ஸ்ரீராம்:

      பாக் -ஐ உலகக்கோப்பையில் இந்தியா விளையாடக்கூடாது என்கிற கோஷம் இன்னும் வலுவெடுக்கும் நாளாக, நாளாக. நாம் எமோஷனல் ஆசாமிகளாச்சே..!

      தளம் அதேதானே.. எந்த மாற்றமும் இல்லையே.
      அது, கீதாஜி யைத்தான் இப்படி அடிக்கடி விஜாரிக்கும்!

      Like

  3. சிலநாட்கள் முன்பு, அதன் முன்னாள் வீரர் மொய்ன் கான், உலக்கோப்பைத் தொடரில் இந்தியாவை வென்று சரித்திரம் படைப்போம் என்றிருக்கிறார். கவனியுங்கள் – உலகக்கோப்பையை வென்றல்ல..//

    இந்த அட்டிட்யூட் நல்லதா தெரியலையே….பாகிஸ்தானோடு இந்தியா விளையாடாமல் இருக்க முடியுமா? உலகக் கோப்பை என்று வரும் போது?

    ரொம்ப நாளாச்சு கிரிக்கெட் பார்த்து…..

    கீதா

    Liked by 1 person

    1. @ கீதா:

      ஆட்டிட்யூட் சரியில்லைதான். என்ன செய்வது? இப்படிப்பட்ட எதிரிகளோடுதான் சர்வதேச அரங்கில் இந்தியா மோதவேண்டியிருக்கிறது. பக்கத்துவீட்டுக்காரன் பகவான் கொடுத்த வரம்!
      நீங்கள் கிரிக்கெட்டை, அதன் ஆக்ரோஷம், அலட்டல்களை அவதானிக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது. தயாராக இருங்கள். ஐபிஎல் -ல் (மார்ச் கடைசி வாரத்திலிருந்து) ஆரம்பியுங்கள்.

      Like

  4. கிரிக்கட் போட்டிகளில் வெற்றி தோல்வி வாய்ப்பு எல்லாம் அந்தந்த நாள் ஆட்டத்தைப் பொறுத்தது உலக அணிகள் எல்லாமே ஓரளவு சமபலம்வாய்ந்தவை யார் கன்சிஸ்டண்ட் ஆக நன்றாக ஆடுகிறர்களோ அவர்கள் வெல்லும் வாய்ப்பு அதிகம்

    Like

    1. @ பாலசுப்ரமணியம் ஜி.எம்.:

      சரியே. ஒரு குறிப்பிட்ட நாளில், ஒன்றிரண்டு வீரர்களின் ‘form’ கூட எதிரணியைப் புரட்டி எடுத்துவிடும் வாய்ப்புண்டு.

      Like

    1. @ திண்டுக்கல் தனபாலன்:

      நம் தமிழ் மீடியா ‘தல’ பற்றியே கதைத்துப் பொழுதுபோக்குவதால், நான் விளக்காது விட்டேன்! டீம் அறிவிக்கப்படட்டும். மேலும் அப்டேட்டில் சொல்லிச் செல்வேன்..

      Like

Leave a comment