டியர் மிஸ்டர் தமிழ் வாக்காளரே !

நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த தேர்தல் நாள் இதோ உங்கள் முன். ஓட்டுப்போடுவது ஒவ்வொரு குடிமகனின் ஜனநாயகக் கடமை என்றெல்லாம் கிளிப்பிள்ளைக்குச் சொல்வதுபோல் உங்களுக்கு விளக்கிச் சொல்லவேண்டியதில்லை. உங்களுக்குத் தெரியாததா!

இருப்பினும் –

ஓட்டுப்போடுமுன் மனதில் குழப்பம் இல்லாது, தெளிவாக இருங்கள். யாருடைய மிரட்டல், உருட்டல்களையும் காதில் வாங்கிக்கொள்ளவேண்டாம். பணியவேண்டாம். நாட்டுக்காக, தேச முன்னேற்றத்தை, அதன் வளர்ச்சியை சிந்தையில் வைத்து தேசபக்தியோடு வாக்களியுங்கள். வாக்களிக்கத் தவறாதீர். மேலும், உங்களது ஓட்டு ரகசிய ஓட்டு. அதை யாருக்குப் போட்டேன், எதற்காகப் போட்டேன்  என யாருக்கும் விளக்கவேண்டிய அவசியம் ஏதும் உங்களுக்கு இல்லை. நீங்கள்தான் இந்நாட்டு மன்னராயிற்றே!

ஓட்டுச்சாவடியும் அதன் சுற்றுப்புறமும் பொது இடங்கள். ஆதலால், விவஸ்தை கெட்ட மிஸ்டர் கொரோனா அங்கு உலவக்கூடும். உங்களோடு ஒட்டி உறவாட அவர் முயற்சிப்பார்தான். உஷார்! முகக் கவசம் அணிந்து செல்லுங்கள். அதைச் சரியாக அணியுங்கள். கூடுமானவரை இடைவெளிவிட்டு நில்லுங்கள். நகருங்கள். அதுதான் உங்களுக்கும், சார்ந்தோருக்கும் நல்லது.

வாக்களித்த பின்னும், முகக்கவசம் அணிந்தவாறே பாதுகாப்பு உணர்வுடன் வெளியே வாருங்கள். வாய்க்குக் கீழே இறக்கிவிட்டுக்கொண்டு வம்பளந்து செல்லவேண்டாம். ஜாக்ரதை! பின் தொடர்ந்து ’அவர்’ வரக்கூடும்!

வீடு திரும்பியபின் கை, கால்களை, முகத்தை நன்றாக சோப்புப் போட்டுக் கழுவ மறக்காதீர்கள். ஒரு ஸ்நானம் செய்ய முடிந்தால், மேலும் நல்லது !

ஜெய் ஹிந்த்!

**

பாரசீகம்: வரப்போகும் யுத்தத்தின் முன்னுரை ?

எண்ணெய் வளமிக்க பாரசீகப் பிரதேசம் புகைந்துகொண்டிருக்கிறது. சமீபத்தில் ஈரானிய ஜெனரல் சுலைமானி அமெரிக்கர்களால் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, 7 ஜனவரியின் அதிகாலை  ஈரான், ஈராக்கில் நிலைகொண்டுள்ள இரண்டு அமெரிக்க வான்படை தளங்களை ஏவுகணைகளால் தாக்கியிருக்கிறது. தாக்கிவிட்டு சும்மா இருந்ததா? வாயை உடனே பெரிசாகத் திறந்து தெரியப்படுத்தியது: ’சுலைமானியின் வீரமரணத்திற்கு, எதிரியைக் கடுமையாகப் பழிவாங்கிவிட்டோம். சுமார் 80 அமெரிக்கத் தீவிரவாதிகள் (அமெரிக்கப் படைகளை இனி அப்படித்தான் ஈரான் அழைக்குமாம்!) தாக்குதலில் கொல்லப்பட்டுவிட்டனர்.’ கூடவே ஈரானிய ’ஸுப்ரீம் லீடர் ’அலி கமேனியின் அறிவிப்பும்: ’அமெரிக்காவின் கன்னத்தில் விழுந்தது அறை! ..’ Supreme ‘Cat and Mouse’ game!

அமெரிக்கா, இதுபோன்ற ஒரு எதிர்விளைவை, எதிர்பார்த்தே இருந்தது. தாக்குதலோ ஈராக்கின் மண்ணில் நிகழ்ந்துள்ளது. ஈராக் என்ன சொல்கிறது? தங்களுக்கு ஏவுகணைத் தாக்குதல்பற்றி  ஈரான் முன்னறிவிப்பு செய்ததாகவும், தானும் அதை ஈராக்கில் நிலைகொண்டுள்ள அமெரிக்கப் வான்படைத் தலைமைக்கு, தாக்குதலுக்கு முன்னேயே தெரியப்படுத்தியதாகவும் இப்போது கூறியிருக்கிறது. அங்கிருந்த தனது முக்கிய அதிகாரிகள்/ வீரர்களை வேறுபகுதிக்கு அமெரிக்கா உடனே மாற்றியிருக்கும். சாவு எண்ணிக்கை/சேதம் வெகுவாகக் குறைக்கப்பட்டிருக்கலாம். ஈரானிய தாக்குதலுக்கு பதிலாக, ‘All is well ..!’ என்று ’கூல்’-ஆக ட்வீட்டியிருக்கிறார் அதிபர் ட்ரம்ப்.  ‘கூலாக’ இருப்பது அவரது சுபாவமில்லை என்பது உலகறிந்ததே. பின்னணியில், ஏதாவது ரகசிய ராணுவ/உளவு ஏற்பாடுகள் பென்ட்டகனில் (Pentagon) நிகழ்ந்துகொண்டுதான் இருக்கும். எல்லாமும் வெளியுலகத்திற்குத் தெரியவேண்டியதில்லையே.

ஈரானிய வெளியுறவு மந்திரி ஜாவத் ஜரீஃப் (Javad Zarif) தன் அறிக்கையில் : ’எங்கள் (ராணுவ) உயர் அதிகாரிகள், வீரர்கள் மீதான கோழைத்தனமான தாக்குதலுக்கு பதிலாக, எங்களின் தற்காப்பிற்காக,  ’போதிய அளவில்’ எதிரிகளைப் பழிவாங்கிவிட்டோம். மேற்கொண்டு, போராக இது உருவெடுப்பதை ஈரான் விரும்பவில்லை’ என்றிருக்கிறார்.   எதிரியைத் திருப்பி உதைத்துவிட்டதாக எங்கள் மக்களுக்கும், இனக்குழுக்களுக்கும் காண்பித்துவிட்டோம். போருக்கு நாங்கள் தயாரில்லை’. ஈரானின் ராணுவ நிலைப்பாடு இது என்பதே ராஜீய வெளியில் இதன் மறைமுகப் பொருள்.

அமெரிக்காவும் இந்த ‘அளவான எதிர்த்தாக்குதலில்’ ஒருவேளை, திருப்தியுற்றிருக்குமோ? மேற்கொண்டு நிலைமை மோசமாகாதிருப்பதே இப்போதைக்கு நல்லது என நினைத்திருக்குமோ?  சற்றுமுன் கிடைத்த அமெரிக்கத் தரப்பு ஆய்வின்படி, ஈரானிய ஏவுகணைகள் (மொத்தம் 22) அமெரிக்க தளங்களுக்கு சற்றே வெளியேயுள்ள நிலப்பரப்பைத்தான் தாக்கியிருக்கின்றன. ஈரானால் துல்லியமாகத் திட்டமிடப்பட்டு ,மிகக்குறைவான இழப்பை அமெரிக்காவுக்கு விளைவிக்கும் வகையில், இது நடத்தப்பட்டிருக்கவேண்டும் என்கிறது நிபுணர் குழாம். ஏன் இப்படி? ஈரான் பதிலடி கொடுத்ததாகக் காண்பிக்க விரும்பியதே தவிர, போராக இது மாறுவதை அது நினைத்தும் பார்க்கமுடியாத நிலை, அதன் ’வாய்ச்சவடால்’ வழக்கம்போல் உச்சத்தில் இருந்தபோதிலும். அமெரிக்காவும் ‘நாம் எதிரியின் முக்கியமான ஆளைப் போட்டுத் தள்ளிவிட்டோம். இவன்க  ஏதோ ரெண்டு ஏவுகணைகளை வீசிவிட்டுப்  போய்த் தொலையட்டும். இதுவே இப்போதைக்கு சரி’ என நிலைப்பாடு எடுத்திருக்க வாய்ப்புண்டு.  

புதிதாகப் பதவியேற்றிருக்கும், சர்வதேச அரசியலில் அமெரிக்காவின் வலதுகையான,  (ஜான்சனின்) பிரிட்டிஷ் அரசின் நிலைப்பாடு என்ன? ‘சுலைமானி கொல்லப்பட்ட பின்னணியில் நாங்கள், எங்களது கூட்டாளி அமெரிக்காவோடு ‘ஒரே பக்கத்தில்’ இருக்கிறோம்’ என்றது முதலில். ஈரானிய ஏவுகணைத் தாக்குதலுக்குப் பின், ‘தேவைப்பட்டால் நொடியில் பாரசீக வளைகுடாவில் போய் இறங்க எங்களது படைகள் தயார்’ என்கிறது பிரிட்டன். இத்தகு சூழலில், ஈரானின் ஜென்ம விரோதியான இஸ்ரேல், இப்போது திருவாய் மலர்ந்திருக்கிறது. ‘நாங்கள் தாக்கப்பட்டால், எதிர்விளைவுகள் கடுமையாயிருக்கும்.’ தினம்தினம் முஷ்டி உயர்த்துதல், சூடான வார்த்தைப் பிரயோகங்கள்..

ஒரு பக்கம் ’போரை நாங்கள் விரும்பவில்லை’ என அதிகாரபூர்வ அறிக்கைகளை, கூட்டுசேரா நாடுகள் மற்றும் ஐநா-போன்ற அப்பாவி அமைப்புகளுக்குப் போக்குக்காண்பிப்பதற்காக விடுவதும், இன்னொரு பக்கம் – ‘வரட்டும்; விடமாட்டோம். அழித்துவிட்டுத்தான் மறுவேலை!’ என்பதுமாய் ராணுவ வலிமை மிக்க நாடுகள் உறுமிப் பார்ப்பதும் – நல்லதற்கில்லை. பதற்றம் அதிகரிக்கவே வழிகோலும். ஏற்கனவே மத்திய கிழக்கில், சில வருடங்களாக நடந்துவந்த போர்களினால் சுமார் 2 1/2 கோடி ஏமன் நாட்டவரும், 1 1/4 கோடி சிரிய மக்களும், சிதறி வெளியேறி, வாழவழியின்றி தவித்தலைகிறார்கள். ஒரு பக்கம் செல்வக்கொழிப்பைக் காண்பிக்கும் மத்திய கிழக்கு, மறுபக்கத்தில் அகதிகளின் பெரும் கூடாரமாக வேகமாக மாறிவருகிறது. கச்சா எண்ணெயை வைத்தோ,  ஏகாபத்திய ஆசைகளினாலோ அல்லது எதிரும் புதிருமான இஸ்லாமிய இனக்குழுக்களின் ஆதிக்க முயற்சிகளினாலோ, நாளையோ அல்லது நாளை மறுநாளோ அங்கே ஒரு யுத்தம் வெடிக்கலாம். அப்படி நிகழ்ந்தால் அது, பாரசீக வளைகுடா மக்களின் நீண்டகால அமைதிக்கும், வாழ்விற்கும் கடும் குந்தகம் விளைவிப்பதிலேதான் போய் முடியும். அத்தகைய போர் மேலும் பரவாது, வளைகுடாப் பிரதேசத்துடன் அமுங்கிவிடும் என்கிற உத்தரவாதம் ஏதும் அதில் இருக்கமுடியாது.

**

பாரசீக வளைகுடாவில் பதற்றம்

சர்வதேச அமைதி இந்த புத்தாண்டில் நிலைக்குமா, நீடிக்குமா என்பது பெரியதொரு கேள்விக்குறியாகி உலகின் எதிரே நிற்கிறது. புத்தாண்டு நல்லபடியாக கடக்கவேண்டுமே எனப் பிரார்த்தித்து, உலகின் பலபகுதிகளில் இன்னும் கொண்டாட்டம் தொடரும் வேளையில், 2020-ன் மூன்றாவது நாளிலேயே புதிய போருக்கான அச்சாரம் வைக்கப்பட்டுவிட்டதாகவே தோன்றுகிறது.

Persian Gulf Region

 ராஜீய, ராணுவ சிக்கல்கள் நிறைந்த பாரசீக வளைகுடாப் பகுதியில்  (ஈரான், ஈராக், சவூதி அரேபியா மற்றும் சுற்றுப்புறம்-Persian Gulf,) போருக்கான முஸ்தீபுகள் தெரிய ஆரம்பிக்கின்றன. 29 டிசம்பர், 19 அன்று ஈராக்கின் தலைநகர் பாக்தாதிலுள்ள அமெரிக்க தூதரகம், ஈரானின் ஷியா ஆதரவுபெற்ற வன்முறையாளர்களால், உள்நாட்டு இயக்கத்தினர் உதவியுடன் தாக்கப்பட்டது. தாக்குதல் என்றால் கல்லெடுத்து வீசுதல் அல்ல. கட்டுக்குள் வராத திட்டமிட்ட வன்முறைச் செயல்கள். தூதரக சுற்றுச்சுவர் அதன் மின்பாதுகாப்பு அமைப்புடன் வன்முறைக் கும்பலால் தீவைத்துக் கொளுத்தப்பட்டது. உள்ளே இருந்த அமெரிக்க படைவீரர்களில் சிலரும், தூதரக அலுவலர்களும்  கடுமையாகக் காயப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. ஈராக்கிய போலீஸார், துணைராணுவம் அப்போது எங்கே இருந்தனர்? தன் நாட்டில் அதிகாரபூர்வமாக இயங்கும், அந்நிய தூதரகத்தினரின் பாதுகாப்பு அவர்களது பொறுப்பல்லவா? ஒரு நாட்டின் தூதரகம் திட்டமிட்டுத் தாக்கப்பட்டால், அப்போது சம்பந்தப்பட்ட அரசு போதிய பாதுகாப்பு அளிக்காது ஆனந்தித்துக்கொண்டிருந்தால், அது அந்த நாட்டை நேரிடையாக வம்புக்கிழுப்பதற்கு, அதாவது போருக்கு அழைத்ததற்கு ஒப்பாகும். அதுவும் அமெரிக்கா போன்ற வல்லரசின் தூதர் அலுவலகத்தை, ஆயுதம் தாங்கிய குழுக்களை பயன்படுத்தித் தாக்கினால், தாக்கிய மக்களைக்கொண்ட நாடு அல்லது இயக்கம் தன் தலையில் தானே தீவைத்துக்கொண்டதிற்கு சமம்.  அத்தகைய ராஜீய, ராணுவ முட்டாள்தனம்தான் அந்தப் பகுதியில் இப்போது நடந்தேறியிருக்கிறது. ட்ரம்ப் போன்ற ஒரு சண்டைக்கோழியை ஜனாதிபதியாகக் கொண்ட ஒரு வல்லரசு, நகம் கடித்துக்கொண்டு ரோட்டோரமாய்  உட்கார்ந்திருக்கும் அல்லது ஸெல்ஃபோனில் டிக்-டாக் வீடியோ பார்த்துக்கொண்டிருக்கும் என எதிர்பார்த்ததா ஈரானும், ஈராக்கும் ? அதுவும் ஏற்கனவே ஈரான்-அமெரிக்க ராஜீய உறவுகள் சீரழிந்துகொண்டிருக்கும் இக்கட்டான ஒரு சூழலில்?

ஜனவரி 3 அதிகாலையில் ஈரானிய புரட்சிப் படையின் (Iranian Revolutionary Guard Corps) குத்ஸ் பிரிவின் (Quds Force)  தளபதி ஜெனரல் காசிம் சுலைமானி (Qassem Suleimani), ஈராக்கில் அமெரிக்க வான்தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கிறார்.   கூடவே ஐந்து சிறப்புப்படை வீரர்களும், ஈராக்கிய ஷியா-சார்பு துணைராணுவத் துணைதளபதியும். அவர்கள் பாக்தாத் விமானநிலையத்தில் அந்த அதிகாலையில் விமானத்திலிருந்து இறங்கி நடக்கையில், அமெரிக்க விமானப்படையின் ட்ரோன் (Drone) விமானத்தினால் குறிவைத்துத் தாக்கப்பட்டுள்ளனர் என்கின்றன செய்திகள். அதிபர் ட்ரம்ப்பின் உத்தரவின்பேரில், அமெரிக்கா தன் தற்காப்பிற்காக, இதனை நிகழ்த்தியதாக, அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம்  தெரிவித்துள்ளது.  இதற்கு ராஜீயவெளியில்  என்ன அர்த்தம்? ஈரானுக்கான மெஸேஜ் இது: ’சீண்டாதே.. ஒழித்துவிடுவேன்..!’ 

அமெரிக்கா இப்படித் திட்டமிட்டு, தன் எதிரியின் ஒரு பேர்போன மிலிட்டரி ஜெனரலைக் குறிவைத்து அழித்திருப்பதின் பின்னணியில் நிறைய கதை இருக்கிறது – மத்திய கிழக்கின் பயங்கர அரசியல், ராணுவ முஸ்தீபுகள், வல்லரசுகளின் ஆதிக்க முயற்சி என எழுத ஆரம்பித்தால் இது ஏதோ ஒரு ரிஸர்ச் பேப்பர் அளவுக்குப் போய்விடும்! சுருக்கமாகச் சொல்ல முயற்சிப்போம் இங்கே.

ஈரான் எனப்படும் ஈரானிய இஸ்லாமியக் குடியரசின் தலைவர் ’Supreme Leader of the Iranian Revolution’  எனப்படும் அலி கமேனி (Ali Khamenei).  (1979-இல் இதற்குமுன் மன்னராட்சியில் இருந்த இரான் நாட்டை இஸ்லாமியக் குடியரசாக மாற்றிப் பதவியேற்ற இஸ்லாமிய மதகுரு அயத்தொல்லா கொமேனியின் வழி வந்தவர்). அலி கமேனி 1989-லிருந்து இரானிய அரசின் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார். அமெரிக்கா, இஸ்ரேலுடன், ஈரான் எதிர்நோக்கும் அனைத்துப் பிரச்னைகளுக்குமான மூலகாரணிகளில் ஒருவர் எனலாம். ஏற்கனவே உள்நாட்டுக் கலகம், ஷியா-சன்னிப்பிரிவுகளிடையே சண்டைகள், தீவிரவாதம் என சிதைந்துபோயிருக்கும் ஈராக், சிரியா நாட்டின் அமைதியற்ற பகுதிகளில், ஈரானிய செல்வாக்கை அதிகப்படுத்தவும், அமெரிக்க ஆதிக்கத்திற்கு எதிராக அந்தப் பகுதி மக்களைத் தூண்டவும் என ஈரானியத் தலைவரால் நியமிக்கப்பட்டவர்தான் ஜெனரல் சுலைமானி. ஈரானின் ’சுப்ரீம் லீட’ருக்கு அடுத்தபடியாக, நாட்டின் ஜனாதிபதியைக் காட்டிலும், செல்வாக்கும் மதிப்பும் பெற்றிருந்தவர்.

மத்தியகிழக்கில் அமெரிக்கர்களுக்கு எதிரான அரசியல் வன்முறைப் போராட்டங்கள், அமெரிக்க இலக்குகளின் மீதான திட்டமிட்ட தாக்குதல்கள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து செயல்படுத்தும் மையப்புள்ளி இந்த சுலைமானிதான் என அமெரிக்க உளவுத்துறை கண்டறிந்திருக்கிறது. சுலைமானின் ஏற்பாட்டின்படிதான் ஈராக்கில் அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டது என்றும்,  லண்டன், டெல்லி போன்ற நகரங்களில் கடந்த சில ஆண்டுகளில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் சுலைமானின் ரத்தக்கறைபட்ட கை இருந்தது என்றும் விளக்கியிருக்கிறார் அமெரிக்க அதிபர். சுலைமானி சில மாதங்களாகவே அமெரிக்கர்களால் குறிவைக்கப்பட்டிருந்திருக்கவேண்டும் எனத் தெரிகிறது. 

’அமெரிக்க நலன்’ என்கிற பெயரில், அமெரிக்க தளபதிகளுடன் ராணுவ கணக்குகளை சரிபார்த்து வேகமாக முடிவெடுக்கும் இயல்புடையவர் அதிபர் ட்ரம்ப். அதன் நேரடி ராணுவ விளைவுதான் இப்போது மத்தியகிழக்கில் வெடித்திருக்கும் புதிய பதற்றம். பதிலுக்கு, ஈரானும் கடுமையாகப் பழிவாங்கப்போவதாக அறிவித்துள்ளது. சொன்னபடி அதுவும் ஏதாவது செய்யும். தற்கொலைப்படைத் தாக்குதல்கள், நேரிடையான தாக்குதல் என ஷியா-சார்பு ஆயுதந்தாங்கிய குழுக்கள் மூலம் தீவிரமாக முனையும். அவற்றை ஒடுக்குகிறேன் பேர்வழி என சொல்லிக்கொண்டு, அமெரிக்கத் தரப்பிலிருந்து ’ட்ரோன்’, விமானப்படை தாக்குதல்கள் என வேகவேகமாக அரங்கேறும். Crossfire-ல் சிக்கிய வளைகுடாப் பகுதியின் அப்பாவி மக்கள் பலரும் பரிதாபமாக அழிவைச் சந்திப்பார்கள்.  ஏற்கனவே ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல், சவூதி அரேபியா போன்ற நாடுகள் கொண்டிருக்கும் ராணுவ ஈடுபாடுகளோடு,  மேலும், மேலும் அழிவிற்கான பாதையிலேயே சம்பந்தப்பட்ட நாடுகளை இப்போது உருவாகிவரும் நெருக்கடிநிலமை இட்டுச்செல்லும்.

சமீபகால ஈரான்-அமெரிக்க பகைமை, மூலைக்குமூலை பரவி பயமுறுத்தும் பயங்கரவாதம் என பர்ஷிய வளைகுடாப் பகுதியின் யுத்தவிளையாட்டில் புட்டினின்(Vladimir Putin) ரஷ்யா,  ஒரு முக்கியமான ப்ளேயர். கடந்த சில நாட்களாக வாயைத் திறக்கவில்லை. காரியம் செய்யும் நிச்சயம்! இந்தியாவும், சீனாவும் நேற்று (3-1-2020) ஈரானையும், அமெரிக்காவையும் பொறுமை காக்குமாறு வேண்டிக்கொண்டிருக்கின்றன. சீனா, குறிப்பாக பதற்றமான வளைகுடாப் பகுதியில், அமெரிக்கா நிதானமாக செயல்படவேண்டும் என அறிவுறுத்தியிருக்கிறது. அமெரிக்காவுக்கு, சீனாவின் புத்திமதியா தேவை? ட்ரம்ப் மேலும் அதிகப்படியான அமெரிக்க வான்படைகளை வளைகுடாவுக்குள்  அனுப்ப உத்தரவிட்டுள்ளார். அந்த ஆபத்தான பிரதேசத்தில் ஏற்கனவே பாதிக்கப்பட்ட சுற்றுப்புற நாடுகள் மேலும் ராணுவரீதியாக நெருக்கப்பட்டு, பதற்ற  நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன. எந்த நேரத்திலும் பெருமளவு தாக்குதல்கள் இருதரப்பிலும் நிகழலாம். கட்டுக்கடங்காமல் போகலாம் –  ’நாங்கள் போரை விரும்பவில்லை’ என அமெரிக்க அதிபர் சொன்னபோதிலும்.

முழு ஆண்டை விடுங்கள், இந்த ஜனவரியே சரியாகப் போகுமா என்று கேட்கக்கூடிய அளவிற்கு இருக்கிறது இப்போது பாரசீக வளைகுடாவின் நிலை.

**

பலூசிஸ்தான் : என்ன செய்தபோதும் இதை மறைக்க முடியுமா

 

ஜெய் ஹிந்த் ! இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள், இந்திய சகோதர, சகோதரிகளே! எங்கள் பக்கமும் கொஞ்சம் பாருங்கள்.  உங்கள் ஆதரவு …- எனச் செல்கிறது இந்திய சுதந்திர தினத்தன்று சர்வதேச வெளியிலிருந்து பெறப்பட்ட வாழ்த்துச்செய்தி ஒன்று.

யார் இது? எங்கிருந்து பேசுகிறார்கள்? என்ன பிரச்னை – என்றெல்லாம் வெளிநாட்டு நடப்புகள்பற்றி அதிகம் அறிந்திராத ஒரு சராசரி இந்தியன்-அதிலும் தமிழன் – ஆச்சரியப்படுவான் இல்லையா? சரி, மேலே பார்ப்போம்.

பாகிஸ்தானின் தென்மேற்குப்பகுதிப் பக்கம் கண்ணை ஓட்டினால், கனிமவளத்திற்குப் பேர்போன, இயற்கை அழகும் சேர்ந்து காணப்படும், பின் தங்கிய பழங்குடிமக்கள் வாழும் பலூசிஸ்தான் பிராந்தியம் பிரதானமாகத் தெரிகிறது. பாகிஸ்தானின் நட்பு நாடு எனச் சொல்லிக்கொண்டு, நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு சீனா அடிக்கடி அலைந்து திரியும் மலைப்பிரதேசம். அரசியல் சிக்கல் நிறைந்த, கொந்தளிக்கும் ஆதிவாசிகளைக்கொண்ட கரடுமுரடான மலைப்பிராந்தியம். ’நாங்கள் பாகிஸ்தான் அல்ல. பலூசிஸ்தான்! ஆகஸ்டு 11, 1947-லேயே பிரிட்டிஷ் அரசு எங்களுக்கு விடுதலை கொடுத்துவிட்டது. எங்கள் நாட்டை அநியாயமாக ஆக்ரமித்துக்  கொடுங்கோலாட்சி செய்துவருகிறது பாகிஸ்தானிய ராணுவம். பலூசிஸ்தானிகள் வருஷக்கணக்காக அநியாயமாக இரத்தம் சிந்திக்கொண்டிருக்கிறார்கள். இந்தக் கொடுமையிலிருந்து நாங்கள் விடுபட,  சர்வதேச ஒத்துழைப்பு தேவை’ என்கிறார்கள் உலக பலூசிஸ்தான் இயக்கத்தைச் சார்ந்தவர்கள்.

1948-லிருந்து விட்டுவிட்டு பல அரசியல் எதிர்ப்புகள் போராட்டங்களை பாகிஸ்தானின் ஆட்சிக்கெதிராக நடத்திவருகிறார்கள் பலூசிஸ்தானிகள். 2003 -க்குப்பின் இவை வெகுவாக உத்வேகம் பெற்றிருக்கின்றன. மனிதஉரிமைகள் தொடர்பான வன்முறைகள், ஒடுக்குதல்கள் பலூசிஸ்தான் மக்களின் மீது பாகிஸ்தானிய ராணுவத்தால் கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கின்றன என்கிற புகார்கள் உலகின் வெவ்வேறு பகுதிகளில் வலுத்துவருகின்றன. தீவிரவாதிகளை ஒழிக்கிறோம் என்கிற சாக்கில் பாக். ராணுவம் பலூச் பழங்குடிமக்களை இஷ்டத்துக்குத் தாக்கியும், அழித்தும் வருவதாக சில ஆண்டுகளாக வந்துகொண்டிருக்கின்றன செய்திகள். அடக்குமுறை ஆட்சியில் காணாமற்போன பலூசிஸ்தானிகளின் எண்ணிக்கை 5000-க்கும் மேல் என 2009-ல் வெளியான ஒரு அறிக்கை கூறுகிறது.

2016-ல்  சுதந்திரதின விழாவில் பேசிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, பலூசிஸ்தான், பாகிஸ்தான்-வசமிருக்கும் காஷ்மீர் பகுதி போன்ற சர்ச்சைக்குரிய பகுதிகளில் பாகிஸ்தானின் அடக்குமுறைகள்பற்றி லேசாகத்தான் குறிப்பிட்டார்! தங்களது கஷ்டங்கள்பற்றிப் பேசியதற்காக இந்தியப் பிரதமரைப் பாராட்டி பலூசிஸ்தான் தலைவர்கள் சிலர் ஏதோ சொல்லிவிட்டார்கள். அவ்வளவுதான். பலூசிஸ்தான் தலைவர்களில் இருவரைப் பிடித்து உள்ளே தள்ளிவிட்டது பாகிஸ்தான்.  அண்டைநாடான ஆஃப்கானிஸ்தானும், பலூசிஸ்தானில் பாக். ராணுவம் செய்யும் அட்டூழியங்கள்பற்றி சில வருடங்களாகவே குரல் கொடுத்துவருகிறது. பங்களாதேஷ், பலூசிஸ்தானில் ஆதிவாசிகளுக்கு எதிரான மனித-உரிமை மீறல்கள் தவிர்க்கப்படவேண்டும் என்றிருக்கிறது.

மேலும் இப்போது, பலூசிஸ்தான் பிரச்னையை ஐ.நா. உட்பட ஏனைய சர்வதேச அரங்குகளுக்குக் கொண்டு செல்ல இந்தியா ஒத்துழைப்பு தரவேண்டும் என்கிற கோரிக்கையை பலூச் இயக்கக்காரர்கள் பகிரங்கமாக வைத்துள்ளார்கள். ஏற்கனவே நீண்ட நாளைய இரத்தஅழுத்தத்திற்காக சீனாவிடம் மருத்துவம் பெற்றுவரும் பாகிஸ்தானால் இதைத் தாங்கிக்கொள்ளமுடியவில்லை. என்ன செய்ய,  congenital problems..

நியூயார்க்கின் ’டைம்ஸ் ஸ்கொயர்’ சதுக்கத்தில் ஒரு போஸ்டர்..

பாகிஸ்தானிடமிருந்து தங்களது சுதந்திரம் என்கிற வெகுநாளைய கோரிக்கையை, நியூயார்க், லண்டன் போன்ற சர்வதேச அரங்குகளுக்கு இருப்பிடங்களாக அமைந்திருக்கும்  நகரங்களிலும் அவ்வப்போது  ஆர்ப்பாட்டங்களை நடத்தி பிரபலப்படுத்திவருகிறார்கள் பலூசிஸ்தான்காரர்கள். கடந்த சில வருடங்களாக சர்வதேச அமைப்புகளின் கவனத்துக்கு அடிக்கடிக் கொண்டுவரப்படும் விஷயமிது. தங்கள் நாட்டில் எல்லாம் ஒழுங்காகப் போய்க்கொண்டிருப்பதாகக் காட்டிக்கொள்ள, முழுப்பூசணிக்காயை சோற்றில் அமுக்கி மறைக்க முயற்சிக்கும் பாகிஸ்தானுக்கு இது, திருகுவலியைத் தர

லண்டன்  டாக்சிகளில் விளம்பரம்

ஆரம்பித்திருக்கிறது.

அமெரிக்க செனட்டில் (பார்லிமெண்ட்) சில குடியரசுக் கட்சி (அதிபர் ட்ரம்ப்பின் கட்சி) செனட்டர்கள் 2012-லிருந்தே சுதந்திர பலூசிஸ்தான்பற்றி பேச ஆரம்பித்துவிட்டார்கள். பலூசிஸ்தான் தனி நாடாக ஆகிவிட்டால், எப்படி அது, தெற்கு ஆசியப் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் பரவுவதைத் தடுக்க அமெரிக்காவுக்கும், அமெரிக்க நட்பு நாடுகளுக்கும் உதவிகரமாக அமையும் என்பதுபற்றி சிந்தித்ததின் விளைவு இது. இந்தியாவின் வலிமையைக் காட்டி அடிக்கடி பாகிஸ்தானை பயமுறுத்திக்கொண்டு,  ஒருபக்கம் உதவி, மறுபக்கம் சுரண்டல் எனக் கூத்தடிக்கும் சீனா, தன் நாட்டிலிருந்து பலூசிஸ்தானின் குறுக்காக 62 பில்லியன் டாலர்கள் செலவில் நெடுஞ்சாலை ப்ராஜெக்ட் ஒன்றை ஆரம்பித்து போட்டுக்கொண்டிருக்கிறது. சீன-பாகிஸ்தான் பொருளாதார நெடும்பாதை  (CPEC-China Pakistan Economic Corridor) என அழைக்கப்படும் இந்த ப்ராஜெக்ட், பாகிஸ்தானின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் உதவப்போவதாக ஒரு வெளிப்பூச்சு பூசிவைத்திருக்கிறது சீனா! உண்மையில், இதன்மூலம் சீனாவின் வணிக, மற்றும் ராணுவ ஏற்றுமதிகள் சீனப் பகுதியிலிருந்து பலூசிஸ்தானின் குறுக்காக சாலைவழியாக க்வாதார் (Gwadar) துறைமுகம்வரை எளிதில் வந்தடைந்து, அங்கிருந்து மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு கொண்டு செல்ல ஏதுவாக அமையும். இப்போதிருக்கும் கடல்வழி ஏற்பாடுகளின்படி தொலைதூரம் பயணிக்கவேண்டிருக்கிறது சீனாவுக்கு. இந்து மகாசமுத்திரம்வழி சீன வணிக மற்றும் போர்க்கப்பல்கள் இந்தியாவின் தெற்குப்பகுதியில் சுற்றிவந்து வளைந்துசெல்ல நேர்வதால், அவை எப்போதும் இந்திய மற்றும் அமெரிக்க கடற்படைகளின் கண்காணிப்பில் சிக்குகின்றன. இது தனது தில்லுமுல்லு  சிவிலியன் மற்றும் ராணுவ ஏற்றுமதிகளுக்கு இடையூறாக அமைந்துவருகிறது என்பது சீனா வெகுநாட்களாகவே மிகவும் தவிர்க்கவிரும்பும் ஒரு விஷயம். சுதந்திர பலூசிஸ்தான் அமைந்து அது அமெரிக்க நட்பு நாடாக ஆகிவிட்டால், தெற்கு ஆசியப் பகுதியில் சீனாவின் கொட்டத்தை ஒடுக்க அது வழிசெய்யும் என்பது அமெரிக்க செனட்டர்கள் சிலரின் வாதமாக இருந்துவருகிறது. இத்தகைய நெருக்கடிகளாலும், பலூசிஸ்தான் எதிர்ப்பாளர்களை அடக்கி ஒடுக்கிவருவதோடு, இது சர்வதேசப் பிரச்னையாக விஸ்வரூபம் எடுக்காதிருக்கவேண்டுமே என்பதில் பாகிஸ்தானும், அதன் எஜமானனான சீனாவும் அதிகவனமாக இருக்கின்றன.

காஷ்மீர் தொடர்பான இந்திய அரசியல் சாஸனப் பிரிவு 370-ன் நீக்கம் என்கிற இந்திய அரசின் முடிவை,  ஒரு பெரும்பிரச்னையாக ஜோடித்து அலம்பல் செய்ய எண்ணிய பாகிஸ்தான், தங்களது சுதந்திர தினத்தை (ஆகஸ்டு 14) ‘காஷ்மீருக்கான ஆதரவு’ நாளாக அறிவித்ததோடு, இந்திய சுதந்திர தினத்தை ‘கறுப்பு நாள்’ எனவும் அறிவித்தது. அப்போதாவது யாராவது நம் பக்கம் திரும்புவார்களா, இந்தியாவை விமரிசிப்பார்களா  என்கிற நப்பாசை! ம்ஹூம். பாச்சா பலிக்கவில்லை.

இத்தகைய சூழலில், உலக பலூசிஸ்தான் இயக்கம், ஆகஸ்டு 14-ல் வந்த பாக். சுதந்திர தினத்தை  ‘கறுப்பு தினம்’-ஆக அறிவித்து பிரச்சாரம் செய்திருக்கிறது. கூடவே, பாகிஸ்தான் சுதந்திர தினத்தை ‘பலூசிஸ்தானுக்கான ஆதரவு நாள்’ -ஆக சர்வதேச வெளியில் அறிவித்துக் கொண்டாடியிருக்கிறார்கள். அதற்கான பலூசிஸ்தானிகளின் ட்விட்டர் மெஸேஜை, லட்சத்துக்கும் அதிகமானோர் மறு-ட்வீட் செய்து வாழ்த்தியிருக்கிறார்கள். ’ஐ.நா. விற்கு அவசியம் எடுத்துச்செல்ல வேண்டிய விஷயம் பலூசிஸ்தான் மக்களின் பிரச்னை’ என்பது சுதந்திர பலூசிஸ்தானுக்கான ஆதரவுக் குரல்களின் சாராம்சம். ஒரு கையைப் பாகிஸ்தானின் தோளில் போட்டுக்கொண்டு, இன்னொரு கையினால் பலூசிஸ்தானின்  கனிமவளத்தை நோண்டிக்கொண்டிருக்கும் சீனாவையும், பலூசிஸ்தானிகள் எச்சரித்திருக்கிறார்கள்: ’சீனாவே! எடு கையை! எங்கள் நாட்டைத் தொடாதே!’

இந்தியாவுக்கு எதிராக காஷ்மீர் பிரச்னையை ஐ.நா.வுக்குள் நுழைத்து, ’கொஞ்சம் கொதிக்கவைத்துப் பார்க்கலாம்’ என சட்டையைக் கிழித்துவிட்டுக்கொண்டு அலையும் பாகிஸ்தானுக்கு, பலூசிஸ்தானிகளின் போராட்டங்கள், அவர்களது இயக்கத்திற்கு பாகிஸ்தானுக்கு வெளியே பெருகும் ஆதரவு போன்றவை மேலும் உளைச்சலை அதிகமாக்கியிருக்கிறது. தனது அரசியல் எதிரிகளான முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், முன்னாள் ஜனாதிபதி ஜர்தாரி ஆகியோருக்கு எதிராக ஊழல் வழக்கு/ஜெயில், முன்னாள் அதிபர் முஷாரஃபிற்கு எதிராக தேசதுரோக வழக்கு என வரிசையாக  உள்நாட்டு அரசியல் எதிரிகளை மாட்டிவிட்டதால், ’நான்தான் இனி பாகிஸ்தானின் நிரந்தரப் பிரதமர்’ எனக் குறுக்குக் கணக்குப்போட்டுக்கொண்டிருக்கிறார் இம்ரான் கான்.  ராணுவத்தின் கழுகுப்பார்வையின் கீழ் இயங்குவது ஒன்றும் கிரிக்கெட் வியூகமல்ல என ஓரளவாவது அவருக்குப் புரிந்திருக்கும்.

அபூர்வமாகத் தனக்குக் கிடைத்துவிட்ட பிரதமர்-பதவி நாற்காலியை இறுகப் பிடித்துக்கொண்டு வியர்க்க வியர்க்க உட்கார்ந்திருக்கும் இம்ரான் கானுக்கு உருதுப் புத்தகங்களைப் படிக்கவே நேரமிருப்பதில்லை. ‘பிறர்க்கின்னா முற்பகல் செய்யின்.. தமக்கின்னா பிற்பகல் தாமே வரும்’ என்று வள்ளுவன் தமிழில் அறிவுறுத்தியதைப் படிக்கவா இம்ரானுக்கு வாய்ப்பிருக்கும் ? ம்ஹும்.. சான்ஸே இல்லை !

**

தகவல்கள்/படங்களுக்கு நன்றி: ஹிந்துஸ்தான் டைம்ஸ், டைம்ஸ் ஆஃப் இந்தியா, ஃப்ரண்ட்லைன் மற்றும் கூகிள்.

படிப்பு, படிப்பு, படிப்பு.. இப்படியும் ஒரு பெண் !

 

17-ஆம் நூற்றாண்டு. வெனிஸ் {இத்தாலியன்: வெனிஸியா  (Venesia)}. ஏட்ரியாட்டிக் கடலின் (Aedriatic Sea) 100 குட்டித்தீவுகளாலான, இத்தாலியின் வடக்குப் பிரதேசமான வெனிட்டோவின் தலைநகர். பொதுவாகவே வெனிஸ் நகரம் அதன் துணிச்சலான பெண்களுக்குப் பேர்போனது. இங்கே வாழ்ந்த ஒரு பிரபுவிற்கு (Lord), ஜூன் 5, 1646-ல் பிறந்த அந்தப் பெண்குழந்தை ஒரு prodigy-யாகப் பின்னாளில் அறியப்பட்டாள். எதிலும் கூர்மையான கவனம். ஆழ்ந்த வாசிப்புத் திறன். புத்தகத்தைக் கையிலெடுத்துவிட்டால் கீழே வைப்பதில்லை. எப்போதும் படிப்புதான். வேறெதிலும் மனம் செல்லவில்லை. தனது மாளிகையின் ஒரு மூலையில்,  அமைதியான சூழலில், ஒரு புத்தகத்தை வைத்துக்கொண்டு ஏதோ தியானத்தில் இருப்பதுபோல் மணிக்கணக்காக ஆழ்ந்திருப்பது அவளுக்குப் பெரும் சந்தோஷத்தைக் கொடுத்தது. வசதியான அப்பாவும் வீட்டில் நிறைய வாங்கிப்போட்டார்.  சிறப்பாசிரியர்களை வீட்டிற்கே வரவழைத்து, மொழிகளில் தனிப்பயிற்சி. தன் ஏழாவது வயதிலேயே பல்மொழி வித்தகர் என அழைக்கும் அளவுக்கு ஆகிவிட்டாள். க்ரேக்கம், லத்தீன் ஆகிய மொழிகளில் சொந்த ஊர் மாஸ்டர்களே அவளை நிபுணியாக்கிவிட்டார்கள். மேலும், ஃப்ரெஞ்ச், ஸ்பேனிஷ் ஆகியவற்றையும் கற்ற அந்தச் சிறுமி பிற்காலத்தில், ஹீப்ரூ, அரபி மொழிகளையும்  விட்டுவைக்கவில்லை.  கவனியுங்கள். நமது சமகாலப் பெண்ணொருத்தியின் கதையல்ல இங்கே படித்துக்கொண்டிருப்பது. ஐரோப்பாவில் 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு விசித்திரமான பெண்பற்றியது. இத்தாலியின் பிரதான மதமான கிறித்துவமும், கட்டுப்பெட்டித்தனமான அந்தக்கால சமூகச்சூழலும், பெண்களை ஆண்களுக்கு சரிநிகராக நடத்துவதை விடுங்கள் – ஒப்பிட்டுப் பேசுவதைக்கூட, கடுமையாகக் கண்டித்த, நிராகரித்த ஒரு காலகட்டம். பிஷப் சொன்னால் போதும். அதுவே மந்திரம். அப்படியே தொடர்வதே வழக்கம். சாதாரண மக்களின் கடுமையான orthodoxy. இத்தகைய சூழலிலும் அதிசயமாக விளைந்துவிட்டது அந்த முத்து.

அந்த சிறுமி வளர்ந்து பெரியவளான பின்னும், அவளது படிப்பு பலதுறைகளுக்கும் நீண்டது.  தர்க்கவியல், இயற்பியல். வானவியலென ஈடுபாடு வளர்ந்தது. கணிதத்திற்குள் நுழைந்து ஆழ்ந்த நாட்களுமுண்டு. அவ்வப்போது, ஹார்ப், வயலின் போன்ற இசை வாத்தியங்களிலும் அவளுடைய விரல்கள் விளையாடிவந்தன. தொட்டதில் எல்லாம் ஒரு மேன்மை. சரஸ்வதி தேவியே இத்தாலியில் வந்து இறங்கிவிட்டாளா?

இந்த நிலையில் ஒரு கட்டத்தில், இறையியல் (Theology) அந்த இளம்பெண்ணின் மனதை வெகுவாகக் கவர்ந்திழுத்தது. அதில் பட்டப்படிப்பிற்காக, வெனிஸுக்கு அருகிலிருந்த, உலகின் மிகப்பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றான பதுவா பல்கலைக்கழகத்தில் (University of Padua, founded in 1222) சேர்ந்து பயின்றுவந்தாள். பட்டம் கிடைக்க இருக்கையில் கத்தோலிக்க திருச்சபையிலிருந்து முணுமுணுப்பு, எதிர்ப்பு. ஒருவழியாக பல்கலைக்கழகத்தினர் அவர்களை சமாளித்து, அந்தப் பெண்ணிற்குப் பட்டம் கொடுத்துவிட்டனர்.

Elena Cornaro Piscopia

சரி,  படிக்கும் ஆசை இப்பவாவது கொஞ்சம் குறைந்ததா? இல்லை. அது தீயாய் வளர்ந்துகொண்டிருந்தது. இறையியலில் நீங்காத கவனம். மேற்படிப்பை மேலும் தொடர்ந்தவள், இறையியலில் முனைவர் பட்டத்திற்கு (Doctor of Theology,)  பல்கலைக்கழகத்தில், தன் பெயரைப் பதிவுசெய்து, படிக்க ஆரம்பித்தாள். 1669-ல் தன் 26-ஆவது வயதில், The Colloquy of Christ (அல்லது Dialogue of Christ – யேசுவின் உரையாடல்)-ஐ ஸ்பேனிஷிலிருந்து இத்தாலிய மொழிக்கு, திறம்பட மொழியாக்கம் செய்துவிட்டாள். கேள்விப்பட்ட, பதுவா மற்றும் வெனிஸ் நகர அறிஞர்கள், பேராசிரியர்கள்  அரண்டுபோயினர்.

வருடம் 1672-ல் முனைவருக்கான மேற்படிப்பு முடிவுபெற்று, டாக்டர் பட்டம் கொடுக்கப்பட இருக்கும் நாளும் நெருங்கியது. வெனிஸின் கிறிஸ்துவ சபை, பெண்களை இறையியல், தத்துவம் போன்ற விஷயங்களில் தலையிடுவதைத் தடைசெய்திருந்த காலகட்டம். ஒரு பெண்ணிற்கு டாக்டர் பட்டம் கிடைக்கவிருக்கிறது என்கிற செய்தி நகரில் கசிய ஆரம்பித்தது. அவ்வளவுதான். பொங்கிவிட்டது கத்தோலிக்க கிறிஸ்தவ சபை. குறிப்பாக, பதுவா நகர பிஷப் (Bishop of Padua), க்ரெகோரியோ கார்டினல் பார்பரிகோ (Gregorio Cardinal Barbarigo). ‘அவள் எவ்வளவு புத்திசாலியாக இருந்தால்தான் என்ன? போயும் போயும் ஒரு பெண்ணுக்கா டாக்டர் பட்டம் தருவது? சமூகத்தைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கறதா பல்கலைக்கழகத்தில நீங்கல்லாம் கூடி முடிவு பண்ணிட்டீங்களா?  – என்கிற ரீதியில் பெருஞ்சத்தம்போட்டு, பலவிதத் தடைகளை எழுப்பி, அந்தப் பெண்ணிற்கு டாக்டர் பட்டம் தரப்படுவதற்குக் குறுக்கே வரிசைகட்டி நின்றனர். ஆறு வருட ஓயாத போராட்டத்துக்குப் பின் கத்தோலிக்க திருச்சபை மசிந்தது. எதிர்ப்புகள் ஒருவழியாக சமாளிக்கப்பட்டன.  அவளுக்கு டாக்டர் பட்டம் அளிக்க பதுவா பல்கலைக்கழகத்தினால் ஏற்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டன. அதன் இறுதிக்கட்டமாக, அறிஞர், நிபுணர் குழுவொன்றினால் அவள் நேர்முகத் தேர்வு செய்யப்படுவாளென அறிவிக்கப்பட்டது. பல்கலையின் மாணவர்கள், பழைய மாணவர்களோடு, இத்தாலியின் ஏனைய பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், வெனிஸ் செனட்டர்கள்,  பல்துறை அறிஞர்கள் உட்பட பலர், இதுவரை நிகழ்ந்திராத,  அந்த நம்பமுடியாத காட்சியைப்  பார்க்க விரும்பியதால், பல்கலைக்கழக வளாகத்தில் தேர்வை நடத்தமுடியாது எனப் புரிந்துகொண்டார்கள். 1678-ல் அந்த நேர்முகத்தேர்வு பெரும்பாலானோரின் விருப்பப்படி, பதுவா நகரின் கத்தீட்ரல் முன் உள்ள பெரும் மைதானத்தில் நிகழ ஏற்பாடு செய்யப்பட்டது.

தேர்வின்போது, தேர்வுக்குழுவின் துறைசார்ந்த நிபுணர்களால், சில நேரான, சில கடுமையான, மேலும் சில குண்டக்க மண்டக்கக் கேள்விகளுக்கு ஒரு பெண் – ஆ.. ஒரு பெண் – நேர்கொண்ட பார்வையில், நிதானமாக, தெளிவான குரலில், சரியான பதிலளித்தது, அனைவரையும் வாய்பிளக்கவைத்தது. அட, இப்படியெல்லாமா இந்த நாட்டில் நடக்கும் ! நேர்முகத்தேர்வுக்குப் பின் பல்கலைக்கழக பேராசிரியர்கள், அறிஞர்கள், செனட்டர்கள் என குழுமியிருந்த பிரமுகர்கள்முன் பேச அழைக்கப்பட்டாள் அவள். தனது வளமான குரலில், க்ளாசிக்கல் லத்தீன் மொழியின் அழகுபொங்க,  சுமார் ஒருமணிநேரம் தத்துவஞானி அரிஸ்டாட்டிலின் படைப்பு ஒன்றைப்பற்றி தத்ரூபமாக விளக்கி அவள் பேசியபோது, அனைவரும் அசையாதிருந்து, உன்னிப்பாக அவளது பேச்சைக் கேட்டார்கள். இறுதியாக, அந்த அதிசயப்பெண், உயர் மதிப்பெண்களுடன் டாக்டர் பட்டத்திற்கு தேர்வாகிவிட்டதாக பல்கலைக்கழகக் குழுவினரால்  அறிவிக்கப்பட்டபோது, பதுவா நகர் மட்டுமல்ல, கேள்விப்பட்ட முழு இத்தாலியே ஆச்சரியத்தில் உறைந்தது. ஐரோப்பாவின் மற்ற பகுதிகளுக்கும் செய்தி வேகமாகப் பயணித்து பெரும் அதிர்ச்சியைத் தந்தது.   என்ன! நிஜந்தானா? ஒரு லேடி  பி.ஹெச்.டி..?

1678-ஆம் ஆண்டிலேயே, பதுவா பல்கலைக்கழகம் அவளை கணிதப் பேராசிரியராக நியமனம் செய்தது. பேராசிரியராகப் பணியாற்றியபோதும் மேலும் படிப்பு படிப்பெனவே அவள் மனம் சென்றது.  அவளது படிப்பும், பண்பும், உழைப்பும், மாட்சிமையும் ஐரோப்பாவின் கல்விவெளியில்  நன்கு பரவ ஆரம்பித்திருந்தது.

என்ன தோன்றியதோ அவளுக்கு, தன் 11-ஆம் வயதில்,  வாழ்நாள் முழுதும் கன்னியாகவே இருப்பேன் என சங்கல்பித்துக்கொண்டிருந்தாள் அந்தப் பெண்.  அப்படியே இருக்கவும் செய்தாள். பின்னாளில், அவளுடைய தகுதிக்கு ஏற்ற சில அழகான ஆண்கள் அவள் கரம்பற்ற விரும்பியபோதும், இணங்கவில்லை அவள். டாக்டர் பட்டம் பெற்றபின், அடுத்த ஏழாண்டுகள் மேலும் படிப்பிலேயே ஆழ்ந்திருந்தாலும், தான, தர்ம காரியங்களில் மிகுந்த ஈடுபாடு காட்டினாள். அவளுடைய 38-ஆவது வயதில் கொடும் காசநோய் அவளைத் தாக்கியது. அதே வருடம்(1684), இவ்வுலக வாழ்வினிலிருந்து விலகிச் சென்றாள் அவள். வெனிஸ், பதுவா, ஸியெனா, ரோம் நகரங்களில் அவளுக்காக சிறப்பு இரங்கல் கூட்டங்கள் நடத்தப்பட்டன.

அவள் படித்த பதுவா பல்கலைக்கழகம், தன் வளாகத்தில் அவளை சிலை ரூபமாக வரித்து வைத்துக்கொண்டது.

ஆண்களுக்கு நிகரான பெண்களின் சமத்துவம், முன்னேற்றம் நிகழ்ந்திராத ஒரு பின்புலத்தில், அந்தக் காலத்திலேயே டாக்டர் பட்டம் வாங்கிக் கலக்கிய,  உலகின் முதல் பெண்மணி எனப் போற்றப்படுகிறார்  இத்தாலிய தர்க்கவியலாளரும் (logician), அறிஞருமான எலினா பிஸ்கோப்பியா (Elena Piscopia). (முழுப்பெயர் Elena Cornaro Piscopia).  பல்கலைக் கழகத்தில் படித்துப் பட்டம் (degree) வாங்கிய உலகின் முதல் பெண்ணும் இவரே.

Lady Elena, Lady Cornaro என்றெல்லாம் பின்னாளில் அழைக்கப்பட்ட எலினா பிஸ்கோப்பியாவின் வாழ்வுபற்றி ‘The Lady Cornaro : Pride and Prodigy of Venice’ எனும் ஒரு புத்தகம் 1999-ல்  Jane Smith Guernsey எனும் எழுத்தாளரால் எழுதப்பட்டு வெளிவந்திருக்கிறது.

**

Picture courtesy: Google

நரேந்திர மோதி 2.0 : கவரும் முகங்கள்

 

லோக்சபா தேர்தலில் பாரதீய ஜனதாவின்  அசத்தலான வெற்றிக்குப்பின், நரேந்திர மோதி இரண்டாம் முறையாக இந்தியப் பிரதமராகப் பதவியேற்றிருக்கிறார். கடந்த 71 -ஆண்டு இந்திய ஜனநாயக வரலாற்றில், முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு மற்றும் இந்திரா காந்தி ஆகிய காங்கிரஸ் பிரதமர்களைத் தாண்டி, காங்கிரஸல்லாத தேசியக்கட்சி ஒன்றின் பிரமுகர், அடுத்தடுத்து பிரதமராகப் பதவியேற்றிருப்பது இதுவே முதல் முறை.

தன்னுடைய சர்க்காரில் தன்னோடு சேர்ந்து பணியாற்றவிருக்கும் அணியை மோதி அறிவித்திருக்கிறார்.  பாரதீய ஜனதா கட்சி மற்றும் அவர்களது தேசீய ஜனநாயகக் கூட்டணியின் வெவ்வேறு மாநிலங்களிலான சிறப்பான தேர்தல் வெற்றிகளைக் கணக்கில்கொண்டுதான் மோதியின்  கேபினெட் டீம் செதுக்கப்பட்டிருக்கிறது. அபரிமித வெற்றிகளைத் தந்தவை: உத்திரப்பிரதேசம், மத்திய பிரதேசம், ஹரியானா, குஜராத், ராஜஸ்தான், கர்னாடகா மற்றும் யூனியன் பிரதேசமான டெல்லி. மேலும், மஹாராஷ்ட்ரா, பிஹார், மேற்கு வங்கம், ஒடிஷா, அஸ்ஸாம் மாநிலங்களிலும் பாஜக-வுக்கும் அதன் கூட்டணிக்கட்சிகளும் குறிப்பிடத்தகுந்த வெற்றிகளைப் பெற்றன. ஒவ்வொரு மாநிலம்/யூனியன் பிரதேசத்திலிருந்து இவ்வாறு வெற்றி பெற்ற முக்கியப் பிரமுகர்களின் அரசியல் ஆளுமை, கல்வித் தகுதி, ஏற்கனவே மத்திய, மாநில அளவில் பதவியிலிருந்திருந்தால் அதன்படி வெளிப்பட்ட நிர்வாகத் திறன், அனுபவம் போன்றவைகளை எல்லாம் பார்த்தே, கவனமாக இந்தக் கேபினெட் குழு அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்திய மந்திரிசபைகளில் அவைகளின் அதீத முக்கியத்துவம் காரணமாக, பிரதானமான அமைச்சரவைகள் என உள்துறை, நிதி, பாதுகாப்பு, வெளியுறவு ஆகிய இலாக்காக்கள் அரசியல் வல்லுனர்களால் பார்க்கப்படுகின்றன.  இந்த நான்கில் யார் யார் உட்கார்ந்திருக்கிறார்கள் என்பது அந்த அரசின் ஒட்டுமொத்த வலிமை குறித்து கோடிட்டுக் காட்டிவிடும்.  அத்தகைய அமைச்சகங்களின் பொறுப்புக்களை யார், யாருக்கு இந்த தடவை பிரதமர் மோதி அளித்திருக்கிறார் எனப் பார்ப்போம்.

அமித் ஷா: ஏற்கனவே டெல்லி அரசியல் வட்டாரத்தில் சலசலத்தபடி, பாரதீய ஜனதாக் கட்சித் தலைவரும், பிரதமரின் வலது கையுமான  அமித் ஷா, மந்திரிசபைக்குள் நுழைந்துவிட்டார்! சட்டம், ஒழுங்கு, உள்நாட்டுப்பாதுகாப்பு, மத்திய துணைராணுவ அமைப்புகள், உளவுத்துறை ஆகியவற்றின் நிர்வாகம் போன்றவற்றைத் தன்னகத்தே கொண்ட உள்துறை இலாகா ஷாவுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, குஜராத்தில் உள்துறை மந்திரியாகப் பணியாற்றிய அனுபவம் உண்டு. ஆனால், இந்தியாவின் உள்துறை என்பது பெருங்கடல். நிர்வாகத்திறமை, அதிரடி முடிவெடுக்கும் திறன் போன்றவை கைகொடுப்பதால், அவரிடம் பிரதமர் மோதிக்கு நிறைய எதிர்பார்ப்பு இருக்கிறது. நன்றாகப் பணியாற்றுவார் . நம்பலாம் ஷாவை!

மாணவப்பருவத்திலிருந்தே ஆர்.எஸ்.எஸ்.-ல் பணி. எண்பதுகளில், அகமதாபாதில், தனது ஆர்.எஸ்.எஸ். காலத்தில்தான் நரேந்திர மோதியை முதன்முதலாக சந்தித்தார் அமித் ஷா. குஜராத்தில் நரேந்திர மோதி மூன்று முறை முதல்வரானபோது, அவரோடு தோளோடு தோள் நின்று கட்சி, அரசு இரண்டையும் வலுவாக்கியதோடு, மக்களிடையே பிரபலமாகச்செய்த பெருமை ஷாவுக்கு உண்டு. பிஜேபி-யின் அகில இந்தியத் தலைவரானபின், பல்வேறு மாநிலங்கள் மற்றும் 2014, 2019 தேர்தல்களில்,  பாரதீய ஜனதாவின் மகத்தான வெற்றிகளுக்கு அமித் ஷா என்கிற நிர்வாகிக்கு முக்கியமான பங்களிப்பு இருந்தது என்றால் மிகையாகாது.

ராஜ்நாத் சிங்: முந்தைய மோதி அரசாங்கத்தில் உள்துறை இலாக்காவில் பணியாற்றிய ராஜ்நாத் சிங், பாதுகாப்பு அமைச்சராக அமர்த்தப்பட்டிருக்கிறார். நாட்டின் முழுபாதுகாப்பு, அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இஸ்ரேல் போன்ற நாடுகளுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு (defence cooperations) ஆகியவற்றை உள்ளடக்கிய பெரும் பொறுப்பு. கடந்த ஐந்தாண்டுகளில், முதலில் மனோகர் பர்ரிகர், பின்னர் நிர்மலா சீதாராமன் ஆகியோர்களால் திறம்பட இயக்கப்பட்ட இலாகா.

ராஜ்நாத் சிங் முன்னாள் உத்திரப்பிரதேச முதல்வர். முன்னாள் பிஜேபி தலைவர். வாஜ்பாயியின் அரசு மற்றும் மோதியின் முதலாவது கேபினெட் ஆகியவற்றில் அமைச்சராகப் பணியாற்றியிருக்கும் BJP veteran.

அடுத்ததாக வரும் மத்திய அரசின் இரண்டு முக்கிய இலாக்காக்கள் நிதி அமைச்சகமும், வெளியுறவுத்துறை அமைச்சகமும். இந்த முறை இவைகள்,  இரண்டு பிரபலமான தமிழர்களிடம் அளிக்கப்பட்டுள்ளன:

டாக்டர் எஸ். ஜெய்ஷங்கர்

டாக்டர் எஸ். ஜெய்ஷங்கர்:  ‘வெளியுறவுத்துறை’, வல்லரசுகள் மட்டும் ஏனைய நாடுகளுடனான ராஜீய உறவுகள், மற்றும் சர்வதேச வணிக உறவுகள், ஐநா மற்றும் சர்வதேச அமைப்புகளை, இந்திய நலனைக் கருத்தில்கொண்டு, கவனமாகக் கையாளும் இலாக்கா. (முன்பு சுஷ்மா ஸ்வராஜ் இந்தப் பொறுப்பில் சிறப்பான பங்களித்திருந்தார். உடல் நலக் கோளாறினால் அவர் நீடிக்கமுடியவில்லை.) வெளியுறவுத்துறைப் பொறுப்பை ஏற்றிருக்கிறார், அதற்கு மிகப் பொருத்தமான ஒருவர். டாக்டர் எஸ்.ஜெய்ஷங்கர். பலத்த சர்வதேச நெருக்கடிகள், மாற்றங்களுக்கிடையே இந்திய வெளியுறைத்துறை செயலராக 2015-18 என மூன்றாண்டுகள் பாராட்டத்தக்க சேவை. அமெரிக்கா, சீனா ஆகிய வல்லரசு நாடுகளின் தலைநகரங்களில் இந்திய தூதராக இருந்த அனுபவம். இந்தியாவின்  ’சைனா-ஸ்பெஷலிஸ்ட்’ என சர்வதேச அரசியல் விமரிசகர்களால் பார்க்கப்படுபவர். சீனாவுடனான ‘Dokhlam’ எல்லை நெருக்கடியின்போது, சீன-இந்திய ராஜீய பேச்சுவார்த்தைகளில், விட்டுக்கொடுக்காமல், கடுமையாக இந்தியாவுக்காக negotiate செய்தவர் என்கிறது BBC. இத்தகைய வெளியுறவுத்துறை நிகழ்வுகள் காரணமாக, கடந்த ஐந்தாண்டுகளாகவே பிரதமர் மோதிக்கு மிகவும் நெருக்கமாக ஆகிவிட்டவர் ஜெய்ஷங்கர். Modi’s handpicked specialist for the job. இவர் வெளியுறவு அமைச்சராக, மோதியால் நியமிக்கப்பட்டதை சீனா, அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், ஃப்ரான்ஸ் போன்ற நாடுகள் கூர்மையாகக் கவனிக்க ஆரம்பித்திருக்கின்றன.

அடுத்த ஐந்தாண்டுகளில் சர்வதேச உறவுகள் – குறிப்பாக, ட்ரம்பிற்குப் பின்னான அமெரிக்கா, பிரிட்டன் இல்லாத ஐரோப்பிய யூனியன், தெற்கு ஆசியக் கடற்பகுதிகளில் சீனாவின் லூட்டி, கொரியா, ஈரான், மத்திய கிழக்குப் பிரச்னைகள் போன்ற பலவித நெருக்கடிகளில் பிரதமர் மோதிக்கு ஆலோசனை சொல்பவராகவும், இந்தியாவை வழிநடத்துபவராகவும் அமைவார் என நம்பலாம்.

மேலும்: தமிழ்நாட்டவர்கள் -சராசரித் தமிழர்கள் எனப் படிக்கவும்- கிட்டத்தட்ட அறிந்திராத தமிழர்! பூர்வீகம் திருச்சி. தந்தை கே. சுப்ரமணியம் டெல்லியில் பாதுகாப்பு அமைச்சகத்தில் உயர்பதவியில் இருந்தவர். International Strategic Affairs Analyst. ஜெய்ஷங்கரின் சகோதரர் சஞ்சய் சுப்ரமணியம் ஒரு சரித்திர ஆய்வாளர் -renowned Historian. ஜெய்ஷங்கர் பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாம் டெல்லியில். அங்குள்ள JNU பல்கலைக்கழகத்தில் படித்து,  சர்வதேச அரசியலில் டாக்டர் பட்டம் பெற்றவர்.  (1977-2018 : IFS -held the highest post of Foreign Secretary). இப்போதைக்கு பார்லிமெண்ட்டின் எந்த சபையிலும் உறுப்பினர் இல்லை. இன்னும் 6 மாதத்துக்குள் ராஜ்யசபா எம்.பி.-யாக தேர்ந்தெடுக்கப்படவேண்டிய நிலை ஜெய்ஷங்கருக்கு.

நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்:  அடுத்ததாக முக்கியத்துவம் பெறுவது நிதி இலாகா. முந்தைய மோதி அரசில் நம்பர் 2-ஆகக் கருதப்பட்ட அருண் ஜேட்லி, பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி என்றெல்லாம் அதிரடியாகப் பணியாற்றிய நாட்டின் நிதி நிர்வாகத்தைக் கவனிக்கும் இன்றியமையாத துறை (உடல்நலக்குறைவு காரணமாக ஜேட்லி, இந்தமுறை கேபினெட்டுக்குள் வர மறுத்துவிட்டார்). இதுவரை இந்தியாவின் முதல் பெண் பாதுகாப்பு மந்திரி என சிறப்புப் பெற்றிருந்த நிர்மலா சீதாராமன், மோதி 2.0-ல், நிதி அமைச்சராக அமர்த்தப்பட்டதில் பலர் புருவங்களை உயர்த்தியுள்ளனர்! முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி கூடுதல் பொறுப்பாக நிதியை சில வருடங்களுக்குத் தன் வசம் வைத்திருந்தார் எனினும், நிர்மலா சீதாராமன் முழுப்பொறுப்பு வகிக்கும் இந்தியாவின் முதல் பெண் நிதி அமைச்சராகியிருக்கிறார்.  நிர்மலாவுக்கு, மோதி இந்த முறை, இரண்டு முக்கிய பொறுப்புகள் கொடுத்திருக்கிறார்: Finance & Corporate Affairs. தனது பணி ஒழுங்கு மற்றும் நிர்வாகத்திறமையை ஏற்கனவே நிரூபித்திருக்கும் நிர்மலா, புதிய பொறுப்புகளில் சிறப்பாக ஒளிர்வார் என எதிர்பார்க்கலாம்.

NRI -ஆக லண்டனில் Habitat, PWC போன்ற நிறுவனங்களில், வெவ்வேறு நிலைகளில் பணியாற்றியவர் நிர்மலா. ஒருமுறை ஒரு NRI நிகழ்வுக்காக டெல்லி வந்திருந்த நிர்மலா சீதாராமன், பிஜேபி-யின் சுஷ்மா ஸ்வராஜை சந்தித்தார். நிர்மலாவின்  தகுதிகள், மேலைநாட்டு அனுபவம் எனப் புரிந்துகொண்ட சுஷ்மா சொன்னாராம்: ‘உங்களைப் போன்றவர்கள் இப்படி வெளிநாட்டில் போய் உட்கார்ந்துகொண்டால் எப்படி? உங்களது சேவை இந்தியாவுக்கல்லவா தேவைப்படுகிறது! இந்தியாவுக்கு திரும்பிவிடுங்கள்!’ என்றிருக்கிறார். ஆலோசனையை ஏற்ற நிர்மலா, இந்தியா திரும்பிவிட்டார். 2008-ல் பாரதீய ஜனதாவில் சேர்ந்தார். 2010-ல், அப்போதைய பிஜேபி தலைவரான நிதின் கட்கரியால், கட்சியின் ஒரு Spokesperson-ஆக நியமிக்கப்பட்டார். முதலாவது மோதி சர்க்காரில், வணிகத்துறை ராஜாங்க அமைச்சராக இரண்டாண்டுகள் பணி அனுபவம்.

மேலும்: நிர்மலா சீத்தாரமன் ஒரு தமிழர். அப்பாவழி பூர்வீகம் முசிறி. அம்மாவழியில் திருவெண்காடு கிராமம், நாகப்பட்டினம் மாவட்டம். திருச்சி ஹோலி க்ராஸ் பள்ளியில் படித்தவர். சீதாலக்ஷ்மி ராமஸ்வாமி கல்லூரியில் இளங்கலை. (வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கரைப் போலவே இவரும்) JNU (Jawaharlal Nehru University, Delhi)-ல் முதுநிலைப் பட்டதாரி (பொருளாதாரம்).

மேலும் சில முக்கியமான கேபினெட் மந்திரிகள் :

ஸ்ம்ருதி இரானி

ஸ்ம்ருதி இரானி:    ‘பெண்கள் மற்றும் குழந்தைகள் முன்னேற்றம், டெக்ஸ்டைல்ஸ்’ ஆகிய பொறுப்புகள் இவருக்குத் தரப்பட்டிருக்கின்றன. கடந்த மந்திரிசபையில், செய்தி, தகவல் தொடர்பு, மனிதவள மேம்பாடு ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்க செயல்பாடுகள்.

ஸ்ம்ருதி இரானி, மோதி கேபினெட்டின் இளவயதுக்காரர்; 46-தான் அமைச்சரின் வயது!  இயற்பெயர் ஸ்ம்ருதி மல்ஹோத்ரா. அம்மா ஒரு பெங்காலி; அப்பா பாம்பேக்கார பஞ்சாபி! Zubin Irani எனும் தொழிலதிபரை மணந்ததால் ஸ்ம்ருதி இரானி ஆனார். ஸ்ம்ருதி ஒரு முன்னாள் டிவி நடிகை/தயாரிப்பாளர். All is well, Malik Ek, Amrita போன்ற off-beat படங்களில் நடித்துள்ளார்.

பியுஷ் கோயல் (Piyush Goyal):   ரயில்வே, வணிகம் மற்றும் பெருந்தொழில்கள் ஆகிய பொறுப்புகளும் தரப்பட்டுள்ளன இவருக்கு. கடந்த மோதி அரசின் கடைசி பட்ஜெட்டை (ஜேட்லி உடல் நலக்குறைவாக இருந்தபோது) தாக்கல் செய்தவர்.  கடந்த ஐந்து ஆண்டுகளின் திறமை மிகு கேபினெட் அமைச்சர்களில் ஒருவராக அரசியல் வல்லுனர்களால் கருதப்பட்டவர் .

கோயல்,  மஹாராஷ்ட்ராவின் புகழ்பெற்ற அரசியல் குடும்பத்திலிருந்து வருபவர். அம்மா மஹாராஷ்ட்ராவில் மூன்று முறை பிஜேபி எம்.எல்.ஏ.ஆக இருந்தவர். இவரது அப்பா வேத பிரகாஷ் கோயல், வாஜ்பாயி அரசில் கப்பல் போக்குவரத்து அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.

பிரகாஷ் ஜவடேகர்:  செய்தி, ஒலிபரப்பு, மற்றும் வனம், சுற்றுச்சூழல் துறைகள் இவர் வசம். பூனேயின் கலகலப்பான பிஜேபி முகம். கல்லூரிநாட்களிலேயே பாரதீய ஜனதாவின் மாணவர் அணியில் செயல்பட்டவர். முந்தைய சர்க்காரில் இணையமைச்சர். இப்போது கேபினெட் அமைச்சர்.

ரவி ஷங்கர் பிரசாத் : முந்தைய மோதி அரசில், வெவ்வேறு துறைகளில் அமைச்சராகப் பணியாற்றிய அனுபவம். இப்போது, ‘சட்டம், நீதி, தகவல் தொடர்பு’ அமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கிறார். (பிஜேபி-யிலிருந்து கடைசி நேரத்தில் காங்கிரஸுக்குத் தாவி, தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் ஹிந்தி நடிகர் ஷத்ருகன் சின்ஹாவை, பிஹாரின் பாட்னா தொகுதியில் நசுக்கியவர்.)

நரேந்திர சிங் தோமர்:  நரேந்திர மோதிக்கப்புறம், மத்திய மந்திரிசபையின் இன்னுமொரு நரேந்திரர் ! மத்தியப் பிரதேசத்துக்காரர். கிராமப்புற வளர்ச்சி, விவசாயிகள் நலன் ஆகிய பொறுப்புகள் பெற்றிருக்கிறார். தன்னுடைய இரண்டாவது அரசின் பதவிக்காலத்தில் விவசாயிகளின் பிரச்னைகள், குடிதண்ணீர் பிரச்னை போன்றவற்றில் முக்கிய கவனம் கொள்ளப்படும் என பிரதமர் தெரிவித்திருப்பதால், இந்தப் பதவியில் தோமர் முக்கிய பங்காற்ற வேண்டியிருக்கும். முந்தைய மந்திரிசபையிலும் பங்குபெற்றிருந்தார்.

டாக்டர் ஹர்ஷ்வர்தன் : டெல்லியிலிருந்து பிஜேபி-யின் பிரபல முகம். Well-qualified doctor of medicine. ஏற்கனவே மோதி அரசில் அமைச்சராக இருந்தவர். இம்முறை சுகாதாரத்துறை, விஞ்ஞானம், தொழில்நுட்பம் என இலாக்காக்கள்  வழங்கப்பட்டுள்ளன இவருக்கு.

அர்ஜுன் முண்டா:  ஜார்க்கண்ட்டின் முன்னாள் முதல்வர். மிகவும் மக்கள் செல்வாக்குள்ள அரசியல்வாதி.  ஆதிவாசி வகுப்பில் வரும் பிஜேபி தலைவர். ஜார்க்கண்டில் இவரது புகழ்கண்டு, பாரதீய ஜனதா இவரை தேசிய பொதுச்செயலாளர்களில் ஒருவராக நியமித்திருந்தது. இப்போது ’ஆதிவாசிகள் நலம், வளர்ச்சி’ க்கான அமைச்சகம், மிகச் சரியாக இவருக்குத் தரப்பட்டிருக்கிறது.

அர்ஜுன் முண்டா ஆதிவாசி மொழிகளோடு, ஹிந்தி, பெங்காலி, ஒடிய மொழிகளில் வல்லவர். சர்வதேச அளவில் இந்திய வில்வித்தைக்காரர்கள் புகழ்பெறவேண்டும் எனும் ஆசையுள்ளவர். புல்லாங்குழலிலும் கொஞ்சம் விளையாடுவார், அவ்வப்போது!

முக்தார் அப்பாஸ் நக்வி:  மோதி சர்க்காரின் ஒரே இஸ்லாமிய அமைச்சர். ’சிறுபான்மையினர் நலம்’ அமைச்சகத்தை இவருக்குத் தந்திருக்கிறார் மோதி. நக்வி ஒரு உத்திரப்பிரதேச அரசியல்வாதி. இந்திராகாந்தியின் எமர்ஜென்சியை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதால், ஜெயில் சென்ற அனுபவம். பிஜேபி-யை ஆர்.எஸ்.எஸ்.-லிருந்து தனித்துப் பார்க்கவேண்டும் என்பதும், ஆர்.எஸ்.எஸ் ஒரு தேசீய உணர்வு கொண்ட நிறுவனம் என்பதும் நக்வியின் கருத்துக்கள். வாஜ்பாயியின் சர்க்காரிலும், மோதியின் முதலாவது கேபினெட்டிலும்,  இணை அமைச்சராகப் பணியாற்றியிருக்கும் சீனியர். இப்போது கேபினெட் லெவலுக்கு பதவி உயர்வு கொடுத்திருக்கிறார் மோதி.

தர்மேந்திர பிரதான் : பெட்ரோலியம், இயற்கை வாயு மற்றும் எஃகுத் துறைகளின் அமைச்சராக அமர்த்தப்பட்டிருக்கிறார் பிரதான். ஒடிஷாவில் பிஜேபி யின் அபாரமான வளர்ச்சி/ வெற்றிக்குக் காரணமானவர் பிரதான். முன்னாள் பிஜேபி தலைவர் அமித் ஷாவுக்கு நெருக்கமானவர்.

அர்விந்த் சாவந்த் : பொது நிறுவனங்கள், மற்றும் பெருந்தொழில்கள் விவகாரத்தைக் கவனிக்கும் அமைச்சகம், சிவசேனா எம்பி-யான இவருக்குத் தரப்பட்டுள்ளது. சிவசேனா இந்த அமைச்சகத்தை பிஜேபி-யிடம் கேட்டு வாங்கியிருக்கக்கூடும்.  சாவந்த், பாம்பே (தெற்கு) தொகுதியில் காங்கிரஸின்  பெரும்புள்ளியான முரளி தேவ்ராவைத் தோற்கடித்த சிவசேனா எம்.பி.

**

பிரதமர் மோதியின் வெற்றி : சிதறும் எதிர்க்கட்சிகள்

 

தேர்தலுக்கு முந்தைய சில மாதங்களாக எங்குபோனாலும் இருபத்தி இரண்டு, இருபத்தி இரண்டாக காட்டிக்கொண்டு திரிந்தார்கள். அது என்ன இருபத்தி இரண்டு? லக்கி நம்பரா? இல்லை. இந்த நாட்டின் எதிர்க்கட்சிகள் எனத் தங்களை பாவித்துக்கொண்ட, தங்களை ஒரு குழுவாக மக்களிடம் காண்பிக்கத் துப்பில்லாமல், ஒரு மூட்டையாகக் கட்டிக்கொண்டு, காட்டிக்கொண்டு திரிந்த பெரிய(!), சிறிய கட்சிகளின் அமைப்பு. அந்த மூட்டைக்குள் காணப்பட்ட  நெல்லிக்காய்களின் எண்ணிக்கைதான் அந்த இருபத்தி இரண்டு.

தேர்தல் முடிந்தது. இந்தியா முழுதுமாக, பெரும்பாலான வாக்காளர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற ஒரு தலைவனின் கட்சி, அது ஏற்கனவே ஆளும் கட்சியாக இருந்தபோதிலும், மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு, டெல்லியின் அரியணைக்குத் திரும்பிவிட்டது. பொதுவாகச் சொல்லப்படும் anti-incumbency ஓட்டுக்கள், இந்த முறை ஆளும் கட்சிக்கான pro-incumbency ஓட்டுகளாக மாறிவிட்டன! அதிசயம்,  ஆனால் உண்மை.

மேலே குறிப்பிட்ட அந்த ‘எதிர்க்கட்சிகள்’ எனும் மூட்டைக்கு, இப்போது என்ன ஆயிற்று? ’எக்ஸிட் போல்’ வந்த நாளிலிருந்தே மூட்டையின் முடிச்சு கொஞ்சம் கொஞ்சமாக அவிழ ஆரம்பித்திருந்தது. தேர்தல் முடிவுகள் வந்தவுடன், முழுதாக அவிழ்ந்து விழுந்துவிட்டது. நெல்லிக்காய்கள் சிதறி மூலைக்கொன்றாக ஓடிவிட்டன. பரிதாபம்.

உருவான வாரிசு !

மேற்சொன்ன   22 நெல்லிக்காய்களில் சாம்பிளுக்குக் கொஞ்சம் பார்த்துவிடுவோமா? பொதுத் தேர்தல் சமயத்தில் மட்டும் ஒற்றுமை காண்பித்து மேடையேறி, மக்களைக் கேலி செய்வதுபோல் கையசைக்கும் இந்த எதிர்க்கட்சித் தலைகள் யார்? இதில் முன்னால் நிற்பது ஒரு காலத்தில் இந்திய தேசீய காங்கிரஸ் -ஆக மதிப்புடன், செல்வாக்குடன் இருந்து, பின்னர் காங்கிரஸ் (இந்திரா), காங்கிரஸ் (ஆர் (ராம்-ஜெகஜீவன் ராம்) எனப் பிளவுபட்டு, மீண்டும் இந்திய தேசீய காங்கிரஸ் என தேர்தல் ஆணையப் பதிவுகளில் காணப்பட்டாலும், பொதுவாக இந்திரா காங்கிரஸ் எனவே அறியப்பட்டு, இப்போது சோனியா-ராகுல் காங்கிரஸாக சிறுத்துக்கிடக்கும் ஒரு கட்சி. இதன் ’நேத்தா’ அதாவது தலைவர்தான் ராகுல் காந்தி. யார் இவர்? என்ன அடையாளம்? நேருவின் கொள்ளுப் பேரன், இந்திராகாந்தியின் பேரன், தென்னாட்டு வழக்கப்படி ‘அம்மை சோனியா’வின் மகன் இப்படித்தான் செல்கிறது அவரது அரசியல் அடையாளங்கள். கிட்டத்தட்ட 15  வருடங்களாக, அவரை காங்கிரஸின் தலைவராக, ஒவ்வொரு பொதுத்தேர்தலின் போது, பிரதம(ர்) வேட்பாளராக ‘ஆக்க’, நிறுவ, அவரது அம்மா சோனியா காந்தி செய்து வரும் முயற்சிகள், சாகஸங்கள்.. சொல்லி மாளாது. ஆனாலும் உருப்படியாக ஏதும் நிகழவில்லை. எழுதிக்கொடுத்ததைத் தூங்கமூஞ்சித்தனமாக படிப்பதும், அல்லது ‘கிராமத்து சாமியாடி’யைப்போல் ஆவேசத்துடன் மேடையில் கூச்சலிடுவதும்தான் இந்த 15 ஆண்டுகளில் அவர் ‘கற்று’க்கொண்டது. சொல்லிக்கொடுத்த சொல்லும், கட்டிக்கொடுத்த சோறும் – எத்தனை நாளைக்கு  வரும்? சோனியா காந்திக்குப் புரிந்திருக்க ஞாயமில்லை. ஏனெனில், அவர் தமிழரல்லவே!

நடந்து முடிந்த பொதுத்தேர்தலின் பிரச்சாரங்களின்போது, ராகுல் காந்தி, ஒரு தேசிய கட்சியின் தலைவராக, எதிர்க்கட்சித் தலைவராக என்னென்ன பேசினார், எப்படியெல்லாம் சத்தம் போட்டார்! நாட்டின் பிரதமருக்கெதிராக, எந்தவித மரியாதையோ, கவனமோ இன்றி,  அவர் பேசிய பேச்சுக்கள், வெறும் ஏச்சுக்கள். நரேந்திர மோதியின் முதல்  வெற்றியை (2014) ஜீரணிக்கமுடியாத காங்கிரஸ், அவரது ஏழ்மையான பின்புலத்தை ஆரம்பத்திலிருந்தே (2014) ஏளனம் செய்து வந்தது. அதன் விளைவாக வார்த்தைக்கு வார்த்தை, வரிக்கு வரி, பிரதமரை ‘சாய்வாலா’ (Chaiwala) என்று கிண்டலடித்தார்கள் காங்கிரஸ்காரர்கள். மற்ற ஜால்ரா கட்சிகளும் சேர்ந்துகொண்டன எனத் தனியாக சொல்லத் தேவையில்லை. இந்த வார்த்தையின் த்வனியை,  ‘tone’-ஐ, அது பிரதமரை நோக்கி சொல்லப்பட்ட விதத்தை – தமிழர்போன்ற ஹிந்தி-பேசா மாநிலத்தவர் சரியாக உணரமாட்டார்கள். ’பிரதமரா இவன்?  ’டீ வித்த பய!’.   என்பதுதான் அது.

பிரதமர் மோதி தன்னுடைய 5 வருட ஆட்சியை நன்றாகவே செய்து முடித்துவிட்டார். 2019 பொதுத்தேர்தலில் நிற்கிறார். எதிர்ப்பது அதே ராகுல் காந்தியும் மற்ற பழைய ‘கதாபாத்திரங்களும்’. இப்போதும் மோதியை பிரதமர் எனக் குறிப்பிடவே மனமில்லை காங்கிரஸுக்கு. ராகுல் சொல்கிறார்: ’அவர் சும்மா ஒரு ’சௌக்கிதார்’தான்!’ chowkidar-காவலாளி என்கிற ‘அகராதி’ மொழிபெயர்ப்பு அல்ல இங்கே கவனிக்கப்படவேண்டியது. அதாவது, மோதியை பிரதமர் என்றெல்லாம் அழைக்கவேண்டியதில்லை. ’வெறும் காவலாளி, கேட்கீப்பர் மாதிரிதான்யா அவரு!’ என்ற பொருள்பட ஒரு கிண்டல், கீழ்த்தரமாகப் பார்த்தல்தான், அந்த வார்த்தையை ராகுல்காந்தி சொன்ன விதத்தில் காணப்பட்ட அம்சம். ஆனால் மோதி, அந்த ஏளன வார்த்தைப் பிரயோகத்தை சாமர்த்தியமாகத் தன் போக்குக்குத் திருப்பிவிட்டுவிட்டாரே.. ’அவர்கள் சொல்வது சரிதான். இவ்வளவு பெரிய தேசத்தைப் பாதுகாக்க, அதற்கு காவலிருக்க ஒருத்தன் வேண்டாமா? அது நான்தான். ஆகவே ’ சௌக்கிதார் ’ என்று என்னைக் கூப்பிடுவதும்  சரிதான்’ என்றார் மோதி!

ராகுல் காந்தி & கோ.விற்கு ஏகப்பட்ட கடுப்பு.  இந்த ஆளை என்னதான் செய்வது? இன்னும் எப்படி அவமானப்படுத்துவது? இப்போது வேறுவிதமாக ஆரம்பித்தார் ராகுல் காந்தி. மேலும் ஆத்திரத்தோடு மோதியைக் குறிப்பிட்டு, ’சௌக்கிதார் (ச்)சோர் (Chor)  ஹை!’ என்றார். அதாவது ‘காவல்காரன் ஒரு திருடன்’! – இப்படிப் பிரதம மந்திரியைப் பார்த்து ஏதோ ஆத்திர, அவசரத்தில் ஒரு மேடையில், ஒருமுறை சொன்னதோடு  நிறுத்திக்கொண்டாரா ? இல்லை. ஒவ்வொரு மீட்டிங்கிலும் கத்திக்கொண்டே போனார் ராகுல் காந்தி. மக்களுக்கு அதில் வெறுப்பேறும் வரை கத்தினார். பிரச்சாரத்தின் கடைசிக் கட்டத்தில்,  அவரது ஒவ்வொரு மீட்டிங்கிலும் ஒரு பகுதியினர் திருப்பி ‘மோதி! மோதி!’ எனக் குரல் எழுப்பி, ராகுலை பயமுறுத்தும்வரை  அது போயிற்று!  என்ன செய்வார், அவரும்? பேசுவதற்கு அவரிடம் வேறு சரக்கில்லை. ஆனால், இதற்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டே போனால் மோதியின் பிரச்சாரமும் இந்த நிலைக்குக் கீழே போய்விடுமே. பதில் சொல்லாமல் விட்டுவிட்டாலோ, ஒத்துக்கொண்டதுபோல், பம்முவதுபோல் பொதுமக்களுக்குத் தெரிய வாய்ப்புண்டு. ஆகவே, மோதி ஒரு காரியம் செய்தார். தன்னுடைய நெருக்கடியான தேர்தல் மீட்டிங்குகளுக்கிடையில், ‘Mein bhi Chowkidar!’ ‘நானும் ஒரு காவல்காரன் தான்!’ எனும் நிகழ்ச்சி/மீட்டிங் ஒன்றை டெல்லியில் ஏற்பாடு செய்தார். (இந்த சமயத்தில் பல மோதி ஆதரவாளர்கள், ரசிகர்கள், ட்விட்டர் அக்கௌண்ட்டுகளில், தங்களின் பெயருக்கு முன்னால் ‘Chowkidar’ எனச் சேர்த்துக்கொள்ள, அதுவே ட்ரெண்டாகிப்போனது!). ’மே(ன்) பி சௌக்கிதார்’ நிகழ்ச்சியில் 5000-த்துக்கும் மேற்பட்ட அசல் சௌக்கிதார்கள் கலந்துகொண்டார்கள். வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் நாட்டின் வெவ்வேறு மூலையிலிருந்து ‘சௌக்கிதார்’ வேலைபார்ப்பவர்கள் பிரதமரோடு கலந்துரையாடினார்கள். அதில் ஒரு உரையாடலை ‘டைம்ஸ் நௌ’ சேனலில் கேட்க நேர்ந்தது. அதன் தமிழ் ஆக்கத்தைக் கீழே தருகிறேன்:

பிரதமர் மோதிக்கு, அன்றைய நிகழ்ச்சியின்போது,  நாட்டின் ஏதோ ஒரு டவுனிலிருந்து ஃபோன் வருகிறது. சௌக்கிதாராக (காவலாளி) ஏதோ கம்பெனியிலோ, ஆஃபீஸிலோ வேலைபார்க்கும் ஒரு தொழிலாளி பேசுகிறார்:

சௌக்கிதார் : ‘ப்ரதான் மந்த்ரி சாஹிப்! (பிரதம மந்திரி அவர்களே!) நான் சௌக்கிதார் தேவேந்திர சிங் பேசுகிறேன்.  நமஷ்கார்!’

நரேந்திர மோதி: நமஷ்கார்! மேற்கொண்டு சொல்லுங்கள் ..

சௌக்கிதார்: நான் ஒரு சாதாரண சௌக்கிதார். இங்கே ஒரு கம்பெனியில் வேலை பார்க்கிறேன். ஆப்.. தேஷ் கே ப்ரதான் மந்த்ரி! (நீங்களோ நாட்டின் பிரதம மந்திரி!).  உங்களையும் ’சௌக்கிதார்’ என்கிறார்கள்! இது எப்படி இருக்கிறது?

மோதி: (சிரிக்கும் சத்தம் கேட்கிறது). Achchaa hi lag rahaa hai ! – நன்றாகத்தான் இருக்கிறது!

சௌக்கிதார்: ஆனால் உங்களைப்போய் ‘(ச்)சோர் (Chor-திருடன்) என்று சொல்கிறார்களே.. இது சரியில்லை, சாஹிப் !

மோதி: நீங்கள் சாதாரண இந்தியக் குடிமகன். உங்களுக்கு சரியில்லை என்று தோன்றுகிறது. நல்லது. ஆனால் அவர்கள் ’சௌக்கிதார் (ச்)சோர் ஹை!’ என்றுதான் ஒவ்வொரு இடத்திலும் என்னைப்பற்றி ஏளனமாகப் பேசி வருகிறார்கள். என்னை மட்டுமல்ல, சௌக்கிதார் பணியிலிருக்கும் உங்களைப்போன்ற நேர்மையான தொழிலாளர்களை, ஏழைகளை எல்லாம் அவமதிக்கிறார்கள். இத்தகையோர்தான் தாங்களே திருடிவிட்டு, போலீஸ் வரும்போது ’சௌக்கிதார் மீதுதான் சந்தேகம். கைதுசெய்யுங்கள்’ என்று உங்கள் பக்கம் கைகாட்டும் முதலாளிகள். இவர்களை அடையாளம் கண்டுகொள்ளுங்கள்.

சௌக்கிதார்: சாஹிப்! எங்களுக்கு இவர்களை நன்றாகத் தெரியும். நாங்கள் அநியாயமாக அடிபட்டுவருபவர்கள். இருந்தும் பிழைப்புக்காக தினம் தினம் அதே வேலையை எங்களால் முடிந்தவரை, நேர்மையாக செய்துகொண்டிருப்பவர்கள்.

மோதி: உங்களைப்போன்ற சாதாரணர்களின் நேர்மையில்தான் இந்தியா என்கிற மகான் தேசம் நிற்கிறது. வாழ்கிறது. உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

சௌக்கிதார்: ஆப் சிந்தா மத் கரோ சாஹிப்! (நீங்கள் கவலைப்படாதீர்கள் ஐயா!) நாங்கள் உங்கள் பக்கம் தான் இருக்கிறோம். எங்களைப்போல நாடெங்கும்  தொழிலாளர்கள், சாதாரண மக்கள் (Aam Janta) எப்போதும் உங்கள் பக்கம்தான்.

மோதி: தன்யவாத்!(நன்றி)  நமஷ்கார்!

– இப்படிச் சென்றது ஒரு இந்தியக் குடிமகனுடனான, பிரதமர் மோதியின் கலந்துரையாடல் அன்று (மார்ச் 31, தல்கத்தோரா ஸ்டேடியம், டெல்லி).

காங்கிரஸின் ராகுல் காந்தியும், ஏனைய எதிர்க்கட்சித்தலைவர்களும் மோதிக்கு எதிராக, அவரை அவமானப்படுத்தி அழிப்பதாக நினைத்துக்கொண்டு கடந்த இரண்டு மாதங்களாக செய்த ஆவேச, அபத்தப் பிரச்சாரம் அவர்களுக்கே வினையாக முடிந்தது. மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மேலும் கீழே சென்றார். ஃபானி புயலின்போது பிரதமரின் ஃபோன் காலை மம்தா ஏற்கவில்லை. ஃபோனையே எடுக்கவில்லை. பதிலை அடுத்தநாள் இப்படிச் சொன்னார்: ‘நீங்கள் ஒரு எக்ஸ்பைரி பிரதமர் (Expiry PM). நான் ஃபோன் எடுக்கவேண்டிய அவசியமில்லை!’ பதவியில் இன்னும் இருக்கும் ஒரு பிரதம மந்திரியைப் பார்த்து, ஒரு முதலமைச்சரின் எவ்வளவு முறையற்ற, கீழ்த்தரமான கமெண்ட் இது என கவனியுங்கள். அரசியலின் மிகமோசமான, கீழ்த்தர நகர்வுகளில் இதுவும் ஒன்று.  மேலே குறிப்பிட்ட இந்த 22 எதிர்க்கட்சி உதிரிகள், இப்படித்தான் ஆளாளுக்கு, இந்தியப் பிரதமர் மீது எந்த ஒரு மரியாதையோ, முறையோ இன்றி, அவரை நரேந்திர மோதி எனும் தனி நபராகவே கருதி, தாக்குதல் நடத்தினார்கள். தாக்குதல் கீழ்நிலையை அடைய, அடைய ஒரு கட்டத்தில் ராகுல் காந்தி சுப்ரீம் கோர்ட்டில் மன்னிப்பு கேட்கவேண்டியதாயிற்று. ஒரு எதிர்க்கட்சித்தலைவரின் லட்சணமா இது? இத்தகைய கடுமையான துர்பிரச்சாரத்தின் விளைவாக, அதற்கு நேர் எதிர்விகிதத்தில் நரேந்திர மோதியின் புகழ் மக்களிடையே வளர்ந்துவந்ததை அறியவில்லை இந்த அசடுகள். அரசியல் வியூகம் தெரியா எதிர்க்கட்சிகளின் அடிமுட்டாள்தனம் இது.

நமது அரசியல்வாதிகளின் தொலைநோக்கு !

தேர்தல் முடிவுகள் வந்து, நரேந்திர மோதியின் பாரதீய ஜனதா பெரும்பான்மை பெற்றதை அறிந்தவுடன், இந்த 22-ல் பலர் காணாமற்போய்விட்டார்கள். டெலிவிஷன் சேனல் பக்கம் வந்து ஏதாவது சொல்லக்கூட ஒருவருக்கும் தைரியமில்லை. இவர்கள்தான் மோதிக்கு பதிலாக நாட்டை ஆளத் துடித்த தலைவர்கள்! ராகுல்காந்தி மட்டும் அன்று மாலை (மே 23), ஏதோ தயார்செய்துகொண்டுவந்தபடி, பத்திரிக்கையாளர் முன் நாலுவார்த்தை சொல்லிவிட்டு ஓடிவிட்டார். ’ராஜினாமா ! ராஜினாமா!’ என்று ராகுல் குதிக்க, காங்கிரஸ் தலைவர்கள் எனும் சம்ச்சாக்கள் ‘ஐயோ! ராஜினாமா செய்யாதீர்கள். கட்சி என்னாகும்? உங்களை விட்டால் எங்களுக்கு ஏது விமோசனம்!’ என்று அவரது காலடியில் விழுந்து கெஞ்சாத குறையாக,  நாடகம் ஆட ஆரம்பித்துவிட்டார்கள் காங்கிரஸ் கட்சியில். எதிர்பார்க்கப்பட்ட ‘ட்ராமா’ அரங்கேறிக்கொண்டிருக்கிறது. கொஞ்ச நாளைக்கு இது போகும். பிறகு ’பழைய குருடி, கதவைத் திறடி!’ -கதைதான்..

மேற்கு வங்கத்தின் அடிபட்ட புலியான  மம்தா பானர்ஜி, தான் இன்னும் விழுந்துவிடவில்லை எனக் காண்பிப்பதற்காக அவ்வப்போது ஏதேனும் சொல்லிவருவார். தன்னை எதிர்க்கட்சிகளின் முக்கிய பிரமுகராக காட்டி இந்தியா பூராவும், வலம்வந்துகொண்டிருந்த ஆந்திராவின் சந்திரபாபு நாயுடுவிற்கு நித்திய வயிற்றுவலியாக ஜெகன் மோகன் ரெட்டி அமைந்துவிட்டார். அவரது  கட்சி ஆந்திராவில் வலுவான மெஜாரிட்டியுடன் ஆட்சிக்கு வந்துவிட்டது. மஹா கட்பந்தன் (Maha Gat bandhan-மகா கூட்டணி) எனக் கூவிக்கொண்டிருந்த உத்திரப்பிரதேசத்தின் மாயாவதி, அகிலேஷ் யாதவ் என்போரின் விலாசம் தற்போதைக்குத் தெரியவில்லை! டெல்லியில் ஆம் ஆத்மி பார்ட்டியின் கேஜ்ரிவால் ஏழுக்கு ஏழையும் பாரதீய ஜனதாவிடம் இழந்துவிட்டு, விழிபிதுங்கிக் கிடக்கிறார். ஓரிரு மாநிலங்கள் தவிர, எதிர்க்கட்சிகளின் நிலைமை இந்தியாவெங்கும் மோசம்.

இந்தியா போன்ற ஒரு பெரிய ஜனநாயகத்துக்கு, வலிமையான, பொறுப்பான எதிர்க்கட்சி அமைந்திருத்தல் மிக அவசியம். அப்போதுதான் ஆளும் கட்சியின் திட்டங்களை, செயல்பாடுகளை தேசீய உணர்வோடு, ஆக்கபூர்வமாக விமரிசிக்க முடியும். ஆனால், இந்தியாவுக்கு அப்படி அமையவில்லையே இப்போது, என் செய்வது?

**

கார்ட்டூன்களுக்கு நன்றி: இந்தியன் எக்ஸ்ப்ரெஸ், கூகிள்.

**

இந்தியா : தொடர்கிறது மோதி சர்க்கார் !

நடந்துமுடிந்த இந்தியப் பொதுத் தேர்தலில்,  நரேந்திர மோதியே பிரதமராகத் தொடர்வதற்கு, மக்கள்  வாக்களித்துவிட்டார்கள். Clear and  solid mandate for the PM, no doubt. தெளிவான, அழுத்தமானவகையில், வலிமையான நிலையில்,  பாரதீய ஜனதா கட்சியை மீண்டும் ஆட்சி செய்ய அனுப்பியிருக்கிறார்கள். ஆளும் கட்சி அறுதிப் பெரும்பான்மை பெற்றதோடு,  இதுவரை இல்லாத அளவுக்கு பார்லிமெண்ட்டில் 303 சீட்டுகளைப் பெற்று (மொத்தம் 542), தன் பலத்தை சந்தேகமற நிரூபித்திருக்கிறது.

Women celebrating BJP’s splendid victory

எந்த ஒரு துக்கடாக் கட்சியின் ஆதரவை நம்பியும் ஆட்சியமைத்து, பின் ஒவ்வொரு சிக்கலின்போதும்  ஆட்டம்போடும் நிலை இல்லாமல், தடையின்றி நிலையான ஆட்சி செய்யும் வகையில் பாரதீய ஜனதாவுக்கு மக்கள் வாக்களித்தது இந்த தேர்தலின் நிறைவான ஒரு விஷயம். வலிமையான, ஸ்திரமான மத்திய அரசிற்குத்தான் உள்நாட்டில் மட்டுமல்ல, சர்வதேச வெளியிலும் மதிப்பும், மரியாதையும் தொடர்ந்து கிடைக்கும். அதுதான், இந்தியா போன்ற ஒரு மாபெரும் ஜனநாயக தேசத்தின்  பொதுவான நன்மைக்கும், வளர்ச்சிக்கும், கௌரவத்துக்கும் வழிவகுக்கும்.

மாறாக, எந்த ஒரு தேசிய கட்சிக்கும்  தனிப்பெரும் மெஜாரிட்டி கிடைக்காமல், தேர்தல் முடிவுகள் கட்சிகளிடையே சிதறிப்போய், அதன் விளைவாக, மத்தியில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஆட்சி அமையுமாறு ஒரு நிலை ஏற்பட்டிருந்தால்? அரசியல் கூட்டணி என்கிற பெயரில் கோமாளிகள், கொள்ளைக்காரர்களின் குழுவொன்று டெல்லியில் அமர்ந்து அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, பாரதத்தை ‘ஆள’ ஆரம்பித்தால், நாட்டின் நிலை என்னவாகும்? ஆணவமும், அடாவடித்தனமும் கொண்ட, நிர்வாகத் திறமையற்ற  – ஒரு மம்தா பானர்ஜி, மாயாவதி, கேஜ்ரிவால், அகிலேஷ் யாதவ், ஏன் அரசியல்வாதிகளில் அதிமேதாவி என நிரூபிக்கப்பட்டுவிட்ட காங்கிரஸின் ராகுல் காந்தி –  இப்படி ஒரு நமூனாவை, சாம்பிளை டெல்லியின் சிம்மாசனத்தில் அமரவைத்து கற்பனை செய்து பாருங்கள். இத்தகைய ஒரு பலவீனமான தலைமையின்கீழ், நாட்டில் எத்தகைய காரியங்கள் நடைபெறும்? பொதுநலத் திட்டங்கள் என்கிற பெயரில், விவசாயிகளுக்கான, ஏழைகளுக்கான இலவசங்கள் என்கிற பெயரில் என்னென்ன கூத்தெல்லாம் நடக்கும்? பொதுமக்களின் வரிப்பணம் எப்படியெல்லாம் நாலாபுறமும் விசிறி அடிக்கப்படும், அது எங்கெங்கெல்லாம் போய்ச்சேரும்? திட்டங்களை அமுல்படுத்துகிறோம் என்கிற சாக்கில், இன்னும் எத்தனை எத்தனை ஊழல் கதைகள், ஒவ்வொரு துறையிலிருந்தும் வெடிக்கும்? நாட்டின் கஜானா எவ்வளவு சீக்கிரம் காலியாகும்? அவற்றைப்பற்றி வாய்திறப்பவர்கள், வெளிக்கொணர்பவர்கள் எப்படியெல்லாம் தாக்கப்பட்டு, அழிக்கப்படுவார்கள்? பொது நிறுவனங்கள், அரசு இயந்திரங்கள் எப்படியெல்லாம் ஊழல் மயமாகி, செயலிழந்துபோகும்? இத்தகைய கெட்டகாலத்தில் இந்தியா என்கிற மகாதேசத்தின் பொருளாதாரம், பாதுகாப்பு என்ன ஆகும்? நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் தீராத துன்பங்கள் ஒரு பக்கம்; இன்னொரு பக்கத்திலிருந்து, சர்வதேச வெளியில் இந்தியா என்கிற தேசத்தின் இமேஜ், கௌரவம், ஆளுமை எப்படியெல்லாம் கேலிக்குரியதாகிவிடும்? கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். பயங்கரக் காட்சிகள் விரியும். மேலும் விஷயம் புரியும்.

இப்படியெல்லாம் அபத்தங்கள் நிகழ வாய்ப்பில்லாதவாறு, பெரும்பாலான இந்திய மக்கள் சரியான முடிவெடுத்து, இந்தத் தேர்தலில் வாக்களித்திருப்பது இந்திய அரசியல்வெளியில் அமைதியை உண்டுபண்ணியிருக்கிறது. எந்த ஒரு பிரதமர் கடந்த ஐந்தாண்டுகளாக, தேச மக்களின் நலம், நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி என சிந்தித்து செயல்பட்டாரோ, எவருடைய தலைமையின் கீழ் இந்தியா வலிமையான உலகப் பொருளாதாரங்களில் ஒன்றாக உருவெடுத்ததோ, எவருடைய திறன்மிகு ஆளுமையினால் இந்திய நாட்டின் பாதுகாப்பு ஸ்திரப்பட்டதோ, அவரையே மீண்டும் ஆட்சி செய்ய அழைத்திருக்கிறார்கள்.

நரேந்திர மோதியே, நல்ல தலைவனே, நடத்திச்செல் நாட்டை.. March on !

**

பிற்சேர்க்கை :

1. ” Mr. Narendra Modi is an exceptional politician; in 2014, he came to power riding the hopes of millions. He has introduced more people-friendly schemes than all PMs since Independence. If even 60 per cent of these are implemented in full, India will be transformed beyond recognition. Voters have given him a second chance; he must finish the unfinished business of nation-building.”   – Political comment in ‘Deccan Chronicle’ dt. 24/5/2019.
2.  The US President Mr. Donald Trump:  “Just spoke to Prime Minister Narendra Modi . I congratulated him on his big political victory. He is a great man and leader for the people of India . They are lucky to have him!”.
**

இந்தியத் தேர்தல் : PM, CM, EVM … !

இந்திய மகா தேசத்தில் 1952-ஆம் ஆண்டுதான் நாட்டின் பார்லிமெண்ட்டிற்கான (லோக் சபா) முதல் பொதுத்தேர்தல் நடந்தது. அப்போது 489 பார்லிமெண்ட் தொகுதிகளே இருந்தன.(அதில் இரண்டு ஆங்கிலோ-இந்தியர்களுக்கானவை). மொத்தம் சுமார் 17 கோடி வாக்காளர்கள் இருந்தனர். சுதந்திரத்திற்குப்பின் வந்த முதல் பொதுத்தேர்தல் ஆனதால் காங்கிரஸ் கட்சியை அடித்துக்கொள்ள ஆளில்லை! காங்கிரஸும், நேருவும் ஏதோ தேவலோகத்தில் இருந்து இந்தியாவுக்குள் குதித்துவிட்ட சங்கதிகளாகப் பார்க்கப்பட்ட அப்பாவிகளின் பொற்காலம்!

முதல் தேர்தலில் மொத்தம் 487 தொகுதிகளில், இந்திய தேசீய  காங்கிரஸ் (INC) 364-ஐ வென்று தனிப்பெரும் கட்சியாய் ஜொலித்தது. காங்கிரஸுக்கு அடுத்தபடியாக அதிக தொகுதிகள் சுயேச்சை வேட்பாளர்களுக்குத்தான் கிடைத்தது. இப்போதிருப்பது போல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்ஸிஸ்ட்) கட்சி என்றில்லை; இந்திய கம்யூனிஸ்ட் கட்சி என ஒன்றே இருந்தது. உலகில் கம்யூனிஸ்ட் இயக்கம் பிளவுபடாத (அதாவது சீனா வந்து குழப்பாத) காலம். அந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 16 இடங்கள் கிடைத்தன. கட்சி ரீதியாக அதுவே காங்கிரஸுக்குப்பின் அடுத்த பெருங்கட்சி! சோஷலிஸ்ட் கட்சி 12 எடுத்து மூன்றாவது இடத்தில்  மார்தட்டிக்கொண்டது. பின்னாளில் அது சம்யுக்த சோஷலிஸ்ட், ப்ரஜா சோஷலிஸ்ட் என்று பரிணாம வளர்ச்சியடைந்து, பின்னொரு நாளில் காணாமலேயே போய்விட்டது. கயா காம் ஸே..! அடல் பிஹாரி வாஜ்பாயீ, பல்ராஜ் மதோக் ஆகிய புகழ்பெற்ற இளம் பார்லிமெண்ட்டேரியன்களை பிற்காலத்தில் கொண்டிருந்த பாரதீய ஜனசங்கம் (தற்போதைய பாரதீய ஜனதா கட்சி(BJP)யின் ஆரம்பப் புள்ளி), முதல் தேர்தலில் 3 தொகுதிகளைப் பெற்றது. இந்தத் தேர்தலில் பிராந்தியக் கட்சிகள் என அழைக்கப்பட்ட மாநிலக்கட்சிகள் இல்லையா? இருந்தன. ஷிரோமணி அகாலி தளம் (பஞ்சாப்), ஜார்க்கண்ட் கட்சி, உத்திரப் பிரதேச பிரஜா கட்சி, ஜமீந்தார்கள் கட்சி, தமிழ்நாடு உழைப்பாளர்கள் கட்சி, மதராஸ் ஸ்டேட் முஸ்லிம் லீக் போன்றவைகளோடு ‘திருவாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி’ என்று ஒன்றும் காணப்பட்டது! சரி விடுங்கள், பழைய கதை..

நடந்துமுடிந்த, நாளைக்கு (23-5-19) முடிவுகள் வரப்போகும் பொதுத்தேர்தல் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோதி தொடர்வாரா என்பதைப் பிரதானமாகக் கொண்டது. கூடவே நடத்தப்பட்ட ஆந்திரா, அருணாச்சலப் பிரதேசம், ஒடிஷா, சிக்கிம் மற்றும் தமிழ்நாடு  ஆகிய அசெம்பிளி தேர்தல்களும், உட்கார்ந்திருக்கும் முதல் மந்திரிகள் இருப்பார்களா அல்லது ஓடிவிடுவார்களா என மக்களுக்குச் சொல்வதற்காகத்தான். நாளை மாலைவாக்கில்,  பூனைக்குட்டி வெளியே வந்துவிடும்!

EVM Units

இந்தியாவில் வாக்களித்தல் (voting) என்பது கட்சிகளின் சின்னங்கள் அடங்கிய வாக்குச்சீட்டு (ballot paper) மூலமாகவே வெகுகாலம் நடைபெற்றுவந்தது. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு சின்னமென இருக்க, அவற்றை அச்சடித்திருக்கும் எலெக்‌ஷன் கமிஷனின் வாக்குச்சீட்டு, அனுமார் வால் மாதிரி நீண்டு தொங்கி அப்பாவி வாக்காளர்களை மிரட்டிவந்தது! தங்களுக்குப் பிடித்தமான கட்சியின் சின்னத்தைத் தேடி அதில் முத்திரை குத்தி பெட்டியில் போட்டுவிட்டு வெளியே வரும்வரை, அவர்களுக்கு மூச்சுபோய் மூச்சு வந்தது. இந்தியா முழுதுமான லட்சக்கணக்கான ஓட்டுச்சாவடிகளிலிருந்து வாக்குச்சீட்டுகளை பாதுகாப்பாக சேகரித்து, வாக்கெண்ணும் நாளில் அவற்றை கட்சிவாரியாக வகைப்படுத்தி கணக்கிடுவதில், சரிபார்ப்பதில் காலதாமதமும், தவறுகள் ஏற்பட வாய்ப்புகளும் மலிந்திருந்தன.

வாக்களிப்பு முறையை தொழில்நுட்ப ரீதியாக  நவீனப்படுத்துவதற்காக இந்தியத் தேர்தல் ஆணையம் (Election Commission of India) தன்னுடைய தொழில்நுட்ப குழுவினால் (Technical Experts Committee (TEC)) பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட மின்னணு இயந்திரத்தை, சர்வதேசத் தர அரசு நிறுவனங்களான பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL, Bangalore) மற்றும் Electronics Corporation of India (ECIL, Hyderabad) ஆகியவற்றின் ஒத்துழைப்பில்  தயாரிக்க ஆரம்பித்தது. இதுதான் இந்திய எலெக்‌ஷன் கமிஷனின் EVM (Electronic Voting Machine) எனப்படும் மின்னணு வாக்குப் பதிவு எந்திரம். EVM-இன் முதல் எடிஷன், இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டு,  கேரளாவில் நடந்த ஒரு இடைத்தேர்தலில் 1982-லேயே  புழக்கத்துக்கு வந்தது. படிப்படியாக இதன் பயன்பாடு வளர்ந்தது. 2001-லிருந்து இதன் பயன்பாடு தேர்தலுக்குத் தேர்தல் என சீரானது. தொடர்ந்த காலகட்டத்தில் இவிஎம்,  BEL, ECIL-ஆகியவற்றினால், பலவிதமான தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு உட்பட்டு வளர்ச்சியடைந்துள்ளது.

இந்தப் பொதுத்தேர்தலில் இந்தியா பயன்படுத்தியிருப்பது, பலவிதமான சோதனைகளில் தேர்வாகி வந்திருக்கும் அதிநவீன இயந்திரம். வாக்களர் நீலநிற பட்டனை அழுத்தி வாக்களிக்கும்  பகுதி (Balloting Unit), வாக்கு அளிக்கப்பட்டுவிட்டதா என தேர்தல் அதிகாரி சரிபார்க்கும் பகுதி (Control unit) என இரு பகுதிகளைக்கொண்டு, உள்ளமைக்கப்பட்ட பேட்டரி பேக்-உடன் வருகிறது, tamper proof, weather proof-ஆன இந்த மின்னணு இயந்திரம். கூடவே, VVPAT (Voter Verifiable Paper Audit Trail) unit ஒன்றும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. ஒரு வாக்காளர் வாக்களித்தபின், தான் சரியாக வாக்களித்திருக்கிறோமா என்பதை ஒரு சிறிய திரையில் பார்க்கமுடியும். அதில் கட்சியின் சின்னம், சீரியல் நம்பர் ஆகியவை 7 வினாடிகளுக்குத் தெரியும். பின்னர் இந்த தகவல் பேப்பர் ரோலில் பாதுகாப்பு drop box-ல் சென்று மறைந்துவிடும். (இவிஎம்-ல் ஓட்டுக்களை எண்ணுகையில், VVPAT மூலமாகவும் எண்ணிக்கையை சரிபார்க்க முடியும்)

இந்திய தேர்தல் ஆணைய வழிமுறைகளின்படி, வாக்கெடுப்புக்கு முன்பு, தேர்தல் அதிகாரிகள் ஒவ்வொரு கட்சியின் ஏஜண்ட்டிற்கும், இவிஎம் ’எப்படி வேலை செய்கிறது’ என நிரூபித்துக் காட்டுகிறார்கள். குறைந்தபட்சம் 20 ‘மாதிரி ஓட்டுக்கள்’ கட்சி பிரதிநிதிகளால் போடப்பட்டு, இவிஎம் அதனை எப்படி கணக்கில் எடுத்துக்கொள்கிறது என்பது காட்டப்படுகிறது. ஒவ்வொரு சமயத்திலும் ஒரு மெஷின்மூலம் அதிகபட்சம் 2000 ஓட்டுகள் வரைப் போடமுடியும். ‘NOTA’ உட்பட, 64 கட்சி சின்னங்கள் வரை கணக்கில் எடுத்துக்கொள்ளுமாறு புதிய சீரீஸ் இவிஎம்-கள் உருவாக்கப்பட்டுள்ளன. கட்சி ஏஜண்ட்டுகள்/ பிரதிநிதிகளுக்கு முன்கூட்டியே இத்தகைய விபரங்கள் தேர்தல் அதிகாரிகளால் அளிக்கப்படுகிறது. அதன் பின்னரே, பொதுமக்களின் நிஜமான வாக்களிப்பு வாக்குச் சாவடியில் ஆரம்பிக்கிறது.

இதைப்போலவே, வாக்கெடுப்பு  முடிந்தபின், கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்பு இந்த இவிஎம் இயந்திரங்கள் ’மூட’ப்படுகின்றன. (விழுந்திருக்கும் ஓட்டுக்கள் கணக்கில் வந்தபின், சரிபார்த்தபின்,  தேர்தல் அதிகாரி ‘Close’பட்டனை அழுத்திவிட்டால், அந்த இயந்திரம் பூட்டப்பட்டுவிடும். அதில் மேற்கொண்டு ஓட்டுக்கள் போடமுடியாது. இப்படி ஒரு safety feature-உடன் அமைக்கப்பட்டிருக்கிறது அந்த இயந்திரம்). இவிஎம்-கள், வாக்கெடுக்குப்பின் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்பாக ‘மூட’ப்பட்டு, அதற்குரிய பெட்டிகளில் வைக்கப்பட்டு இரண்டுமுறை ‘சீல்’ செய்யப்படுகின்றன. ‘சீல்’ செய்யப்பட்ட இவிஎம்-கள், சீரியல் நம்பர்கள் சரிபார்க்கப்பட்டு, கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு ‘பாதுகாப்பு அறை’ (strong rooms)களில் வரிசைக்கிரமமாக  (தேர்தல் அதிகாரிகள், கட்சிப் பிரதிநிதிகள் முன்பு) வைக்கப்பட்டு, அறையின் கதவு மூடப்பட்டு சீல் வைக்கப்படுகின்றது. அனைத்து செயல்பாடுகளும் முறையாக வீடியோ பதிவு செய்யப்படுகின்றன. அறைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. மத்திய ஆயுதப்போலீஸ் படையின் காவலில் அத்தனையும் இருத்தப்பட்டுள்ளது.

சமீபத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வறிக்கை ஒன்று (‘India’s Electronic Voting Machines (EVMs): Social construction of a “frugal innovation’ authored by Maximilian Herstatt and Cornelius Herstat),  இந்திய ‘மின்னணு வாக்களிப்பு இயந்திரம்’ பற்றி இவ்வாறு சொல்கிறது: “EVMs in India are unique and quite different from EVMs employed in other nations like the US. Rather than large, expensive, complex and computer like systems, the Indian machine is praised for its simplicity, inexpensiveness, and efficiency…’’

**

இந்தியத் தேர்தல்கள் 2019 : EXIT POLL EXCITEMENTS !

’இந்தியப் பொதுத்தேர்தல்கள்-2019’-இன் இறுதிக்கட்ட வாக்களிப்பு ஒருவழியாக நேற்று (19/5/19) நிறைவுபெற்றது. இந்திய தேர்தல் ஆணைய (Election Commission of India) வழிமுறைகளின்படி கடைசி நாள் வாக்கெடுப்பு முடிந்து அரைமணி நேரம் கழிந்தபின்னரே தேர்தலுக்குப் பின்னான ’எக்ஸிட் போல்’களை (வெற்றிக் கணிப்புகள்) எந்த நிறுவனமும் வெளியிடமுடியும். அதன்படி நேற்று மாலை எக்ஸிட் போல்கள் இந்திய டிவி சேனல்களால் வெளியிடப்பட்டுள்ளன.

வடகிழக்கு மாநிலமொன்றில் வாக்களிக்க வரிசைகாட்டும் பெண்கள்

அரசியல் போதையில் கிறுகிறுக்கும் சராசரி இந்திய வாக்காளன், அரசியல்-ரசிகன்,  தீராத தேர்தல் கணக்குகளில் நேற்றைய தூக்கத்தை இழந்திருப்பான்! என்ன செய்வது, அவனது தேசமாயிற்றே, ஆளப்போவது யாரென்று கணிக்காமல், கவலைப்படாமல் இருக்கமுடியுமா?

பெரும்பாலான கணிப்புகள் பிரதமர் நரேந்திர மோதியின் பாரதீய ஜனதா கட்சி  (BJP)  தலைமை தாங்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA)-ஐ இந்திய மக்கள் மீண்டும் ஆட்சிக்கு அழைத்திருக்கிறார்கள் எனவே காட்டுகின்றன. எனினும் இன்னும் மூன்று நாட்கள் மூச்சைப் பிடித்துக்கொண்டுதான் அரசியல் கட்சிகள் உட்கார்ந்திருக்கும். நாயுடுகாரு, டெல்லிக்கும் கொல்கத்தாவுக்கும் அடிக்கடி பறந்து ’மோதி-இல்லா’ சர்க்கார் ஒன்று அமைக்க மஹாவியூகம் அமைத்தது ஒரு பக்கம் இருக்கட்டும். (இப்படி குறுக்கும் நெடுக்குமாக அலைகிறாரே இந்த நாயுடு..ஏன்? எல்லாம் மே 23 அன்று சரியாகிவிடும்! – என்கிறது பாரதீய ஜனதா கட்சியின் கூட்டுக்கட்சியான சிவசேனா!) டெல்லியின் 41 டிகிரி வெயிலைத் தவிர்க்க, அங்குள்ள ஆந்திரபவன் ஏசி -ரூமில் இப்போது நாயுடு கொஞ்சம் அமர்ந்து, யோசிக்கட்டும்; ஆசுவாசப்படுத்திக்கொள்ளட்டும். யாராவது ஒரு கிளாஸ் கேரட்-புதினா ஜூஸ் போட்டு,  ஐஸ் க்யூப்ஸ் மேலே மிதக்கவிட்டு அவருக்குக் கொடுங்கப்பா.. பாவம், ரொம்பத்தான் தூக்கமின்றித் தவித்திருக்கிறார் மனுஷன். மம்தா பானர்ஜியும் ஒரு இடத்தில் அமைதியாக உட்கார்ந்து ரஸகுல்லா சாப்பிட்டு எத்தனை நாளாயிற்று? பளபளவென்று குஷனோடு ஒரு நாற்காலி மாயாவதியின் கனவில் வந்ததாகக் கேள்விப்பட்டோமே?  யாரோ காக்கிசட்டை, துப்பாக்கி சகிதம் துரத்துவதாக டெல்லியின் கேஜ்ரிவாலுக்கு தினமும் வருகிறதாமே, துர்சொப்பனம்? என்னப்பா, யாராவது கவலைப்படுகிறீர்களா! தேசத்துக்காக இதுகள் எத்தனைதான் கஷ்டப்படுவது, தியாகம் செய்வது,  ஒரு கணக்கு வேண்டாம்..

சிஎன்என்-நியூஸ் 18, இந்தியா டுடே ( India Today),  ரிபப்ளிக் (Republic TV), டைம்ஸ் நௌ,  நியூஸ் 24 போன்ற முக்கிய தேசிய டிவி சேனல்கள் இந்தக் களேபரத்தில் முக்கிய பங்கு வகித்தன. கீழே ஒரு வேகநோட்டம் !

2019 India  Parliament (Lok Sabha) Elections (Total 542 seats)  – Exit Polls:

Channel Predictions BJP/NDA Congress/UPA  Others
CNN News 18 336 82 24
India Today 339-365 77-108 69-95
Republic 305 124 113
Times Now 306 132 104
News X

News 24

 

 

242

350

 

 

 

 

164

95

 

 

 

136

97

 

மேலே உள்ள அட்டவணையில், News X, News 24 சேனல்களின் கணிப்புகளில் பெரும் வித்தியாசம் இருப்பதைக் கவனித்தீர்களா? இந்த நிறுவனங்கள் எத்தகைய வழிமுறைகளை, வாக்காளர் பகுதிகளைக் (நகர்ப்புற, கிராமப்புற என) கையாண்டு, இப்படி முடிவுக்கு வந்தன? சொல்ல மாட்டார்கள். ட்ரேட் ஸீக்ரெட்.

பொதுவாக, இவ்வகை எக்ஸிட் போல்-கள், வரப்போகும் உண்மையான முடிவுகளை  நெருங்குவதில்லை என்கிற விமரிசனங்கள் உண்டு. சமீபத்தில் இதுபற்றி இரு கருத்துக்கள் பத்திரிக்கைகளில் காணப்பட்டன. இந்திய துணை ஜனாதிபதி ஆந்திராவில் நேற்று பேசுகையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள், சரியான முடிவுகளாக அமையவேண்டியதில்லை என்றார். காங்கிரஸின்  ஷஷி தரூர் சொன்னது: துல்லியமாக சர்வே, கணக்கீடுகள் செய்ய வாய்ப்புள்ள, வளர்ந்துவிட்ட ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில்கூட, பெரும்பாலான எக்ஸிட் போல்கள், கணிக்கும் முயற்சியில் தோல்வியுற்றிருக்கின்றன.

இருக்கலாம். நமது நாட்டின் தேர்தல் முறைகள், நகர வாக்காளர்களைத் தாண்டி, கிராமப்புற வாக்காளர் மனநிலையைக் கணிப்பதில், உண்மையான வாக்களிப்பு விகிதங்களை அளவிடுவதில் காணும் நடைமுறை சிரமங்கள் மிக அதிகம். தங்களிடம் கேள்விகேட்கும் தேர்தல் சர்வே/டிவி நிறுவன ஊழியர்களிடம் வாக்காளர்களில் பலர் மனம் திறந்து உண்மையைச் சொல்லமாட்டார்கள்தான்.

இருந்தும், கடந்த 2014 பொதுத் தேர்தலில் பங்கேற்ற பல டிவி சேனல்கள்/நிறுவனங்களின் எக்ஸிட் போல்-களில், நேஷனல் சேனல்களில் ஒன்றான  ’நியூஸ் 24’ சேனலின் கணிப்புகள் கிட்டத்தட்ட சரியாக வந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தின. கீழே அட்டவணையைக் கொஞ்சம் பாருங்கள்:

2014 Elections

 

News24 (2014 Predicted)

Actual Results 2014

BJP (NDA)

 

340

336

 

Cong.(UPA)

 

70

60

 

Others

133

147

இந்தமுறை அறிவிக்கப்பட்டிருக்கும் கணிப்புகளில் ஏதாவது, உண்மையை, இறுதி முடிவுகளை நெருங்கக்கூடுமா? மே 23-தான் பதில் சொல்லவேண்டும்!

தமிழ்நாட்டு லோக்சபா தொகுதிகளின் தேர்தலுக்கான எக்ஸிட் போல்(கணிப்புகள்)-களை சில முக்கிய சேனல்கள் வழங்கியிருக்கின்றன. தமிழ்நாட்டில், ஜெயலலிதா இல்லாத அதிமுக சந்திக்கும் முதல் பொதுத் தேர்தல்.  என்ன சொல்ல இருக்கிறது? போறாக்குறைக்கு ‘பரிசுப்பெட்டி’ சின்னம்வேறு (டிடிவி தினகரன் அணி), அதிமுக வாக்குகளை நிச்சயம் உடைத்துவிட்டிருப்பதால், டிவி சேனல்களின் கணிப்புப்படி திமுக-வின் காட்டில்தான் மழை பெய்வதாகத் தெரிகிறது. எத்தனை வருடந்தான் ஸ்டாலினும் காத்திருப்பது!

தமிழ்நாடு(லோக்சபா தொகுதிகள் 39) எக்ஸிட் போல் கணிப்புகள் சில:

டைம்ஸ் நௌ:   திமுக+காங்கிரஸ்  29 , அதிமுக+பிஜேபி  9.

நியூஸ் 24 :   திமுக+காங்கிரஸ் 17, அதிமுக+பிஜேபி 12, மற்றவை 9.

இந்தியா டுடே:    திமுக+காங்கிரஸ் 34, அதிமுக+பிஜேபி  4.

இதில், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, ’இந்தியா டுடே’ கணிப்பு சரியாக இருக்கலாம்போலிருக்கிறதே!

**