ஐபிஎல்: சென்னையின் சூப்பர் சாகஸம்

2018-க்கான ஐபிஎல் கோப்பையை வென்று வாகை சூடிவிட்டது தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ். வெற்றி, இறுதியில் 8 விக்கெட் வித்தியாசத்தில், இவ்வளவு எளிதாகக் கிடைக்கும் என யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டாரகள். தோனிக்கு, மட்டையுடன் மைதானத்தில் இறங்கும் வாய்ப்பே இல்லாது செய்துவிட்டார் ஷேன் வாட்ஸன்.

முன்னதாக தோனி டாஸ் வென்று, சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியை உள்ளே அனுப்பியபோது, அவர்கள் சரியாக விளையாடி 180-185 –ஆவது எடுத்தால்தான் சென்னைக்கு சவால் விட ஏதுவாக இருக்கும் எனத் தோன்றியது. தேவையில்லாத ஆரம்ப ரன்–அவுட்டுக்குப்பின் கேப்டன் வில்லியம்சனும், ஷிகர் தவனும் (Shikar Dhawan) ஜாக்ரதை காட்டினார்கள். தவன் ஜடேஜாவிடம் விழுந்தவுடன், இனியும் காத்திருந்து ப்ரயோஜனம் இல்லையென்று, வில்லியம்ஸன் தன் அதிரடியை ஆரம்பித்தார். குறிப்பாக சென்னையின் டுவெய்ன் ப்ராவோவைத்(Dwayne Bravo) தாக்குதாக்கென்று தாக்கினார். அவர் பெரிய இன்னிங்ஸ் கொடுக்கப்போகிறார் எனத் தோன்றிய வேளையில், ஸ்பின்னர் கரன் ஷர்மாவின் வைட்(wide) டெலிவரியை முன்னால் வந்து தாக்க முற்பட்டு, பந்தை இழந்து, விக்கெட்டையும் தோனியின் ஸ்டம்பிங்கில் பறிகொடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்து இறங்கிய யூசுஃப் பட்டான் உடனே காரியத்தில் இறங்கி மளமளவென ரன் குவித்தார். ஷகிபுல் ஹஸனும் (Shakib-ul-Hassan) கைகொடுக்க, ஹைதராபாத் எக்ஸ்ப்ரெஸ் வேகமெடுத்தது. ஆனால் ஹஸன் ப்ராவோவிடம் வீழ, அடுத்துவந்த ஹூடாவைப் போடா என்று விரட்டிவிட்டார் லுங்கி இங்கிடி (Lungi Ngidi). ஆனால் மறுமுனையில் ஆவேசத்தில் இருந்த பட்டானுடன், கார்லோஸ் ப்ராத்வெய்ட்டும்(Carlos Brathwaite) சேர்ந்து ரன்களை உயர்த்த, ஒருவழியாக 178 என்ற கௌரவமான ஸ்கோரில் வந்து நின்றது ஹைதராபாத்.

179 என்பது வெற்றிக்கான பெரிய டார்கெட் இல்லை சிஎஸ்கே-வுக்கு. ஊதிவிடுவார்கள் என்றே ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. ஹைதராபாதுக்கு எதிரான சென்னையின் ட்ராக் ரெக்கார்டும் அப்படித்தானே. இருந்தும் துவக்க ஆட்டக்காரர்களான வாட்ஸனும், டூப்ளஸியும் (du Plessis), ரிஸ்க் எடுக்காது, மெதுவாக ஆடினர். டூப்ளஸி சீக்கிரம் வீட்டுக்கு ஓடிவிட, ரெய்னா சேர்ந்துகொண்டார் வாட்ஸனுடன். விரைவிலேயே மும்பையின் வான்கடே மைதானத்தில் மஞ்சள் சட்டைகள் நாட்டியம் ஆடத் தொடங்கிவிட்டன! படபட-ரெய்னா 34 ரன்களில் வெளியேறுகையில், அடுத்தமுனையில் வெடித்துக்கொண்டிருந்தார் வாட்ஸன். 13-ஆவது ஓவரை சந்தீப் ஷர்மா வீச, பேயாட்டம் போட்டார். 3 சிக்ஸர், 2 பௌண்டரி. நமக்கு கப் இல்லை என்பது அந்த ஓவரிலேயே ஹைதராபாதிற்குப் புரிந்துவிட்டது. அதற்குப்பின் பந்துக்கு ஒரு ரன் எடுத்தால் போதுமென்ற சாதாரண நிலைதான் சென்னைக்கு. 51 பந்தில் செஞ்சுரி அடித்து வாட்ஸன் அதகளம் செய்கையில், அடுத்தபக்கத்தில் டென்ஷனின்றி ஜோடியாக ஆடிக்கொண்டிருந்தார் அம்பத்தி ராயுடு. ராயுடுவுக்கும் வேலைவைக்காமல், தோனியும் மைதானத்தில் மற்றவர்களோடு உட்கார்ந்து வேடிக்கை பார்த்தால் போதும் எனும் வகையில் வாட்ஸன் கிட்டத்தட்ட தனிஒருவனாக ஆடி, சென்னையின் கையில் மீண்டும் ஐபிஎல் கோப்பையைத் தூக்கி வைப்பார் என்பது யாரும் எதிர்பாராததுதான்.

டேவிட் வார்னர் இல்லாத நிலையில், ஹைதராபாத் அணிக்கு சிறப்பான தலைமை தந்தார் கேன் வில்லியம்ஸன். ரஷீத் கான், புவனேஷ்வர் குமார், சித்தார்த் கௌல் போன்ற பௌலர்களை மிகச்சிறப்பாகக் கையாண்டு அணியை ஃபைனல்வரை கொண்டுவந்து நிறுத்திய பெருமை வில்லியம்ஸனையே சாரும். பேட்டிங்கிலும் உச்சம் தொட்டு ஆரஞ்சு கேப்பையும் வென்றார்.

முந்தைய மேட்ச்சில் 10 பந்துகளில் 34 ரன்கள், 3 விக்கெட் என ஹைதராபாதிற்காக ஒற்றையாளாகத் தாண்டவமாடிய ஆப்கானிஸ்தானின் ஆல்ரவுண்டர் ரஷீத்கான், இறுதிப்போட்டியில் தன் கனவைக் கலைக்கும் அளவுக்கு குளறுபடி ஏதும் செய்யாதிருக்க, அவரை அதிகவனமாகக் கையாண்டது சிஎஸ்கே. அவரை எதிர்த்து ரன் எடுக்க முனையவுமில்லை. விக்கெட் எதையும் அவரிடம் இழக்கவும் இல்லை! அதேபோல் சென்னை அணியால் மிகவும் மதிக்கப்பட்ட வேகப்பந்துவீச்சாளர் ஹைதராபாதின் புவனேஷ்வர் குமார். இவருக்குரிய மரியாதையைக் கொடுத்தே கவனமாக ஆடிய சென்னை வீரர்கள், இவருக்கும் ஒரு விக்கெட்கூட விழாதவாறு பார்த்துக்கொண்டார்கள்.

இரண்டு வருடங்களுக்குப்பின் பெரும் உத்வேகத்துடன் ஐபிஎல்-லுக்குத் திரும்பிய சென்னை சூப்பர் கிங்ஸ், தன் புகழ் மங்காதவாறு விளையாடியது ரசிகர்களை மிகவும் குஷிப்படுத்தியது. குறிப்பாக சென்னையின் அம்பத்தி ராயுடுவும், ஷேன் வாட்ஸனும் பேட்டிங்கில் அசத்தோ அசத்தென அசத்தி, தோனியின் சுமையை வெகுவாகக் குறைத்துவிட்டார்கள். ஆரம்ப மேட்ச்சுகளில் டெத்-ஓவர்களில்(death overs) சிறப்பாக வீசினார் டுவெய்ன் ப்ராவோ. சுரேஷ் ரெய்னா, டூப்ளஸி போன்றோரின் திறமைமிகு பேட்டிங்கும், அவ்வப்போது சென்னையைத் தூக்கி நிறுத்தியது. பௌலிங்கில் லுங்கி இங்கிடி(Lungi Ngidi) தூள்கிளப்பினார். புது வேகப்பந்துவீச்சாளரான தீபக் சாஹர் (Deepak Chahar) முந்தைய போட்டிகள் பலவற்றில், கட்டுப்பாட்டுடன் வீசினார். ஸ்பின்னர்களில் ரவீந்திர ஜடேஜா ப்ரமாதம். ட்வீட்டரில் அடிக்கடி லொடலொடத்த ஹர்பஜன் சிங்கினால், பந்தை வைத்துக்கொண்டு மைதானத்தில் ஒன்றும் பெரிசாக செய்யமுடியவில்லை என்பதைக் கண்டுகொண்ட தோனி கடந்த போட்டியில் அவருக்கு ஒரு ஓவரும் தரவில்லை. இந்தப்போட்டியில் அவரைத் தூக்கியேவிட்டார்!

எதிர்பார்த்ததுபோலவே கேப்டன் மகேந்திர சிங் தோனி, சென்னை சூப்பர்கிங்ஸ் அணியை அழகாக முன்னின்று வழிநடத்தியதோடு, இறுதியில் ஐபிஎல் கோப்பையை வென்றும் காட்டிவிட்டார். அணி நிர்வாகத்தின் வெற்றிக் கனவு ஒருபுறமிருக்க, தோனியும், தன் விமரிசகர்களுக்கு தெளிவான செய்தியை அனுப்ப எண்ணி, இந்த ஐபிஎல்-ஐ தன் பர்சனல் இலக்காகக் கொண்டு ஆடியிருக்கக்கூடும். 2019—ல் இங்கிலாந்தில் வரவிருக்கும் உலகக் கிரிக்கெட் கோப்பைக்கான, தோனியின் மன, உடல் அளவிலான ஆயத்த முயற்சிகளில் முதலாவதாகும் இது. அடுத்தாற்போல் வரவிருக்கிறது இங்கிலாந்தில் ஜூலையில் இந்தியா ஆடவிருக்கும் ஒரு-நாள் கிரிக்கெட் தொடர்…

**

6 thoughts on “ஐபிஎல்: சென்னையின் சூப்பர் சாகஸம்

  1. தோனி டாஸ் போடும்போது சஞ்சய் மஞ்சரேக்கரை கிண்டல் செய்தற் என்று நேற்று முகநூலில் களேபரமாக இருந்தது. காலை எழுந்து பார்க்கும்போது சி எஸ் கே ஜெயித்த செய்தி படித்தேன். என் மகன்கள் முகநூலில் ஸ்டேட்டஸ் மழை பொழிந்திருந்தார்கள்!

    Liked by 1 person

    1. @ஸ்ரீராம் :

      உங்கள் மகன்களிடம் ஐபிஎல்-ஐ தாரை வார்த்துவிட்டுத் தூங்கப்போய்விடுகிறீர்களா! நான் எங்கள் வீட்டில் எல்லோரையும் தூங்கச் செய்துவிட்டுக் கடைசிவரை பார்த்தேன். ஃபைனலைக்கூட முழுசாகப் பார்க்கவில்லை என்றால் நான் என்ன கிரிக்கெட் ஃபேன்!

      Like

  2. மூன்று போட்டிகளில்ஹைதராபாதை வீழ்த்திய சென்னைக்குஅடிக்கடி அமாவாசை யாகுமா என்று தோன்றியது வென்று விட்டார்கள் கங்கிராட்ஸ்

    Liked by 1 person

    1. @Balasubramaniam G.M :
      நானும் இப்படித்தான் நினைத்தேன் ஆரம்பத்தில். ஆனால் தாங்கள் ஒரு சேம்பியன் சைட் என நிரூபித்துவிட்டார்கள் சிஎஸ்கே.

      Like

  3. தோனி – நம் யுகத்தின் முக்கியமான விளையாட்டு வீரன். தனித்திறமையைத்தான் நாம் இந்திய அணியில் பார்த்தருக்கிறோம். ஒரு அணியையே வசீகரித்து வெற்றிக்கு அழைத்துச் செல்வது அசாத்திய திறமை. அது நம் காலத்தில் நடந்தேறியிருக்கிறது. அசருதீன் இறுதி காலத்தில் இருந்த இந்திய அணியை நினைத்துப் பார்க்கிறேன். இப்படிப்பட்டவர்கள் எல்லாம் அணிகளுக்கு வருவார்கள் என்ற கனவு கூட அப்போது இல்லை.

    Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s