சைக்கிள்ல வந்தாரு !

பிரபல  தமிழ் நாளேடுகளின்  ஆன் -லைன் பக்கங்களில் நேற்று தலைப்புச் செய்திகளாக இப்படித்தான் ஓடிக்கொண்டிருந்தன: ‘சைக்கிளில் வந்து ஓட்டுப் போட்டார் நடிகர் விஜய்!’ ”பூத்திற்கு சைக்கிளில் வந்தது ஏன்? விஜய் தரப்பு அதிகாரி விளக்கம் !”

தேர்தல் தினத்தில் தமிழ்நாட்டுக்கு வெளியே உட்கார்ந்துகொண்டு , பிரிய தமிழ்நாட்டில் என்னென்ன நடக்கிறது, வாக்களிப்பு எப்படிப் போகிறது, அப்பாவி மக்களுக்குச் சிரமம் ஏதும் தரப்படவில்லையே.. என்கிற  சிந்தனை கலந்த ஆர்வத்தோடு பார்த்துக்கொண்டிருந்தேன் மீடியாவில்.  என் கண்ணில் பட்ட -புண்யம் பல செய்திருக்கவேண்டும் யான்- பரவசக் காட்சிகளில் சில இவை.  சரி, சரி.. தாண்டிப் போவோம் என்றால்,  விட்டுவிடுவார்களா அவ்வளவு எளிதாக?  ”நடிகர் அஜீத்  கோபம்! செல் ஃபோனை ரசிகரிடமிருந்து பிடுங்கினார்.  திருப்பிக் கொடுத்தார்.. மன்னிப்புக் கேட்ட அஜீத்!”  “ரஜினி, கமலை மிஞ்சிய விஜய், அஜீத் ! “நடந்தே  வாக்குச்சாவடிக்கு வந்த பிரபல நடிகர்  விக்ரம்..” அடடா.. அடடா… தமிழ்நாட்டின்  ரசனை, பொதுஅறிவை  வேகவேகமாக வளர்ச்சிப்பக்கம் அழைத்துச்செல்ல என்னவெல்லாம் செய்கிறது இந்த மீடியா.  கடும் தேசப்பணி..

தேர்தலுக்கு அடுத்த நாள். இப்போதாவது செய்திகள்,  அவற்றின் உள்ளீடுகள் மாறித்தொலைந்ததா என்றால்,  இன்னும் இல்லை!   மக்களின்  சிந்தனையை மேலும் மேலும் அதே நேர்க்கோட்டில் அழைத்துச்சென்று புரட்டிப்போடும் செய்திச் சரடுகள்: “அஜீத் போட்டிருந்த மாஸ்க்!  விஜய் ஓட்டிவந்த சைக்கிள்! பின்னணியில் இப்படி ஒரு  குறியீட்டு அரசியலா?”  தேர்தல் இரவில், எப்படியெல்லாமோ புரண்டு படுத்து ஒருவாறு தூங்கி, எழுந்து காலையில் டீ/காப்பி குடிக்க வந்திருக்கும், காத்திருக்கும்  டமிளன் ,கையில் பேப்பரைத் தூக்கிப் பிடித்து  படிக்க ஆரம்பித்தால், அவனை சீண்டும், சிதறடிக்கும்  கேள்விகள் . அஜீத்தின்  முகக்கவசம் கருப்பு, நாடா சிவப்பு! ஆ.. அந்தக் கட்சிக்குத்தான் போட்டாரா? விஜயின் சைக்கிளின் நிறம் – கருப்பு ..அப்புறம் அதில் கொஞ்சம் சிவப்பு.. புரிஞ்சிருச்சு…புரிஞ்சிருச்சு !   விக்ரம் ஏன் நடந்தே… வந்தாரு?   லாக்டவுனின்போது வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கள் ஊருக்கு நடந்தே,  நடந்தே  சென்றதை நினைவுபடுத்தி, மத்திய அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்தாரோ.. என்னே ஒரு புத்திசாலித்தனம்.. சீயான் ! 

அவன் கண்ணில் படுகிறது இன்னொரு நியூஸு. பார்த்திபன் ஓட்டுப் போடவே வரலியாமே! பாவம், அவரும்  ஏதாவது காரணம் வச்சிருப்பாரு..! – என வாழ்க்கையின்  ‘இருத்தல்’பற்றிய பெருங்கேள்விகள்  விடாது துரத்த, டமிளன் வேகவேகமாக டீ யை உறிஞ்சி கிளாஸைக் கீழே வைக்கிறான்.  தூண்டிவிடப்பட்ட சிந்தனை வளர்ந்து பெருக,  ’இன்னொன்னு போடப்பா !’ எனத் தீவிரமாக ஒரு சிங்கிள் டீக்குச் சொல்லிவிட்டே,  மேலும் மேய்கிறான், பேப்பரில்..

மே 2-ஆம் தேதின்னு ஒரு நாள் வரப்போகுதே சீக்கிரம்? அது என்னென்ன சொல்லப்போகுதோ?  அதன்பின்  என்னென்ன செய்வானோ, யோசிப்பானோ? சினிமா, அரசியல்னு மாறி மாறித் தாக்கும் சித்தாந்தப் புயல்களினூடே இந்த அப்பாவியின் வாழ்க்கைதான் எப்படி, எப்படியெல்லாம் திரும்புமோ,  தூக்கியடிக்கப்படுமோ ..

**

தந்தைக்காக

அப்பனுக்காக அன்பு மகள். பின்னே யார் வருவார்? வந்துவிட்டார் வீதிக்கு. என்னப்பா விஷயம்? ஏதாவது ப்ரச்னையா? நியாயம், நீதி கேட்கவா? அதெல்லாம், ஒன்றுக்கும் வக்கில்லாப் பாமர அசடுகள் செய்யும் வேலை. போடும் கூப்பாடு. இங்கே குறிப்பிடப்படுவது படித்த ’பெரு’மக்கள், செழித்த பணக்காரர்கள் செய்யும் திருப்பணி. கேட்டால் எமது மக்களுக்காகத்தான் இந்த உழைப்பெல்லாம் என்பார்கள், அப்பாவி முகத்தோடு!

அப்பன் அப்படியிருந்தால், மகள் தெருவுக்கு வந்து ஆடவேண்டியதுதான். போடவேண்டியதுதான் குத்தாட்டம். வேறென்ன பரதநாட்டியமா ஆட முடியும்? அதற்கெல்லாம்  கலை வசப்பட்டிருக்கவேண்டாமா? அப்படியே க்ளாசிக்கலாக முன்னே வந்து ஆடினால்தான், பாடினால்தான் நமது தமிழ்ப் பெருமக்களுக்குப் புரியத்தான் புரியுமா? ரசிக்குமா? குத்தாட்ட மட்டத்தில்தானே பொதுரசனையைக் கொண்டுவந்து வைத்திருக்கின்றன நமது தரங்கெட்ட சினிமாக்கள், தொலக்காட்சிகள். பழக்கி வைத்திருக்கின்றன தமிழ்மனதைக் காலங்காலமாய்? அத்தகையக் கேவல ரசனையின் வெளிப்பாட்டுக்குத்தானே சரியான விளம்பரம் கிடைக்கும்? வீடியோ வெளிச்சம் வந்து விழும்? அதுதான் விமரிசையாக நடந்துவருகிறது தற்போது நாட்டில். இதையெல்லாம் பார்த்து, பெற்று வளர்த்தவர்கள் பெருமைப்பட்டுக் கொள்ளவேண்டியதுதான். சிலிர்த்துக்கொள்ளலாம்தான். கலைஞன் என்கிற உயர் நிலையிலிருந்து, அரசியல் கரகாட்டக்காரன் என்கிற நிலைக்கு வந்திருக்கும் அல்லது அதற்குக் கீழேயும் இறங்க ஆயத்தமாயிருக்கும் ஒருவருக்கு, இதெல்லாம் வெகுமதிதானே.

மேலும்மேலும், இத்தகைய  உன்னதக் காட்சிகள், விதம்விதமாய், சமூகச்சீரழிவை வெவ்வேறு கோணங்களில் காண்பிக்கும் விதமாய் அரங்கேறும் நாட்டில், தமிழ்நாட்டில். விவரமில்லா, விவஸ்தையில்லா பொதுஜனமும் சேர்ந்து ஆடும். பாடும். பல்லிளித்துப் பொழுதுபோக்கும். பொதுவெளியில் குப்பையெல்லாம் வைரலாகி சந்திசிரிக்கும். தமிழ், தமிழ்ப்பண்பாடு, தமிழர்தம் வாழ்வு என மிளிரும், ஒளிரும் உலகெங்கும்.

அழகெது, அசிங்கமெது, அபத்தமெது என்பதைப் பிரித்துக் காட்டும் கோடுகள் கலைந்துவிட்ட நிலையில், சுய ப்ரக்ஞை, மென்னுணர்வு போய்விட்ட மாநிலத்தில், இதையெல்லாம் பேசுவதே கூட காலவிரயம்தான். என்ன செய்வது,  பேசாமலும்  இருக்கமுடிவதில்லை.

**

கிருஷ்ணன் நம்பியின் சிறுகதை ’மருமகள் வாக்கு’



கிருஷ்ணன் நம்பி:
1932-ல் அழகியபாண்டிபுரத்தில் (குமரிமாவட்டம்) பிறந்தவர். தனது 18 –ஆவது வயதில் இவரது இலக்கியப் படைப்புகள் வெளிவர ஆரம்பித்தன எனலாம். முதலில் ஒரு கட்டுரை. பிறகு குழந்தைகளுக்கான கவிதைகள் ‘கண்ணன்’ என்கிற பத்திரிக்கையில் வெளிவரலாயின. ஆரம்பத்தில் சசிதேவன் என்கிற புனைபெயரில் எழுதி, பிறகு ‘கிருஷ்ணன் நம்பி’ ஆக எழுத ஆரம்பித்தார். மிகக் குறைவான சிறுகதைகளே எனினும் சில இலக்கியத்தரம் வாய்ந்தவை எனப் பின்னர் விமரிசகர்களால் கருதப்பட்டன. புற்றுநோயினால் அவதிப்பட்ட நம்பி, தனது 44-ஆவது வயதில் 1976-ல் காலமானார். சுஜாதா, சுந்தர ராமசாமி போன்ற இலக்கிய ஆளுமைகளால் நல்ல எழுத்தாளர் எனக் கருதப்பட்டவர். சிறந்த குழந்தைப்பாடல்களை எழுதியவர் என சு.ரா.வினால் பாராட்டப்பட்டவர். ஆயினும், நம்பியின் சில படைப்புகளே புத்தக வடிவம் பெற்றன. அவற்றில் சில :

யானை என்ன யானை– குழந்தைப் பாடல்கள் தொகுப்பு
காலை முதல் மற்றும் நீலக்கடல் – சிறுகதைத் தொகுப்புகள்

சிறுகதை ‘மருமகள் வாக்கு’ : எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் சமீபத்தில் தொகுத்த தமிழின் 100 சிறந்த சிறுகதைகளில் ஒன்றாக இடம்பெற்ற ‘மருமகள் வாக்கு’ சிறுகதையின் மூலம் தமிழ் இலக்கிய வாசகர்களின் கவனத்திற்கு மீண்டும் வருகிறார் கிருஷ்ணன் நம்பி. கதை எப்படி?

கதையின் காலம் இங்கே முக்கியம். இந்திய சுதந்திரத்துக்குப் பின்னான காலம். புதிய சுதந்திர நாட்டில், ஜனநாயகத்தில், உள்ளாட்சித் தேர்தல்கள் பரபரப்பாக, உத்வேகத்துடன் நடக்க ஆரம்பித்துள்ளன என்று தெரிகிறது. அதன் பின்னணியில், நம்மை ஒரு மத்தியதரக் குடும்பத்திற்கு அழைத்துச்சென்று கதையை ஆரம்பிக்கிறார் நம்பி. மீனாட்சி அம்மாளுக்குக் கொஞ்சம் நிலம், சொந்த வீடு உண்டு. சொந்தமாய்ப் பசு ஒன்றும் உண்டு என்பதனால் அவளுடைய அந்தஸ்தைப்பற்றி நீங்கள் எளிதில் புரிந்துகொள்ளலாம். பால் வியாபாரத்தில் கில்லாடி. அரசாங்கத்தில் பியூனாக வேலைசெய்த தன் கணவன் போனபின், தன் ஒரே மகனுக்கு அந்த வேலையை அரசாங்கம் கருணையோடு போட்டுக்கொடுத்துவிட்டதில் அவளது தலை மேலும் நிமிர்ந்துள்ளது. ஒரு கட்டுப்பெட்டியான, ஒல்லியான, ஏழைப் பெண் ருக்மிணியை மருமகளாக வீட்டுக்குக் கொண்டுவந்துவிட்டாள். மருமகளுக்கு நாளெல்லாம் சமையல்கட்டு, மாட்டுத்தொழுவம் என்று மாயாத வேலை. அவளும் இதுதான் தன் வாழ்வு எனப் புரிந்துகொண்டு சளைக்காமல், நொடிக்காமல் செய்கிறாள். மாமியாரின் நேரடி கண்ட்ரோலில் மருமகள். சமையற்கட்டு, மாட்டுத்தொழுவம் தவிர வெளிஉலகம் பார்த்திராத அப்பாவி ருக்மிணி. வீட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் மீனாட்சி அம்மாளின் ஆர்ப்பாட்டந்தான், கோலோச்சுதல்தான்.

ருக்மிணிக்கு சமையலில் நல்ல கைமணம். பால் கறக்கவும் தெரியும். பால் கறந்தால் மார் வலிக்கும் என்றெல்லாம் சொல்வார்கள். அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளக்கூடாது; ஏன், எதற்கும் பதிலே சொல்லாதிருப்பதுதான் உத்தமம் என்று மாமியார்க்காரி ஆரம்பத்திலிருந்தே மருமகளுக்குக் போதனைசெய்திருந்தாள். வீட்டில் எல்லா வேலைகளும் ருக்மிணிதானா? மாமியார் என்னதான் செய்கிறாள்? நம்பியின் வார்த்தைகளில்:

மருமகளை ஏவி விட்டுவிட்டு மாமியார் மீனாட்சி அம்மாள் ஒன்றும் கையைக் கட்டிக்கொண்டு சும்மா இருந்துவிடவில்லை. அவளுக்கும் வேலைகள் உண்டு. பாலுக்குத் தண்ணீர் சேர்ப்பது, அளந்து விற்பது, வருகிற காசுகளை (ராமலிங்கம் சம்பளம் உள்பட) வாங்கிக் கணக்கிட்டுப் பெட்டியில் பூட்டுவது, பார்த்துப் பார்த்துச் செலவு செய்வது, தபால் சேவிங்க்ஸில் பணம் போடுவது எல்லாம் அவள் பொறுப்புதான். இவை மட்டுமா? ஓய்ந்த நேரங்களில் ஸ்ரீராமஜெயம், ஸ்ரீராமஜெயம் என்று ஒரு நோட்டுப் புத்தகத்தில் லட்சத்துச் சொச்சம் தரம் எழுதி, அக்ரகாரத்துப் பெண்களை அதிசயத்தில் ஆழ்த்திவிட்டிருக்கிறாள். சாவதற்குள் பத்து இலட்சத்து ஒன்று எழுதி முடித்துவிட வேண்டும் என்பது அவள் திட்டம்.

ருக்மிணியை வெளியே பார்ப்பதே அபூர்வம். எப்போதாவது கோயிலுக்கோ குளத்திற்கோ மாமியார் அனுப்பிவைத்தால், அக்கம்பக்கத்துப் பெண்கள் அவள் பின்னேயே ஓடி, அவளது வாயைக் கிளறப் பார்ப்பார்கள். ஆனால் ருக்மிணி வாயே திறக்கமாட்டாள். இவளை முயற்சிப்பதில் அர்த்தமில்லை என்று தெரிந்துகொண்டுவிட்ட அக்கம்பக்கம், மாமியாரையாவது சீண்டுவோம் என நினைத்தது. மருமகள் எப்படி இருக்கா என்று அவ்வப்போது கேட்டுப் பார்த்தது. மீனாட்சி அம்மாளா? அவளுக்கென்ன, நன்னா இருக்கா என்று எங்கோ பார்த்துக்கொண்டு சொல்லிவிட்டு பேச்சை உடனே மாற்றிவிடுவாள்.

அடுத்த நாள் அதிரடித் தேர்தல். பூனை அபேட்சகருக்கும் கிளி அபேட்சகருக்கும் கடும் போட்டி. எங்கும் தேர்தல் பற்றியே பேச்சு. யாருக்கு வாக்களிப்பார்கள் மாமியாரும் மருமகளும் என்று பெண்டுகள் கிண்டிப் பார்த்தன:

மீனாட்சி அம்மாள் வாக்கு யாருக்கு என்பது நன்றாகத் தெரிந்திருந்தும், “ஒங்க ஓட்டு கிளிக்குத்தானே மாமி?’’ என்று விஷமமாக வாயைக் கிளறினாள் ஒருத்தி. “ஏண்டி எல்லாம் தெரிஞ்சு வெச்சுண்டே என்னச் சீண்டறயா?’’ என்றாள் மீனாட்சி அம்மாள். “ஒங்க மாட்டுப் பொண் ஆருக்குப் போடப் போறாளோ?’’ என்று இன்னொருத்தி கண்ணைச் சிமிட்டவும், மீனாட்சி அம்மாளுக்குக் கோபம் வந்துவிட்டது. “பொண்டுகளா, என்னயும் அவளயும் பிரிச்சாப் பேசறேள்? நானும் அவளும் ஒண்ணு, அது தெரியாதவா வாயிலே மண்ணு’’ என்று அவள் ஒரு போடு போடவும் எல்லாரும் பெரிதாகச் சிரித்தார்கள்.

தேர்தல் அன்று காலையிலேயே போய் ஓட்டுப் போட்டுவிட்டாள் மீனாட்சி அம்மாள். ஆற்றங்கரைக்குப் பக்கத்தில்தான் ஓட்டுச்சாவடி. ராமலிங்கம் (ருக்மிணியின் கணவன்) குளித்துவிட்டு வரும்போதே அவனை இழுத்துப்போய்விட்டார்கள் ஓட்டுச்சாவடிக்கு. ஈரத்துண்டுடனேயே அவன் ஓட்டுப் போடும்படி ஆனது.

ருக்மிணி? அவள் மாட்டுத் தொழுவத்தில் பசுவுக்குத் தீனி போடுகிறாள். அது சாப்பிடுவதை ஆசையாய்ப் பார்த்துக்கொண்டிருக்கிறாள். மாட்டைத் தடவிவிட்டுக்கொண்டே, அதோடு மனம்விட்டுப் பேசுவதில் அவளுக்கு ஒரு ஆத்ம திருப்தி. இதற்கு மீனாட்சி அம்மாளின் அனுமதி தேவையில்லை :

“நான் இன்னிக்கு ஓட்டுப் போடப்போறேன். ஒனக்கு அந்த ஒபத்ரவம் ஒண்ணும் கெடையாது. நான் ஆருக்குப் போடணும் நீ சொல்லு. சொல்லுவியா? நீ ஆருக்குப் போடச் சொல்றயோ அவாளுக்குப் போடறேன். ஒனக்குப் பூனை பிடிக்குமோ? கிளி பிடிக்குமோ? சொல்லு, எனக்கு ஆரப் பிடிக்குமோ அவாளைத்தான் ஒனக்கும் பிடிக்கும், இல்லையா? நெஜமாச் சொல்றேன், எனக்குக் கிளியைத்தான் பிடிக்கும். கிளி பச்சப்பசேல்னு எம்பிட்டு அழகா இருக்கு! அது மாதிரி பறக்கணும்னு எனக்கு ரொம்ப ஆசை. பூனையும் எனக்குப் பிடிக்கும். ஆனா, அதைவிடக் கிளியைப் பிடிக்கும். ஆனா பூனைக்குக் கிளையைக் கண்டாலே ஆகாது.’’

மீனாட்சி அம்மாளின் ஏற்பாட்டின்படி பக்கத்துவீட்டுப் பெண்கள் மதியம் வந்திருந்தார்கள், ருக்மிணியை வாக்குச்சாவடிக்குக் கூட்டிக்கொண்டுபோக. ருக்மிணி இருக்கிறதிலேயே சுமாராக உடுத்திக்கொண்டு, தலையை வாரிக்கொள்ள சீப்புக் கிடைக்காமல் அவசர அவசரமாக கையினால் தலைய ஒதுக்கிக்கொண்டுப் படியிறங்குகிறாள். மாமியார் கூப்பிடுகிறாள் :

’’இந்தா, சொல்ல மறந்துட்டேனே, ஒரு நிமிஷம் இங்க வந்துட்டுப் போ’’ என்று வீட்டுக்குள் கூட்டிப் போனாள். குரலைத் தணித்து, “ஞாபகம் வைச்சிண்டிருக்கியா? தப்பாப் போட்டுடாதே. ஒரு சீட்டுத் தருவா. பூனப் படமும் கிளிப் படமும் போட்டிருக்கும். பூனப் படத்துக்குப் பக்கத்திலெ முத்திரை குத்திடு. வழிலெ இதுகள்கிட்ட வாயெக் குடுக்காத.. போ! ’’ என்றாள்.

வாக்குச்சாவடிக்கு வந்த ருக்மிணிக்கு எல்லாமே விசித்திரமாக, வேடிக்கையாகத் தெரிந்தன. தூரத்து அனிச்ச மரமொன்று அவளது பால்யகால நினைவை மீட்டது. சின்ன வயதில் வேம்பனூரில், அவள் படித்த பள்ளிக்கூடத்தில் இருந்த அந்த மரத்தில் ஏறி எத்தனைப் பழம் பறித்துத் தின்றிருக்கிறாள். அவளுக்கு சந்தோஷமாக இருந்தது. சாவடியிலிருந்து ஓட்டுப் போட்டவர்கள் விதவிதமான முகபாவத்துடன் வெளியேறினர். ருக்மிணியின் கியூவும் வேகமாக நகர்ந்தது.

ருக்மிணி என்ன செய்தாள்? கிருஷ்ணன் நம்பியின் கதைக்குள் பயணியுங்கள் அன்பர்களே:

லிங்க்: http://azhiyasudargal.blogspot.in/2008/10/blog-post_3258.html

நன்றி: அழியாச்சுடர்கள் இணைய தளம். படத்திற்கு நன்றி: விகடன்.காம்/இணையம்
w

**

2016 – வாழ்த்தும் சிந்தனையும்

இந்த நூற்றாண்டின் 16-ஆம் வருடம் புகுந்துவிட்டது நம் வாழ்வில் இன்று.
வெளியே நிற்கின்றன ஏதேதோ எதிர்பார்ப்புகள். உள்ளே இருக்கலாம் பல ஆச்சரியங்கள் !

புத்தாண்டின் காலை, கோவில்களில் திருப்பாவை, திருவெம்பாவை, விஷ்ணு சகஸ்ரநாமம் என நம்மில் சிலருக்கு ஆன்மிக வழியில் ஆரம்பித்திருக்கிறது. இன்னும் சிலருக்கு, பிக்னிக்குகள், ஹோட்டல், ரெஸ்டாரண்ட்டுகள் எனத் துவங்கியிருக்கலாம். பெரும்பாலும் இன்று விடுமுறை நாளாதலால், அனைவரும் குடும்பத்தினருடன், நண்பர்களுடன் குலாவி மகிழ்வர். ஆஃபீஸே வாழ்க்கை என்கிற சித்தாந்தத்தோடு அலையும் சில ஆண்களுக்கு, வீடென்று ஒன்றும் உண்டு ; அங்கே ஆண்கள், பெண்கள், கூடவே குழந்தைகளும் உண்டு; அதற்குள் இனிதே உலவுவது எப்படி என மனைவிமார்களும், குழந்தைகளும், பெற்றோரும் திரும்பவும் சொல்லித்தர இன்று முனையக்கூடும்.

புத்தாண்டு தினத்திலிருந்து, தனியார் வாகனங்களுக்கான `ஆட்-ஈவன்` திட்டத்தை (Odd-Even Formula) கேஜ்ரிவால் அரசு டெல்லியில் அறிமுகப்படுத்துகிறது. ஜனவரி 1 –ஒற்றைப்படை எண் (odd number). ஆதலால், ஒற்றைப்படை எண்ணில் முடியும் தனியார் வாகனங்களையே இன்று தலைநகரில் ஓட்ட முடியும். இரட்டைப்படை எண்ணுள்ள வாகன உரிமையாளர்கள் 2, 4, 6 ..போன்ற தேதிகளில் மட்டுமே தங்கள் வாகனங்களுடன் வெளியே தலைகாட்ட முடியும். தாறுமாறாக தனியார் வாகனங்கள் வெளியே உலவினால் ரூ.2000 அபராதம். பெண்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் விதிவிலக்கு. தலைநகரின் காற்று மாசுக் கட்டுப்பாட்டிற்காக கேஜ்ரிவால் & கோ.வின் முயற்சி இது. இதை அமுல்படுத்துவதில் குழப்பங்களும், பொதுமக்களுக்கு இடைஞ்சல்களும் தவிர்க்கமுடியாதவை என விமரிசனங்கள் ஏற்கனவே முன்வைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டிற்கு (மற்றும் சில மாநிலங்களுக்கு) இது தேர்தல் வருஷம். தமிழ்நாட்டின் வடமாவட்டங்களில் இப்போதுதான் வெள்ளம் வடிந்திருக்கிறது. மக்களின் பிரச்சினைகள் வடிந்திருக்கின்றனவா? முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கிறார்கள் மக்கள். தமிழகத்திற்கு சிறப்பான ஆட்சிதரும் நல்லாட்சி அமையுமாக.

பிரதமர் நரேந்திர மோதி, நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் ஆகியோர், நாட்டிற்கான புதிய தொழில்துறை, பொருளாதாரத் திட்டங்களுடன் புத்தாண்டில் பவனிவருவார்கள் என எதிர்பார்க்கலாம்.

உலகெங்கும் வன்முறை, தீவிரவாதம், போர்நிலை நீங்கி, அமைதியும், சுபிட்சமும் நிலவுமாக! இயற்கைப்பேரிடர்கள் பூமிக்குப் பக்கத்திலே வாராதிருக்குமாக!

நாட்டிலும், நாட்டுக்கு வெளியேயும் வசிக்கும் அனைத்துத் தமிழ் அன்பர்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !

**