சைக்கிள்ல வந்தாரு !

பிரபல  தமிழ் நாளேடுகளின்  ஆன் -லைன் பக்கங்களில் நேற்று தலைப்புச் செய்திகளாக இப்படித்தான் ஓடிக்கொண்டிருந்தன: ‘சைக்கிளில் வந்து ஓட்டுப் போட்டார் நடிகர் விஜய்!’ ”பூத்திற்கு சைக்கிளில் வந்தது ஏன்? விஜய் தரப்பு அதிகாரி விளக்கம் !”

தேர்தல் தினத்தில் தமிழ்நாட்டுக்கு வெளியே உட்கார்ந்துகொண்டு , பிரிய தமிழ்நாட்டில் என்னென்ன நடக்கிறது, வாக்களிப்பு எப்படிப் போகிறது, அப்பாவி மக்களுக்குச் சிரமம் ஏதும் தரப்படவில்லையே.. என்கிற  சிந்தனை கலந்த ஆர்வத்தோடு பார்த்துக்கொண்டிருந்தேன் மீடியாவில்.  என் கண்ணில் பட்ட -புண்யம் பல செய்திருக்கவேண்டும் யான்- பரவசக் காட்சிகளில் சில இவை.  சரி, சரி.. தாண்டிப் போவோம் என்றால்,  விட்டுவிடுவார்களா அவ்வளவு எளிதாக?  ”நடிகர் அஜீத்  கோபம்! செல் ஃபோனை ரசிகரிடமிருந்து பிடுங்கினார்.  திருப்பிக் கொடுத்தார்.. மன்னிப்புக் கேட்ட அஜீத்!”  “ரஜினி, கமலை மிஞ்சிய விஜய், அஜீத் ! “நடந்தே  வாக்குச்சாவடிக்கு வந்த பிரபல நடிகர்  விக்ரம்..” அடடா.. அடடா… தமிழ்நாட்டின்  ரசனை, பொதுஅறிவை  வேகவேகமாக வளர்ச்சிப்பக்கம் அழைத்துச்செல்ல என்னவெல்லாம் செய்கிறது இந்த மீடியா.  கடும் தேசப்பணி..

தேர்தலுக்கு அடுத்த நாள். இப்போதாவது செய்திகள்,  அவற்றின் உள்ளீடுகள் மாறித்தொலைந்ததா என்றால்,  இன்னும் இல்லை!   மக்களின்  சிந்தனையை மேலும் மேலும் அதே நேர்க்கோட்டில் அழைத்துச்சென்று புரட்டிப்போடும் செய்திச் சரடுகள்: “அஜீத் போட்டிருந்த மாஸ்க்!  விஜய் ஓட்டிவந்த சைக்கிள்! பின்னணியில் இப்படி ஒரு  குறியீட்டு அரசியலா?”  தேர்தல் இரவில், எப்படியெல்லாமோ புரண்டு படுத்து ஒருவாறு தூங்கி, எழுந்து காலையில் டீ/காப்பி குடிக்க வந்திருக்கும், காத்திருக்கும்  டமிளன் ,கையில் பேப்பரைத் தூக்கிப் பிடித்து  படிக்க ஆரம்பித்தால், அவனை சீண்டும், சிதறடிக்கும்  கேள்விகள் . அஜீத்தின்  முகக்கவசம் கருப்பு, நாடா சிவப்பு! ஆ.. அந்தக் கட்சிக்குத்தான் போட்டாரா? விஜயின் சைக்கிளின் நிறம் – கருப்பு ..அப்புறம் அதில் கொஞ்சம் சிவப்பு.. புரிஞ்சிருச்சு…புரிஞ்சிருச்சு !   விக்ரம் ஏன் நடந்தே… வந்தாரு?   லாக்டவுனின்போது வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கள் ஊருக்கு நடந்தே,  நடந்தே  சென்றதை நினைவுபடுத்தி, மத்திய அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்தாரோ.. என்னே ஒரு புத்திசாலித்தனம்.. சீயான் ! 

அவன் கண்ணில் படுகிறது இன்னொரு நியூஸு. பார்த்திபன் ஓட்டுப் போடவே வரலியாமே! பாவம், அவரும்  ஏதாவது காரணம் வச்சிருப்பாரு..! – என வாழ்க்கையின்  ‘இருத்தல்’பற்றிய பெருங்கேள்விகள்  விடாது துரத்த, டமிளன் வேகவேகமாக டீ யை உறிஞ்சி கிளாஸைக் கீழே வைக்கிறான்.  தூண்டிவிடப்பட்ட சிந்தனை வளர்ந்து பெருக,  ’இன்னொன்னு போடப்பா !’ எனத் தீவிரமாக ஒரு சிங்கிள் டீக்குச் சொல்லிவிட்டே,  மேலும் மேய்கிறான், பேப்பரில்..

மே 2-ஆம் தேதின்னு ஒரு நாள் வரப்போகுதே சீக்கிரம்? அது என்னென்ன சொல்லப்போகுதோ?  அதன்பின்  என்னென்ன செய்வானோ, யோசிப்பானோ? சினிமா, அரசியல்னு மாறி மாறித் தாக்கும் சித்தாந்தப் புயல்களினூடே இந்த அப்பாவியின் வாழ்க்கைதான் எப்படி, எப்படியெல்லாம் திரும்புமோ,  தூக்கியடிக்கப்படுமோ ..

**

தந்தைக்காக

அப்பனுக்காக அன்பு மகள். பின்னே யார் வருவார்? வந்துவிட்டார் வீதிக்கு. என்னப்பா விஷயம்? ஏதாவது ப்ரச்னையா? நியாயம், நீதி கேட்கவா? அதெல்லாம், ஒன்றுக்கும் வக்கில்லாப் பாமர அசடுகள் செய்யும் வேலை. போடும் கூப்பாடு. இங்கே குறிப்பிடப்படுவது படித்த ’பெரு’மக்கள், செழித்த பணக்காரர்கள் செய்யும் திருப்பணி. கேட்டால் எமது மக்களுக்காகத்தான் இந்த உழைப்பெல்லாம் என்பார்கள், அப்பாவி முகத்தோடு!

அப்பன் அப்படியிருந்தால், மகள் தெருவுக்கு வந்து ஆடவேண்டியதுதான். போடவேண்டியதுதான் குத்தாட்டம். வேறென்ன பரதநாட்டியமா ஆட முடியும்? அதற்கெல்லாம்  கலை வசப்பட்டிருக்கவேண்டாமா? அப்படியே க்ளாசிக்கலாக முன்னே வந்து ஆடினால்தான், பாடினால்தான் நமது தமிழ்ப் பெருமக்களுக்குப் புரியத்தான் புரியுமா? ரசிக்குமா? குத்தாட்ட மட்டத்தில்தானே பொதுரசனையைக் கொண்டுவந்து வைத்திருக்கின்றன நமது தரங்கெட்ட சினிமாக்கள், தொலக்காட்சிகள். பழக்கி வைத்திருக்கின்றன தமிழ்மனதைக் காலங்காலமாய்? அத்தகையக் கேவல ரசனையின் வெளிப்பாட்டுக்குத்தானே சரியான விளம்பரம் கிடைக்கும்? வீடியோ வெளிச்சம் வந்து விழும்? அதுதான் விமரிசையாக நடந்துவருகிறது தற்போது நாட்டில். இதையெல்லாம் பார்த்து, பெற்று வளர்த்தவர்கள் பெருமைப்பட்டுக் கொள்ளவேண்டியதுதான். சிலிர்த்துக்கொள்ளலாம்தான். கலைஞன் என்கிற உயர் நிலையிலிருந்து, அரசியல் கரகாட்டக்காரன் என்கிற நிலைக்கு வந்திருக்கும் அல்லது அதற்குக் கீழேயும் இறங்க ஆயத்தமாயிருக்கும் ஒருவருக்கு, இதெல்லாம் வெகுமதிதானே.

மேலும்மேலும், இத்தகைய  உன்னதக் காட்சிகள், விதம்விதமாய், சமூகச்சீரழிவை வெவ்வேறு கோணங்களில் காண்பிக்கும் விதமாய் அரங்கேறும் நாட்டில், தமிழ்நாட்டில். விவரமில்லா, விவஸ்தையில்லா பொதுஜனமும் சேர்ந்து ஆடும். பாடும். பல்லிளித்துப் பொழுதுபோக்கும். பொதுவெளியில் குப்பையெல்லாம் வைரலாகி சந்திசிரிக்கும். தமிழ், தமிழ்ப்பண்பாடு, தமிழர்தம் வாழ்வு என மிளிரும், ஒளிரும் உலகெங்கும்.

அழகெது, அசிங்கமெது, அபத்தமெது என்பதைப் பிரித்துக் காட்டும் கோடுகள் கலைந்துவிட்ட நிலையில், சுய ப்ரக்ஞை, மென்னுணர்வு போய்விட்ட மாநிலத்தில், இதையெல்லாம் பேசுவதே கூட காலவிரயம்தான். என்ன செய்வது,  பேசாமலும்  இருக்கமுடிவதில்லை.

**