ICC U-19 மகளிர் கிரிக்கெட்: இந்தியா உலக சேம்பியன்

சர்வதேச கிரிக்கெட் கௌன்சிலின் (ICC) முதல் U-19 பெண்களுக்கான உலகக்கோப்பையை இந்திய வீராங்கனைகள் வென்றுவிட்டார்கள். நேற்று (29-1-2023) தென்னாப்பிரிக்காவின் பாட்ஷெஃப்ஸ்ட்ரூமில் (Potschefstroom) நடந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டியில், இங்கிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் அனாயாசமாக வீழ்த்திவிட்டது இந்தியா. சர்வதேச வெளியில், பெண்கள் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு கிடைத்திருக்கும் முதல் உலகக்கோப்பை. மாபெரும் கௌரவம்.

19-வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியை 17-வயது ஷெஃபாலி வர்மா (Shefali Verma) அபாரமாகத் தலைமை தாங்கி நடத்திச்சென்றார். (இவர் தன் 15 வயதிலேயே இந்திய சீனியர் மகளிர் அணிக்குத் தேர்வான அதிரடி பேட்டர் (batter). ஆட்டத்தின் முக்கிய கட்டத்தில் விக்கெட் வீழ்த்தும் ஆஃப் ஸ்பின்னரும் கூட. இவருடன் இந்தியாவுக்கு உலகக்கோப்பை போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்துக்கொடுத்த இன்னுமொரு பேட்டர் ஷ்வேதா செஹ்ராவத் (Shweta Sehrawat). நேற்றைய ஃபைனலில் இவர்களின் விக்கெட்டுகளை இங்கிலாந்து சீக்கிரமே வீழ்த்திவிட்ட நிலையில், இந்தியாவுக்குத் தக்க சமயத்தில் கைகொடுத்துக் கரேயேற்றிவிட்டவர்கள் சௌம்யா திவாரி (Sowmya Tiwari), ஜி. த்ரிஷா எனும் இருவர். Cool and composed. செம ஜோடி!

டாஸ் வென்ற இந்தியா, இங்கிலாந்தை முதலில் பேட் சொன்னபோது, கம்பீரமாக பிட்ச்சில் வந்து நின்றது அவர்களின் துவக்க ஜோடி: கேப்டன் க்ரேஸ் ஸ்க்ரிவன்ஸ் (Grace Scrivens) மற்றும் லிபர்ட்டி ஹீப். இந்தியா வேகப்பந்துவீச்சாளர் டிட்டஸ் சாதுவை  (Titus Sadhu) ஒரு பக்கமும், மறுமுனையில் ஸ்பின்னர் அர்ச்சனா தேவியையும் இறக்கித் தாக்கியது. முதல் ஓவரிலேயே சாது, இங்கிலாந்தின் துவக்க ஆட்டக்காரர் ஹீப்பை காட்-அண்ட்- போல்ட் செய்துவிட்டார். அடுத்த முனையில் எளிதாகத் தெரிந்த அர்ச்சனாவின் சுழல் வீச்சைத் தூக்கி அடித்து ரன் சேர்க்கப் பார்த்தது இங்கிலாந்து. ஆனால் சுழலை சமாளிப்பதில் குழப்பத்தையும் தடுமாற்றத்தையும் மட்டுமே அது வெளிப்படுத்தியது. இந்தியப் பெண்களின் ஷார்ப் ஃபீல்டிங்கும் சேர்ந்துகொள்ள,  இங்கிலாந்தின் ஸ்கோர் முன்னேறமாட்டேன் என்று அடம்பிடித்தது.

Archana Devi takes a stunning one-handed catch

ஏழு ஓவர்களுக்குள், 22 ரன்களிலேயே இங்கிலாந்தின் முக்கிய நான்கு வீராங்கனைகளை ஆளுக்கு இரண்டாக வெளியேற்றிவிட்டார்கள் பௌலர்கள் சாதுவும், அர்ச்சனாவும். கேப்டன் ஷெஃபாலி சாதுர்யமாக இரு முனைகளிலும் மேலும் ஸ்பின்னை நுழைத்தார். பர்ஷவி சோப்ராவும் (Parshavi Chopra), மன்னத் கஷ்யப்பும் (Mannat Kashyap) நெருக்கோ நெருக்கென்று நெருக்க, தடுத்தாடவும் தெரியாமல், அடித்தாடவும் முடியாமல் தடுமாறித் தத்தளித்த இங்கிலாந்தின் இன்னிங்ஸ், 68 என்கிற சொற்ப எண்ணிக்கையில் உயிரை விட்டது. அவர்களது கோச்கள், நிர்வாகிகள் பேயறைந்ததுபோல் மைதானத்தில் உட்கார்ந்திருந்ததை காமிரா படம்பிடித்துக் காண்பித்தது. செமிஃபைனலில் வலிமை வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை வீழ்த்திய இங்கிலாந்தா இது? நம்பமுடியவில்லை.. இல்லை… இல்லை..!

Indian U 19 Women’s Cricket team lofts the World Cup !

கோப்பையைக் கைப்பற்ற இந்தியாவின் முன் 69 என்கிற இலக்கு. ஆனால் எளிதாக நினைத்துவிடக்கூடாது. இது உலகக் கோப்பை  ஃபைனல். விட்டுவிடாதே… ஜாக்ரதை! – என்று எச்சரிக்கை மணி ஒவ்வொரு இந்திய வீராங்கனையின் மனதிலும் அடித்திருக்கும். அதிரடி ஆட்டத்துக்குப் பேர்போன ஷ்வேதாவும், ஷெஃபாலியும் இந்திய பதில் ஆட்டத்தைத் துவக்கினார்கள். ஷெஃபாலி ஒரு சிக்ஸர், ஒரு பௌண்டரி. 15 ரன்னில் காலியானார். ஷ்வேதா 5 ரன்னில் அவுட் ஆகி வெளியேற, இங்கிலாந்துக்கு ஏகப்பட்ட குஷி. ஸ்பின் போட்டு இந்தியாவை வீழ்த்திவிடலாம் என பொறி வைத்தது. அடுத்ததாக ஆடவந்த பத்தாம் வகுப்புப் பையனைப்போல் காட்சி தந்த சௌம்யாவும்,  எட்டாவது வகுப்பு மாணவி ஒருத்தி கையில் பேட்டுடன் நிற்பது போன்ற தோற்றத்தில் தென்பட்ட த்ரிஷாவும், கஷுக் மொஷுக்கென்றிருந்த  இங்கிலாந்துப் பெண்களுக்கு சிரிப்பை வரவழைத்திருக்கவேண்டும். இவர்களாவது உலகக்கோப்பையை வெல்வதாவது.. என்கிற சிந்தனை அவர்களுக்குள் தலையெடுத்திருக்கலாம். ஆனால் நிலமையின் தீவிரத்தை உணர்ந்திருந்த இந்தியப் பிஞ்சுகள் அயரவில்லை. தளரவில்லை. அதிஜாக்ரதையாக இங்கிலாந்தின் பந்துவீச்சை எதிர்கொண்டார்கள். ஸ்கோர் மெல்ல சீராக உயர்ந்தது. 48 ரன் பார்ட்னர்ஷிப். வெற்றி சில ரன்களில் நிகழ்ந்துவிடும் என்கிற நிலையில் 24 ரன்னில் அவுட் ஆனார் அழகாக பேட்டிங் செய்துகொண்டிருந்த த்ரிஷா. அதே ஸ்கோரில் திறனோடு ஆடிக்கொண்டிருந்த சௌம்யா வெற்றி ரன்னை ஆஃப் சைடில் லேசாகத் தட்டிவிட்டு குதித்துக்கொண்டு மறுமுனைக்கு ஓட.. ஹேய் ! இந்திய கோச்சுகளும், அணிவீரர்களும் மைதானத்துக்குள் பாய்ந்தோடிவந்து சூழ்ந்து கொண்டனர். சில வீரர்கள் சந்தோஷச் சத்தம்போட, சிலரின் கண்களில் உணர்ச்சிப் பிரவாகம் நீராக வழிந்ததைக் காணமுடிந்தது. .

அபூர்வமான இந்த உலகக்கோப்பை ஃபைனலைப் பார்க்க இந்திய வம்சாவளியினர், இந்திய ரசிகர்கள் குழு ஒன்று ஆர்வமாக வந்திருந்தது. ஆட்ட ஆரம்பத்திலிருந்தே வேகவேகமாகக் கொடிகளை அசைத்துக்கொண்டிருந்தது. ஐ லவ் யூ இந்தியா ! – என்றெல்லாம் பேனர்கள். பெண்கள், இளைஞர்கள், வயதானவர்கள், பள்ளி மாணவ, மாணவிகளோடு, சில கருப்பினத் தென்னாப்பிரிக்கர்களையும்  அடக்கிய கதம்பக் கூட்டம் அது. இப்போது இந்தியா! இந்தியா ! – என்று சந்தோஷமாக, சத்தமாக ஆர்ப்பரித்தார்கள் அவர்கள். இந்தியாவின் ஜாவலின் த்ரோ ஒலிம்பிக் சேம்பியன் நீரஜ் சோப்ராவும் உட்கார்ந்து மேட்ச் பார்த்து கைதட்டி, இந்திய அணியை உற்சாகப்படுத்திக்கொண்டிருந்தார். மற்றபடி இங்கிலாந்தின் ரசிகர்களே ரொம்பி வழிந்தார்கள் அந்த தென்னாப்பிரிக்க மைதானத்தில்.

England Captain Grace Scrivens congratulates Indian Skipper Shefali Verma

சர்வதேசத் திறனோடு, போராட்ட, அர்ப்பணிப்பு குணங்கள் நிறைந்த பெண்களினாலும் இந்தியாவுக்கு கிரிக்கெட் உலகக்கோப்பை கிட்டிவிட்டது. இந்திய கேப்டன் ஷெஃபாலி வர்மாவின் கையில் வெற்றிக்கோப்பை வந்ததும் அந்த வீராங்கனைகளின் குதூகலம், ஆர்ப்பரிப்பு காணக்கிடைக்காதது. சேம்பியன்ஷிப்பை வென்ற இந்திய அணியில் ஒவ்வொரு வீராங்கனைக்கும் பதக்கம் ஐசிசியால் வழங்கப்பட்டது. உலகின் நம்பர் 2-ஆக முடிவான இங்கிலாந்து அணி ஏமாற்றத்துடன் தங்களுக்கான மெடல்களைக் கழுத்தில் மாட்டிக்கொண்டு, ஆட்ட முடிவை நம்பமுடியாதவர்கள் போன்று குழப்பமாக ஓரத்தில் போய் நின்றது!

அதிக ரன்களும், விக்கெட்களும் எடுத்த இங்கிலாந்தின் திறன்மிகு கேப்டன் க்ரேஸ் ஸ்க்ரிவன்ஸுக்கு உலக்கோப்பைத் தொடர் ஆட்ட நாயகி விருது வழங்கப்பட்டது. இந்திய வேகப்பந்து வீச்சாளர் டிட்டஸ் சாதுவுக்கு ஃபைனலில் ஆட்டநாயகி விருது.

India’s terrific coach (and former India fast bowler) Nooshin Al Khadeer

இந்த உலகக்கோப்பை வெற்றியில் இந்திய மகளிர் கிரிக்கெட் கோச்சும், முன்னாள் வீராங்கனையுமான நூஷின் அல் காதிரின் (Nooshin Al Khadeer) பங்களிப்பு மிகவும் முக்கியமானது. போற்றத்தகுந்தது என்கிறார் முன்னாள் மகளிர் அணி கேப்டன் மிதாலி ராஜ். கிரிக்கெட் போர்டு, இந்திய ஆண்கள் அணி வீரர்கள், மிதாலி ராஜ், ஜூலன் கோஸ்வாமி போன்ற முன்னாள் மகளிர் லெஜண்ட்கள் ஆகியோரிடமிருந்து பாராட்டு மழையில் இந்திய மகளிர் அணி இப்போது. வென்ற அணிக்கும், கோச் போன்ற பயிற்சியாளர் குழுவுக்குமாக சேர்ந்து ரூ.5 கோடியை நேற்று இரவே பரிசாக அறிவித்துவிட்டது கிரிக்கெட் போர்டு. உலகக்கோப்பையை வென்ற அணியை, புதன்கிழமை அஹமதாபாதில் நடக்கவிருக்கும், இந்தியா – நியூஸிலாந்து மூன்றாவது டி-20 போட்டியை நேரில் பார்க்கவருமாறும் அழைத்திருக்கிறது. அங்கு நிரம்பி வழியப்போகும் நரேந்திர மோதி மைதானத்தில் ரசிகர்கள் முன்னிலையில் உலக சேம்பியன்களான நமது இளசுகளை அறிமுகப்படுத்தும் முன்னெடுப்பு!

உலகிலேயே முதன் முதலாக பெண்களுக்கான டி 20 ப்ரிமியர் லீக் இந்த மார்ச்சில் இந்தியாவில்  துவங்கவிருக்கிறது. இத்தகைய சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வருடத்தில் உலகக்கோப்பையுடன் சிலிர்க்கிறார்கள் நமது இளம் பெண்கள்.. ஆஹா!

Brief scores :

England Women Under 19s: 68 all out (17.1 overs)

India Women Under19s: 69 for 3 (14 overs)

**

2 thoughts on “ICC U-19 மகளிர் கிரிக்கெட்: இந்தியா உலக சேம்பியன்

  1. ​உங்கள் வர்ணனைகளை பார்க்கும்போது, ‘அடடா.. பார்க்காமல் விட்டு விட்டோமே’ என்று தோன்றுகிறது!

    Like

    1. @ ஸ்ரீராம்:
      இந்தியாவின் லீக் மேட்ச்சுகளை டிவியில் பார்க்கமுடியவில்லை. Fancode app-ல் மட்டுமே பார்க்கும் வாய்ப்பிருந்தது. ஸ்டார் அதிர்ஷ்டவசமாக இறுதி மேட்ச்சை டெலிகாஸ்ட் செய்ததால் பார்க்கும் பாக்யம்!

      Like

Leave a comment