கர்னாடகத் தலைநகரில் தமிழ்ப் புத்தகத் திருவிழா

ஆங்காங்கே பார்க்க நேர்ந்த செய்தித் துணுக்குகள் தந்த உந்துதலில், சரி போய் பார்த்துவிடுவோம் என வந்தேன் பெங்களூரின் அல்சூரு (ஹலசூரு) ஏரிப்பக்கம் அன்று. அங்கேதான் பல வருடங்களாக இயங்கி வருகிறது, ஒரு புராணா கட்டிடத்தில் பெங்களூர் தமிழ்ச் சங்கம். அதிலே ஒரு வள்ளுவர் அரங்கம். தங்கமுலாம் பூசிய சிலையாக வீற்றிருந்த வள்ளுவர் எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டிருந்தார்.  டிசம்பர் 25-ல் ஆரம்பித்து ஜனவரி 1, 2023 வரை இந்த இடத்தில்தான் நடந்தது, அதிசயமாக,  கன்னடவெளியில் ஒரு தமிழ்ப் புத்தகத் திருவிழா.  தமிழ்ச்சங்கம், பெங்களூரிலுள்ள தமிழ் ஆசிரியர் கழகம், தமிழ்ப்பத்திரிக்கையாளர் சங்கம் ஆகியவை முதன்முதலாக இணைந்து ஏற்பாடு செய்திருந்த புத்தகக் கண்காட்சி. தாய்மொழிப் பிரியரான இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை மெனக்கெட்டு வந்து விழாவைத் துவக்கிவைத்திருக்கிறார் என்பதும் தமிழார்வலர்களுக்கு ஊக்கமளிப்பதே. பெங்களூரின் உயர்நிலைப்பள்ளி/கல்லூரி தமிழ் மாணாக்கர்களுக்கு புத்தகத்திருவிழாவில் நல்ல புத்தகங்கள் வாங்க என,  ரூ.100-க்கு ஒரு கூப்பன் என ரூ.2 லட்சத்துக்கு கூப்பன்கள் கொடுக்கப்பட்டன. மயில்சாமி அண்ணாதுரை, டில்லிபாபு போன்ற இஸ்ரோ, பாதுகாப்பு அமைச்சக விஞ்ஞானிகளும், கர்னாடக அரசில் பணிபுரியும் தமிழ் ஐஏஎஸ் அதிகாரிகள் சிலரும் சேர்ந்து வழங்கிய அன்பளிப்பு இது எனக் கேள்வி.

அல்சூரு ஏரியை வட்டமடித்து, சங்கத்தைக் கண்டுபிடித்ததும் எதிரேயே சங்கத்தின் பிரத்தியேக கார் பார்க்கிங்கும் கிடைத்தது. மகிழ்ந்தேன். உள்ளே நுழையுமுன் சங்கத்தின் இட, வலத்தில் விரியும் ஏனைய கட்டிடங்களை ஒரு க்விக் சர்ச் செய்தேன் ஒரு சின்ன ரெஸ்ட்டாரண்ட் இருந்தால் ஒரு ஃபில்ட்டர் காபிக்குப் பின் உள்ளே செல்லலாமே என்கிற எண்ணத்தில். ம்ஹூம். உள்ளே அதனை எதிர்பார்ப்பதில் தர்மம் இல்லை! சரி, புத்தகம் பார்க்க வந்தோமா, காபி ருசிக்காக வந்தோமா..

25-க்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் பங்குகொள்கின்றன என்று எங்கோ படித்திருந்தாலும், கண்டது என்னவோ 14-15 –ஐத் தான். விழா ஏற்பாட்டாளர் ஒருவரிடம் இதுபற்றிக் கேட்டேன். ’இந்த வருசந்தான் ஆரம்பிச்சிருக்கோம்.. அடுத்த வருசம் நிறைய பதிப்பகங்கள் வரும் சார்’ என்றார் நம்பிக்கை தெறிக்கும் த்வனியில்.

அரங்கில் நுழைந்தவுடன் எதிரே பிரதானமாக தரிசனம் தந்த வள்ளுவருக்கு ஒரு பௌவ்ய வணக்கம்போட்டுவிட்டு, கண் இடதுபக்கம் நோட்டம்விட ஆரம்பிக்க, முதலில் தென்பட்டது விகடன் பிரசுரம். அவர்களது டாப் செல்லர்ஸ் – பளபள பைண்டிங்கில். பொன்னியின் செல்வன் பிரதானம். மற்றும் பாபாயணம், மஹாபெரியவா, சத்குரு, சுகபோதானந்தா, நம்மாழ்வார், இந்திரா சௌந்திரராஜன், சுஜாதா, எஸ்.ராமகிருஷ்ணன் … பாப்புலர் டைட்டில்ஸ்/ பிரபல கதாசிரியர்கள் உங்களை வரவேற்பதுபோல் முகப்பு டேபிளில். ஸ்டாலின்  பின் வரிசையில் சில புத்தகங்கள் கவர்ந்தன. நா.முத்துக்குமார், வாலி, சுஜாதாவின் சில கட்டுரைத்தொகுப்புகள். கேட்டிராத புது எழுத்தாளர்கள், கவிஞர்கள். மேலும் ஃபிட்னெஸ், பிஸினெஸ், கணினி, மருத்துவம், விவசாயம், சுயமுன்னேற்றம் என வெவ்வேறு வகைமைகளில் நூல்கள்.  ஒரு பக்கத்தில் சிறிய அடுக்கலாகத் தென்பட்டது 2022 விகடன் தீபாவளி மலர். காம்பேக்ட்டாக அழகாக அச்சிடப்பட்டிருந்த மலரை லேசாகப் புரட்டியதில் பட்டுக்கோட்டை பிரபாகர், சு.வேணுகோபால் சிறுகதைகள், போகன் சங்கர், நந்தலாலா கவிதைகள், வண்ணதாசன் கட்டுரை, ஓவியர் புதுக்கோட்டை ராஜாபற்றிய (சாமி படங்கள் வரைபவர்) கட்டுரை, கிரிக்கெட் வீரர் நடராஜனின் பேட்டி.. இப்படி சில எட்டிப்பார்த்தன, ஆன்மீக, சினிமா சங்கதிகளோடு போட்டிபோட்டுத் தோற்றவாறு. ஒருவர் கவுண்ட்டரை நெருங்கி ‘டிஸ்கவுண்ட் உண்டுல்ல?’ என்று சந்தேக நிவர்த்தி செய்துகொண்டு, ஏதும் வாங்காமல் நகர்ந்தார். சில இளைஞர்கள் வாங்கினர். நானும் இரண்டு புத்தகங்கள் வாங்கிக்கொண்டேன்.

தினமலர் ஸ்டாலும் வைத்திருந்தார்கள். அன்றைய நாளிதழ், தினமலர் கேலண்டர் எனப் புரட்டினேன். ’பேப்பர் இலவசம். ஆனா கேலண்டருக்கு 20ரூ. தரணும்!’ என்றார் அவர். ’நான் எப்ப ஒங்ககிட்டே ஃப்ரீயா கேட்டேன்!’ – என்றவாறு கேலண்டருக்கு பணம் கொடுக்கப்போகையில், தினமலர் பதிப்பக நூல்கள் பின்னே அடுக்கியிருப்பதைக் கண்டு அங்கே போய் பார்த்தேன். ஒரு புத்தகமும் எடுத்துக்கொண்டேன். பணம் கொடுத்துவிட்டு வெளிவந்தேன். கொஞ்சம் மேல்தளத்திலிருந்த சூர்யன் பதிப்பகத்தில் அடுத்ததாக நுழைந்து பார்க்க ஆரம்பித்தபோது, ஒருவர் காதருகில் நெருங்கி ‘நம்ம தினகரன் பதிப்பகம் சார்!’ என்றது ஆச்சர்யம் தந்தது. தெரியும் என்பதாகத் தலையாட்டிவிட்டு மேலும் பார்வையிட்டேன். அசோகமித்திரனின் அந்தக்கால மெட்ராஸ்பற்றிய தொடர் ஒன்று குங்குமத்தில் வெளியாகி, பின்னர் அது சூரியனால் பதிப்பித்து வெளியிடப்பட்டது நினைவுக்கு வர, தேடினேன். தென்படவில்லை. அசோகமித்திரனின் எந்த நூலும் அங்கில்லை என்பது தெரியவர, சோர்வானேன். ஒரு ஸ்டாலில் ஜெயகாந்தன், அகிலன், நா.பா. பார்த்ததாக நினைவு. கு.ப.ரா., தி.ஜா, எம்.வி.வி., தஞ்சை ப்ரகாஷ், ஆத்மாநாம் கிடைத்தால் வாங்கலாம் என நினைத்திருந்தேன். அவர்களுக்கெல்லாம் அல்சூரு வர வழி தெரியவில்லைபோலும்.

’முற்போக்கு’ பதிப்பகம் ஒன்றில் அதற்கான இடதுசாரி கொள்கைசார் புத்தகங்கள். பஷாரத் எனும் பதிப்பகம் இஸ்லாமியக் கருத்துகள், சிந்தனை சார்ந்த நூல்களை வரிசையாக வைத்திருந்தது.

கேள்விப்பட்டிராத சில பதிப்பகங்களின் ஸ்டால்களுக்குள்ளும் போனேன். வெளியே வந்தேன். குறிப்பிட்டுச் சொல்லும்படி ஏதுமில்லை.

ஒவ்வொரு பாப்புலர் பதிப்பகத்திலும் கல்கி பிரதானமாக ஒளிர்ந்தார். மணிரத்னத்தின் PS-1  எஃபெக்ட்டோ? சுஜாதாவையே பின்னுக்குத் தள்ளிவிட்டாரே மனுஷன்! அங்கே என்ன, குண்டுகுண்டாக.. பொன்னியின் செல்வன் ஆங்கில மொழியாக்கம் (மொழியாக்கம் டாக்டர்…… எம்.ஏ) என்றிருந்தது. படித்துப்பார்க்கச் சொன்னாள் கூட வந்திருந்த மகள். ஆங்கில வர்ஷனையாவது வாசிப்போம் என ஆர்வம்போலும். ஒரு பக்கத்தை திறந்து உருட்டினேன் கண்களை. ம்ஹூம்… ஹைஸ்கூல் இங்கிலீஷ். ஒரு சரித்திர நாவலை உணர்வு தாக்காது படிப்பதில் அர்த்தமில்லை. சரிவராது என்றேன் அவளிடம். மேலும் பார்த்ததில், பொன்னியின் செல்வனின் இன்னொரு ஆங்கில புத்தக வரிசை கண்ணில்பட்டது. மொழியாக்கம் வரலொட்டி ரெங்கசாமி. அட.. ஒரு வால்யூமை எடுத்து புரட்டினேன். Pleasant surprise! மொழியாக்கம் நன்றாக வந்திருப்பதாய்த் தோன்றியது. (வரலொட்டி சில ஆங்கிலப் புத்தகங்களும் எழுதியிருப்பது தெரிந்தது). ஒரு வால்யூம் வாங்கிப் படிக்க மகள் ஆசைப்பட, விற்பவரிடம் ’எவ்வளவு தரணும் இந்த வால்யூமுக்கு? என்று வினவினேன். ‘அஞ்சு உள்ள செட் சார்!’ என்றார். ’அதுசரி, ஒன்னு மட்டும் எடுத்துக்கறேன்’ என்றேன். ‘அஞ்சஞ்சா, செட்டாத்தான் விக்கிறோம். எல்லாம் சேத்துப் படிச்சாதான் சார் கதயே புரியும்!’  விளக்குகிற மூடில் அவர். வாங்குகிற மூட் போய்விட்டது. நகர்ந்தோம்.

அடுத்த ஸ்டாலொன்றில் நிற்கையில், ஆ.. யவனராணி என்றார் குதூகலத்தில் ஒருவர். கடல்புறா கவர்ந்தது அவர்கூடச் சென்றவரை. சாண்டில்ய பக்தர்கள்! மன்னன் மகள், மலைவாசல், ராஜபேரிகை, ஜலதீபம் என அவரது நாவல்கள் நல்ல பேப்பர்/பைண்டிங்கில், பளபளப்பாக ஒரு ஸ்டாலில் முன்னே வைக்கப்பட்டிருந்தன. வேறு தலைப்புகள் பல பின் வரிசைகளில் ஒழுங்காக அமர்ந்திருந்தன.

‘டிஸ்கவுண்ட் கொடுப்பீங்கல்ல!’ என்ற சத்தம் கேட்டுத் திரும்பினேன். ஆரம்பத்தில் பார்த்த அதே ஆசாமி கௌண்ட்டரில், வெறுங்கையுடன். சிலருக்கு இப்படியெல்லாம்தான் பொழுது போகிறது போலிருக்கிறது.  இதற்கு மாற்றாக, இரண்டு முதிய பெண்கள், மிகுந்த ஆர்வத்தோடு ஒவ்வொரு ஸ்டாலாக நகர்ந்து புத்தகங்களைப் பார்வையிட்டார்கள். வாங்கினார்கள்.  இளைஞர்கள் சிலரும் தேர்ந்தெடுத்து சில புத்தகங்களை வாங்கிக்கொண்ட மகிழ்ச்சியில் பேசிக்கொண்டே சென்றதைக் கவனித்தேன்.

அங்கே.. கூடவந்திருந்த என் மகள் எதையோ அந்த ஸ்டாலில் ஆர்வமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறாளே.. தமிழ் படிக்கத் தெரியாதே அவளுக்கு என்கிற சிந்தனையில் அங்கு சென்று பார்த்தால்.. அட, இந்தியா டுடேயா இங்கே! அகதா க்றிஸ்ட்டீ, ஓ.ஹென்றி, ஜார்ஜ் ஆர்வெல், மரியோ பூஸோ, ஹெர்மன் ஹெஸ், ஜோனதன் ஸ்விஃப்ட், ஜோஸப் ஹெல்லர், பாலோ கொயெல்ஹோ போன்ற அயல்நாட்டு எழுத்தாளர்களோடு நம்ம நாட்டு கமலாதாஸ், ஆர்.கே.நாராயண், வாஸந்தி, அமர்த்யா சென், ஓஷோ, அமிஷ் போன்றோரின் புத்தகங்களும். என்னது,  வாஸந்தி ஆங்கிலத்திலுமா எழுதியிருக்கிறார்? ஆமா! புத்தகத் தலைப்பு: Karunanidhi. தமிழ்நிலம் தாண்டிய ஏனைய இந்தியவெளி மக்களுக்கும் சில விஷயங்களைச் சொல்லவேண்டுமே. வழக்கமான சில பிரபல தலைப்புகளைத் தாண்டி இப்படியும் சில:  Rebel Sultans, The Seven Husbands, A Thousand Splendid Suns, The First Muslim, Nothing More To Tell, Hating Game, The Love Hypothesis, Badass Habits, The Ikigai Journey..

அவ்வளவுதான். முடிந்தது. வந்திருந்தோர் சிலர்தான் நான் போயிருந்த சமயத்தில் –காலை 11:20 – 13:00.  மாலை நேரங்களிலும், விடுமுறை நாட்களிலும் நிறையப்பேர் வருகை தந்திருப்பதாகக் கேள்விப்பட்டேன். அல்சூர் தமிழ்ப் புத்தகக் கண்காட்சி அளவில் சிறியதுதான். எனினும், பெங்களூர் தமிழர்களின் பாராட்டப்படவேண்டிய நல்ல முயற்சி. இனி வரும் வருடங்களில் விமரிசையாக நடக்கட்டும்.

வெளியே வருகையில் இரண்டு மாமாக்கள், தாங்கள் வாங்கிய சில புத்தகங்கள் அடங்கிய சிறு பைகளுடன் பக்கத்துப் பொட்டிக்கடையில் காபி வாங்கிக்கொண்டு சாலையைக் கடந்தார்கள். ஏரிக்கரையை ஒட்டிய பாதையில் ஏரியைப் பார்த்துக்கொண்டு , ஏகாந்தமாய் உணர்ந்தவாறு காபியை ரசிப்பதாய்த் தோன்றியது. என் காரைக் கூப்பிட்டேன் ப்ரூக்ஃபீல்ட் திரும்ப. காரில் ஏறுகையில் நினைவில் தட்டியது: ஸ்டாலொன்றில் வரிசையின் இடையிலே எட்டிப் பார்த்த ஒரு புத்தகம். தலைப்பில் ’சுதந்திரம் என்பது சுக்கா, மிளகா’ என்று காரமாகக் கேட்டது. தெரியலியே… உப்பா, புளியா என்று சாதாரணமாகக் கேட்டிருந்தால் ஒருவேளை அங்கேயே பதில் சொல்லியிருக்கலாம்…

சரி.. வீடுபோய் சாவகாசமாக வாசிப்போம் வாங்கிய புத்தகங்களை: நினைவு நாடாக்கள் -வாலி, அணிலாடும் முன்றில்-நா.முத்துக்குமார், பரிபூர்ண அருளாளன் -ஆர்.வெங்கடேஷ்.

**

8 thoughts on “கர்னாடகத் தலைநகரில் தமிழ்ப் புத்தகத் திருவிழா

  1. கடைசி வரை டிஸ்கவுண்ட் எவ்வளவுன்னு சொல்லலையே. நான் 25 சதம் டிஸ்கவுண்ட் இருந்தாலொழிய வாங்குவதில்லை என்று இருக்கிறேன். பின்ன…ஒவ்வொரு புத்தகமும் கொள்ளை விலையில் விற்றால்?

    Liked by 1 person

    1. @ நெல்லைத் தமிழன்:

      டிஸ்கௌண்ட் 10% தான் கொடுத்தார்கள் நான் கவனித்தவரை பெரும்பாலானவற்றில். நான் வாங்கிய புத்தகங்களுக்கும் அதுவேதான். பாப்புலர் டைட்டில்களுக்கு அதிகம் விலைவைத்து வாசகர்களை உருவுகிறன பதிப்பகங்கள் என்பது உண்மைதான்.

      நான் வாங்கிய புத்தகங்கள் – நினைவு நாடாக்கள் ரூ.240. அணிலாடும் முன்றில் ரூ.200. பரிபூரண அருளாளன் ரூ. 100
      கடைசி இரண்டும் சிறு புத்தகங்கள்தான்.

      குறிப்பாக முதலிரண்டும், நல்ல ப்ரிண்ட், அழகான ஓவியங்கள் அவற்றினுள் என்பதில் திருப்தி.

      Like

  2. தினமலரில் அந்துமணியின் பார்த்து கேட்டது, படித்தது ஹாட் சேல்ஸ்.​ எங்குமே பத்து சதவிகிதம்தான் டிஸ்கௌண்ட் தருவார்கள். சில பழைய புத்தகங்களுக்கு (சாகித்ய அகாடமி போன்ற ஸ்டால்களில் ) கொஞ்சம் கூட தள்ளுபடி கிடைக்கும்.

    Like

    1. @ ஸ்ரீராம்:

      புத்தகங்கள் விலை ஏறிவிட்டதுதான். அதற்காக தள்ளுபடி எவ்வளவு கிடைக்கும் என்று கணக்குப்போட்டுக்கொண்டு புத்தகங்களை அணுகமுடாது. பிடித்தால் வாங்கிவிடவேண்டியதுதான். முதலில், தேடும் படைப்பாளியின் புத்தகம் கிடைக்கவேண்டுமே…

      Like

  3. அட! பங்களூரிலும் புத்தகத் திருவிழாவா…ம்ம் முடிந்து விட்டது போல…ஆனால் நல்ல விஷயம். அடுத்த வருஷமும் போடுவாங்களே அப்ப சென்று வர முயற்சி செய்ய வேண்டும்.

    நீங்களும் என் கேஸா…நானும் எங்கு சென்றாலும் அருகில் காஃபி கிடைக்குமான்னு பார்க்கும் ரகம்!!!!!!!!

    கீதா

    Like

    1. @ கீதா: எத்தனைதான் வீட்டில் காபி குடிச்சாலும், வெளியே போனால் அங்கே குடிப்பதில் ஒரு சுகம் ! டெல்லியின் கனாட்ப்ளேசில் ஆக்ஸ்ஃபர்ட் புக் ஷாப் பிடிக்கும். புத்தகத்தைப் புரட்டிக்கொண்டே காபியும் அருந்தலாம். ரசனையுள்ள ஜீவன்களால் நடத்தப்படுவது!

      Like

  4. ஏகாந்தன் அண்ணா உங்கள் புத்தகங்களைக் கூட இங்கு புத்தகக் கண்காட்சியில் சேர்த்திருக்கலாமோ?

    கீதா

    Liked by 1 person

Leave a comment