சும்மா..  ஒரு சிந்தனை

போன வருடத்தின் நள்ளிரவில் ஆரம்பித்து இந்த ஆண்டின் அதிகாலையிலும் வேகமெடுத்துக்கொண்டிருந்த வாழ்த்துக்களுக்கு ஒருவழியாக பதிலளித்துவிட்டு, காலைக் காப்பியை அருந்திக்கொண்டே டேபிளில் கிடந்த புதிதாக வாங்கிய புத்தகத்தைப் புரட்டுகையில் பட்டது கண்ணில், பொட்டிலே அடித்ததுபோல் ஒரு கவிதை. பட்டுக்கோட்டையின் அந்தக்கால அங்கலாய்ப்பு:

தேனாறு பாயுது

செங்கதிரும் சாயுது

ஆனாலும் ஏழை வயிறு

காயுது

காலங்காலமாக இது தொடரத்தான் செய்யுமோ என்கிற பதற்றம் பாழும் மனதில் பொங்குகிறது. ஏழையில்லா நாடு எங்கிருக்கிறது இந்த அவனியில்? பிச்சைக்காரன், பஞ்சை, பராரி என்றெல்லாம் வேண்டுமானால் அவன் அழைக்கப்படாது போகலாம்; ஹோம்லெஸ், ஜாப்லெஸ் என்று வேறுவேறாக, சில சமூகங்களில் கொஞ்சம் அட்ராக்ட்டிவாக வர்ணிக்கப்படலாம். ஆனால் இன்னும் அவன் இருக்கிறான்தானே.. வறுமையிலேயே பழசாகிக் கந்தலாகிப்போன அவனுக்கு புத்தாண்டாவது, பழைய ஆண்டாவது? எந்த ஆண்டு வந்தாலென்ன, எப்படித்தான் போனாலென்ன? மாறிவிடுமா அவனுலகம்? தேறிவிடுமா அவனது வாழ்க்கை?

தர்மசிந்தனையை விடுங்கள், சுயசிந்தனையே வற்றிப்போன காலகட்டத்தில் வாழ்கிறோம்போலிருக்கிறதே. எல்லாவற்றையும் எந்த உணர்வுமின்றி ஃபார்வர்டு பண்ணிப்பண்ணிப் பழகிப்போய், நாமும் இப்படியே ஒருநாள் ‘ஃபார்வர்டு’ செய்யப்பட்டுவிடுவோம் என்பது புரியாமல் நடக்கிறானே மனிதன்?  

யோசித்துக்கொண்டே நடந்தவன் சாலையோரச் சிறுகடையில் காப்பி வாங்கிக்கொண்டு, முன்னே இருந்த மரத்தடியில் – சுற்றிக்கட்டியிருந்தார்கள் ஒரு வட்ட மேடை – உட்கார்ந்தேன். சில நிமிடங்களில் அவள் வந்தாள் அங்கே, கையில் பிடிக்கப்பட்டிருந்த காளைமாட்டுடன். பூம்பூம்பூம் மாட்டுக்காரி. பதின்மவயதுப் பெண். கடையில் ஏதேதோ வாங்கிக்கொண்டிருந்தவர்களை வேடிக்கைப்பார்த்தவாறு நின்றிருந்தாள். இவளுக்கு ஒரு டீ வாங்கிக்கொடுப்போமா என எண்ணம் எழுந்தவேளையில், ஒரு யமஹா அங்கே திரும்பி நின்றது. யுவதியுடன் இறங்கிய யுவன். கடைக்குள் சென்றான். யமஹா அழகி – கன்னடத்துக்கிளியென்றோ, தெலுங்குத் தேவதையென்றோ கற்பனையில் வைப்போம் –  அந்த ’மாட்டு’ பெண்ணைப் பார்த்தாள். அவள் கோலத்தை இவள் கண்கள் வேகமாக ஆய்ந்தன.  திரும்பிய வாலிபன் யமஹாவின் கையில் ஒரு பெப்ஸியைத் திணித்துவிட்டு மீண்டும் கௌண்டருக்கு சென்றான். இவள் உடனே அதை பூம்பூம்பின் கையில் கொடுத்துவிட,  சற்றும் இதை எதிர்பார்த்திராத அவள் திகைத்தாள். குடி என்பதாக இவள் சைகை செய்துவிட்டு, ‘ஏய்.. get me one more..!’ என்று அவனுக்கு உத்தரவிட்டுவிட்டு தலையைக் கோதியவாறு நின்றுகொண்டிருந்தாள்.  

ஆச்சர்யமான சந்தோஷத்தில் நான்.  இத்தகைய இளைய தலைமுறையிடம்தானே இந்த உலகம் செல்கிறது? எந்த ஆபத்தும் இல்லை இதற்கு என்றது மனது.

**

4 thoughts on “சும்மா..  ஒரு சிந்தனை

    1. ஏகாந்தன் அண்ணா ஒரு நிகழ்வை நீங்கள் விவரித்த விதம் கதை போன்று…மிக அழகு.

      இப்போதைய இளைஞர்கள் பலர் நல்லதும் செய்கிறார்கள் அவர்களின் தோற்றத்தை வைத்து எடை போடுவது சரியல்ல என்றும் எனக்குத் தோன்றும்.

      கீதா

      Liked by 1 person

      1. @ கீதா: ஆமாம்.

        தோற்றத்தில் கரடு முரடான தாடி, மீசை அல்லது ஆபத்தான கேச வண்ணங்கள், ஆடைக் கிழிசல்கள்! ஆனால் மனமென்பது இன்னும் வெள்ளைதானோ…

        Like

Leave a comment