கோஹ்லிக்கு சதம். இந்தியாவுக்கு?

ஓவராக சிந்தித்து, திட்டம் தீட்டி, என்னென்னவோ செய்து ஆசிய கோப்பையைத் தவறவிட்டுவிட்டது ராஹுல் திராவிட் / ரோஹித் தலைமையிலான இந்தியா. க்ரூப் 4-ல், ஸ்ரீலங்காவிடம் தோற்றவுடனேயே இந்திய அணியின் வீடு திரும்பலுக்கான ஏர் டிக்கெட்டுகள் புக் செய்யப்பட்டுவிட்டனதான். இருந்தாலும் பாக்கி இருக்கும் ஒரு மேட்ச்சை ஆடித்தானே ஆகவேண்டும். ஐசிசி விடாதே! சரியாக முயற்சிக்கப்படாத வீரர்களுக்கு மேலும் வாய்ப்புகொடுக்கலாம் என்கிற சிந்தனையில் (!), கேப்டன் ரோஹித், பாண்ட்யா, பிஷ்னோய் போன்றவர்கள் விலக, மீதமுள்ள இந்திய அணி இறங்கியது துணைக்கேப்டன் ராஹுல் தலைமையில், ஆஃப்கானிஸ்தானுக்கெதிராக.

Coach Dravid, Captain Rohit

ஆசிய கோப்பை போட்டிகளில் ஆடிய இந்திய அணித் தேர்வினை கூர்ந்து கவனித்தால் ஒன்று புரியும். ஒரே ஒரு வீரரைத் தவிர கிட்டத்தட்ட எல்லோரும் உள்ளே.. வெளியே ஆட்டம் ஆடிக்கொண்டிருந்தார்கள். அதாவது ஆடவைக்கப்பட்டார்கள். தான் நீக்கப்படுவோம் என்கிற கவலையோ, பயமோ இல்லாமல் எல்லா மேட்ச்சையும் வரிசையாக ஆனந்தமாக ஆடிய ஒரே வீரர் விராட் கோஹ்லி. ஃபார்மில் இல்லாத கோஹ்லி அணியில் ஏன் என்கிற அளவுக்கு ஆசிய கோப்பையின் ஆரம்பத்தில் எரிச்சலூட்டியது அவரது தேர்வு. ஆயினும் இந்திய அணி அவரை மட்டும் ஆடு பார்க்கலாம்.. ஆடு என ஆடவைத்தது. சரியாக அவர் ஆடாவிட்டாலும் அழகுபார்க்கும் மனநிலையில் இருந்தது நிர்வாகம். அணியின் வெற்றிவாய்ப்பெல்லாம் முக்கியம் அல்ல, கோஹ்லி என்கிற கிரிக்கெட் ஸ்டாரை, கார்ப்பரேட் செல்லக்குழந்தையை எப்படியாவது ஃபார்முக்குக் கொண்டுவந்துவிடவேண்டும் என்கிற முயற்சியில் முனைப்பு காட்டிக்கொண்டிருந்த  ராஹுல் திராவிட் & கோ! தைர்யம் கொடுக்கப்பட்ட நிலையில், கோஹ்லியும் சஞ்சலமின்றி ஆடி ஆடி, ரன்னும் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து, இறுதிவாய்ப்பை இழந்துவிட்ட இந்தியாவின் கடைசி போட்டியில் சதம் அடித்துவிட்டார். எண்ணற்ற வாய்ப்புகளை விழுங்கி, 1000 நாட்களுக்கப்புறம் ஒரு சதம். வாயெல்லாம் பல் அவருக்கு. ஆளில்லா ஸ்டேடியத்தில் இந்திய ரிசர்வ் வீரர்கள், கோச், மற்றும் இன்னபிறக்கள் கைதட்டி சிரித்துக்கொண்டிருந்தன நேற்று இரவு(8-9-22). வாழ்த்துகள்.. வாழ்த்துகள்! நாலா திசையிலிருந்தும் வந்துவிழும் வாழ்த்துகள்..

Chetan Sharma, Chief Selector, India

இந்தியா நடப்பு சேம்பியனாக இருக்கும் ஆசிய கிரிக்கெட் சேம்பியன்ஷிப் போட்டிகள் எக்கேடுகெட்டாவது போகட்டும். கோப்பையை பாகிஸ்தான் வெல்லட்டும், இல்லை, லங்கா லவட்டிச் செல்லட்டும். நமக்கு நம்ம கோஹ்லி ஃபார்முக்கு வந்தாச்சு..! இதுதான் இந்திய கிரிக்கெட் போர்டின் குறிக்கோள் போலத் தெரிகிறது. வேறெந்த நாட்டிலும் 3 வருடமாக ஃபார்மில் இல்லாத ஒரு சீனியர் ப்ளேயருக்கு இப்படி ஒரு அதீத முக்கியத்துவம், (இளம் வீரர்களைத் தடுத்த நிலையில்-at the cost of young, promising players) தொடர் வாய்ப்புகள்  தரமாட்டார்கள். இந்த காலகட்டத்தில் இரண்டு இளம் வீரர்களை அவரிடத்தில் தயார் செய்து விட்டிருப்பார்கள். அத்தகைய முனைப்புதான் அணியின் எதிர்காலம் குறித்து ஒரு நாட்டின் கிரிக்கெட் நிர்வாகத்திற்கு இருக்கவேண்டிய தொலைநோக்குப் பார்வை. இந்திய விளையாட்டு நிர்வாகிகளுக்கு நாடு, அணி, வெற்றிவாய்ப்பு எல்லாம் ஒரு பொருட்டல்ல. ஹீரோ! சூப்பர் ஸ்டார்! புகழ்.. இப்படி ஹீரோ வர்ஷிப் செய்துகொண்டு, கதைபேசியே காலம் ஓட்டுபவர்கள் இந்தியர்கள். நினைத்து வருந்த வேண்டிய விஷயமிது.

கோஹ்லி எப்படியோ ஃபார்முக்கு திரும்பியது நல்லதாப்போச்சு என முடியக்கூடும். ஆஸ்திரேலியாவில் நடக்கவிருக்கும் உலகக்கோப்பை போட்ட்டிகளில் அவர் விளாசக்கூடும்தான். அப்படி நடந்தால் அணிக்கு நல்லது. ஆனால் ஒரு ஆளை நம்பி உலகக்கோப்பை கைமாறிவிடாது! கிரிக்கெட் ஒரு ’அணி விளையாட்டு’. ஒருத்தர் மட்டுமே ஃபார்மில் இருந்தால் போதும், உலக சேம்பியனாகிவிடலாம் என ஆட்டம் காட்டும் விளையாட்டல்ல கிரிக்கெட். இதனை நமது கிரிக்கெட் போர்டு நிர்வாகிகள் இனிமேலாவது தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும். ஒருத்தரையே பிடித்துக்கொண்டு தொங்கிக்கொண்டிராமல், எதிர்கால ஸ்டார்களை வளர்த்து, உருவாக்குவதில் கவனம் செலுத்தவேண்டும்.

**   

3 thoughts on “கோஹ்லிக்கு சதம். இந்தியாவுக்கு?

  1. நம் இந்திய கிரிக்கெட் ஸ்பான்ஸர்கள், பணம் பணம் மேலும் பணம், ஐபிஎல் என்று நடப்பது. கோஹ்லியை எப்போதோ அணியைவிட்டுத் தூக்கியிருந்திருக்கவேண்டும்…. ஆனால் பிசிசிஐ அடிமை போல் பார்த்துக்கொண்டிருந்தது. பொதுமக்களே கட்டையைத் தூக்கி அடிப்பார்கள் என்ற நிலை வந்தபோதுதான், காப்டன் பதவியிலிருந்து எடுக்கப்பட்டார். இப்போ கே எல் ராகுல் மட்டும் என்ன அடித்தார்? துணைக் கேப்டன் என்றால் மாற்றக்கூடாது என்று சட்டமா?

    கோஹ்லி இனிமேல் அடித்தால் நல்லதுதான். ரொம்ப வயதாகிவிடவில்லை. இதில் கொடுமை என்னன்னா, நல்ல ஃபார்மில் இருக்கும் இளம் வீரர்களுக்கும் வாய்ப்பு கொடுப்பதில்லை.

    அதீத கர்வத்துக்கு மூன்று வருடங்கள் இயற்கை அவரை கர்வபங்கம் செய்தது என்று நினைத்துக்கொள்ள வேண்டியதுதான்.

    Liked by 1 person

  2. @ ஸ்ரீராம், @ நெல்லைத்தமிழன்:

    கோஹ்லி விஷயத்தில் போர்டு இப்படி வழிந்திருப்பது, கதவைத்தட்டும் இளம் வீரர்களுக்கு உத்வேகம் தராது. அயற்சியைத் தரும். பயம் கொடுக்கும். ஒருசில மேட்ச்சுகளே ஆடியிருக்கும் நல்ல வீரர்கள் சிலர் நாம் கோஹ்லியல்ல, நாம் ஒரு மேட்ச்சில் விழுந்தாலும் தூக்கி எறிந்துவிடுவார்கள் என்கிற பதற்றத்தில் இருப்பார்கள்..

    கோஹ்லியின் நக்ராஸ் , அதீத சேஷ்டைகள், ஆட்டபாட்டங்கள் இன்னும் ஓவராகும்..

    Like

Leave a comment