லட்டு கோபால் !

ஜென்மாஷ்டமி. ஸ்ரீஜெயந்தி. கிருஷ்ண பகவானின் அவதார தினம். இப்படி பல அலங்காரமொழிகள் இந்த நாளுக்கு. சீடையும், முறுக்கும் இன்னபிறவும் வாயில் வரிசையாக நொறுங்கும் மாலைப்பொழுது ஒரு இனிய கனவுபோல் வருகிறது.. நிஜமாய். மனதில் சதா உலவும் பால்யத்தின் கொண்டாட்ட அனுபவங்கள்.

கிருஷ்ணனுக்கு என்னென்ன பிடிக்கும் என்றெல்லாம் அந்தக் காலத்திலே கற்பனை செய்தவர்கள்,  தங்களுக்குப் பிடித்த பட்சணங்களை அப்படியே நைஸாக சேர்த்திருப்பார்கள் லிஸ்ட்டில்! வருஷத்தில் ஒருநாளாவது வாய்க்கு ருசியாகக் கிருஷ்ணனின் புண்யத்தில் கரகர, மொறுமொறுவென்று கிடைக்கட்டுமே என்கிற உன்னத எண்ணமே காரணம். கிருஷ்ணனின் பெயரைச் சொன்னால் பெண்கள் வேகவேகமாக பட்சணத் தயாரிப்பில் இறங்கிவிடுவார்கள்! உப்புச்சீடை, வெல்லச் சீடை, முறுக்கு இத்யாதி தின்பண்டங்களில் குழந்தைகளுக்கு பேரிஷ்டம்தான். அவர்களைவிடவும் தாத்தா, பாட்டிகளுக்குத்தான் இந்த சங்கதிகளில் மோகம் அதிகமோ எனவும் தோன்றுகிறது. ஆனால் இப்போதெல்லாம், தாத்தா பாட்டிகளைப் பிடித்து எங்கெங்கோ அடைத்துவிட்டு, கேர், ஹோம் என்றெல்லாம் அதற்கு நாமகரணம் சூட்டி, சமாதானம் சொல்கிறார்களே சிலர். அந்தக் கோகுல கிருஷ்ணனுக்கு இதெல்லாம் தெரியாமலாயிருக்கும்.. இருந்தும், புல்லாங்குழலில் பிஸி !

சில நாட்களாகவே வீட்டில் தீவிரமெடுத்த டிஸ்கஷன், ஸ்ரீஜெயந்திக்கு என்னென்ன பட்சணம் செய்யலாம்.. போனவாரம் பெருமாள் கோவிலுக்குப் போயிருந்தபோது, பெங்களூர் ப்ரூக்ஃபீல்டில் உள்ள இஸ்கான் (ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா) அமைப்பினர், வண்ணக்காகிதத்தை நீட்டினார்கள். ஜன்மாஷ்டமி அன்று இரவு ஆரத்தி உண்டு. பக்தகோடிகள் கிருஷ்ணனுக்கு உகந்த பிரசாதமாக எதை செய்துகொண்டுவந்து கொடுத்தாலும், கிருஷ்ணகானம் பாடி, நைவேத்யம் செய்து அனைவருக்கும் பிரசாதமாகத் தருவோம். செய்து வாருங்கள் என்பது பக்தி அழைப்பு. அதற்கு சர்க்கரைப் பொங்கல், முறுக்கு செய்து தரலாம் எனக்  காலையில் முடிவு. 

இது அப்படியிருக்க, காலையில் நெட்டில் சேதிகளைப் பார்க்கலாம் என லேப்டாப்பை ஆன்செய்தால், கிரிக்கெட், அரசியல் என வழக்கம்போல் தேடுகிறது கண். முன்னால் வந்து ஆடுவதோ மயிலிறகும். புல்லாங்குழலும். ஓ.. கிருஷ்ண ஜெயந்தியா எனப் பார்க்க,  ஒரு கட்டுரை  குறிப்பாக நாலு ராசிக்காரர்களைப் பரவசப்படுத்தப் பார்க்கிறது! பகவான் கிருஷ்ணனின் அனுக்ரஹம், கருணை லோகத்தில் அனைவருக்குமானது என்பதில் என்ன சந்தேகம்? இருந்தாலும், அவனுடைய விசேஷக் கவனிப்பு இந்த நாலு ராசிக்காரர்களின் மீதுதானாமே.. அட! ஆங்கிலப் பத்திரிக்கை ஆர்ட்டிக்கிள் ஆனதால், ராசி சக்கரத்திலிருந்து (பிறப்பின் ஆங்கில மாதக் கணக்குப்படி) இது சொல்கிறது: குறிப்பிடப்பட்ட ராசிகள் (Zodiac signs) நான்கு: Taurus ரிஷபம் (ஏப்ரல் 20- மே 20), Cancer கடகம் (ஜூன் 21-ஜூலை 22), Leo சிம்மம் (ஜூலை 23-ஆகஸ்டு 22) Libra துலாம் (செப்டம்பர் 23-அக்டோபர் 22). இந்த ராசிக்காரர்களின் மேல் ஸ்ரீகிருஷ்ணனின்  கருணைக்கண் பட்டவாறே இருக்குமாதலால், அவர்களுக்கு வாழ்வில் பலவாறான வெற்றிகளும், சந்தோஷமும் உண்டாகும் என்கிறது பொதுவாக. குறிப்பாக Cancer (கடகம்) காரர்கள் விஷயத்தில் ஏதோ வித்தியாசமாகச் சொல்கிறதே. என்ன!  அவர்கள் எதைச் செய்தாலும் இறுதியில் வெற்றிபெறுவார்கள் என்பதோடு நிறுத்தாமல் மேலும்: ஜென்மத்தின் முடிவில் முக்திநிலையை அடையும் பாக்யத்தை அவர்களுக்கு அருள்கிறான் கிருஷ்ணன் என்கிறது. இப்படி ஒரு விசேஷத்தை வேறெங்கும் காணவில்லையே. சின்னக்கிருஷ்ணா.. செல்லக்கிருஷ்ணா! உண்மைதானே இது? விளையாட்டில்லையே!

ஆகையால் விசேஷமாக இந்த நாலு ராசிக்காரர்கள் கிருஷ்ண மனநிலையில் எப்போதுமிருக்கவேண்டும். (இதைத்தான் Krishna Consciousness என்கிறார் ஸ்வாமி பிரபுபாதா. ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா என உலகெங்கும் ஆடிப்பாடிப் பரவும் ISKCON அமைப்பின் ஸ்தாபகர்). அவனை தினம் தியானித்து, வணங்கிவந்தால் கைமேல் பலன், மனதுக்கு நிம்மதி என பக்தி உரை. அதை வாசிக்கையில் கண்ணில்பட்ட மேலும் இரண்டு வார்த்தைகள் காலைநேரத்தில் புன்னகையை வரவழைத்தன: லட்டு கோபாலையும், ராதா ராணியையும் தினம்தினம் கும்பிட்டு மகிழ்வோம்!

லட்டுதான் நீ! அதற்காக எடுத்து வாயில் போட்டுக்கொள்ளமுடியுமா என்ன! உன் வாய்க்குள்தான் உலகமே இருப்பதைக் கண்டாளே உன் அன்னை..

ராதே..கிருஷ்ணா !

**

9 thoughts on “லட்டு கோபால் !

  1. @ துரை செல்வராஜு:

    சரிதான். அவனுக்குள் அது. அதற்குள் நாம். எதற்கினி கவலை!

    ஸ்ரீஜெயந்தி வாழ்த்துகள் !

    Like

  2. ஸ்ரீ ஜெயந்தி இன்றா, நாளையா, ஞாயிறா என்பதில்  விவாதம் நடக்கிறது பேஸ்புக்கில்.  என்று செய்தாலும் சீடை சீடைதான் லட்டு லட்டுதான்!

    Liked by 1 person

    1. @ sriram:

      எங்களுக்கு நாளைதான். வட இந்தியா இன்று பிரமாதமாகக் கொண்டாடுகிறது. இங்கே பெங்களூர் ப்ரூக்ஃபீல்டில் இஸ்கான் ஜன்மாஷ்டமி கொண்டாட்டத்தில் மாலை கலந்துகொண்டேன். நல்ல கூட்டம். போலீஸ் பந்தோபஸ்து!

      Like

      1. //கிருஷ்ணனுக்கு என்னென்ன பிடிக்கும் என்றெல்லாம் அந்தக் காலத்திலே கற்பனை செய்தவர்கள், தங்களுக்குப் பிடித்த பட்சணங்களை அப்படியே நைஸாக சேர்த்திருப்பார்கள் லிஸ்ட்டில்! //

        ஹாஹாஹாஹா இதை நானும் அடிக்கடி நினைப்பதுண்டு சொல்வதுண்டு!!!

        சரி கடைசில சர்க்கரைப் பொங்கலும் முறுக்கும் செஞ்சீங்களா இல்லையா? கண்ணா லட்டு திங்க ஆசையான்னு எங்களூக்கும் லட்டு கொடுத்திட்டீங்களா!!! ஹாஹாஹா

        கீதா

        Liked by 1 person

      2. ஸ்ரீராம் ஸ்ரீரங்கம் ல ஞாயிறு எனவே அதை ஃபாலோ செய்யறவங்க அன்றுதான் கொண்டாடுறாங்க. கிருஷ்ணருக்கென்ன ஒவ்வொரு நாளும் ஒரே அடி பொளிதான்..!!!

        கீதா

        Like

  3. நான் நேற்றே கொண்டாடியாச்சு….ஆனால் என்ன வீட்டில் கடிக்கமுடியாத ஓட்டு கூடுதல் என்பதால் எதுவும் செய்யக் கூடாதுன்னு வேற ஆணை. இதென்னடா கூத்து நான் ஒருத்தி இருக்கிறேன் என்பது கணக்கிலேயே இல்லை ஹூம் என்ன சொல்ல? அதனால் எனக்கு எதுவும் செய்து சாப்பிட முடியாம போச்சு. அதுக்கப்புறம் பல்லுக்கு இதமான வெண்ணை வெல்லம், சுக்கு வெல்லம், பழங்கள்னு எப்படி இருக்கு பாருங்க!!

    கீதா

    Like

  4. @ கீதா:

    நேற்று மாலை இஸ்கான் அமைப்பிற்கு நெய்மணக்கும், முந்திரிப்பருப்பு, உலர்திராட்சை முழித்து முழித்துப்பார்க்கும் பொங்கலும், முறுக்கும் செய்து கொடுத்துவிட்டோம் -as promised! அவர்கள் கொடுத்த பிரசாதமாக புலாவ், தங்க நிற கேஸரி ஆகியவற்றை வாங்கி சாப்பிட்டோம். சில படங்களையும் ஃபோனில் க்ளிக்கிவிட்டு வீடு வந்து சேர்ந்தேன் நிதானமாக !

    உங்கள் வீட்டில் சீடை, முறுக்கு, தட்டையில்லாமலே ஸ்ரீஜெயந்தியா! கொஞ்சம் அநியாயமாத்தான் இருக்கு!

    எங்கள் வீட்டில் கொஞ்சமாக மேற்சொன்ன மூன்றையும் செய்தோம்.

    Like

Leave a comment