இருதரப்பு கிரிக்கெட்: இந்தியா-நியூஸிலாந்து டி-20 தொடர்

கைக்கெட்டாத உலகக்கோப்பையை மறந்துவிடலாம்! இன்று (17/11/21) ஜெய்ப்பூரில் துவங்குகிறது நியூஸிலாந்து, இந்தியாவுக்கு இடையேயான 3-மேட்ச் டி-20 தொடர். இதற்குப் பின் 2-மேட்ச் டெஸ்ட் போட்டித்தொடரும் வரும் (அடுத்த உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் போட்டிகளின் ஆரம்பம்).

சாஸ்திரி-கோஹ்லியின் சத்தமான  சகாப்தத்தின் கதவு மூடப்பட்டுவிட்டது. இரைச்சல் தாங்கமுடியவில்லை! ’பிங்க் சிட்டி’யில் ஆரம்பமாகும் இந்தத் தொடர் இந்திய கிரிக்கெட்டின் புதிய பாதை/அணுகுமுறைகளின் துவக்க வாயிலாக அமையக்கூடும். திராவிட்-ரோஹித்தின் தலைமை டி-20 தொடர்களில் புதிய யுக்திகளை அறிமுகப்படுத்தும் என்கிற எதிர்பார்ப்புடன் ஆரம்பிக்கிறது தொடர்.

டெஸ்ட்களுக்கு இன்னும் கோஹ்லிதான் கேப்டன். அவர் ‘ஓய்வில்’ இருப்பதால், இந்த மாத இறுதியில் கான்பூரில் ஆரம்பிக்கவிருக்கும் முதல் டெஸ்ட்டிற்கு ’ஆஸ்திரேலியா புகழ்’ அஜின்க்யா ரஹானே தலைமை தாங்குகிறார். பேசாமல், இரண்டு போட்டிகளுக்குமே அவரை கேப்டனாக அறிவித்து, பழைய பூஜாரி கோஹ்லிக்கு ’இன்னும் கொஞ்சம்’ ஓய்வு கொடுத்திருக்கலாம். ஒன்றிரண்டு புது விளம்பரப்படங்களில் நடிக்க அவகாசம் கிடைத்திருக்கும்!  

Rohit Sharma briefs Venkatesh Iyer in the nets

இந்த டி-20 தொடருக்கான இந்திய அணியில் இவர்கள் இல்லை: கோஹ்லி, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, பும்ரா, ஹார்தீக் பாண்ட்யா, ஷர்துல் டாக்குர், வருண் சக்ரவர்த்தி. கடந்த ஐபிஎல்-இல் வித்தை காட்டிய இவர்கள் முதன்முதலாக உள்ளே : ஆல்ரவுண்டர்கள் வெங்கடேஷ் ஐயர் (மத்திய பிரதேசம்/ கொல்கத்தா நைட்ரைடர்ஸ்), ஹர்ஷல் பட்டேல் (ஹரியானா/ ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்), வேகப்பந்துவீச்சாளர் ஆவேஷ் கான் (மத்திய பிரதேசம்/ டெல்லி கேப்பிடல்ஸ்) மற்றும் ருதுராஜ் கேய்க்வாட் (மஹாராஷ்ட்ரா/ சென்னை சூப்பர் கிங்ஸ்). ரோஹித் ஷர்மா தலைமை வகிக்கும் (கே.எல்.ராஹுல், வைஸ்-கேப்டன்) இன்றைய முதல் மேட்ச்சுக்கான அணிவரிசை இப்படியிருந்தால் நன்றாக இருக்கும்: 1. ரோஹித் ஷர்மா 2. கே.எல். ராஹுல் 3. ஷ்ரேயஸ் ஐயர் 4. சூர்யகுமார் யாதவ் 5. இஷான் கிஷன் 6. ரிஷப் பந்த் 7. ஹர்ஷல் பட்டேல் 8. அஷ்வின் (இருவரும் ஆல்ரவுண்டர்கள்) 9. புவனேஷ்வர் குமார் 10. முகமது சிராஜ் 11. யஜுவேந்திர சாஹல்.

திராவிட்-ரோஹித் ஜோடி ஒருவேளை இப்படியும் சிந்திக்கக்கூடும்: வெங்கடேஷ் ஐயருக்கு அவருக்கான ‘இந்தியா வாய்ப்பை’ இந்த மேட்ச்சில் வழங்கலாம். வெங்கடேஷின் ஐபிஎல் பேட்டிங் ஃபார்ம் அப்படி. மிதவேகப் பந்துவீச்சும் அவரால் முடியும் (பாண்ட்யா இல்லாததும் நினைவில் வரும்). சாஹலுக்குப் பதிலாக அக்‌ஷர் பட்டேலை சேர்க்கலாம். பேட்டிங்கில், கீழ்வரிசையில் ஆக்ரோஷமாகத் தாக்கக்கூடிய ஆல்ரவுண்டர் என்பதால். இப்படியெல்லாம் கோச்சும், கேப்டனும் மாற்றி யோசிக்க வாய்ப்புண்டு!

திராவிட்-ரோஹித் காம்பினேஷனை ஜெய்ப்பூர் வெற்றிகரமாகத் துவக்கிவைக்குமா என இந்த இரவினில் தெரிந்துவிடும்.

உலகக்கோப்பை இறுதியில் தோற்ற அந்த அணியிலும் மாறுதல்கள் நிச்சயம் உண்டு. லோக்கி ஃபெர்குஸன் சேர்ந்திருக்கிறார். இந்திய பேட்ஸ்மன்களுக்கு அவரது துல்லியம் தொந்தரவு தரும் நிச்சயம். நியூஸிலாந்துக்கு வேகப்பந்துவீச்சாளர் டிம் சௌதீ (Tim Southee) கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அசல் கேப்டன் கேன் வில்லியம்சன் டெஸ்ட் தொடருக்காகத் தன்னைத் தயார்செய்துகொண்டிருக்கிறாராம்.

**

Leave a comment