குழந்தையாகப் பேசும் கிருஷ்ணன் நம்பி

என்னதான் அழ. வள்ளியப்பா எழுது எழுது என்று குழந்தைப் பாடல்களை எழுதித் தள்ளினாலும், அதே காலகட்டத்தில் குழந்தைகளுக்காக  சில அருமையான பாடல்களை வரைந்தவர் கிருஷ்ணன் நம்பி. என்ன பிரச்னை என்றால், சசிதேவன் போன்ற வெவ்வேறு பெயர்களில் குழந்தைகளுக்கான சிறுபத்திரிக்கைகளில் விட்டுவிட்டு எழுதிவந்தார் அவர். அவற்றைச் சேர்த்து யாரும் சரியாகத் தொகுக்கவில்லை ஆரம்பத்தில். எப்படியிருந்தும், உயிர்ப்பான எழுத்து வாசகனை விட்டுவிடுமா? 42-ஆவது வயதிலேயே அவர் அகாலமாக மறைந்துவிட்டாலும், அபாரமான சில படைப்புகள் (சிறுகதைகள், கட்டுரைகள் என) அவ்வப்போது தலைதூக்கித் தங்களைக் காட்டிக்கொண்டன. 1965-ல் தமிழ்ப் புத்தகாலயம் அவரது குழந்தைப்பாடல்களை ஒரு தொகுப்பாக ‘யானை என்ன யானை’ என்னும் தலைப்பில் வெளியிட்டு, சற்றே கூர்மையான கவனத்திற்கு நம்பியைக் கொண்டுவந்தது.

சமீபத்தில் காலச்சுவடு பதிப்பகம் அவரது அனைத்து படைப்புகளையும் சேர்த்து, ‘கிருஷ்ணன் நம்பி ஆக்கங்கள்’ எனும் புத்தகத்தைப் பிரசுரித்துள்ளது. கிருஷ்ணன் நம்பி எழுதிய ’விளக்கின் வேண்டுகோள்’ என்கிற இந்தப் பாடல், குறுகுறுக்கிறது அடிக்கடி மனதில். நீங்களும் கொஞ்சம் பாருங்களேன் :

விளக்கின் வேண்டுகோள்

காற்று மாமா.. காற்று மாமா..  கருணை செய்குவீர் !

ஏற்றிவைத்த ஜோதி என்னை ஏன் அணைக்கிறீர் ?

சின்னஞ்சிறு  குடிசை இதை சிறிது நேரம் நான்

பொன்னிறத்துச் சுடரினாலே பொலியச் செய்குவேன்

ஏழைச் சிறுவன் என்னை நம்பிப்  பாடம் படிக்கிறான்

ஏழும் மூனும் பத்து என்று எழுதிக் கூட்டுறான்

அன்னை அதோ அடுப்பை மூட்டிக் கஞ்சி காச்சுறாள்

என்ன ஆச்சு பானைக்குள்ளே.. எட்டிப் பாக்குறாள்

படிக்கும் சிறுவன் வயித்துக்குள்ளே பசி துடிக்குது

அடிக்கொரு தரம் அவன் முகம் அடுப்பைப் பாக்குது

காச்சும் கஞ்சி குடிக்க வெளிச்சம் காட்டவேண்டாமா

ஆச்சு, இதோ ஆச்சு, என்னை அணைத்துவிடாதீர் ..

**

5 thoughts on “குழந்தையாகப் பேசும் கிருஷ்ணன் நம்பி

  1. மனம் உருக்கின கவிதை. கி.ராஜ நாராயணன் ஐய்யா
    இந்தக் கவிதையை மிகவும் சிலாகித்துச் சொல்லும்போது
    கண்ணீரே வந்துவிடும்.
    கிருணன் நம்பி படித்து அறிய வேண்டியவர்.ரசிக்க வேண்டியவர்.
    மிக நன்றி ஏகாந்தன் ஜி.

    Like

  2. மனம் கசிய வைக்கும் கவிதை.  எளிமை.  அருமை.  பசியுடன் படிக்கும் சிறுவன் கண்முன்னே..

    Like

  3. @ Revathi Narasimhan, @ Sriram :

    முதன் முதலில் சுஜாதாவின் கட்டுரை ஒன்றின்மூலம் இதனைப்பற்றிக் கேள்விப்பட்டேன், வாசித்தேன். இது மனதை விட்டு அகல்வதேயில்லை. ஒரு சின்ன தினப்படிக் காட்சியை அழகாகப் படம்பிடித்ததால், காற்றையும், விளக்கையும் தாண்டிக் கதை சொல்லப்பார்க்கிறது கவிதை.

    Like

  4. விளக்கைக் குறித்து அது பேசுவது போல் இப்படி யாரேனும் சிந்தித்திருப்பார்களா என்று வியப்பு! அத்தனை மனதை உலுக்கிவிட்டது வரிகள்! என்ன யதார்த்தம். விளக்கில் ஒரு கதையே எழுதிவிடலாம் போல மனதில் என்னென்னவோ ஓடுகிறது ஏகாந்தன் அண்ணா.

    கீதா

    Liked by 1 person

    1. @ கீதா:
      மனதில் ஓடட்டும். அவை எழுத்தில் வரட்டும்.
      எழுத முடிந்தால் எழுதலாம்
      சொல்லா இல்லை தமிழ் மொழியினில் !

      Like

Leave a comment