கிரிக்கெட்: சுழலில் மூழ்கிய எதிரி

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா தாராள வித்தியாசத்தில் வென்றாயிற்று. கடைசி போட்டியும் 3-ஆவது நாளிலேயே முடியக் காரணம்? இங்கிலாந்தின் முன்னாள் ஜாம்பவான்களே.. பிட்ச்தானா? இல்லை! இந்திய பந்துவீச்சாளர்கள் அக்ஷர், அஷ்வின் இருவரும் இந்தத் தொடரில் எப்படிச் சுழற்றினார்களோ, என்னத்தை வீசினார்களோ.. இங்கிலாந்து பேட்ஸ்மன்களுக்கு சிம்மசொப்பனமாகிப்போனார்கள் என்பதே உண்மை. இன்னிங்ஸின் ஆரம்பத்திலிருந்தே மாறி, மாறி இருவரையும் எதிர்கொள்ள நடுங்கி வியர்க்க, விறுவிறுக்க விக்கெட்டுகளைப் பரிகொடுத்துவிட்டு பெவிலியனில் போய் உட்கார்ந்துகொண்டார்கள். ரூட், ஸ்டோக்ஸ், பேர்ஸ்டோ (Jonny Bairstow)போன்ற பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வீரர்களின் கதியே இப்படி. மற்றவர்கள், அதில் சிலர் புதியவர்கள்.. பாவம், அவர்களால் முடியவில்லை. ரிசல்ட்: 3-1 மரண அடி. அடுத்த இந்திய டூர்பற்றி இன்னும் சில மாதங்களுக்கு இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு கற்பனைகூட செய்யாது.

இந்தியாவைப் பொறுத்தவரை, அக்ஷர் பட்டேல் find of the tour. நான்கே போட்டிகளில் 27 இங்கிலாந்து விக்கெட்டுகள் பையில். அபாரம். நன்றாக, இடதுகை சுழல் போடுவார் என்பதால்தானே சேர்க்கப்பட்டார். ஆனால் இப்படி ஒரு  அதகளமா? ‘அக்ஷர் இவ்வளவு நன்றாக வீசுவார் என எதிர்பார்க்கவில்லை’ என உண்மையைச் சொல்லிவைத்தார் சஞ்சய் மஞ்ச்ரேகர். அக்ஷரின் அட்டகாசம், இன்னொரு முனையிலிருந்து போட்டுக்கிழிக்க  வசதியாகப் போயிற்று அஷ்வினுக்கு. அவரால் சரிந்த 32  விக்கெட்டுகள். இந்தத் தொடரில் இந்திய வேகப்பந்துவீச்சாளர்களுக்கு கிட்டத்தட்ட வேலையில்லை எனலாம். அப்படி இருவர் அணியில் இருந்ததையே கோஹ்லி அவ்வப்போது மறந்துபோயிருப்பார்.

தொடரின் சாகஸ ஆட்ட  வெளிப்பாடுகளாக சிலவற்றை நினைவுகூரலாம்.  மூன்றே டெஸ்ட்டுகளில் அக்ஷர் நான்கு முறை நிகழ்த்திக்காட்டிய ’5-விக்கெட்’ சாதனைகள். அஷ்வினின் 400-ஆவது டெஸ்ட் விக்கெட். அதில் 30-தடவை நிகழ்த்திய இன்னிங்ஸில் ’5-விக்கெட்’ சாதனை. போதாக்குறைக்கு அடித்த சதம் ஒன்று. இஷாந்த் ஷர்மா ஆடிய 100-ஆவது டெஸ்ட். வீழ்த்திய 300-ஆவது விக்கெட் (ஒரு வேகப்பந்துவீச்சாளர் இத்தனை நாள் நீடித்து சாதிப்பது இப்போதெல்லாம் மிகவும் கடினமானது). துவக்க ஆட்டக்காரரான ரோஹித் ஷர்மாவின் நல்ல பேட்டிங் – குறிப்பாக அந்த Cool 161. கிரிக்கெட் ரசிகர்கள் குதூகலித்துக் களித்த ரிஷப் பந்த் மற்றும் வாஷிங்டன் சுந்தரின் அபார ஆட்டங்கள்.

ஒரு டெஸ்ட் விக்கெட்கீப்பராக முன்னேற்றம் காண்பித்த ரிஷப். சில அபார கேட்ச்சுகள், ஸ்டம்பிங்குகளையும் நிகழ்த்தினார். கடந்த 2-3 வருடங்களாக அவர்மீது வைக்கப்பட்ட விமரிசனங்களில் அவர் ஒரு பொறுப்பற்ற வீரர் – reckless and irresponsible  என்பதும் ஒன்று. இந்தியா தோற்ற முதல் மேட்ச்சில் , நெருக்கடியான சமயத்தில் ரிஷப் பந்த் புகுந்து விளையாடிய 91 (88 பந்து) தனியாக ஒளிர்ந்தது. இடையிலே ஒரு  அரைசதம். இறுதியில் கைக்கு வந்த சதம்! 118 பந்தில் மைதானத்தை சிதறடித்த 101. நம்பர் அல்ல, ரன்களை எடுத்தவிதம்தான் அவர்  எத்தகைய வரப்பிரசாதம் இந்திய அணிக்கு என்பதைத் தெளிவாக்கியது. 80 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இந்தியா இழந்துவிட்டிருந்த நிலையில் உள்ளே வந்து, நிலமையை அவதானித்து தன் இன்னிங்ஸின் முதல் பகுதியில் காட்டிய நிதானம். 33 பந்துகளில் இரண்டாவது அரைசதத்தைக் கடந்த விதம். அஹமதாபாத் ரசிகர்கள் மட்டுமில்லை, உலகெங்கிலும் ரசிகர்கள் மற்றும் முன்னாள் பெரிசுகள் கவனித்தார்கள் என்பது பின்னால்  வந்த ட்வீட்டுகளில் தெரியவந்தது. குறிப்பாக புதுப்பந்தோடு சீறிய, 600 விக்கெட்டுகளைக் கடந்துவிட்ட ஆண்டர்சனை விளாசிய அந்த ‘ரிவர்ஸ் ஸ்வீப்’.. (Aahaa.. This is my boy! – Virender Sehwag) இதுவல்லவா நவீன கிரிக்கெட்.  அஞ்சாத இளம் ரத்தம், உத்வேகம் என்பதன் குறியீடு.. வைரலாகிப்போன வீடியோ அது. தன் காலம் முழுமைக்கும் ஆண்டர்சன் மறக்கமாட்டார்: ஒரு பொடிப்பயல் என் பந்தை ரிவர்ஸ் ஸ்வீப்பில், ஸ்லிப் கும்பலுக்கு மேலே தூக்கி அடித்துவிட்டான்.. எல்லாம் நேரம்…!

Sundar & Axar

பந்த்தின் இந்த ரகளைக்குத் துணையாக அடுத்த முனையில் ஒருவர் நின்று ஆடவேண்டுமே.. 1983 உலகக் கோப்பை போட்டியில் கபில்தேவ் 175 என வானவேடிக்கை நிகழ்த்த, மறுமுனையில் நின்று ஆடிய இந்திய விக்கெட்கீப்பர் சையது கிர்மானியை மறக்கலாகுமா? அதுபோல ரிஷப்பிற்குக் கிடைத்தார் இளம் வாஷிங்டன். தன் விக்கெட்டைப் பறிகொடுக்காமல் பார்த்துக்கொண்டு (குறிப்பாக ஆண்டர்சனும், ஸ்டோக்ஸும் அபாரமாக வீசிய நெருக்கடி நேரமது), ரன்களையும் கூடவே சேர்த்துக்கொண்டு முன்னேறிக்கொண்டிருந்தார் சுந்தர். முதலில் பந்த்- உடன், பிறகு அக்ஷருடன் சதம் என பார்ட்னர்ஷிப் கொடுத்த வாஷிங்டன் தன் முதல் சதத்திற்கான எதிர்பார்ப்புடன் ஒரு முனையில் நிற்க, மறுமுனையை நொறுக்கினார் பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes). அக்ஷரின் ரன் -அவுட்டிற்குப் பின்,  நாலே பந்துகளில் இஷாந்தும், சிராஜும் க்ளீன் -போல்ட். அவ்வளவுதானா நம் கதை என மனதில் பட்டுத் தெறிக்க, மெல்ல பெவிலியன் நோக்கி சுந்தர் நடக்கையில், மைதானம்  கைதட்டி ஆரவாரித்தது. ஏற்கனவே முதல் போட்டியில் பார்ட்னர் கிடைக்காமல் 85-ல் நாட் -அவுட்டாக நின்றிருந்த பாக்யமும் அவருக்குண்டு.  தொடரில் அவரது பேட்டிங்கைக் கூர்மையாகக் கவனித்த The Guardian நாளிதழ், ‘எட்டாவதில் வரும் இந்தியாவின் இன்ஷூரன்ஸ் பாலிசி!’ என வாஷிங்டனை வர்ணித்திருக்கிறது. ’தொடரின் முதல் போட்டியை இங்கிலாந்தா வென்றது? ஆச்சரியமாச்சே!’ எனக் கிண்டல் செய்கிறது The Sun.

3-1 என்கிற தொடர் வெற்றி இந்தியாவை உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப்போட்டியில் கொண்டுபோய்விட்டுவிட்டது.  உலகக் கோப்பைக்காக ஜூன் 18-ல் இங்கிலாந்தில், நியூஸிலாந்தோடு  மோதும்.

அதற்குமுன் மேலும் சில. 12-ஆம் தேதி அஹமதாபாதிலேயே ஆரம்பிக்கிறது இந்தியா-இங்கிலாந்து டி-20 தொடர்(5 போட்டிகள்). இரு அணிகளிலும் மாற்றங்கள் உண்டு என்பதால் (இங்கிலாந்தின் டி-20 கேப்டன் ஆய்ன் மார்கன்),  என்ன நடக்கும், எப்படிப் போகும் எனக் கணிப்பதற்கில்லை.  மேலும்,  புனேயில் 3 ஒரு-நாள் போட்டிகள்…

**

5 thoughts on “கிரிக்கெட்: சுழலில் மூழ்கிய எதிரி

  1. சுவாரஸ்யமான நாட்கள் காத்திருக்கின்றன…   நடந்து முடிந்த மேட்ச் நினைத்து நினைத்து ரசிக்கக் கூடிய மேட்ச்.  ஒருவர் மட்டும் போராடி வராமல், எல்லோருடைய பங்களிப்பும் இப்போதெல்லாம் இருப்பது சிறப்பு.

    Liked by 1 person

  2. நல்லதொரு தொடராக அமைந்திருக்கிறது. அனைவருடைய பங்களிப்பும் இருந்தது கூடுதல் சிறப்பு.

    Liked by 1 person

  3. @ Sriram, @ Venkat :

    தனியொரு வீரனின் அதீதப் பங்களிப்பு ஒரு போட்டியில் இருந்தாலும், மேலும் சிலர் அவரவர் திறனுக்கேற்ற சேர்ந்து ஆடவேண்டியிருக்கிறது. Cricket is still a team game. When the guys combine, the result shows..

    Like

  4. கடைசி இரண்டு வெற்றிகளும் ஆச்சர்யப்படத்தக்கவை. கோஹ்லி அடித்தால் மேட்ச் தோல்வி, அடிக்கவில்லையெனில் வெற்றி என்று புதுவித ராசியான்னு தெரியலை.

    இருந்தாலும் இந்தியா ஃபைனலுக்குச் சென்றிருக்கவில்லை என்றால், ஐசிசி ரூல்களில்தான் கோளாறு என்று ஆகியிருக்கும். ஜாம்பவான்களான ஆஸ்திரேலியா, இங்கிலாந்தை வெல்லும் அணி ஃபைனலுக்குச் செல்வதே நியாயமானது. ஏற்கனவே நம்மைப் பிரட்டித் தள்ளியிருக்கிறது நியூசிலாந்து. என் பார்வையில், ஃபைனல் என்பது 3 டெஸ்ட்களைக் கொண்ட போட்டியாக இருந்திருக்கவேண்டும். இது ஒருநாள் போட்டியில்லை. அதுவும் ஒரே தேசத்தில் நடந்த போட்டிகளும் இல்லை.

    Liked by 1 person

    1. @ நெல்லைத்தமிழன்:

      கடைசி இரண்டு மேட்ச்சுகள் தூள்கிளப்பின என்பது சரி. ரசிகர்களுக்கு செம விருந்து.

      டெஸ்ட் உலகக்கோப்பைக்கான விதிகள் தொடர்களின் நடுவிலேயே மாற்றப்பட்டன – ஆஸ்திரேலியா, இங்கிலாந்து என்கிற இரண்டில் ஒன்றாவது ஃபைனலில் வரவேண்டும், கோப்பை அதற்குச் செல்லவேண்டும் என்கிற ’வெள்ளைக்கார’ சூழ்ச்சி. அவர்கள் பயந்த ஒரே எதிரி இந்தியா. ஆனால், அதுதான் நடந்திருக்கிறது!

      இதுகுறித்து ரவி சாஸ்திரி ஓப்பனாகப் பேசியிருக்கிறார் ‘don’t move the goalpost’ என்பதாக விமரிசனம். படியுங்கள்

      Like

Leave a reply to Venkat Cancel reply