”எல்லாம் சரியாப்போச்சுன்னா…

.. (அப்பறமா) உங்கள இங்க சந்திக்கிறேன்!” (Sab theek raha tho.. miljaunga yahi pe..) -ஒரு பிரபலப் புள்ளி சொன்னதாகப் படித்தேன் காலைவேளையில். யாரிது குழப்பம்? என்ன சொல்லுது?

Bhuvan Bam

பெண்ணாகத்தான் இருக்கவேண்டும் என மனதில் கற்பனை ஓவியம் தேவையில்லை. சொன்னது ஒரு ஆண்.  Influlencer ! (இன்னும் என்ன என்ன வார்த்தைகள் வருமோ ஆண்டவா..). புவன் பாம் (Bhuvan Bam) – இந்தியாவின் டாப்  யூ-ட்யூபர் (Youtuber). காமெடியன், பாடகன், இசையமைப்பாளன் என சிலவருடங்களாக யூ-ட்யூபில் பன்முக ஆர்ப்பாட்டம்.  ரொம்பப் பாப்புலர்! நெட்டிஸன்கள் புவனை பாலிவுட் நடிகை ஆலியா பட் (Alia Bhatt)-இன் ‘ஆண்-வர்ஷன்’ எனக் கலாய்க்கிறார்கள். இது புவனை அசைத்து, அவர் ஆலியாவுக்கான மெஸேஜில் ‘ஆலியா! நீங்கள்தான் என் ‘க்ரஷ்’! ஒரு காஃபி சாப்பிடலாம். வரமுடியுமா!’ என்று ட்வீட்டியிருந்திருக்கிறார். புவனின் மொத்த வருமானம் 2020-கணக்குப்படி உத்தேசமாக 2.9 மில்லியன். ரூபாயல்ல, அமெரிக்க டாலர்! பாம் டெல்லியில் கல்லூரி முடித்த ஒரு மஹாராஷ்ட்ர இளைஞன்.

பேசவந்தது பாமின் புகழ், வருமானம்பற்றியல்ல. அவர் சொன்ன விஷயம். விதம். அப்படி ஆகிவிட்டிருக்கிறது, நாட்டில், உலகில் நிலமை. ’கொஞ்ச நாட்களாகவே உடம்பு சரியில்லை. சோதித்ததில் ‘பாஸிட்டிவ்’! என வந்திருக்கிறது’ என்கிறார் மெஸேஜில். இந்த ‘பாஸிட்டிவ்’-தான் இந்த வருடத்தின் மோசமான, ’நெகட்டிவ்’. ஆண்டு 2020 பிறந்த நேரம் அப்படி! ஆஸ்பத்திரிக்குப் பயந்துகொண்டே போய் அங்கு ‘பாஸிட்டிவ்’ என வந்துவிட்டால் பலருக்கு முகம் சுண்டிவிடுகிறது, குடல் சுருங்கிவிடுகிறது. உயிர்ப்பயத்தின் தாக்கம். ஏகப்பட்டோரை பலிவாங்கி வெற்றிநடை போடுகிறதே இன்னும் இந்த வைரஸ். எந்த அரசாலும், விஞ்ஞான, மருத்துவ ஆராய்ச்சியாளர்களாலும் ஒரு பதில் சொல்லமுடியவில்லையே இதற்கு. ‘பொது’ ஜனம் (வைரஸுக்கு முன்னே பிரபலங்களும் சமம்) – என்ன  செய்யும்? பீதியிலேயே பாதி மேலே போய்விடுகிறது . கொஞ்சம்பேர் தப்பித்தும் வந்துவிடுகிறார்கள்தான் – badly thrashed, perennially injured. இப்படி ஒரு காலன், காலத்திற்கேற்ற கோலன்.

ஜெர்மனி, ஃப்ரான்ஸ், இங்கிலாந்து போன்ற சில மேலைநாடுகளில் ‘லாக்டவுன்’ இரண்டாவது சுற்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. வேறு சில தேசங்கள் அறிவிப்போமா வேண்டாமா எனக் குழம்பிக் கிடக்கின்றன. எத்தனை ஊர்களில் எத்தனை சாவு விழுந்தாலும், எனக்கு ஒன்றும் ஆகாது.. அது மற்றவர்களுக்குத்தான் என்பதாக பலர் அலட்சியமாக, சுயபாதுகாப்பின்றி சுற்றி, சுற்றிவருகிறார்கள். இந்தியாவில் மட்டுமல்ல, ஏனைய மெத்தப்படித்த, ‘முன்னேறிய’ சமூகங்களின் கதியும் இதுதான். நாம் மார்க்கெட்டுகளில் உரசிக்கொள்வோம். அவர்கள் Bar-களில் உரசிக்கொள்வார்கள், பீச்சுகளில் படுத்து உருளுவார்கள். சின்னச் சின்ன வித்தியாசங்கள்.

தத்துவார்த்தமாகப் பார்த்தால்… எதுவும் சொல்லி, எதுவும் ஆகப்போவதில்லை. அழிவோ, ஆக்கமோ, நடக்கவேண்டியதே உலகில் நடக்கும் எப்போதும். இதில் நல்லது, கெட்டது என வகைப்படுத்த முயற்சிப்பதால், தலையைப் பிய்த்துக்கொள்வதால் என்ன ஆகிவிடப்போகிறது – ஒரு பெரும்நிகழ்வின் முழுப் பரிமாணமும் தெரியாதபோது ? அப்படியே தெரிந்துவிட்டாலும்..

**

 

8 thoughts on “”எல்லாம் சரியாப்போச்சுன்னா…

 1. உண்மை.  தனக்கு வராது என்கிற எண்ணம்தான் நிறைய பேர்களுக்கு…   வந்தபின் பீதி!  பொதுமக்களின் அலட்சியத்தை தினசரி சந்தித்து வருகிறேன்.  வெறுப்பாக இருக்கும்.  அவர்களுக்கு எச்சரிக்கை, புத்திமதி சொன்னால் நம்ம பதிலுக்கு கடித்துக் குதறுகிறார்கள்.  வெறுப்பு..

  Like

  1. @ ஸ்ரீராம்:
   ஏதோ ஒன்று தைர்யம் தருகிறது பெரும்பாலோருக்கு.. அது அசட்டுத்தைர்யம்தான் என மற்றவருக்குத் தோன்றினாலும் ! பண்டிகைக்காலம்வேறு அதுமாட்டுக்குப் போய்க்கொண்டிருக்கிறது.

   Like

 2. யாரும் முகக் கவசம்போடுவதில்லை. கைகளைச் சுத்தம் செய்வதில்லை. மிகவும் கவனக்குறைவோடு தான் இருக்கின்றனர், சொல்பவர்கள் தான் பைத்தியக்காரர்கள். 😦

  Liked by 1 person

  1. @கீதா சாம்பசிவம்:
   பெங்களூரிலும் மூலைக்குமூலை மு.க. இல்லாத இளைஞர்களை பார்க்கலாம். இருந்தாலும் இறக்கிவிட்டுக்கொண்டு பேசிக்கொண்டிருப்பார்கள். கடக்கையில் நாம்தான் கவனமாகத் தள்ளிப்போகவேண்டியிருக்கிறது.
   ஆபத்து விலகவில்லை என்பது தெரியவில்லை, அல்லது கவலையில்லை!

   Like

 3. எத்தனை ஊர்களில் எத்தனை சாவு விழுந்தாலும், எனக்கு ஒன்றும் ஆகாது.. அது மற்றவர்களுக்குத்தான் என்பதாக பலர் அலட்சியமாக, சுயபாதுகாப்பின்றி சுற்றி, சுற்றிவருகிறார்கள். இந்தியாவில் மட்டுமல்ல, ஏனைய மெத்தப்படித்த, ‘முன்னேறிய’ சமூகங்களின் கதியும் இதுதான்.//

  ஆமாம் ஆமாம். பலரும் அலட்சியமாக இருக்காங்க. நாம சொன்னா என்னவோ நமக்குத்தான் ஃபோபியா போலச் சொல்கிறார்கள். ஏன் இப்படிப் பயந்து சாகிறாய்ன்னு வேற கேள்வி. இதுக்காக ஊர் சுத்தாம இருக்க முடியுமான்னு வேற.

  யாரும் மாஸ்க் அணிவதில்லை. தள்ளி நிற்பதில்லை. சர்வசகஜமாக இருக்கிறார்கள். பட்டால்தான் தெரியும் என்பது போலவோ?

  ஒரு சிலருக்கு மைல்டாக வந்து சென்றது என்று சொன்னாலும் அல்லது வந்தும் தெரியவில்லை என்றாலும் கூட அது உள்ளுக்குள்ளே மறைந்திருந்து தாக்கும் மர்ம்மமென்ன ந்னு பாட வேண்டியதுதான் போல. மைல்டாக அல்லது சிம்ப்டமே இல்லாமல் கடப்பவர்களூக்கு போஸ்ட் கோவிட் பலருக்கும் தொந்தரவு தருகிறது என்பதைப் பார்க்கிறேன்.

  எனக்குத் தெரிந்த இருவருக்கு எந்தவித அறிகுறியும் இல்லாமலேயே வந்திருக்கிறது ஆனால் தாக்கியது பெருமளவில் ஒருவருக்கு மூளையில் ரத்தக் கசிவு…குணமாகி வீட்டிற்கு வந்துவிட்டார் இருந்தாலும் கவனமாக இருக்க வேண்டும். மற்றொருவருக்கு நுறையீரலில் தாக்கி இன்னும் ஐசியு வில்தான். நேரடியாக செகண்டரி இன்ஃபெக்ஷன்!

  இங்கு முதல் அலையே ஓயவில்லையாமே…அல்லது இரண்டாவதும் வந்துவிட்டதா தெரியவில்லை. ஒன்றும் சொல்வதற்கில்லை.

  கீதா

  கமென்ட் வந்ததா என்று தெரியவில்லை அதனால் மீண்டும் இதைப் போடுகிறேன்.

  Like

 4. @கீதா: வந்தது கமெண்ட்!

  இது asymptomatic என்பதுதான் இதன் ஸ்பெஷாலிட்டியே’ – அதாவது நோயின் வெற்றி! மனிதனின் படுதோல்வி.\
  அடுத்த வருடம் வேறேதும் வராதிருக்கவேண்டும் எனக் கவலைப்படுகையில், அட, இந்த வருடமே இன்னும் போகவில்லையே என்கிற பயமும் .

  Like

 5. ஆடும் வரை ஆட்டம் என்ற கணக்குதான்.

  நன்றாகச் சொல்லி இருக்கிறீர்கள் ஜி.
  முன்னேறிய நாடுகளா.
  ? அப்படி ஒன்று இருப்பதாகத் தெரியவில்லை.
  இன்று வரை தலை,வால் எல்லாம் ஆடிக் கொண்டிருக்கின்றன இந்த ஊரில்.
  ஏதாவது மஹிஷாசுர மர்த்தினி வரமாட்டாளா என்றிருக்கிறது.

  இது மனுஷத்தொற்று.
  இறைவன் அனுப்பி வைத்த தொற்றுக்குப் பதில் சொல்லும்
  மருத்துவர்களையே சிலர் நகையாடுகின்றனர்.

  நான் இருக்கும் இடத்தில் எல்லோரும் மிகப் பண்புடன் இருக்கிறார்கள்.

  மீறி சாலையில் சென்றால்…..சொல்ல முடியாத கூட்டம்.
  அதுவும் தலை விரித்தாடும் இரண்டாவது அலையில்
  ஒரே நாளில் போன வாரம் 10000த் தை தொட்ட
  அதிர்ச்சி.
  வயதானவர்களுக்கு மட்டுமா .?மகளும் மாப்பிள்ளையும்
  பாதுகாப்பு செய்து கொண்டே இருக்கிறார்கள்.
  இறைவன் தான் காக்க வேண்டும்.
  எல்லோரும் நலமாகட்டும்.

  Liked by 1 person

  1. @ Revathi Narasimhan :
   அவரவர்கள் தங்களைப் பார்த்துக்கொள்ளவேண்டியதுதான். வெளியே செல்வதைத் தவிர்க்கவேண்டியதுதான் கூடுமானவரை. வேறு என்னதான் செய்யமுடியும்?

   Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s