ரூமி – கொஞ்சமாக . .

 

பிரதானமாக இப்போதிருக்கும் ஈரான், ஆஃப்கானிஸ்தான், உஸ்பெக்கிஸ்தான், தஜிக்கிஸ்தான் மற்றும் சுற்றுப்பகுதிகள்  நிரவிய பெரும் நிலப்பகுதியே அந்தக் காலத்திய பர்ஷியா. பர்ஷியாவின் தலைசிறந்த கவிஞர், ஞானி என அறியப்பட்டு, இன்றளவும் கொண்டாடப்படுபவர் 13-ஆம் நூற்றாண்டின் ரூமி. ஜலாலுத்தீன் ரூமி (Jalaluddin Rumi).  1207-ல் இவர் பிறந்த இடம் தற்போதைய ஆஃப்கானிஸ்தானில் உள்ள பால்க் (Balkh) எனும் ஊர்.  ரூமி சிறுவனாக இருக்கும்போது பர்ஷியாவின் மீது மங்கோலியர்கள் அடிக்கடிப் படையெடுத்துத் தாக்கினார்கள். ரூமியின் குடும்பம் நிலைகுலைந்தது. நிலம்பெயரும்படி ஆனது.  பாக்தாத், மெக்கா, டமாஸ்கஸ் என எங்கெங்கோ அலைந்து திரிந்து,  ஒருவழியாக துருக்கியில் தஞ்சம் புகுந்தது.  அங்குள்ள கொன்யா (Konya) என்ற ஊரில்தான், தன் வாழ்நாளின் பெரும்பகுதியை வாழ நேர்ந்தது ரூமிக்கு.

ரூமியின் தந்தை,  அவருடைய காலத்தில் ஒரு சூஃபி அறிஞர் என அறியப்பட்டவர். சூஃபி என்பது இஸ்லாமின் தனித்துவமான ஒரு பிரிவு. பொதுவான சமயச்சடங்குகள், வழிமுறைகளைத் தாண்டி,  இறைஞானத்தின் உயர்நிலையை நோக்கிப் பயணிக்கும், தேடுதலின் உச்சநிலை என சான்றோரால் அறியப்படுவது. தன் தந்தையிடமிருந்து நிறையக் கற்ற ரூமிக்கு, இளம் வயதிலேயே ஞானவழியின் ஆரம்பங்கள் தூரத்துக் காட்சிகளாக தெரியவந்திருக்கலாம்.

சிந்தனையில் ரூமி
பின்னணியில்…

அவருடைய தந்தை மறைந்தபோது வாலிபனாக இருந்த ரூமி ஒரு செல்வந்தர். மதவியலும் சட்டமும் முறையாகப் படித்து சமூகத்தில் மதிக்கத்தக்கப் பெரியவராக இருந்தவர். புனித சமய நூல்களில் ஆழ்ந்திருப்பதும், மாணாக்கர்களுக்குப் பாடம் நடத்துவதுமாகத்  தன் பொழுதினைக் கழித்துக்கொண்டிருந்தார். அந்த நிலையில் அவரது வாழ்க்கை அமைதியாக ஓடிக்கொண்டிருந்தது. அவரது மத்திம வயதினில் வந்து சேர்ந்தார் அந்த ஊருக்கு ஒருவர். வயது சரியாக மதிக்கமுடியாத கந்தல் கிழிசல் தோற்றம். ஒரு நிலையற்ற நிலையில், ஏகாந்தமாக ஒரு மனிதன். சமூக, சமயத் தடைகளைக் கண்டுகொள்ளாத, வினோதமான, சிலசமயங்களில் ஏடாகூடமாகக்கூட என்றும் சராசரி மனிதர்களால் பார்க்கப்படும் சிந்தனைகள், செயல்பாடுகள் அவருடையது. தான் ஒரு பைத்தியக்காரனாக, வேண்டத்தகாதவனாக மற்றவர்களால் பார்க்கப்படுவதைப்பற்றிய கவலை எள்ளளவும் இல்லை. அவரைப் பார்த்தவுடனேயே ரூமிக்கு என்னமோ  தெரியவில்லை,  பிடித்துப்போய்விட்டது. அவர்தான் ஷாம்ஸ் என ரூமியின் நண்பராகக் குறிப்பிடப்படுபவர். அவரோடு சேர்ந்து ரூமி பழகியிருந்தது, நெருங்கி அளவளாவியது என்னவோ இரண்டே வருடங்கள்தான். ஆனால், அந்தக் குறுகிய காலத்திலேயே ரூமியின் வாழ்வைத் தலைகீழாகப் பிரித்துப்போட்டார் ஷாம்ஸ். ரூமியின் சிந்தனைத்தளம் மிரண்டது. உருமாறியது. ரூமி புரிந்துகொண்டார். தானொரு வசதியான குடும்பத்தில் வந்த எல்லோராலும் மதிக்கப்படும் ஒரு பிரமுகர். தன் நண்பனோ ஒரு நாடோடி. பித்தன். ஒன்றும் இல்லாதவன். ஒன்றுமில்லை எனும் பிரக்ஞையும்கூட இல்லாதவன். மனம் போனபடி இயங்குபவன். சமூகத்தின் எந்த இறுக்கங்களும், சட்டங்களும் அவனை ஒன்றும் பாதிக்கவில்லை. அவனை எதுவும் தீண்டுவதாகவே தெரியவில்லை. வேறு ஏதோ ஒரு உலகத்தைச் சேர்ந்தவன்போலும். ஆ.. இவனே எனக்கானவன். என் உயிர்.. என் ஆசான். யாருக்கு, யார் மூலமாய் கண் திறக்கும் என்பதை மேலே உள்ளவனல்லவோ சொல்கிறான் என மயங்கினார் ரூமி. மதித்தார். ஷாம்ஸைத் தவிர அவர் மனதை வேறெதுவும் ஆட்கொள்ளவில்லை அதற்குப்பின் அவரது வாழ்நாளில்.

ஷாம்ஸைப்பற்றி ஊர்க்காரர்கள் இப்படிப் பேசிக்கொண்டார்கள். ஒரு நாடோடி.  அகங்காரன், கிறுக்கன். சமூக விரோதி. அவன் ஒரு பறவை.. இதில் சில சரியாக இருக்கலாம். பறவை? ஷாம்ஸினால் ஒரு இடத்தில் வெகுநாள் இருக்கமுடியாது என்பதைப் புரிந்துகொண்டிருந்தார்கள் அவர்கள். மேலும் ஒரு குறிப்பிட்ட நாளில் ஷாம்ஸ், ஒன்றிலிருந்து ஒன்று தொலைவில் இருந்த இரண்டு ஊர்களில் காணப்பட்டதாகக் கிசுகிசுத்து மிரண்டார்கள். எங்கெங்கோ நொடியில் போய் காணாமற்போய்விடும் பறவைக் குணம். அல்லது விசித்திர சக்தி ?

ரூமியின் இருபதுகளிலேயே ஒரு முறை அந்த ஊருக்கு வந்த ஷாம்ஸ் ரூமியைக் கவனித்திருந்தார். ஆனால் காலம் இன்னும் கனியவில்லை என்று தோன்றியிருக்கிறது. தனக்காக ஒரு மேதை-சிஷ்யனை (சீடன் – அறியாதவன்; ஆனால் உள்ளுக்குள்ளே, மேதையாக உருவாகுமாறு படைக்கப்பட்டவன்), தன் காலம் தாண்டியும் உலகினால் மதிக்கப்படும், பேசப்படும் ஒரு ஆன்மாவைத் தேடிக்கொண்டிருந்தார் ஷாம்ஸ். தன் இரண்டாவது வருகையில் ரூமியை அந்த ஊரின் சந்தையில் காணநேர்ந்தவருக்குப் புரிந்தது.  சந்தித்துப் பேச ஆரம்பித்தார். இருவரும் பழகினர். ஒரு மனதாக நெருங்கினர். விளைவு? ஆன்மீகத் தாக்கத்தின் உச்சம். ரூமி ஒரு சுதந்திர ஆத்மாவாகத் தன்னை உணரத் தொடங்கினார். உண்மை அவருக்குள் ஊர்ந்தது, ஆழம் பார்த்தது. மாறுதல்களை தடாலடியாக அறிமுகம் செய்தது. அதற்கப்புறம், எதையும் தன்னிலையிலேயே சுயமாக அணுக ஆரம்பித்தார். ஆராய்ந்தார். காலாவதியாகிவிட்ட, ஊசிப்போன சமூக நம்பிக்கைகள், மதச் சடங்குகளைக் கடுமையாக விமரிசிக்க ஆரம்பித்திருந்தார் ரூமி. தனிமனிதனை, சமூகத்தைத் தன் செயற்கைக் கெடுபிடிகளால், சட்டங்களால் பயமுறுத்தும் மதம் எதுவாயினும் அது விஷத்துக்கு சமம் என்றார் வெளிப்படையாக.  இறையை அறிதல் என்பது அவ்வகை பாதக நடவடிக்கைகளை முழுதுமாகப் புறந்தள்ளி, முன்னேறும் பயணம். பயம், அவமானம், குற்ற உணர்வு போன்றவைகளைத் தாண்டியது தூய அன்பு. அதனைச் சார்ந்தே, அதில் ஊறியே வாழ்வில் ஒருவன் பயணிக்கவேண்டும் என்பதில் வந்தது தெளிவு.

வெவ்வேறு வகைமை சார்ந்தது எனத் தோன்றும், ஆனால் இறுதி உண்மையை நோக்கியே விடாது பயணிக்கும் ரூமியின் கவிதைகள் (70000-க்கும் மேல்) இந்த நூற்றாண்டின் துவக்கத்தில், மேலும், மேலும் உலகெங்கும் ஆர்வமாக வாசிக்கப்பட்டன. ரூமி என்கிற ஞானி, கவிஞரின் நூதன வாழ்க்கையைப்பற்றி, அது முக்கியம் ஆதலால் – அதன் மறைக்கப்பட்ட பகுதிகளையும் கருத்தில்கொண்டு – Rumi’s Untold Story-From 30-year Research என்கிற ஒரு புத்தகம் (Amazon) எழுதியிருக்கிறார் விருதுபெற்ற அறிஞரும், ரூமி கவிதைகளின் புகழ்பெற்ற மொழியாக்கம் தந்தவருமான ஷாஹ்ராம் ஷிவா. அதில்,  ரூமி பெரிதும் போற்றும், தன்னை ஆற்றுப்படுத்தியவராகக் கருதும் ஷாம்ஸ், ரூமி வசித்த ஊரிலேயே ரூமியின் இளைய மகனால் கொல்லப்பட்டதாக வருகிறது. கட்டுப்பெட்டி சமூகம், மதக்கோட்பாடுகள் விதித்த சட்டதிட்டங்களை மதிக்காதுபோனதோடு, சமூகத்தைக் கெடுப்பதாக(?), வேற்று சிந்தனைகளை விரித்த ஷாம்ஸ் காணப்பட்டிருக்கவேண்டும்; அதற்குத் தண்டனையாக கௌரவக் கொலை செய்ப்பட்டிருக்கலாம் எனச் சொல்கிறார் நூலாசிரியர். தன் உயிரின் உயிராய், குருவாய் ஷாம்ஸை மதித்த ரூமியை, இந்தக் கொடும் நிகழ்வு அதிரவைத்தது. ஒரேயடியாகத் துவளவைத்தது. முடங்கிக் கிடந்தார் சில நாட்கள். ஆழ்ந்த துக்கம் தந்த மயான அமைதி, அதன் வெடிப்பாக, வெளிப்பாடாக, ஆன்மீக, தத்துவச் சிதறல்களாக, கவிதை, கவிதையாக  எழுதிக் குவித்தார் தன் கடைசிக் காலத்தில். சோகத்தின் உச்சத்தில், தன்னைக் கலாபூர்வமாகத் தேற்றிக்கொள்ள முயன்றிருக்கிறார் ரூமி. தனக்குப்பின், எங்கே இந்த உலகம் ஷாம்ஸ் எனும் மகாமனிதனை, தன் ஆத்மநண்பனை மறந்துவிடுமோ என்கிற அச்சத்தில், தான் எழுதிய பல கவிதைகளின் கீழே ஷாம்ஸ் என்றே குறிப்பிட்டிருக்கிறாராம் ரூமி. தன் சிந்தனாமாற்றத்தின், ஆக்கங்களின் ஊற்று தன் நண்பனே என்கிற புரிதலையும், அதற்கான ஆத்மார்த்த நன்றியறிதலையும் ரூமி இவ்வாறு வெளிப்படுத்தியிருக்கவேண்டும். மங்காத ஜீவன் அவருடைய கவிதை வரிகளில் உலவுவதாலேயே, இன்றும் சற்றும் குறையாத ஆவலோடு வாசிக்கப்படுகிறார் ரூமி. வாசகர்களும், ஆய்வாளர்களும் அவரது வாழ்வை, கருத்துக்களை மேன்மேலும் தெரிந்துகொண்டு சிலிர்க்கின்றனர்.

இன்றைய ஈரான், துருக்கி மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளும் ஜலாலுத்தீன் ரூமியைத் தங்களின் தேசியக் கவிஞராகக் குறிப்பிட்டுக் கொண்டாடுகின்றன. உரிமை கொள்கின்றன. ஆனால் ரூமியின் காலத்தில் இந்த மூன்று நாடுகளும் தனி நாடுகளாய் இருந்ததில்லை. பர்ஷியா எனும் பேரரசின் பகுதிகளாகவே அமைந்திருந்தன.  தாடியும், தலைப்பாகையுமாக சுற்றிய ரூமி, தன்னை எந்த ஒரு சமயம் சார்ந்தவராகவும், நாட்டினராகவும் பார்க்கவில்லை. அதனை வெள்ளையாக, ஒரு கவிதையில் குறிப்பிட்டும் இருக்கிறார். ரூமியின் மேதாவிலாசத்தை, அவருக்கு வாய்த்த ஞானத்தின் சக்தியை, வசீகரத்தை அவரது கவிதைகள் சிலவற்றின், எளிய மொழியாக்கமாக அடுத்த பதிவில் .

(இன்னும் வரும்)

**

8 thoughts on “ரூமி – கொஞ்சமாக . .

  1. ஓ… பெர்ஷியா இந்த நாலு நாடுகள் சேர்ந்ததா? அக்பரின் மகன் சலீம் (ஜஹாங்கீர்) மணந்தது ஆஃப்கானிஸ்தானத்தைச் சேர்ந்தவரின் மகள் நூர்ஜஹானை. அவளது சகோதரனின் மகள் மும்தாஜ்மஹலை மணந்தவர் ஜஹாங்கீரின் பையன் ஷாஜஹான். முன்னாட்களில் புத்தகத்தில் பெர்ஷியாவைச் சேர்ந்த நூர்ஜஹான் என்று படித்தேன். ஆக்ரா கோட்டையைப் பார்த்தபோது அங்கு ஆஃப்கானிஸ்தானத்தைச் சேர்ந்தவர் நூர்ஜஹான் என்று போட்டிருந்தது.

    மற்றவர்ற்றிர்க்கு (சூஃபி) பிறகு…. சூஃபி வழித் தோன்றல்தான் ஆஜ்மீர் தர்கா, அக்பரின் ஆன்மீக குரு சிஸ்டி… என்று ஞாபகம்

    Liked by 1 person

    1. @ நெல்லைத்தமிழன்:

      சுஃபி ஞானி மொய்னுதீன் சிஷ்ட்டியின் ஆஜ்மீர் ஷெரீஃப் (தர்கா) செல்ல ஆசையுண்டு. சமயம்தாண்டி மனிதர் அங்கே போவது காலங்காலமாக நடக்கிறது.

      Like

    1. @ துரை செல்வராஜு, @ ஸ்ரீராம்:

      படிக்கப் படிக்க எழுந்துவரும் ஏகப்பட்ட சிறு கவிதைகள். எதை எடுப்பது, எதை விடுவது ! முயற்சித்துக்கொண்டிருக்கிறேன்.

      Like

  2. கோஹ்லியும் ரவி சாஸ்திரியும் இந்திய கிரிக்கெட்டின் நன்மைக்கு எதிரா செயல்படறதைப் பத்தி ஒண்ணுமே எழுதலையே ஏகாந்தன் சார். அடுத்து, எதிர் டீம் விளையாடும்போது பந்து பட்டு என் வலது கை உடைந்தால், எப்படி இடது கையால் விளையாடி வெற்றி பெறுவது என்பதற்காக இன்று வலது கையைக் கட்டிக்கிட்டு இடதுகையால் பேட் செய்து பார்த்தேன் என்று கோஹ்லி உளறும் வரை காத்திருப்பீங்களா?

    Liked by 1 person

    1. @ நெல்லைத்தமிழன்:

      நீங்களும் நிறையத்தான் கவனிக்கிறீர்கள், சாஸ்திரி-கோஹ்லியின் கத்தர்னாக் காம்பினேஷனை!

      சாஸ்திரியை எப்போது மீண்டும் நியமித்தார்களோ அப்போதே அடுத்த கோப்பையை நழுவவிட்டுவிட்டோம் என்பது தெளிவாகிவிட்டது.
      இந்தியா பேட் செய்த லட்சணத்தைப்பார்த்து, எங்கள் வீட்டில் நேற்று கடுப்பில் இருந்தார்கள். ;இந்த மேட்ச்சைத் தோக்கணும் இந்தியா.. அப்பதான் புத்தி வரும் கோஹ்லிக்கு!’ என்றாள் என் பெண், இந்திய இன்னிங்ஸ் முடிகையில். அதே போல் டி காக் & கோ நிமித்திவிட்டார்கள். டெஸ்ட் வேறு பாக்கி இருக்கிறது..

      எழுதுவேன் ..
      தலைக்குள் இருக்கும் ரூமி இறங்கட்டும் முதலில் !

      Like

      1. இதுபற்றி முன்னமேயே சொல்லணும்னு நினைத்தேன். பாகிஸ்தானுடனான மேட்சில் (இங்கிலாந்து) கோஹ்லியின் கர்வத்தால்தான் முதலில் பேட் செய்யாமல் தோல்வியடைந்தோம். ரவி குற்றவாளியா இல்லை கோஹ்லியின் கர்வமான்னு தெரியலை. இஷ்டப்படி செஸ் காயின்களைப்போல் வீரர்களை உருக்குலைக்கிறார் கோஹ்லி. ஒருவேளை இதெல்லாம் ‘மனைவி வந்த ராசி’யான்னும் எனக்குச் சந்தேகம்.

        கோஹ்லி சாதனைகள் நிகழ்த்தலாம். ஆனால் சச்சின் அல்லது தோனி அவர்களது குவாலிட்டியில் 25% கூட அவரால் நெருங்க முடியாது. தோனி, கபில் இவர்கள்தாம் இந்திய கிரிக்கெட் தலைநிமிரச் செய்தவர்கள்.

        Like

Leave a comment