இந்தியத் தேர்தல் : PM, CM, EVM … !

இந்திய மகா தேசத்தில் 1952-ஆம் ஆண்டுதான் நாட்டின் பார்லிமெண்ட்டிற்கான (லோக் சபா) முதல் பொதுத்தேர்தல் நடந்தது. அப்போது 489 பார்லிமெண்ட் தொகுதிகளே இருந்தன.(அதில் இரண்டு ஆங்கிலோ-இந்தியர்களுக்கானவை). மொத்தம் சுமார் 17 கோடி வாக்காளர்கள் இருந்தனர். சுதந்திரத்திற்குப்பின் வந்த முதல் பொதுத்தேர்தல் ஆனதால் காங்கிரஸ் கட்சியை அடித்துக்கொள்ள ஆளில்லை! காங்கிரஸும், நேருவும் ஏதோ தேவலோகத்தில் இருந்து இந்தியாவுக்குள் குதித்துவிட்ட சங்கதிகளாகப் பார்க்கப்பட்ட அப்பாவிகளின் பொற்காலம்!

முதல் தேர்தலில் மொத்தம் 487 தொகுதிகளில், இந்திய தேசீய  காங்கிரஸ் (INC) 364-ஐ வென்று தனிப்பெரும் கட்சியாய் ஜொலித்தது. காங்கிரஸுக்கு அடுத்தபடியாக அதிக தொகுதிகள் சுயேச்சை வேட்பாளர்களுக்குத்தான் கிடைத்தது. இப்போதிருப்பது போல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்ஸிஸ்ட்) கட்சி என்றில்லை; இந்திய கம்யூனிஸ்ட் கட்சி என ஒன்றே இருந்தது. உலகில் கம்யூனிஸ்ட் இயக்கம் பிளவுபடாத (அதாவது சீனா வந்து குழப்பாத) காலம். அந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 16 இடங்கள் கிடைத்தன. கட்சி ரீதியாக அதுவே காங்கிரஸுக்குப்பின் அடுத்த பெருங்கட்சி! சோஷலிஸ்ட் கட்சி 12 எடுத்து மூன்றாவது இடத்தில்  மார்தட்டிக்கொண்டது. பின்னாளில் அது சம்யுக்த சோஷலிஸ்ட், ப்ரஜா சோஷலிஸ்ட் என்று பரிணாம வளர்ச்சியடைந்து, பின்னொரு நாளில் காணாமலேயே போய்விட்டது. கயா காம் ஸே..! அடல் பிஹாரி வாஜ்பாயீ, பல்ராஜ் மதோக் ஆகிய புகழ்பெற்ற இளம் பார்லிமெண்ட்டேரியன்களை பிற்காலத்தில் கொண்டிருந்த பாரதீய ஜனசங்கம் (தற்போதைய பாரதீய ஜனதா கட்சி(BJP)யின் ஆரம்பப் புள்ளி), முதல் தேர்தலில் 3 தொகுதிகளைப் பெற்றது. இந்தத் தேர்தலில் பிராந்தியக் கட்சிகள் என அழைக்கப்பட்ட மாநிலக்கட்சிகள் இல்லையா? இருந்தன. ஷிரோமணி அகாலி தளம் (பஞ்சாப்), ஜார்க்கண்ட் கட்சி, உத்திரப் பிரதேச பிரஜா கட்சி, ஜமீந்தார்கள் கட்சி, தமிழ்நாடு உழைப்பாளர்கள் கட்சி, மதராஸ் ஸ்டேட் முஸ்லிம் லீக் போன்றவைகளோடு ‘திருவாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி’ என்று ஒன்றும் காணப்பட்டது! சரி விடுங்கள், பழைய கதை..

நடந்துமுடிந்த, நாளைக்கு (23-5-19) முடிவுகள் வரப்போகும் பொதுத்தேர்தல் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோதி தொடர்வாரா என்பதைப் பிரதானமாகக் கொண்டது. கூடவே நடத்தப்பட்ட ஆந்திரா, அருணாச்சலப் பிரதேசம், ஒடிஷா, சிக்கிம் மற்றும் தமிழ்நாடு  ஆகிய அசெம்பிளி தேர்தல்களும், உட்கார்ந்திருக்கும் முதல் மந்திரிகள் இருப்பார்களா அல்லது ஓடிவிடுவார்களா என மக்களுக்குச் சொல்வதற்காகத்தான். நாளை மாலைவாக்கில்,  பூனைக்குட்டி வெளியே வந்துவிடும்!

EVM Units

இந்தியாவில் வாக்களித்தல் (voting) என்பது கட்சிகளின் சின்னங்கள் அடங்கிய வாக்குச்சீட்டு (ballot paper) மூலமாகவே வெகுகாலம் நடைபெற்றுவந்தது. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு சின்னமென இருக்க, அவற்றை அச்சடித்திருக்கும் எலெக்‌ஷன் கமிஷனின் வாக்குச்சீட்டு, அனுமார் வால் மாதிரி நீண்டு தொங்கி அப்பாவி வாக்காளர்களை மிரட்டிவந்தது! தங்களுக்குப் பிடித்தமான கட்சியின் சின்னத்தைத் தேடி அதில் முத்திரை குத்தி பெட்டியில் போட்டுவிட்டு வெளியே வரும்வரை, அவர்களுக்கு மூச்சுபோய் மூச்சு வந்தது. இந்தியா முழுதுமான லட்சக்கணக்கான ஓட்டுச்சாவடிகளிலிருந்து வாக்குச்சீட்டுகளை பாதுகாப்பாக சேகரித்து, வாக்கெண்ணும் நாளில் அவற்றை கட்சிவாரியாக வகைப்படுத்தி கணக்கிடுவதில், சரிபார்ப்பதில் காலதாமதமும், தவறுகள் ஏற்பட வாய்ப்புகளும் மலிந்திருந்தன.

வாக்களிப்பு முறையை தொழில்நுட்ப ரீதியாக  நவீனப்படுத்துவதற்காக இந்தியத் தேர்தல் ஆணையம் (Election Commission of India) தன்னுடைய தொழில்நுட்ப குழுவினால் (Technical Experts Committee (TEC)) பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட மின்னணு இயந்திரத்தை, சர்வதேசத் தர அரசு நிறுவனங்களான பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL, Bangalore) மற்றும் Electronics Corporation of India (ECIL, Hyderabad) ஆகியவற்றின் ஒத்துழைப்பில்  தயாரிக்க ஆரம்பித்தது. இதுதான் இந்திய எலெக்‌ஷன் கமிஷனின் EVM (Electronic Voting Machine) எனப்படும் மின்னணு வாக்குப் பதிவு எந்திரம். EVM-இன் முதல் எடிஷன், இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டு,  கேரளாவில் நடந்த ஒரு இடைத்தேர்தலில் 1982-லேயே  புழக்கத்துக்கு வந்தது. படிப்படியாக இதன் பயன்பாடு வளர்ந்தது. 2001-லிருந்து இதன் பயன்பாடு தேர்தலுக்குத் தேர்தல் என சீரானது. தொடர்ந்த காலகட்டத்தில் இவிஎம்,  BEL, ECIL-ஆகியவற்றினால், பலவிதமான தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு உட்பட்டு வளர்ச்சியடைந்துள்ளது.

இந்தப் பொதுத்தேர்தலில் இந்தியா பயன்படுத்தியிருப்பது, பலவிதமான சோதனைகளில் தேர்வாகி வந்திருக்கும் அதிநவீன இயந்திரம். வாக்களர் நீலநிற பட்டனை அழுத்தி வாக்களிக்கும்  பகுதி (Balloting Unit), வாக்கு அளிக்கப்பட்டுவிட்டதா என தேர்தல் அதிகாரி சரிபார்க்கும் பகுதி (Control unit) என இரு பகுதிகளைக்கொண்டு, உள்ளமைக்கப்பட்ட பேட்டரி பேக்-உடன் வருகிறது, tamper proof, weather proof-ஆன இந்த மின்னணு இயந்திரம். கூடவே, VVPAT (Voter Verifiable Paper Audit Trail) unit ஒன்றும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. ஒரு வாக்காளர் வாக்களித்தபின், தான் சரியாக வாக்களித்திருக்கிறோமா என்பதை ஒரு சிறிய திரையில் பார்க்கமுடியும். அதில் கட்சியின் சின்னம், சீரியல் நம்பர் ஆகியவை 7 வினாடிகளுக்குத் தெரியும். பின்னர் இந்த தகவல் பேப்பர் ரோலில் பாதுகாப்பு drop box-ல் சென்று மறைந்துவிடும். (இவிஎம்-ல் ஓட்டுக்களை எண்ணுகையில், VVPAT மூலமாகவும் எண்ணிக்கையை சரிபார்க்க முடியும்)

இந்திய தேர்தல் ஆணைய வழிமுறைகளின்படி, வாக்கெடுப்புக்கு முன்பு, தேர்தல் அதிகாரிகள் ஒவ்வொரு கட்சியின் ஏஜண்ட்டிற்கும், இவிஎம் ’எப்படி வேலை செய்கிறது’ என நிரூபித்துக் காட்டுகிறார்கள். குறைந்தபட்சம் 20 ‘மாதிரி ஓட்டுக்கள்’ கட்சி பிரதிநிதிகளால் போடப்பட்டு, இவிஎம் அதனை எப்படி கணக்கில் எடுத்துக்கொள்கிறது என்பது காட்டப்படுகிறது. ஒவ்வொரு சமயத்திலும் ஒரு மெஷின்மூலம் அதிகபட்சம் 2000 ஓட்டுகள் வரைப் போடமுடியும். ‘NOTA’ உட்பட, 64 கட்சி சின்னங்கள் வரை கணக்கில் எடுத்துக்கொள்ளுமாறு புதிய சீரீஸ் இவிஎம்-கள் உருவாக்கப்பட்டுள்ளன. கட்சி ஏஜண்ட்டுகள்/ பிரதிநிதிகளுக்கு முன்கூட்டியே இத்தகைய விபரங்கள் தேர்தல் அதிகாரிகளால் அளிக்கப்படுகிறது. அதன் பின்னரே, பொதுமக்களின் நிஜமான வாக்களிப்பு வாக்குச் சாவடியில் ஆரம்பிக்கிறது.

இதைப்போலவே, வாக்கெடுப்பு  முடிந்தபின், கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்பு இந்த இவிஎம் இயந்திரங்கள் ’மூட’ப்படுகின்றன. (விழுந்திருக்கும் ஓட்டுக்கள் கணக்கில் வந்தபின், சரிபார்த்தபின்,  தேர்தல் அதிகாரி ‘Close’பட்டனை அழுத்திவிட்டால், அந்த இயந்திரம் பூட்டப்பட்டுவிடும். அதில் மேற்கொண்டு ஓட்டுக்கள் போடமுடியாது. இப்படி ஒரு safety feature-உடன் அமைக்கப்பட்டிருக்கிறது அந்த இயந்திரம்). இவிஎம்-கள், வாக்கெடுக்குப்பின் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்பாக ‘மூட’ப்பட்டு, அதற்குரிய பெட்டிகளில் வைக்கப்பட்டு இரண்டுமுறை ‘சீல்’ செய்யப்படுகின்றன. ‘சீல்’ செய்யப்பட்ட இவிஎம்-கள், சீரியல் நம்பர்கள் சரிபார்க்கப்பட்டு, கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு ‘பாதுகாப்பு அறை’ (strong rooms)களில் வரிசைக்கிரமமாக  (தேர்தல் அதிகாரிகள், கட்சிப் பிரதிநிதிகள் முன்பு) வைக்கப்பட்டு, அறையின் கதவு மூடப்பட்டு சீல் வைக்கப்படுகின்றது. அனைத்து செயல்பாடுகளும் முறையாக வீடியோ பதிவு செய்யப்படுகின்றன. அறைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. மத்திய ஆயுதப்போலீஸ் படையின் காவலில் அத்தனையும் இருத்தப்பட்டுள்ளது.

சமீபத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வறிக்கை ஒன்று (‘India’s Electronic Voting Machines (EVMs): Social construction of a “frugal innovation’ authored by Maximilian Herstatt and Cornelius Herstat),  இந்திய ‘மின்னணு வாக்களிப்பு இயந்திரம்’ பற்றி இவ்வாறு சொல்கிறது: “EVMs in India are unique and quite different from EVMs employed in other nations like the US. Rather than large, expensive, complex and computer like systems, the Indian machine is praised for its simplicity, inexpensiveness, and efficiency…’’

**

6 thoughts on “இந்தியத் தேர்தல் : PM, CM, EVM … !

  1. ​இந்த மெஷின் கண்டுபிடிக்கப்பட்டதில் சுஜாதாவின் கையும் இருக்கிறது.

    என்ன விளக்கம் கொடுத்தாலும் EVM பற்றி குறை சொல்லத்தான் செய்வார்கள். அரசியல்!

    Like

    1. நானும் சொல்ல வந்தேன் நீங்க சொல்லிட்டீங்க ஸ்ரீராம். ஏகாந்தன் அண்ணா எப்படி சுஜாதா பற்றி சொல்லாமல் விட்டார்னு ஒரு வேளை என் கண்ணில் படாமல் போயிடுச்சோனு தேடித் தேடிப் பார்த்தேன்…

      அண்ணா தலைவரை நீங்க மிஸ் பண்ணிட்டீங்களே இப்படி!!!!!

      கீதா

      Liked by 1 person

      1. @ கீதா: வேகமாகப்போட்ட பதிவு. பதிவு நீளாமல் இவிஎம் -இன் தரம், பாதுகாப்பு features பற்றிமட்டும் எழுதிவிட்டு ஓடிவிட நினைத்தேன்.

        Like

  2. @ ஸ்ரீராம்: சுஜாதாவின் பங்கு பற்றி படித்தேன். நினைவுக்கு வரவில்லை.
    தோல்விமுகம் காட்டும் எதிரிக்கட்சிகள் (22 ?), துவண்டுவிழுமுன், கொஞ்சம் சத்தம் போட்டுவிட்டு விழுங்கள்.. பின்னே, ரெஸ்ட் எடுக்க எல்லோருமா லண்டன் போகமுடியும்?
    கொஞ்ச நேரம் முன்பு, கர்னாடகாவின் காங்கிரஸ் எம்.எல்.ஏ. டாக்டர் சுதாகர் :
    The Chikkaballapura MLA tweeted: “Personally I am confused why the issue of EVM manipulation is being brought into conversation, while talking about the exit poll results.

    Like

  3. கருத்துக்கணிப்புகள் ஓரளவு சரியாய்த்தான் இருக்கும்போல் இருக்கிறதுதெனிந்தியாவில் ஹிந்துத்துவா பருப்பு வேகவில்லைபோல

    Like

  4. @ ஜி.எம்.பாலசுப்ரமணியம்:

    28-க்கு 25 கொடுத்த கர்னாடகாவில் வெந்திருக்கிறதே பருப்பு.. அது தென்னிந்தியாவில்தானே இருக்கிறது!

    Like

Leave a comment