இந்தியத் தேர்தல்கள் 2019 : EXIT POLL EXCITEMENTS !

’இந்தியப் பொதுத்தேர்தல்கள்-2019’-இன் இறுதிக்கட்ட வாக்களிப்பு ஒருவழியாக நேற்று (19/5/19) நிறைவுபெற்றது. இந்திய தேர்தல் ஆணைய (Election Commission of India) வழிமுறைகளின்படி கடைசி நாள் வாக்கெடுப்பு முடிந்து அரைமணி நேரம் கழிந்தபின்னரே தேர்தலுக்குப் பின்னான ’எக்ஸிட் போல்’களை (வெற்றிக் கணிப்புகள்) எந்த நிறுவனமும் வெளியிடமுடியும். அதன்படி நேற்று மாலை எக்ஸிட் போல்கள் இந்திய டிவி சேனல்களால் வெளியிடப்பட்டுள்ளன.

வடகிழக்கு மாநிலமொன்றில் வாக்களிக்க வரிசைகாட்டும் பெண்கள்

அரசியல் போதையில் கிறுகிறுக்கும் சராசரி இந்திய வாக்காளன், அரசியல்-ரசிகன்,  தீராத தேர்தல் கணக்குகளில் நேற்றைய தூக்கத்தை இழந்திருப்பான்! என்ன செய்வது, அவனது தேசமாயிற்றே, ஆளப்போவது யாரென்று கணிக்காமல், கவலைப்படாமல் இருக்கமுடியுமா?

பெரும்பாலான கணிப்புகள் பிரதமர் நரேந்திர மோதியின் பாரதீய ஜனதா கட்சி  (BJP)  தலைமை தாங்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA)-ஐ இந்திய மக்கள் மீண்டும் ஆட்சிக்கு அழைத்திருக்கிறார்கள் எனவே காட்டுகின்றன. எனினும் இன்னும் மூன்று நாட்கள் மூச்சைப் பிடித்துக்கொண்டுதான் அரசியல் கட்சிகள் உட்கார்ந்திருக்கும். நாயுடுகாரு, டெல்லிக்கும் கொல்கத்தாவுக்கும் அடிக்கடி பறந்து ’மோதி-இல்லா’ சர்க்கார் ஒன்று அமைக்க மஹாவியூகம் அமைத்தது ஒரு பக்கம் இருக்கட்டும். (இப்படி குறுக்கும் நெடுக்குமாக அலைகிறாரே இந்த நாயுடு..ஏன்? எல்லாம் மே 23 அன்று சரியாகிவிடும்! – என்கிறது பாரதீய ஜனதா கட்சியின் கூட்டுக்கட்சியான சிவசேனா!) டெல்லியின் 41 டிகிரி வெயிலைத் தவிர்க்க, அங்குள்ள ஆந்திரபவன் ஏசி -ரூமில் இப்போது நாயுடு கொஞ்சம் அமர்ந்து, யோசிக்கட்டும்; ஆசுவாசப்படுத்திக்கொள்ளட்டும். யாராவது ஒரு கிளாஸ் கேரட்-புதினா ஜூஸ் போட்டு,  ஐஸ் க்யூப்ஸ் மேலே மிதக்கவிட்டு அவருக்குக் கொடுங்கப்பா.. பாவம், ரொம்பத்தான் தூக்கமின்றித் தவித்திருக்கிறார் மனுஷன். மம்தா பானர்ஜியும் ஒரு இடத்தில் அமைதியாக உட்கார்ந்து ரஸகுல்லா சாப்பிட்டு எத்தனை நாளாயிற்று? பளபளவென்று குஷனோடு ஒரு நாற்காலி மாயாவதியின் கனவில் வந்ததாகக் கேள்விப்பட்டோமே?  யாரோ காக்கிசட்டை, துப்பாக்கி சகிதம் துரத்துவதாக டெல்லியின் கேஜ்ரிவாலுக்கு தினமும் வருகிறதாமே, துர்சொப்பனம்? என்னப்பா, யாராவது கவலைப்படுகிறீர்களா! தேசத்துக்காக இதுகள் எத்தனைதான் கஷ்டப்படுவது, தியாகம் செய்வது,  ஒரு கணக்கு வேண்டாம்..

சிஎன்என்-நியூஸ் 18, இந்தியா டுடே ( India Today),  ரிபப்ளிக் (Republic TV), டைம்ஸ் நௌ,  நியூஸ் 24 போன்ற முக்கிய தேசிய டிவி சேனல்கள் இந்தக் களேபரத்தில் முக்கிய பங்கு வகித்தன. கீழே ஒரு வேகநோட்டம் !

2019 India  Parliament (Lok Sabha) Elections (Total 542 seats)  – Exit Polls:

Channel Predictions BJP/NDA Congress/UPA  Others
CNN News 18 336 82 24
India Today 339-365 77-108 69-95
Republic 305 124 113
Times Now 306 132 104
News X

News 24

 

 

242

350

 

 

 

 

164

95

 

 

 

136

97

 

மேலே உள்ள அட்டவணையில், News X, News 24 சேனல்களின் கணிப்புகளில் பெரும் வித்தியாசம் இருப்பதைக் கவனித்தீர்களா? இந்த நிறுவனங்கள் எத்தகைய வழிமுறைகளை, வாக்காளர் பகுதிகளைக் (நகர்ப்புற, கிராமப்புற என) கையாண்டு, இப்படி முடிவுக்கு வந்தன? சொல்ல மாட்டார்கள். ட்ரேட் ஸீக்ரெட்.

பொதுவாக, இவ்வகை எக்ஸிட் போல்-கள், வரப்போகும் உண்மையான முடிவுகளை  நெருங்குவதில்லை என்கிற விமரிசனங்கள் உண்டு. சமீபத்தில் இதுபற்றி இரு கருத்துக்கள் பத்திரிக்கைகளில் காணப்பட்டன. இந்திய துணை ஜனாதிபதி ஆந்திராவில் நேற்று பேசுகையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள், சரியான முடிவுகளாக அமையவேண்டியதில்லை என்றார். காங்கிரஸின்  ஷஷி தரூர் சொன்னது: துல்லியமாக சர்வே, கணக்கீடுகள் செய்ய வாய்ப்புள்ள, வளர்ந்துவிட்ட ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில்கூட, பெரும்பாலான எக்ஸிட் போல்கள், கணிக்கும் முயற்சியில் தோல்வியுற்றிருக்கின்றன.

இருக்கலாம். நமது நாட்டின் தேர்தல் முறைகள், நகர வாக்காளர்களைத் தாண்டி, கிராமப்புற வாக்காளர் மனநிலையைக் கணிப்பதில், உண்மையான வாக்களிப்பு விகிதங்களை அளவிடுவதில் காணும் நடைமுறை சிரமங்கள் மிக அதிகம். தங்களிடம் கேள்விகேட்கும் தேர்தல் சர்வே/டிவி நிறுவன ஊழியர்களிடம் வாக்காளர்களில் பலர் மனம் திறந்து உண்மையைச் சொல்லமாட்டார்கள்தான்.

இருந்தும், கடந்த 2014 பொதுத் தேர்தலில் பங்கேற்ற பல டிவி சேனல்கள்/நிறுவனங்களின் எக்ஸிட் போல்-களில், நேஷனல் சேனல்களில் ஒன்றான  ’நியூஸ் 24’ சேனலின் கணிப்புகள் கிட்டத்தட்ட சரியாக வந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தின. கீழே அட்டவணையைக் கொஞ்சம் பாருங்கள்:

2014 Elections

 

News24 (2014 Predicted)

Actual Results 2014

BJP (NDA)

 

340

336

 

Cong.(UPA)

 

70

60

 

Others

133

147

இந்தமுறை அறிவிக்கப்பட்டிருக்கும் கணிப்புகளில் ஏதாவது, உண்மையை, இறுதி முடிவுகளை நெருங்கக்கூடுமா? மே 23-தான் பதில் சொல்லவேண்டும்!

தமிழ்நாட்டு லோக்சபா தொகுதிகளின் தேர்தலுக்கான எக்ஸிட் போல்(கணிப்புகள்)-களை சில முக்கிய சேனல்கள் வழங்கியிருக்கின்றன. தமிழ்நாட்டில், ஜெயலலிதா இல்லாத அதிமுக சந்திக்கும் முதல் பொதுத் தேர்தல்.  என்ன சொல்ல இருக்கிறது? போறாக்குறைக்கு ‘பரிசுப்பெட்டி’ சின்னம்வேறு (டிடிவி தினகரன் அணி), அதிமுக வாக்குகளை நிச்சயம் உடைத்துவிட்டிருப்பதால், டிவி சேனல்களின் கணிப்புப்படி திமுக-வின் காட்டில்தான் மழை பெய்வதாகத் தெரிகிறது. எத்தனை வருடந்தான் ஸ்டாலினும் காத்திருப்பது!

தமிழ்நாடு(லோக்சபா தொகுதிகள் 39) எக்ஸிட் போல் கணிப்புகள் சில:

டைம்ஸ் நௌ:   திமுக+காங்கிரஸ்  29 , அதிமுக+பிஜேபி  9.

நியூஸ் 24 :   திமுக+காங்கிரஸ் 17, அதிமுக+பிஜேபி 12, மற்றவை 9.

இந்தியா டுடே:    திமுக+காங்கிரஸ் 34, அதிமுக+பிஜேபி  4.

இதில், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, ’இந்தியா டுடே’ கணிப்பு சரியாக இருக்கலாம்போலிருக்கிறதே!

**

8 thoughts on “இந்தியத் தேர்தல்கள் 2019 : EXIT POLL EXCITEMENTS !

  1. இவற்றை எல்லாம் எந்த அளவு நம்ப முடியும்? லாட்டரி சீட்டு மாதிரி! எப்படியும் இன்னும்மூன்று நாட்களில் தெரிந்துவிடப் போகிறது! பார்ப்போம்.

    Like

  2. @ ஸ்ரீராம்: என்ன இப்படிச் சொல்லிவிட்டீர்கள்? லாட்டரி சீட்டை ஆசையாகப் பார்ப்பவர் உலகில் உண்டே !

    Like

  3. எக்ஸிட் போல்களை முழுமையாக நம்பி விட முடியாது. இருந்தாலும் மோடி ஆதரவாளர்கள் ஸ்வீட் பாக்ஸிர்க்கும், 1000 வாலா சரவெடிக்கும் ஆர்டர் கொடுத்து விட்டதாக கேள்வி.

    Liked by 1 person

    1. @ Bhanumathy V:

      சரிதான். ஆளாளுக்கு ஒருவர் வாயில் ஒருவர் லட்டு திணிப்பதில் மும்முரமாகிவிடுவார்கள், குறிப்பாக நார்த் இண்டியாவில். மே 23-ம் தேதி ஸ்வீட் கடைக்காரர்கள், பட்டாசுக்கடைக்காரர்கள் பாடு கொண்டாட்டம்தான். டிவி சேனல்களின் டிஆர்பி-யும் எகிறும்!

      Like

  4. @ தேவகோட்டை கில்லர்ஜி:
    ஆம். இருபத்திமூணு சிலமணி நேரத்துல வருது..நல்ல சேதி சொல்லடி, ஜக்கம்மா!

    Like

Leave a comment