இந்தியா  இப்போது ஒரு விண்வெளி வல்லரசு

இன்று (27/3/19) காலையில், மூன்றே நிமிடங்களில் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்ட  ‘மிஷன் ஷக்தி’ (Mission Shakti)  எனக் குறிக்கப்பட்ட ஒரு சிறப்பு ஏவுகணை (ASAT) சோதனையில், இந்திய பாதுகாப்பு ஆய்வு மற்றும் உற்பத்தி மையம் (Defence Research and Development Orgnization of India) மற்றும் இந்திய விண்வெளி ஆய்வுக் கழக   (ISRO) விஞ்ஞானிகள், விண்வெளியில் சுற்றிக்கொண்டிருக்கும் ஒரு துணைக்கோளை (Live Low-orbiting Earth Satellite) துல்லியமாகத் தாக்கித் தகர்த்தெறிந்தனர். விண்வெளியிலேயே யுத்தம் செய்ய நேர்ந்தாலும் (Space Wars) ,  அதற்கான நிபுணத்துவம், வல்லமை  எங்களிடம் இருக்கிறதென உலகிற்கு அறிவித்திருக்கிறது இந்தியா.  ‘இந்தியா இப்போது ஒரு விண்வெளி வல்லரசு (Space Superpower)’ என்கிற  அறிவிப்பை தனது சிறப்பு செய்தியறிவிப்பு மூலம் நாட்டுமக்களுக்கு சற்றுமுன் தெரிவித்தார் பிரதமர்.
கடும் போர் ஆயுதங்களான ஏவுகணைகளில், பொதுவாக சில வகைகள் உண்டு: தரையிலிருந்து ஏவப்பட்டு போர்விமானங்களைத் தாக்கும் ஏவுகணைகள் (surface to air missiles), போர்விமானங்களிலிருந்து ஏவப்பட்டு விமான இலக்கை அழிக்கும் ஏவுகணைகள் (air to air missiles (அபிநந்தன் MIG-21-லிருந்து ஏவிய R-73 இத்தகையதுதான்), தரையிலிருந்து ஏவப்பட்டு சில ஆயிரம் மைல்கள் வரை  சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகள் (IRBMs-Intermediate Range Ballistic Missiles), மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் (Inter-Continental Ballistic Missiles) போன்றவை. இதுதவிர, குறுகியதூரமே சென்று தாக்கும் ஏவுகணைகள், போர்க்கப்பல்கள்/நீர்மூழ்கிக் கப்பல்களிலிருந்து ஏவப்படும் ஏவுகணைகள் எனவும் உண்டு.
     ASAT – என்றால் என்ன? Anti-Satellite Missiles. இது வேற லெவல் ! அதாவது  எதிர்கால விண்வெளி யுத்தத்திற்கான ஆயுதங்கள் என  சுருக்கமாகச் சொல்லலாம்.  ராணுவ மற்றும் அழிவு வேலைகளைச் செய்யும் எதிரிநாட்டு (சீனா போன்றவை எனக்கொள்க) துணைக்கோள்களைத் தாக்கி அழிக்கும் விண் ஆயுதங்கள் இவை. இத்தகைய விண்வெளி ஆயுத வல்லமைகொண்ட நாடுகளாக அமெரிக்கா, ரஷ்யா  மற்றும் சீனா  என மூன்று நாடுகள் மட்டுமே இதுநாள்வரை கோலோச்சிக்கொண்டிருந்தன. கவனியுங்கள் – பிரிட்டன், ஜெர்மனி, ஜப்பான், ஃப்ரான்ஸ் போன்ற தொழில்நுட்பமிகு நாடுகளும் இதில் இல்லை.  இந்த சிறப்பு நாடுகளின் வரிசையில் (Elite Club) இந்தியா இன்று சேர்ந்துகொண்டது என்பதே இதன் முக்கியத்துவம். ’ஒவ்வொரு இந்தியனும் நினைத்துப் பெருமைப்படவேண்டிய நாளிது’ என மேலும் சொல்லியிருக்கிறார் பிரதமர் மோதி.
**