மாண்டூக்ய உபநிஷதம்

வ்வொரு வேதமும் மூன்று முக்கிய பிரிவுகளைக்கொண்டது. ’சம்ஹிதை’ என்பது வெவ்வேறு தேவதைகளிடம் மனிதன் செலுத்தும் பிரார்த்தனைகள்பற்றியது. ’பிராம்மணம்’ என்பது ஒரு குறிக்கோள்கொண்டு செய்யப்படும் யாகங்களின் முறைகள், நியமங்கள் பற்றிச் சொல்வது. மூன்றாவது பகுதியே உபநிஷதங்கள் – சராசரி நிலையிலான பிரார்த்தனைகள், வேண்டுதல்களைத் தாண்டி, மனிதன் ஞானநிலை நோக்கித் திரும்புகையில் இவை வழிநடத்துகின்றன. பிரும்மம் அல்லது இறுதி உண்மை எனும் ஆன்மீகத்தின் உச்சப்புள்ளிபற்றி அவனோடு நின்று ஆய்பவை, அறியாத உன்னதத்தின் பாதையற்ற பாதையில்   அழைத்துச்செல்பவை.. அணுவின் அணுவாக, சூட்சுமத்தின் சூட்சுமமாக, வெளியின் வெளியாக இப்படி ஏதோ ஒரு மர்மம் இந்த பிரபஞ்சமுழுதும் விரவிக்கிடக்கிறது.. அதற்குள் இருக்கிறது எல்லா ரகசியங்களும் . எதனை அறிந்தால் எல்லாவற்றைப்பற்றியும் அறிந்ததாக ஆகிவிடுமோ, அதனை நோக்கி மனிதனை அழைத்துச் செல்வது உபநிஷதம் ‘என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

‘ஓங்காரம்’  என்பது இறைசக்தியின் சாரம் எனச் சொல்கிறது இந்த மாண்டூக்ய உபநிஷதம். அதர்வண வேதத்தின் இறுதியில் வரும் உபநிஷதம்  இது. ஓங்காரம், பிரணவம் என அழைக்கப்படும் ’ஓம்’ எனும் ஒலியே ஆதி ஒலி. ஆதிமந்திரம். அகரம், உகரம், மகரம் ஆகிய மூன்று ஒலிநிலைகளை (primordial acoustic forms) தன்னகத்தே கொண்டது. மிகச் சரியாக, உணர்வுபூர்வமாக  உச்சரிக்கப்படவேண்டிய மந்திரம். மேலோட்ட உச்சரிப்பில் பிரயோஜனமில்லை. ‘அ’ எனும் ‘அகரம்’ நாக்கின் அடிப்பகுதியான தொண்டைக்குழியில் ஆரம்பிக்கிறது. அகர சப்தம் பிற சப்தங்களில் இருந்து விலக்கமுடியாமல் ஒன்றியிருப்பதால் அதிமுக்கியமானது, ஆதாரமானது. கீதையில் தன்னைப்பற்றி அர்ஜுனனிடம் சொல்கிறான் கருநீலக்கண்ணன் : ’அக்ஷராணாம் அகாரோஸ்மி’. (அட்சரங்களில் நான் ’அ’  எனும் அகரம்!)  ‘உ’ எனும்  ‘உகரம்’  நாக்கின் மேல் கடக்கிறது. ’ம்’ எனும் ’மகரமாக’ உதட்டு நுனியில் வந்து முடிகிறது ’ஒம்’  எனும்  மந்திரம். அகரத்தில் மென்மையாகத் துவங்கி, உகரத்தில் ஒலி மிகுதியாகி, பின் மென்மையாக   ..ம்.. என முடியும் ஒலிநிலைகள். பிரும்மம், பிரபஞ்சம், மனிதன் என்கிற தத்துவத்தை தன்னுள்ளே கொண்டு,  ’ஓம்’ என ஒலித்து அதிர்வலைகளை உள்ளும் வெளியுமாக  எழுப்பும் உன்னதம்.

யாராலும் எழுப்பப்படாத அனாஹத த்வனி (ஆதியும் அந்தமுமில்லா சப்தம்) ஓங்காரம். இந்தப் பிரபஞ்சத்தில் பூதம் (Bootham) அதாவது கடந்தவை அல்லது மறைந்தவை, பவத் (Bhavath) எனப்படும் இருப்பவை, பவிஷ்யத்  (Bhavishyath) எனப்படும் ‘இனி வரவிருப்பவை’ மற்றும் ஸர்வம்  (அனைத்தும்) ஓங்காரமே  என்கிறது தன் முதலாவது ஸ்லோகத்தில் இந்த உபநிஷதம். பிரபஞ்சத்தில் ஓங்கார சப்தம் இடைவிடாது கேட்டுக்கொண்டிருப்பதாயும், தவயோகிகளால் அதனைக் கேட்க முடியும் எனவும் கூறப்படுகிறது.

{சத்தியார் கோயில் இடம்வலம் சாதித்தால்
மத்தியானத்திலே வாத்தியம் கேட்கலாம் ..

–இது திருமூலர். அதாவது கோவிலென இருக்கும்  இந்த நல்லுடம்பில் சிரத்தை, இறையுணர்வோடு இடது வலமாகப் பிராணாயாமம் (மூச்சுப்பயிற்சி) நெடுங்காலம் முறையாகச் செய்துவந்தால், பகலிலும் இறைஒலி கேட்கும்  எனச் சொல்லிச்சென்றார்.}

அடுத்த ஸ்லோகத்தில் ’ஸர்வம் ஹ்யேதத் ப்ரஹ்ம, அயமாத்மா ப்ரும்ஹ, ஸோயமாத்மா சதுஷ்பாத்…’ என விஷயத்தைத் தெளிவாக்க முயல்கிறது. இந்த ஆன்மா ப்ரும்மம், இப்படி (பிரபஞ்சத்தில் காணப்படுகிற) எல்லாமும் ப்ரும்மமே (பரம்பொருளே) எனச் சொல்கிறது.  எந்த மூலத்திலிருந்து ஒன்று உண்டாக்கப்படுகிறதோ அது, அந்த மூலத்தின் குணாதிசயங்களைக் கொண்டிருக்கும். ஆதலால் இந்தப் பிரபஞ்சம் முழுதும் மனிதன் உட்பட எல்லா உயிர்களும், ஜடப்பொருட்களும்கூட அந்த இறையின் குணக்கூறுகளைக்கொண்டுதானிருக்கும். அதனால்தான் அனைத்தும் ப்ரும்மமே எனச் சொல்லப்படுகிறது இங்கே. இறைசக்தி மனிதனில் பிரகாசிக்கையில் அது ’ஆன்மா’ என அழைக்கப்படுகிறது.

(தேனுக்குள் இன்பம் கருப்போ சிவப்போ
வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர்
தேனுக்குள் இன்பம் செறிந்திருந்தார்போல்
ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே

-திருமூலர் இங்கே சிவவாக்கியர் மொழியில் நறுக்குத்தெறித்தார்போல் பேசுகிறார்)

இந்த மாண்டூக்ய உபநிஷதத்தில் வரும் ’அயமாத்மா ப்ரும்ஹ’ ( ’(எனக்குள்ளிருக்கும்) இந்த ஆன்மா ப்ரும்மம்’) என்பது மஹாவாக்கியம் எனக் கொள்ளப்படுகிறது.

அடுத்த ஸ்லோகம் ஆன்மாவின்  நான்குவித பரிமாணங்களைக் குறிப்பிடுகிறது. ‘ப்ரதம: பாத: வைஸ்வானர.. ‘ – அதாவது ஆன்மா தன் முதல் பரிமாணத்தில் ‘வைஸ்வானரன்’ என அழைக்கப்படுகிறது.. வைஸ்வானரன் என்பது விழிப்புநிலையில் உள்ளவன். இரண்டாவது நிலையை ‘தைஜஸன்’ அதாவது ‘கனவுநிலையில் இருப்பவன்’ என்கிறது. மூன்றாவது பரிமாணமாக ப்ராஜ்ஞன் – ஆன்மா ’ஆழ்ந்த உறக்கநிலை’யில் இருப்பவனாகக் கொள்ளப்படுகிறது.

ஆன்மாவின் விழிப்புநிலை உணர்வுபூர்வமாக, புறவயமாக இருக்கிறது.  தான் வாழ நேர்ந்திருக்கிற வெளி உலகை, அதன் சூழ்வெளியான மாபெரும் பிரபஞ்சத்தை ஆன்மா, இந்நிலையில் அனுபவிக்கிறது. ஆதலால் பிரபஞ்சத்தின் ஒரு பகுதியுமாகிறது.

இரண்டாவது நிலையான தைஜஸன் (கனவுநிலை), தன் உணர்வுகளை அகமுகமாகத் திருப்பிவிடுகிறது. இங்கே புறவுலகு மறைந்து, மனவுலகு தெரிய,  அதனை அனுபவிக்கிறது ஆன்மா.

மூன்றாவது பரிமாணமாக சொல்லப்படுவது,  ‘ப்ராஜ்ஞன்’ (ஆழ்உறக்கநிலை)- இதனை, புறஅனுபவங்கள் ஒடுங்கி, உணர்வு உட்புறமாகத் திரண்ட நிலை என்கிறது. அனுபவங்கள், உணர்வுகள் ஒடுங்கிய, மறைந்துவிட்ட நிலையில் ஆன்மா ‘ஆனந்தமய:’ –ஆனந்த ரூபமாக, ‘ஆனந்தபுக் ஹி’ – ஆனந்தத்தை அனுபவிப்பதாக இருக்கும் நிலை என்கிறது.

இதன் நான்காவது நிலையாக ஒன்றுள்ளது. ஆழ்ந்த கவனிப்பை, அறிதலை அது வேண்டுகிறது. இதனை இந்த உபநிடதம் இப்படி விளக்குகிறது: நான்காவது நிலை எனப்பட்டாலும், முதல் மூன்று நிலைகளை உள்ளடக்கியதும், அதே சமயம் அவற்றைத் தெளிவாகக் கடந்தநிலையுமாகும். இது புறமுக நிலையல்ல, அகமுகநிலையல்ல, இரண்டும் கலந்த உணர்வுகுவிந்த நிலையுமல்ல. இதனைக் காண இயலாது. புரிந்துகொள்ளமுடியாது. அடையாளங்கள் இல்லாத, விளக்கமுடியாத, சிந்தனைக்கு அப்பாற்பட்ட ஒரு உன்னத நிலை. மங்கலமானது, சாந்தமே வடிவானது, ’த்வைதம் இல்லாதது’, அதாவது ‘இரண்டற்றது’. {‘த்வைதம்’ (state of duaity) என்பது : நல்லது, கெட்டது/ பாவம், புண்ணியம்,/ நிலையான, நிலையற்ற/ போன்ற இரண்டிரண்டாக, ஒன்றுக்கெதிராக இன்னொன்றைப் பார்க்கும்/புரிந்துகொள்ளும் மனநிலை}. அத்வைதம் (state of non-duaity) இது . மனிதனின் உண்மையான ‘இயற்கை நிலை’ ஆதி நிலை இதுவே. தனக்குள்ளிருக்கும் ஆன்மாவை இவ்வாறு ‘அறிபவன்’ இந்நிலையில் ஒளிர்கிறான்.. ப்ரும்ஹத்தை உணர்ந்தவனாக ஆகிறான். ..

வர்ணனையை மிஞ்சிய இந்த ஆன்மாவை (ப்ரும்மத்தை) எழுத்துக்களில், சொல்லாகக் குறிப்பிட நேர்ந்தால், அதுவே ’ஓம்’ எனும் அகர, உகர, மகர ஒலி அடுக்குகளைக்கொண்ட ஓங்காரம்.

மேலும் ஓங்காரத்தை விளக்கிச் செல்கிறது:

ஓம் எனும் மந்திரத்தின் முதற்பகுதியாகிய ’அ’ என்கிற அகரம், ஆன்மாவின் முதல்நிலையான விழிப்புநிலைக்கு ஒப்பிடப்பட்டுள்ளது. அகரம் எல்லா சொற்களிலும் கலந்துள்ளது. அதேபோல, விழிப்புநிலையும் மற்ற இரண்டு நிலைகளோடு சம்பந்தப்பட்டுள்ளது. கனவுகளாக வெளிப்படும் ஆழ்மனப்பதிவுகளுக்கு விழிப்புநிலை அனுபவங்களோடு தொடர்புண்டு. ஆழ்ந்த உறக்கத்திலும் விழிப்புநிலை அனுபவங்கள், தனித்தனியாகத் தெரியாமல் உணர்வுத் திரளாக மறைந்திருக்கின்றன. அகரம் ஓங்காரத்தின் ஆரம்பநிலையாக இருப்பதுபோல, விழிப்புநிலை ஆன்மாவின் (பிரும்மத்தின்) ஆரம்பநிலையாக உள்ளது.

ஓங்காரத்தில் இரண்டாவது நிலையாக வரும் ’உ’ எனும் ‘உகரம்’ உரக்க உச்சரிக்கப்படுகிறது. ஆன்மாவின் இரண்டாவது நிலையான கனவுநிலையோடு ஒப்பிடப்பட்டுள்ள இது, உயர்வானதாக இங்கு குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஏனெனில், கனவுநிலையில், உணர்வு மனம் (Conscious mind) ஓய்ந்துவிடுகிறது. ஆழ்மனம் (Subconscious mind) எனும் மனதின் பெரும்பகுதி கனவுநிலையில் பிரதான பங்கு வகிக்கிறது. இதன் எல்லைகள் மிகப் பரந்தவை. இது விழிப்பு நிலையின் வெளிஉலக அனுபவங்களோடும், மனதின் ஆசைகள், லட்சியங்கள், பயங்கள் என்பதோடு, எதிர்காலம், இறைவன் என்றெல்லாம் விஸ்தாரமாக வெவ்வேறுதளங்களில் சம்பந்தப்பட்டுள்ளது. இதைப்போலவே ஓங்காரத்தின் நடுவில் வரும் ’உ’ எனும் உகரம், ’அ’ எனும் ஆரம்ப, மற்றும் ‘ம்’ எனும் இறுதிநிலைகளோடு சம்பந்தப்பட்டுள்ளது.

ஓங்காரத்தின் ‘ம்’ என்பது மூன்றாவது பகுதி. இது , ஆழ்ந்த உறக்கத்திலிருக்கும் ஆன்மாவின் மூன்றாவது நிலைக்கு ஒப்பிடப்பட்டுள்ளது. ஓம் எனும் மந்திரத்தின் ‘அ’வும், ‘உ’வும்,  ‘ம்’-ல் இணைகின்றன. கலக்கின்றன. அதைப்போலவே, ஆன்மாவின் முதல் இரண்டு நிலைகளான விழிப்புநிலை, கனவுநிலை ஆகியவை, மூன்றாவது நிலையான ஆழ்ந்த உறக்க நிலையில் ஒடுங்குகின்றன, நிரம்புகின்றன. ஓம் எனும் மந்திரத்தில் ‘ம்’ –ஆனது,  ‘அ’ –வையும், ‘உ’வையும் தனக்குள் அடக்கிக்கொள்கிறது. அதைப்போலவே,  ஆன்மாவின் ஆழ்ந்த உறக்கநிலை – விழிப்பு மற்றும் கனவு நிலைகளை தன்னகத்தே கிரகித்துக்கொண்டு, தனக்குள் நிரப்பி, திரளாக வைத்திருக்கிறது.

இவற்றைத்தாண்டியும் பிரணவ மந்திரத்தின் நான்காவது பகுதி ஒன்றிருக்கிறது. ஒலி இல்லாததாய்த் தெரிவது. ‘பகுதி’ என மற்றவற்றைப்போல் அளவிட, விளக்கிவிடமுடியாது. சொல், செயல், உணர்வு கடந்தது. பிரபஞ்ச உணர்வையும் கடந்ததாக, மங்கலமானதாக இது அறியப்படுகிறது. ’ஓம்’ என மந்திரத்தை உச்சரித்து முடித்தபின் மீண்டும் ’ஓம்’ என ஆரம்பிக்குமுன் வரும் இடைவெளி இது. சாந்தநிலை. ‘ஓம்’ எனும் ஓங்காரம் ‘அ’, ‘உ’, ‘ம்’ மற்றும் நான்காவதான  ‘சாந்திநிலை’ (அமைதிநிலை)யும் கூடியது. இதனை இவ்வாறு அனுபூதியாக அறிபவன், உணர்பவன் ஆன்மாவை ஆன்மாவால் (ப்ரும்மத்தை ப்ரும்மத்தால்) அடைந்தவனாகிறான் என்கிறது இந்த உபநிஷதம்.

Picture courtesy: Internet/ Google

**

5 thoughts on “மாண்டூக்ய உபநிஷதம்

  1. படித்த கையோடு மறந்து விடுகிறது! ஏற்கெனவே சில புத்தகங்கள் ஆரம்பித்து ஆரம்பித்து நிற்கின்றன! மனதில் ஏகப்பட்ட ஓட்டைகளுடன் ஒரு சல்லடை!

    இந்த ஜென்மத்தில் எனக்கு கடைத்தேறல் இல்லை என்று நினைக்கிறேன்.

    இதுபோன்ற பின்னூட்டங்கள் முதலாவதாக வரக்கூடாது என்று ஜி எம் பி சார், ஜீவி ஸார் முதலானோர் நினைப்பார்கள். எனவே முதலாகப் படித்து விட்டாலும் கருத்தைப் பின்னர் இடுகிறேன்.

    Like

    1. @ Sriram:
      //..இதுபோன்ற பின்னூட்டங்கள் முதலாவதாக வரக்கூடாது என்று ஜி எம் பி சார், ஜீவி ஸார் முதலானோர் நினைப்பார்கள். ..//

      நான் அப்படி நினைக்கவில்லை. எந்தப் பின்னூட்டமும் முன்னாலும் ஓடலாம், பின்னாலும் நடக்கலாம்! பிரச்னையேதுமில்லை. பின்னூட்டம், கருத்தென்பது ஒருவரின் ஒரு குறிப்பிட்ட நேரம், சமயத்தின் மனநிலையாகவும் இருக்கலாம். இது ஒன்றும் ‘இறுதி அறிக்கை’ இல்லையே! புரிதல் பின்னரும் நிகழலாம். அது நம் முனைப்போடு , வேறொன்றின் கையிலும் இருப்பதாய்த் தெரிகிறது. ஆதலால் ’..இந்த ஜென்மத்தில் எனக்குக் கடைத்தேறல் இல்லை..’ என்று சொல்லி முடிக்கப் பார்க்காதீர்கள். அப்படியெல்லாம் தப்பிக்கமுடியாது!

      Like

  2. டிடி தவிர வேறு பின்னூட்டங்கள் இன்னும் வரவில்லை. என்றாலும் இதற்கு மேலும் காத்திருக்காமல் என் பின்னூட்டத்தைப் போட்டு விடுகிறேன்!

    Liked by 1 person

Leave a comment