ப்ரித்வி ஷா – கிரிக்கெட் வானின் புது நட்சத்திரம் ?


ஷா ஒரு Cricket prodigy-யா? அப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது. இதுவரை இந்த இளைஞனைப்பற்றி கேள்விப்பட்டு வருவதெல்லாமே – 14 வயது பையனாக மும்பையில் ஸ்கூல் கிரிக்கெட்டில் உலக சாதனை, இந்திய தேசிய சேம்பியன்ஷிப்களான ரஞ்சி மற்றும் துலீப் டிராஃபி தொடர்களில் முதல் மேட்ச்சிலேயே சதங்கள், U-19 உலகக்கோப்பையை வென்றுகொடுத்தது, இந்தியா-ஏ அணிக்காக வெளிநாடுகளில் காட்டிய திறன்மிகு ஆட்டம் போன்றவை- அவர் இந்தியாவின் ஒரு வருங்கால நட்சத்திரம் என்றே வெளிச்சக்கீற்றுகளால் கோடிட்டு வந்திருக்கிறது. 04-10-18 அன்று, குஜராத்தின் ராஜ்கோட்டில் ஆரம்பித்த வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல்நாளே அவர் ஆடிய ஆட்டமும், அந்தவழியில்தான் சென்றுள்ளது – இன்னும் சர்வதேச அரங்கில் பையன் வெகுதூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது என்ற போதிலும்.

முதலில் இந்தியா பேட் செய்ததால் அன்று காலையிலேயே நிகழ்ந்தது ப்ரித்வி ஷாவின் அரங்கேற்றம். வெஸ்ட் இண்டீஸின் ஷனன் கேப்ரியல் (Shanon Gabriel) வீசிய தொடரின் முதல்பந்தை எதிர்கொண்டு ஆடத் துவங்கிய, சிறுவனாகத் தோன்றும் 18 வயதுக்காரரின் மீது அனைவரின் கவனமும் குவிந்திருந்தது. ஒரு பள்ளிப்பையனின் துறுதுறுப்பும், பதின்ம வயதிற்கே உரிய உற்சாகமுமே அவரிடம் மிளிர்ந்தது, பார்ப்பதற்கு ரம்யமாக இருந்தது. இன்னொரு துவக்க ஆட்டக்காரரான கே.எல்.ராஹுல் முதல் ஓவரிலேயே கேப்ரியலிடம் விழுந்தது எந்த ஒரு தாக்கத்தையும் ஷாவிடம் ஏற்படுத்தவில்லை. ரன்கள் துள்ளிக்கொண்டு புறப்பட்டன அவருடைய பேட்டிலிருந்து. சிங்கிள், இரண்டு-ரன்கள் என வேக ஓட்டம் (அந்தப்பக்கம் ரன் –அவுட் ஸ்பெஷலிஸ்ட் புஜாரா இருந்தது நமக்குத்தான் பயத்தைக் கொடுத்தது!). இடையிடையே ஸ்கொயர் கட், லேட்-கட், புல், ஹூக் ஷாட் என வெரெய்ட்டி காண்பித்தார் இந்த இளம் புயல். லன்ச் இடைவேளையின் போது 70+ -ல் இருந்தவர், திரும்பி வந்து 99 பந்துகளில் தன் முதல் சதத்தை விளாசி முத்திரை பதித்தார். முதல் டெஸ்ட் இன்னிங்ஸில் துவக்க ஆட்டக்காரராக ஒரு அதிரடி சதம் என்பது ஒரு பதின்மவயதுக்காரரிடமிருந்து வருகையில், அதைப் பார்ப்பதின் சுகமே தனி.

கூடவே, வெஸ்ட் இண்டீஸின் பௌலிங் தாக்குதல் அவ்வளவு தரமாக இல்லை என்பதையும் கவனித்தே ஆகவேண்டும். அவர்களின் இரண்டு டாப் வேகப்பந்துவீச்சாளர்களான கெமார் ரோச் (Kemar Roach) மற்றும் கேப்டன்/ஆல்ரவுண்டர் ஜேஸன் ஹோல்டர் (Jason Holder) –ஆகியோர் இந்த முதல் போட்டியில் வெவ்வேறு காரணங்களினால் ஆட இயலவில்லை. ஆதலால் பௌலிங்கில் ஆக்ரோஷம், தாக்கம் குறைவுதான். கூடவே ராஜ்கோட் பிட்ச்சும் பேட்டிங்கிற்கு வெகுவாகத் துணைபோகிறது. ஆனால், இதெல்லாம் தன் முதல் டெஸ்ட்டை ஆடுபவரின் தப்பில்லையே! டெஸ்ட் தொடர் என்கிற பெயரில் இந்தியா புலம்பிவிட்டு வந்த இங்கிலாந்து தொடரிலேயே, கடைசி இரண்டு போட்டிகளுக்கான அணியில் ப்ரித்வி ஷா சேர்க்கப்பட்டிருந்தார்தான். ஆனால் நம்முடைய சூப்பர்கோச் ரவிசாஸ்திரியும், கேப்டனும் வாய்ப்பளித்தால்தானே விளையாடமுடியும்? ’நான் அப்போதே தயாராகத்தான் இருந்தேன். இப்போதுதான் வந்தது வாய்ப்பு’ என்கிறார் அவர்.

இப்போதிருக்கும் வெஸ்ட் இன்டீஸ் அணி, இந்தியாவின் டெஸ்ட் தரத்திற்கு அருகில்கூட வரமுடியாது என்பதும் உண்மை. ஆயினும் உன்னிப்பாகக் கவனித்தோருக்கு, ப்ரித்வி ஷாவின் முதல் டெஸ்ட் இன்னிங்ஸ் அவர் எத்தகைய பேட்ஸ்மன் என்பதற்கான அடையாளங்களைக் கொண்டிருந்தது தெரியவரும். இயற்கையாகவே அவருக்கு அமைந்திருக்கும், அலட்டிக்கொள்ளாத தன்மையும், அதே சமயத்தில் சரியான பந்தைத் தேர்ந்தெடுத்துத் தாக்கும் லாவகமும் பளிச்சிடுகின்றன. வெஸ்ட் இண்டீஸின் தரமான வேகப்பந்துவீச்சாளரான ஷனன் கேப்ரியல், ராஜ்கோட்டின் வெப்பத்திலும் அவ்வப்போது தன் வேகத்தினாலும் (140-143 கி.மீ), எகிறும் பௌன்ஸர்களாலும் அவரை சீண்டிப் பார்த்தார். ஆனால் ஷா அவரையும், ஸ்பின்னர் தேவேந்திர பிஷுவையும் ஒரு அதிகாரத்துடன் விளையாடியவிதம், ஏதோ இதற்குமுன்னர் ஏகப்பட்ட போட்டிகளின் அனுபவப் பின்னணியில் விளையாடியது போன்றிருந்தது.

ஷாவின் இந்த இன்னிங்ஸைக் கூர்ந்து கவனித்திருப்பார்போலும் வீரேந்திர சேஹ்வாக். தன் ட்விட்டர் பக்கத்தில், அவருக்கே உரிய பாணியில் இப்படி ஹிந்தியில் எழுதியிருக்கிறார்: லட்கே மே(ன்) தம் ஹை(ன்)! (பையனிடம் தெரியுது ஒரு வீரம் ! – என இதைத் தமிழ்ப்படுத்தலாம்). எகிறும் வேகப்பந்துகளை பாய்ண்ட் மற்றும் தேர்ட்-மேன் திசைகளில் அனாயாசமாகத் தூக்கி விளாசிய விதத்தில் சேஹ்வாக் தெரிந்ததாக சில வர்ணனையாளர்கள் ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் முன்னாள் இந்தியக் கேப்டன் சௌரவ் கங்குலி எச்சரிக்கிறார்: ’சேஹ்வாக் ஒரு ஜீனியஸ். அவரோடு இந்தப் பையனை ஒப்பிட வேண்டாம். ஆனால் பதற்றமின்றி எளிதாக விளையாடிய விதம், சிலவித ஷாட்களை சர்வசாதாரணமாக ஆடிய முறை, லாவகம் இவற்றைப் பார்க்கையில் இவருள்ளிருக்கும் தரம் தெரிகிறது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற மைதானங்களில் ஷா முதலில் ஆடவேண்டும். அப்போதுதான் ஒரு முடிவுக்கு வரமுடியும். இப்போதைக்கு, வரவிருக்கும் ஆஸ்திரேலிய தொடரில் ஷா நன்றாக விளையாடுவார் என்றே தோன்றுகிறது’ என்றிருக்கிறார்.

2008-லேயே இவரது ஜூனியர் லெவல் ஆட்டத்தைப் பார்த்த டெண்டுல்கர், ’இவன் ஒரு நாள் இந்தியாவுக்காக ஆடுவான்!’ என்றிருக்கிறார். சச்சின் டெண்டுல்கரின் ஆரம்ப கிரிக்கெட்காலத்தோடு ப்ரித்வி ஷா-வின் கிரிக்கெட் ஆரம்பங்களும் ஏனோ கிட்டத்தட்ட ஒத்துப்போகின்றன என்பது கொஞ்சம் வியப்பைத் தருகிறது! இருப்பினும், இப்போதே ஒரேயடியாக ஆஹா..ஓஹோ என நமது மீடியாவோடு சேர்ந்து புகழ்ந்து தள்ளாமல், அமைதியாக இவரைக் கவனிப்பதே உகந்தது. வாய்ப்புகள் இவர்முன் வரும்போது, வெவ்வேறு நாடுகளில், பந்து நன்றாக ஸ்விங் ஆகும் பிட்ச்சுகளில் ஆவேசமான வேகப்பந்துவீச்சுக்கெதிராக எப்படித் தன்னை நிறுவப்போகிறார் என்பதைக் காலம் நமக்குக் காட்டும். எனினும், இப்போதைக்குச் சொல்லிவைப்போம்: ‘Very well done, தம்பி!’
Picture courtesy: Internet
*

8 thoughts on “ப்ரித்வி ஷா – கிரிக்கெட் வானின் புது நட்சத்திரம் ?

    1. @ ஸ்ரீராம்: வேஸ்ட்டா! என்ன இப்படி தீர்ப்பு எழுதிவிட்டீர்கள். இன்னும் நிறைய வரவிருக்கிறதே.. ஒருவேளை, ஒரு-நாள் போட்டிகளில் இதே டீம் விளாசிவிட்டால் ..?

      Like

    1. @முத்துசாமி இரா : இந்தப் பையனை ஒரு-நாள் போட்டிக்கான அணியிலும் சேர்த்தால் நன்றாக இருக்கும். அனேகமாக மாட்டார்கள்! அங்கே ஏகப்பட்ட போட்டி..

      Liked by 1 person

    1. @newsigaram7 : வருகை, கருத்துக்கு நன்றி.
      உலகக்கோப்பையை நோக்கிச் செல்வோம்!

      Like

    1. @Balasubramaniam G.M : இப்போது அதிகம் இவரைப் பார்க்கமுடியாதுபோலிருக்கிறதே. இன்னும் ஒரு டெஸ்ட்தான் பாக்கியிருக்கிறது (ஹைதராபாத் 12-10)

      Like

Leave a comment