அந்த நாட்டிலெல்லாம் அப்படி ..


Picture courtesy: Internet

ராஜநீதி அல்லது அரசியல் என்பது, உலகின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு விதமாக இயங்குகிறது. வித்தியாச வடிவங்கள், மதிப்பீடுகளைக் கொண்டுள்ளது. பின்னே? நம்ப நாட்டுக் குப்பைமாதிரியா இருக்கும்? –என்கிறீர்கள். பாயாதீர்கள். மேலே படியுங்கள்.

வளர்ந்த நாடொன்றின் தென்மேற்குப்பகுதியில் ஒரு நகரம். அதன் முனிசிபல் கார்ப்பரேஷன் அரசியலைக் கொஞ்சம் பார்ப்போமா? என்ன? முனிசிபல் கார்ப்பரேஷனா? இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா என்கிறீர்கள். உங்களைச் சொல்லிக் குற்றமில்லை. ஆட்டைக்கடித்து, மாட்டைக்கடித்து, நாட்டையே பிய்த்து வாயில்போட்டு, தினம் மென்று தின்னும் ’அரசியல்வாதி’களோடுதானே உங்களின் சகவாசம்! மேயர், கௌன்சிலர் போன்ற அடிநிலை அரசியல்வாதிகளைப்பற்றிப் பேசுவதே உங்களுக்கு கௌரவக் குறைச்சலாக இருக்கும்தான். இருக்கட்டும். கொஞ்சம் பொறுமை காட்டுங்கள். நாம் இங்கே பார்ப்பது, உலகின் இன்னொரு மூலையில், அடிமட்டத்தில், அரசியல் நடத்தைகள், ஒழுக்க மதிப்பீடுகள்பற்றி.. அப்படியென்றால்? நம் நாட்டிலும் ஒருகாலத்தில் அரசியல்வாதிகளிடமும், பண்பு, நன்னடத்தை, மரியாதை போன்ற குணங்களெல்லாம் காணப்பட்டதுதான். ஆனால் இப்போது.. சரி, சரி, விடுங்கள். மேலே பாருங்கள்.

அந்த நகரின் ஒரு இளம் பெண் கவுன்சிலர். முனிசிபல் கமிட்டி பெரிசுகளால் சமீபத்தில் விமரிசிக்கப்பட்டுக் கண்டிக்கப்பட்டிருக்கிறார். அவரால் அதைத் தாங்கிகொள்ள முடியவில்லை. என்ன தவறு செய்துவிட்டார் அந்தப் பெண்மணி? ஊர்ப்பணத்தில் கை வைத்து பிடிபட்டுவிட்டாரா, வேறேதேனும் ஏமாற்றா, மோசடி, பித்தலாட்டமா? இல்லை. பெரிசு யாரையாவது அவதூறாகப் பேசிவிட்டாராக்கும்? அப்படியெல்லாமில்லை. பின் என்னதான் செய்துவிட்டார், ‘தண்டிக்கப்படும்’ அளவுக்கு?

சமீபத்தில், முனிசிபல் கமிட்டியின் முக்கியமான மீட்டிங் ஒன்றில் எழுந்து நின்று, ஒரு பொதுப்பிரச்சனைபற்றி பேச ஆரம்பித்திருக்கிறார், அந்த இளம் பெண் கௌன்சிலர். நகர நிர்வாகத்தின் பெரியவர்கள் -பழம்தின்று கொட்டையும் போட்டவர்கள், அனைவரும் ஆண்கள்- உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள். இடையே கௌன்சில் சேர்மன் குறுக்கிட்டு ’உங்கள் வாயில் என்ன? எதையாவது சாப்பிட்டுக்கொண்டிருக்கிறீர்களா?’ என்று கேட்டிருக்கிறார். அந்தப் பெண் கவுன்சிலர் பௌவ்யமாக (அந்த நாட்டின் ஆண்/பெண்கள் மென்மையாகப் பேசுபவர்கள், பௌவ்யத்திற்குப் பேர்போனவர்கள்) அவரைப் பார்த்து மரியாதையாகக் குனிந்துவிட்டு பதில் சொல்லியிருக்கிறார்: ’சாரி..ஆமாம். இருமல் மாத்திரை. ஒரே இருமல் எனக்கு. கமிட்டி மீட்டிங்கில் இடையிடையே இருமி உங்களுக்கெல்லாம் சிரமம் கொடுத்துவிடக்கூடாதே என்றுதான் வாயில்..’ என்று அவர் முடிக்கக்கூட இல்லை. சேர்மன் மற்றும் ஏனைய கௌன்சிலர்களின் கண்களில் அனல். முனிசிபல் கௌன்சிலின் ஒரு அதிகாரபூர்வ மீட்டிங்கில் எப்படிப் பேசுவது, நடந்துகொள்வது என்று இந்தப் பெண்ணுக்குத் தெரியவேண்டாம்? வாயில் எதையாவது போட்டுக்கொண்டா எங்களுக்கு முன் பேசுவது? மதிப்பிற்குரிய இந்த சபையின் பாரம்பரியம், கௌரவத்தை நொடியில் குலைத்துவிட்டாளே இந்தப் பெண்– என்பதே அவர்களின் சீற்றத்துக்கான காரணம்.

என்ன நடந்தது அப்புறம்? அந்த மீட்டிங்கை உடனே நிறுத்தினார் சேர்மன். சீனியர் மெம்பர்கள்கொண்ட ஒரு சிறு கமிட்டியை உடனே அமைத்துத் தனியாக ஒரு மீட்டிங் நடந்தது இன்னொரு அறையில். இந்த அபச்சாரத்தைச் செய்த பெண்ணுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்? இறுதியாக வந்தது முடிவு. அந்தப் பெண் கவுன்சிலர், கவுன்சில் சேர்மன் மற்றும் மெம்பர்கள் முன் மன்னிப்புக் கேட்கவேண்டும். வெறுமனே வருத்தம் சொல்லித் தப்பிக்க முடியாது. தன் தவறுக்கு வருந்தி முறையாக எழுதப்பட்ட மன்னிப்புக் கடிதத்தை எல்லோர் முன்னும் பணிந்து அவர் வாசிக்கவேண்டும் என்பதே அது.

தான் நிலைமையை விளக்கியும் தண்டனையா? இது சரியில்லை. மன்னிப்புக் கேட்க முடியாது என மறுத்துவிட்டார் அந்தப் பெண் கௌன்சிலர். அந்த நாட்டில் இதெல்லாம் (பெண் ஒருவர், அதிகாரபூர்வமாகக் கொடுக்கப்பட்ட தண்டனையை மறுப்பது என்பது) அபூர்வத்திலும் அபூர்வம். குற்றத்தின்மேல் குற்றம். சேர்மனும் மற்றவர்களும் அதிர்ச்சி அடைந்தார்கள். ’சபைநீதி’யையும் அதிகாரத்தையும் நிலைநாட்டவேண்டி, சேர்மன் அந்தப் பெண் கவுன்சிலரை உடனே கௌன்சிலை விட்டு வெளியேற உத்தரவிட்டார். வெளியேறிய அந்தப் பெண் வழக்கத்துக்கு மாறாக, மோப்பம் பிடித்துக்கொண்டிருந்த மீடியாவிடம் பேசிவிட்டார். மேற்கொண்டு சில விபரங்களையும் விளக்கினாராம்.

என்ன அது? சில மாதங்கள் முன், தன் 7 மாதக் குழந்தையுடன் கௌன்சிலுக்கு வந்துவிட்டாராம் அந்த பெண் கௌன்சிலர். பெரிசுகள் அதிர்ந்தன. அவரிடம் வந்து ’குழந்தையை இங்கு கொண்டுவர அனுமதியில்லை. வீட்டில் விட்டுவிட்டு வாருங்கள்’ என்றிருக்கிறார்கள். அவர் தனக்கு யாருமில்லை.(சிங்கிள் பேரண்ட் போலும்). ’சின்னக்குழந்தை. எங்கும் விட்டுவிட்டு வருவதற்கும் வாய்ப்பில்லை. இந்தக் கௌன்சிலிலேயே என்னை மாதிரி இளம் தாய்மார்களுக்கு (பெண் அலுவலர்களிலும் தாய்மார்கள் இருக்கக்கூடுமே), குழந்தைகளுக்கான daycare –அவர்களை அலுவலக நேரத்தில் பார்த்துக்கொள்ள ஏதாவது ஏற்பாடு செய்யக்கூடாதா? இதுதானே நம் நகரத்தில் ஒவ்வொரு வேலைக்குச் செல்லும் தாயும் எதிர்கொள்ளும் பிரச்னை? நம் மக்களின் பிரச்சினையும் அல்லவா? ஒரு தாயும், கௌன்சிலருமான என்னுடைய கஷ்டத்தை நீங்கள் பார்க்கவில்லையா?’ என்றிருக்கிறார் அந்தப் பெண்மணி. கார்ப்பரேஷன் பெரிசுகள் பொங்கிவிட்டன. ஒரு பெண்ணுக்கு இவ்வளவு துணிச்சல் ஆகாதே! முறைகேடாக, குழந்தையைத் தூக்கிக்கொண்டு வந்ததற்கு மன்னிப்பு கேட்காமல், நமக்கே அறிவுரை வேறா? ’செயலுக்கு வருந்து. கேள், மன்னிப்பு!’ என உறுமினார்கள்.

கேட்கவில்லை. அந்த மன்னிப்பே இன்னும் பெண்டிங்! இப்போது இருமல் மாத்திரையை வாயில் போட்டுக்கொண்டு பேசிய பிரச்னை வேறு. நான் பெரியவர்களை மதிக்காதவள் இல்லை. அவர்கள் அதிகாரத்தை அறியாதவளல்ல. இருப்பினும் மக்கள் பிரச்னையை அவர்கள் முன் கொண்டுசெல்லத்தான் அப்படிச் செய்தேன். மக்கள் சேவைக்குத்தானே கார்ப்பரேஷன், கௌன்சில் எல்லாம்? பெண்களின் பிரச்னைகளை அறிந்து களைய வேண்டுமானால், பழைய மதிப்பீடுகளிலிருந்து அவர்கள் கொஞ்சம் வெளியே வரவேண்டாமா? இல்லையென்றால் அதிகாரத்தை மட்டும் வைத்துக்கொண்டு என்ன செய்வது? மக்கள் பலன் பெறுவது எப்படி?; என்று பேசியிருக்கிறார் நியூஸ் ஏஜென்சிகளிடம் அந்தப் பெண்மணி. ’ஓ! ப்ரெஸ்ஸுக்கும்வேறு போய்விட்டாளா அவள்.. என்ன ஒரு அகம்பாவம்!’ என்று மேலும் குதிக்கிறார்கள் பெரிசுகள் அங்கே!

என்னதான் மிகவும் முன்னேறிய, நவீன நாடென்றாலும் ஆண்களின் சிந்தனா-ஆதிக்கம்தான் அங்கே இன்னமும். பாரம்பரிய வழிமுறைகள், பழைய மதிப்பீடுகள், சமூக, கலாச்சார ரீதியாக பல நன்மைகளைச் செய்திருக்கின்றன என்பது உண்மை. இருந்தும் அரசியலில் மேற்கூறியபடி சில செயல்பாட்டுத் தடங்கல்களும் உண்டு. குமமோத்தோ நகரம், ஜப்பான். அங்கேதான் இந்த நடப்பு.

இன்னொரு பக்கமும் இருக்கிறது. நான் ஜப்பானில் வசிக்கையில், 2002-ஆம் ஆண்டு என நினைக்கிறேன் – ஒரு நிகழ்வு அவர்களது டிவி-யில் லேசாகக் காண்பிக்கப்பட்டது. ‘லேசாக’ என ஏன் சொல்கிறேன்? அவர்கள் நாட்டில் எப்போதாவது நடக்கும், அல்லது எப்போதாவதுதான் மீடியாக்கள் காண்பிக்கும் அபத்த, அவமான விஷயங்களை 10-15 நிமிட டிவி-நியூஸ் நேரத்தில் எங்காவது ஒரு மூலையில் லேசாக சொல்லிச் சென்றுவிடுவார்கள். Breaking news.. Scoop என்றெல்லாம் அவற்றை ஹைலைட் செய்து, உங்கள் டிராயிங் ரூமில் கூச்சலிடுவது அசிங்கம் எனக் கூச்சப்படும் நாகரிகம் தெரிந்தவர்கள் ஜப்பானிய அவர்கள். அவர்கள் என்றால் ஜப்பானிய ஜனங்கள், அரசாங்கம், அவர்களின் டிவி சேனல்களையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.

சரி, விஷயத்துக்கு வருவோம். ஒரு அரசியல்வாதி. மந்திரி என்பதாக ஞாபகம். ஏதோ ஒரு மோசடி-முறைகேட்டில் மாட்டிக்கொண்டார். ஜெயிலுக்குப்போகும் அளவுக்கு அவ்வளவு பெரிய குற்றமல்ல. எனினும் முறைகேட்டில் ஆதாரத்தோடு பிடிக்கப்பட்டு, கோர்ட்டில் நிற்கிறார். குற்றப்பத்திரிக்கையை அவர்கள் வாசிக்க, தரையைப் பார்த்து நிற்கிறார். வருத்தம் குரலில் தோய, குற்றத்தை ஒப்புக்கொண்டு, மன்னிப்புக் கேட்கிறார். அவ்வளவுதான். (நியூஸ் ஐட்டமும் முடிந்தது – மேற்கொண்டு விவாதங்கள், கூச்சல்கள், எதிர்க்கூச்சல்கள் ஏதுமில்லை). மேற்கொண்டு செய்தி பத்திரிக்கைகளிலிருந்து கொஞ்சம் கசிகிறது. அந்த அரசியல்வாதி கட்சி/அரசு பதவியிலிருந்து நீக்கப்படுகிறார். அரசியலிலிருந்தே விலகிக்கொள்கிறார். அது மட்டுமா? டோக்கியோவிலிருந்தே விலகி எங்கோ தூரத்தில் கிராமத்தில் போய் தனித்துவாழ நேரிடுகிறது அவருக்கு. அதாவது Social ostracism. அரசியல் ஒதுக்கலோடு, சமூக விலக்கலும். அவர் மேற்கொண்டு எத்தனை நாள் அப்படி வாழ்ந்தார்? ஒருவேளை, கடுமையாக விமரிசிக்கப்பட்டதால், சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டதால் அவமானம் தாங்காது பிற்பாடு ஒரு நாள் தற்கொலையும் செய்துகொண்டாரோ? தெரியாது. பழம் மதிப்பீடுகள் நிறைந்த, உணர்வுபூர்வ ஜப்பானிய சமூக சூழலில் அப்படியும் நடந்திருக்க மிகுந்த வாய்ப்புண்டுதான்.

அங்கேயெல்லாம் பொதுவாழ்வில் இருப்பவர்களும்கூட, சூடு, சொரணை, வெட்கம், அவமான உணர்வு மிக்கவர்களாக இருக்கிறார்கள்..நடந்தும்கொள்கிறார்கள். ஹ்ம்..

*

8 thoughts on “அந்த நாட்டிலெல்லாம் அப்படி ..

  1. ஒரு பெண்ணுக்கு எதிராக பழம் பெருச்சாளிகள் அட்டகாசம் செய்வதும் அங்கே. அட்டகாசம் செய்த் அரசியல் பெரிசு ஒதுக்கி வைக்கப்படுவதும் அங்கேயேவா?

    பரவாயில்லையே..​

    Like

    1. @ ஸ்ரீராம் :
      ஒன்றுக்குள் ஒன்றாக இருகோணங்கள். இரண்டு நிஜங்கள். ஜப்பான் அப்பேர்ப்பட்ட நாடுதான்.

      Like

  2. மிக அருமையான அலசல்! ஜப்பானிலேயே இப்படி என்றால் இங்கே கேட்கவே வேண்டாம்! இன்னும் ஜாஸ்தியாப் போவாங்க/ போவாங்க என்ன? போறாங்க! 😦

    Liked by 1 person

  3. @ Geetha Sambasivam : ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு அனுபவம்.. இப்படி சில விஷயங்கள் மனதில் இருக்கின்றன..!

    Like

  4. அவர்களைக் கண்டு பொறாமைப்படுவதா, நம்மைக் கண்டு வெட்கப்படுவதா என்றே புரியவில்லை.

    Liked by 1 person

    1. @Dr B Jambulingam :

      நம் அரசியல்/பொதுவாழ்வின் தரம் அப்படி ஒரு அதளபாதாளத்தில் கிடக்கிறது என்பதைக் கோடிட்டுக்காட்டவே முயற்சி செய்கிறது இந்தக் கட்டுரை.

      Like

  5. துளசிதரன்: ஜப்பானிலும் கூட இப்படி நடக்கிறது என்பதை அறியும் போது ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் அதே சமயம் அடுத்த சம்பவமும் தவறு செய்பவர் மீது நடவடிக்கை எடுப்பது அவர் தன் தவறை ஏற்பது மறைந்து வாழ்வது தன்மான உணர்வு எல்லாமும் அதுவும் வியப்புதான்….

    கீதா: அண்ணா துளசியின் கருத்துடன்…நம்ம ஊர் கேவலமும் நினைவுக்கு வருது. இங்கு தவறு செய்யும் அரசியல்வாதியின் மீது கேஸ் போட முடியுமா போட்டாலும் நடப்பது தெரிகிறதே …அது போல தன் தவறை ஒப்புக் கொள்வார்களா?

    இது பதிவிற்கு சம்பந்தமில்லாதது ஆனால் ..என் தம்பி மற்றும் மைத்துனர் தன் குடும்பத்துடன் ஜப்பானில் இருந்திருக்கின்றனர். என் தம்பி சொன்ன விஷயம்…அவன் தன் பர்சை ஒரு க்டை வீதியில் தொலைத்துவிட்டான். ரூமுக்கும் வந்துவிட்டான் ஆனால் வந்த பின் தான் தெரிந்தது தொலைத்தது. எந்த இடமாக இருக்கும் என்ற யூகம் மட்டும் வைத்துக் கொண்டு அடுத்த நாள் சென்று பார்த்திருக்கிறான்…அதே இடத்தில் நடைபாதையில் அப்படியே இருந்ததாம் பெரிய பர்ஸ் அதில் இருந்தவை எல்லாமே அப்ப்டியே இருந்ததாகச் சொன்னான்.

    Liked by 1 person

  6. @துளசிதரன்: ஜப்பானிய சமுகம் பார்க்க, பழக சுவாரஸ்யமானது. மொழிப்பிரச்னை பெரும்பிரச்னை. (ஆங்கிலம் தெரியா அசடுகள்).
    அவ்வளவு எளிதில் ஊழல் செய்து தப்பித்துவிடமுடியாது அங்கே. இன்னும்,
    வாழ்வியல் நெறிகளில் மதிப்புள்ளவர்கள் அவர்கள்.

    @ கீதா: நானும் இதனை ( விட்ட பொருள் அடுத்த நாள் அதே இடத்தில் கிடைக்கும் அதிசயத்தை) அங்கேதான் கண்டேன். அடுத்தவர் பொருளைத் தொடமாட்டார்கள் – நம்மவர்களுக்கு நேரெதிர்..

    Like

Leave a comment