திரைப்பாடகி எம் எஸ் ராஜேஸ்வரி

அந்த மாலைப்பொழுதில் நெட்டில் நியூஸ் வாசித்துக்கொண்டிருக்கையில், ’எம்.எஸ். ராஜேஸ்வரி மறைந்தார்’ என்பதில் கண்கள் ஓடியும், ’மறைந்தார்’ என்பதை ஏனோ மனம் தனக்குள் வாங்கிக்கொள்ளவில்லை. எம்.எஸ். ராஜேஸ்வரி என்று பார்த்தவுடனே

‘குவா குவா பாப்பா..அவ
குளிக்க காசு கேப்பா..!
அம்மா வந்து சாப்பிடச் சொன்னா
அழுது கொஞ்சம் பாப்பா..
குவா குவா பாப்பா.. அவ
குளிக்க காசு கேப்பா!

என்று நினைவுப் பக்கங்களிலிருந்து பாட ஆரம்பித்துவிட்டது மனது. ஹம் பண்ணிக்கொண்டிருக்கையில், இந்தப்பாடலின் வரிகள் இப்படியெல்லாமும் போகுமே என்பதும் அடுக்கடுக்காக நினைவுக்கு வந்து படுத்தியது:

அம்மாவுக்கும் அப்பாவுக்கும் மனசு பிடிக்கல
அதுல வந்த சண்டயில இவள நினைக்கல
அவசரமா அப்பா போன இடமும் தெரியல
அம்மா கண்ணும் பாப்பா கண்ணும் அழுது முடியல
அம்மா கண்ணும் பாப்பா கண்ணும் அழுது முடியல ..

யாருமில்லா அனாதையா கடையில கிடந்தா – எங்க
அம்மாவுக்குப் பொண்ணா வந்து மடியில இருந்தா
ஆயிரந்தான் இருக்கட்டுமே அம்மா போதுமா?
அங்கே இங்கே கூட்டிப்போகும் அப்பா ஆகுமா..
அங்கே இங்கே கூட்டிப்போகும் அப்பா ஆகுமா..

குவா குவா பாப்பா.. அவ
குளிக்க காசு கேப்பா!

(மேற்சொன்ன பாடலை கண்ணதாசன் ’இரு வல்லவர்கள்’ (1966) படத்திற்காக எழுதினார். வேதாவின் இசையில், ராஜேஸ்வரியின் குரலில் வந்தது பாடல்). இப்படியெல்லாம் பாடி நம்மை உருக்கிப்போட்டவர்தான் எம் எஸ் ராஜேஸ்வரி. வெறும் திரைப்பாடகி அல்ல அவர். ஒரு ஸ்பெஷலிஸ்ட். குரலில் அந்த குழந்தைத்தனம், மென்மையை அவரைப்போல அனாயாசமாகக் கொண்டுவந்தவர் யாருமில்லை. தமிழ்த் திரை உலகம் புண்ணியம் செய்திருக்கவேண்டும், இப்படி ஒரு கலைஞர் நமக்கு வாய்த்ததற்கு. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆர்.சுதர்சனம், ஜி.ராமனாதன், விஸ்வனாதன் –ராமமூர்த்தி, கே.வி.மகாதேவன், இளையராஜா போன்ற சிறந்த இசையமைப்பாளர்களுக்காக அவர் திரையில் பாட நேர்ந்ததால், காலத்தால் கரைக்கமுடியா இசைக்காவியங்கள் நமக்குக் கிடைத்துள்ளன.

எம்.எஸ்.ராஜேஸ்வரியின் பெயரைச் சொன்னதும் ’களத்தூர் கண்ணம்மா (1960)-வில் வரும் அந்தப் புகழ்பெற்ற பாட்டு நினைவுக்கு வாராதிருக்குமா? காட்சியில், அனாதைக் குழந்தைகள் முருகன் சிலைமுன் நின்று பாடுகின்றன. முன் வரிசையில் நிற்கும் சிறுவன் கமல் ஹாசனுக்குக் குரல் கொடுக்கிறார் ராஜேஸ்வரி :

‘அம்மாவும் நீயே அப்பாவும் நீயே
அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே..
அம்மாவும் நீயே ..

என உருக்கத்துடன் ஆரம்பித்து..

தந்தை முகம் தாயின் முகம் கண்டறியோமே
மனசாந்தி தரும் இனிய சொல்லைக் கேட்டறியோமே
எங்களுக்கோர் அன்புசெய்ய யாருமில்லையே
இதை அறியாயோ முருகா உன் கருணை இல்லையே…

-என அப்பாவிக் குரலில் அரற்றுகிறார். அதே பாடலில் மேலும் ..

பூனை நாயும் கிளியும்கூட மனிதன் மடியிலே
பெற்ற பிள்ளைபோல நல்லுறவாய்க் கூடி வாழுதே..
ஈ எறும்பும் உன் படைப்பில் இனிமை காணுதே..

என ஆச்சரியத்துடன் கடவுளைப் பார்த்துக் கேட்கிறார். எல்லாமே சுகித்திருக்கும் உலகில் எங்களுக்கு மட்டும் அன்பில்லாது போனதெப்படி? – என்கிற ஏக்க உணர்வை எழுப்பி, அந்தக் குழந்தையாக நம்மையும் தன் குரலால் மாற்றிக் கரைக்கிறார் ராஜேஸ்வரி. வாலி வரைந்த பாடலுக்கு ஆர்.சுதர்சனத்தின் இசை.

தன்னுடைய முதல் திரைப்பாடலை 12 –ஆவது வயதில் 1946-ல், ’விஜயலக்ஷ்மி’ என்கிற படத்தில் ஸோலாவாகப் பாடுகிறார் எம்.எஸ். ராஜேஸ்வரி. ‘மையல் மிக மீறுதே’ என்கிற பாடல். 1947-ல் இந்திய சுதந்திர வருடக் கொண்டாட்டமாக ஏவிஎம் வெளியிட்டது ‘நாம் இருவர்’ திரைப்படம். அதில் கவிஞர் கே.பி. காமாட்சியின் ‘மகான் காந்தி மகான்’ என்ற ஆர்.சுதர்சனத்தின் இசையிலமைந்த பாடலை குமாரி கமலாவிற்காகப் பிரமாதமாகப் பாடியிருந்தார் சிறுமியான ராஜேஸ்வரி. ’மஹ்ஹான்..காந்தி மஹான்..’ என அவர் ஆரம்பிக்கும் விதமே அலாதி. இவரது குரல்நயம், ஏற்ற இறக்கங்கள், பாடும் திறன் என கவனித்திருந்த இசை அமைப்பாளர் ஆர்.சுதர்சனம்தான் சிறுமி ராஜேஸ்வரியை ஏவி.மெய்யப்ப செட்டியாரிடம் அறிமுகப்படுத்தியவர். ஏவிஎம் ஸ்டூடியோவில் ஆரம்பத்தில் சொற்ப மாத சம்பளத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டார் ராஜேஸ்வரி. ஏவிஎம்-மின் 1940-1950 வருடங்களிலான படங்களில் ஒரு ஆஸ்தானப் பாடகி போல் ஸோலோ பாடல்களும், டி.எஸ். பகவதி போன்றோரோடு இதர பாடல்களையும் பாடியிருக்கிறார். ராமராஜ்யம், வேதாள உலகம், பராசக்தி, நாம் இருவர், பெண், வாழ்க்கை போன்ற படங்கள் இவை. 1948-ல் வெளியான ’வேதாள உலகம்’ படத்தில் மகாகவி சுப்ரமணிய பாரதியின் ‘ஓடிவிளையாடு பாப்பா’வை பாடகி டி.எஸ்.பகவதியுடன் இணைந்து வழங்கியிருக்கிறார். குழந்தைப்பாடல்களுக்காகப் பொதுவாகப்பேசப்பட்டாலும், அருமையான டூயட்டுகளையும், ஸோலோ பாடல்களையும் தமிழ்த் திரையுலகிற்கு அளித்தவர் ராஜேஸ்வரி.

1952 படமான ’பராசக்தி’யில் எம்.எஸ். ராஜேஸ்வரி இரண்டு இனிமையான பாடல்களை ரசிகர்களுக்குத் தந்து ஆச்சரியப்படுத்தினார். தஞ்சை ராமையா தாஸின் காதல் பாடலுக்கு ஆர்.சுதர்ஸனம் ரம்யமாக இசை அமைத்துள்ளார். ஹீரோயின் பண்டரிபாய்க்காகக் இனிமையாக இப்படிப் பாடுகிறார்:

புதுப்பெண்ணின் மனதைத் தொட்டுப் போறவரே
உங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க..
இளம் மனசைத் தூண்டிவிட்டுப் போறவரே.. அந்த
மர்மத்தை சொல்லிவிட்டுப் போங்க..
மர்மத்தை சொல்லிவிட்டுப் போங்க..!

அடுத்தது- குமாரி கமலா நாட்டியத்துக்காக அமைந்துள்ள இந்தப் பாடல். நடிகரும் கவிஞருமான கே.பி. காமாட்சி
எழுதியது.

ஓ.. ரசிக்கும் சீமானே..!
ஓ.. ரசிக்கும் சீமானே.. வா
ஜொலிக்கும் உடையணிந்து
களிக்கும் நடனம் புரிவோம்!
அதை நினைக்கும் பொழுது மனம்
இனிக்கும் விதத்தில் சுகம்
அளிக்கும் கலைகள் அறிவோம்..!

இந்தப்பாடலின் கடைசி பாராவை அட்டகாசமாக எழுதியிருக்கிறார் கவிஞர் காமாட்சி. அதனை அனாயாசமாகப் பாடித்தள்ளியவர் ராஜேஸ்வரி:

வானுலகம் போற்றுவதை நாடி.. இன்ப
வாழ்க்கையை இழந்தவர்கள் கோடி – பெண்களின்ப
வாழ்க்கையை இழந்தவர்கள் கோடி
வெறும் ஆணவத்தினாலே
பெரும் ஞானியைப்போலே நினைந்து
வீணிலே அலைய வேண்டாம் !
தினம் நினைக்கும் பொழுது
மனம் இனிக்கும் விதத்தில்
சுகம் அளிக்கும் கலைகள் அறிவோம்.

ஓ…ரசிக்கும் சீமானே ..!

-அழகான பாடலுக்கு அருமையாகத் துணைபோகிறது கமலாவின் நடனம். சுகபோக இடத்தில் எக்கச்சக்கமாக மாட்டிக்கொண்டு நெளியும் இளைஞனாக சிவாஜி கணேசன்! ஆடியோ, வீடியோ இரண்டையும் ரசிக்கமுடியுமாறு அமைந்த அபூர்வப்பாடல்.

1954-ல் வெளிவந்த சிவாஜி கணேசன், லலிதா, பத்மினி ஆகியோர் நடித்த ’தூக்குத்தூக்கி’ படத்தில் ராஜேஸ்வரி டிஎம் சௌந்திரராஜனுடன் பாடிய டூயட் அந்தக்காலத்தில் மிகவும் பிரசித்தம். மருதகாசியின் மயக்கும் எழுத்துக்கு ஜி.ராமனாதனின் இதமான இசை. பீம்ப்ளாஸ் ராகம். ஊடலால் தாக்கப்பட்ட நாயக, நாயகிக்கிடையே இழைகிறது பாடல் :

கண்வழி புகுந்து கருத்தினில் கலந்த
மின்னொளியே ஏன் மௌனம்?
வேறெதிலே உந்தன் கவனம்..
வேறெதிலே உந்தன் கவனம்?’

அதில் ஓரிடத்தில் லலிதாவுக்கான குரலில் நாயகனை சீண்டுவார் ராஜேஸ்வரி:

உண்மையில் என்மேல் உமக்கன்பு.. ஆ..ஆ..ஆ..
உண்மையில் என்மேல் உமக்கன்பு
உண்டென்றால்… இல்லை இனி வம்பு..!

சிவாஜிக்காக பதில்கொடுக்கும் இளம் டி.எம்.எஸ்:

கண்ணில் தெரியுதே குறும்பு..
கனிமொழியே நீ எனை விரும்பு !

நினைவிலிருந்து நீங்காத டூயட். அந்தக்காலப் பாடலென்றால் அந்தக்காலப் பாடல்தான் !

1955-ல் வெளியான ’டவுன்பஸ்’ படத்தில் கே.வி.மகாதேவனின் இசையில் அஞ்சலிதேவிக்காக ராஜேஸ்வரி பாடிய ‘சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா? என்னை விட்டுப் பிரிஞ்சு போன கணவன் வீடு திரும்பல்லே’ என்கிற கவிஞர் கா.மு.ஷெரீஃபின் பாடல் ரசிகர்களின் மனதை நெகிழவைத்தது.

எம்.எஸ்.ராஜேஸ்வரியின் குரல் தாலாட்டுக்கு அருமையாகப் பொருந்திவரும் எனத் திரையுலகில் நிரூபித்த இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி ஜோடி. இவர்களின் இனிய இசையில், எம்.ஜி.ஆர். சாவித்திரி நடித்த மகாதேவி (1957) படத்தில் ‘காக்கா காக்கா மைகொண்டா.. காடைக்குருவி மலர் கொண்டா.. பசுவே பசுவே பால் கொண்டா, பச்சைக்கிளியே பழம் கொண்டா..’ என்கிற மருதகாசியின் பாடலைப் பாடி, புகழ்பெறவைத்தார் எம்.எஸ்.ராஜேஸ்வரி. கண்ணதாசன் தயாரித்து பாடலெழுதிய ’மாலையிட்ட மங்கை’ திரைப்படத்தில் இன்னொரு தாலாட்டுப்பாடல் எம்.எஸ்.ராஜேஸ்வரிக்கு விஸ்வநாதன் –ராமமூர்த்தியின் இசையில் அமைந்தது. ‘மழைகூட ஒரு நாளில் தேனாகலாம்..மணல்கூட ஒருநாளில் பொன்னாகலாம்’ எனச் செல்லும் வரிகளில் கேட்பவருக்கு உத்வேகம் கொடுத்த இந்தப்பாடல் பிரபலமானதோடு, சாகித்ய அகாடமியால் 16 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்ட சிறப்பையும் பெற்று அசத்தியது. இவரது தாலாட்டுப்பாடல்கள் புகழ்பெறுவதைக் கவனித்த இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன், 1958 படமான ’தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்கிற படத்தில் கே.முத்துசாமி எழுதிய இந்தப் பாடலை எம்.எஸ்.ராஜேஸ்வரிக்குக் கொடுத்தார்:

மண்ணுக்கு மரம் பாரமா
மரத்துக்கு இலை பாரமா..
கொடிக்கு காய் பாரமா – பெற்றெடுத்த
குழந்தை தாய்க்குப் பாரமா ?

எனக் கேட்டு, கேட்பவர்களை மெல்ல உருகவிட்டார் ராஜேஸ்வரி. உடனடி ஹிட்டானது இந்தப் பாடலும்.

1960-ல் ராஜேஸ்வரி ஜோராக ஜொலித்துக்கொண்டிருந்தார். அந்த வருடத்தில் அப்படிப்பட்ட படங்கள், பாட்டுகள். படிக்காத மேதை படத்தில், தான் பள்ளிக்குப்போய்ப் படிக்காதுபோய்விட்டோமே என நொந்துபோய்க் கிடக்கும் சிவாஜி கணேசனை சௌகார் ஜானகி தேற்றுவதாக வரும் சீனுக்கான பாடலில் அசத்திவிட்டார் ராஜேஸ்வரி:

படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு – பாடம்
படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு

-என்று ஆரம்பிக்கும் கண்ணதாசன் பாடல் இப்படியெல்லாம் ராஜேஸ்வரியின் குரலில் கேள்வி கேட்கும்:

கல்வியில்லாக் கன்றுகளும் தாயை அழைக்கும் – காட்டில்
கவரிமானும் பெண்களைப்போல் மானத்தைக் காக்கும்
பள்ளி சென்று இவைகளெல்லாம் படித்ததில்லையே -நெஞ்சில்
பாசத்தோடும் நேசத்தோடும் வாழவில்லையா.. ?

என்று நம் உணர்வை மீட்டிச்செல்லும் பாடலுக்கு கே.வி.மகாதேவன் இசை இழைத்துள்ளார்.

அறுபதுகளிலிருந்து ராஜேஸ்வரிக்கு பெரும்பாலும் குழந்தை நட்சத்திரங்களுக்கான பாடல்களே வாய்த்தன. 1960 படமான களத்தூர் கண்ணம்மாவில் கமலுக்காகப் பாடிய ’அம்மாவும் நீயே’ என்கிற புகழ்பெற்ற பாடலுக்குப்பின், அதே வருடத்தில் வெளியான ’கைதி கண்ணாயிரம்’ படத்தில் வரும் மற்றொரு குழந்தைப்பாடலையும் தன் குரலினால் பிரபலமாக்கினார் ராஜேஸ்வரி. அது ’சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்.. இரவில் சோளத்தட்டை பல்லாக்கிலே ஊர்வலமாம்!’ என வரும் மருதகாசியின் பாடல். அடுத்த வருடமே அவர் பாடிய இன்னொரு குழந்தைப்பாடல் புகழ்வெளிச்சத்தை சந்தித்தது. அதுவும் மருதகாசி இயற்றியது – கே.வி. மகாதேவன் இசையில் வந்தது:

மியாவ் மியாவ் பூனைக்குட்டி
வீட்டைச் சுத்தும் பூனைக்குட்டி
அத்தான் மனசு வெல்லக்கட்டி – அவர்
அழகைச் சொல்லடி செல்லக்குட்டி ..
மியாவ்.. மியாவ்..

என மியாவிவிட்டார் எம்.எஸ்.ராஜேஸ்வரி. 1961-ல் வெளிவந்த ‘குமுதம்’ படத்தில் கண் தெரியா அப்பாவி சௌகார் ஜானகிக்காக இப்படிக் குரல் கொடுத்திருக்கிறார்.

1965-ல் வெளிவந்த ’குழந்தையும் தெய்வமும்’ படத்தில் எம்.எஸ்.விஸ்வனாதனின் இசையில் வெளியான ’கோழி ஒரு கூட்டிலே.. சேவல் ஒரு கூட்டிலே.. கோழிக்குஞ்சு ரெண்டு மட்டும் அன்பில்லாத காட்டிலே..’ எனும் பாடலுக்கு குட்டிபத்மினிக்காக சோகமாகக் குரல் கொடுத்திருக்கிறார் ராஜேஸ்வரி. பாடல் ரசிகர்களின் மனதில் உடனேபோய் உட்கார்ந்துகொண்டது. குழந்தை நட்சத்திரத்திற்கான பாடலென்றால் எம்.எஸ்.ராஜேஸ்வரிதான் என்கிற அளவுக்கு அப்போது பேர் வாங்கிவிட்டிருந்தார் அவர். பேபி ஷாலினிக்காக நிறையப் படங்களில் பாடியிருக்கிறார். இப்படி பல்வேறு பாடல்கள் 1979 வரை. அதற்குப்பின் அவருக்கு வாய்ப்புகள் வராதிருந்தன.

வெகுகால இடைவெளிக்குப்பின் எம்.எஸ். ராஜேஸ்வரியின் குரலை ரசிகர்களுக்காகத் திரைக்கு மீட்டுவந்த பெருமை இளையராஜாவையே சாரும். 1989 –ல் வெளியான, கமல் ஹாசனின் மிகச்சிறந்த திரைச்சித்திரங்களில் ஒன்றான ’நாயகன்’ படத்தில் ‘நான் சிரித்தால் தீபாவளி’ என்ற புலமைப்பித்தனின் பாடலை எம்.எஸ்.ராஜேஸ்வரியும் கே.ஜமுனா ராணியும் பாட, அருமையாக இசைப்படுத்தியிருந்தார் இளையராஜா.

மதுரை சடகோபன் ராஜேஸ்வரி – எம்.எஸ்.ராஜேஸ்வரி தமிழ் ரசிகர்களிடையே இவ்வளவு புகழ்பெற்றிருந்தும், சமீபத்தில் அவர் தன் 87-ஆவது வயதில் சென்னையில் மறைந்தபோது தமிழ்த் திரையுலகத்திலிருந்து யாரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தவில்லை என்று அவரது மகன் ராஜ் வெங்கடேஷ் சொன்னதாக விகடனில் படித்தேன். (ட்விட்டரில் அஞ்சலி சொன்ன கமல் ஹாசனும், பின்னால் நினைவு கூர்ந்து பாராட்டிய பாடகிகள் பி.சுசீலாவும் எல்.ஆர்.ஈஸ்வரியும் இதில் விதிவிலக்கு). ’தமிழ்த் திரை உலகை வெகுவாக நேசித்தார் என் அம்மா. அங்கிருந்து யாராவது வந்து அஞ்சலி செலுத்தினால்தான் அவரது ஆன்மா சாந்தியடையும். அதற்காகக் காத்திருக்கிறோம்..’ என அவர் மகன் சொன்னதாகப் படித்தபோது மனதை என்னவோ செய்தது. 40 வருடங்களுக்கு மேலாகத் திரையுலகில் இணைந்திருந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 500-க்கும் மேற்பட்ட பாடல்களை, உணர்ச்சிக்குரலில் ஒலிக்கவிட்டு ரசிக உள்ளங்களைக் கொள்ளைகொண்ட மனுஷிக்கு, நேரில் சென்று அஞ்சலி செலுத்த சென்னைப் பட உலகில் யாரும் இல்லையா? என்ன ஒரு விசித்திர உலகமடா இது.

**

16 thoughts on “திரைப்பாடகி எம் எஸ் ராஜேஸ்வரி

  1. அப்பாடி… பெரிய லிஸ்ட்டில் எனக்குச் சொல்ல ஒரு பாடலை வீட்டுக் கொடுத்ததற்கு நன்றி. ‘ஓர் இரவு’ படத்தில் வரும் அற்புதமான பாடலான பாரதிதாசனின் வரிகளில், தேஷ் ராகத்தில் “துன்பம் நேர்கையில்” பாடலைப் பாடி இருப்பவர் இவரே. ஷாம்லிக்கும் ஒரு பாடல் பாடி இருக்கிறார். “பாப்பா பாடும் பாட்டு” குழந்தைகள் பாடகி என்று முத்திரை குத்தப் பட்டதனால் அவருக்கான வாய்ப்புகள் குறைந்து போயின.

    Like

    1. @Sriram: இந்தப் படம்/பாடலைப்பற்றி நெட் மூலமாக அறிந்து -அண்ணாவின் கதையின் அடிப்படையில் படக்கதை, பாரதி தாசனின் வரிகள்- எனத் தேடி வீடியோவில் பார்த்தேன். எதெதையோ சேர்த்து எடிட் செய்து நீட்டிக்கொண்டிருக்கையில் – பதிவு ஒருவாரத்துக்கும் மேலாக தாமதமாகிக்கொண்டிருக்கிறதே-இதனை விட்டிருக்கக்கூடாது -விட்டுவிட்டேன். எனினும், நீங்கள் இருக்க பயமில்லை!
      இதைக் கேட்டிருக்கிறேன் பல வருடங்களுக்கு முன்பு . ஆனால் இவர்தான் பாடியது என அறிந்திருக்கவில்லை .

      Like

  2. மழலைக் குரலில் எம்.எஸ்.இராஜேஸ்வரி பாடிய பாடல்களில் நான் விரும்பிய பாடல்கள் இவை:
    வாழ்க்கை படம்
    உன் கண் உன்னை ஏமாற்றினால் டடடா டடடா
    @@@
    மகாதேவி படம்
    சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே
    சங்கீத வீணையும் ஏதுக்கம்மா
    மங்காத கண்களில் மையிட்டுப் பார்த்தாலே
    தங்கமும் வைரமும் ஏதுக்கம்மா
    @@@
    காக்கா காக்கா மை கொண்டா
    காடைக் குருவி மலர் கொண்டா
    பசுவே பசுவே பால் கொண்டா
    பச்சைக் கிளியே பழம் கொண்டா
    @@@
    படிக்காத மேதை படம்
    படித்ததினால் அறிவுபெற்றோர் ஆயிரம் உண்டு

    இவர் இன்று நம்மிடையே இல்லை. இவர் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.

    Like

  3. அருமையான அஞ்சலி பதிவு.

    அவர் இறந்த செய்தி படித்தவுடன் அவர் பாடல்களை தேடி போட்டு கேட்டுக் கொண்டு இருந்தேன். அருமையான பாடகி.
    நான் சிறு வயதில் இருந்த போது இவர் பாடல்களை வீட்டில் பாடி காட்டுவேன்
    சிங்கார புன்னகை பாடல் பிடிக்கும்.
    மண்ணுக்கு மரம் பாரமா என்ற பாடலை என் மழலை மொழியில் பாடுவதை என் வீட்டார் விரும்பி கேட்பார்கள்.
    காக்கா காக்கா மை கொண்டா பாடுவேன்.

    பூ பூ வா பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா நன்றாக இருக்கும்.

    பட உலகத்தினர் இறுதி அஞ்சலிக்கு போகாமல் விட்டது வருத்தம் தான்.

    Like

  4. சொன்னசொல்லை மறந்திடலமோ வா வா உன் சுந்தர ரூபம் மறந்திடபோமோ பாடல் நன்றாக இருக்கும் இருவர் பாடிய பாடல்,வைஜேந்திமாலாவிற்கு பாடி இருப்பார் படம்
    “பெண்” என்று நினைக்கிறேன். இனிமையான பாடல்.

    Liked by 1 person

    1. @கோமதி அரசு :
      ‘சொன்ன சொல்லை மறந்திடலாமோ.. ’ அழகான பாடல். நான் குறிப்பிட மறந்தேன் ..! அவருடைய அருமையான குரலை இசை அமைப்பாளர்கள் இன்னும் நிறைய பயன்படுத்தியிருக்கவேண்டும். அவர்களும் கோட்டைவிட்டுவிட்டார்கள்.

      Like

  5. ஸ்ரீராம் சொல்லியிருப்பது போல் எனக்கும் சொல்ல ஒரு பாடல் விட்டுருக்கீங்க ஹை ஹை ஹை ஹை!!! இருங்க அதுக்கு முன்னாடி ஸ்ரீராமிடம் நான் இவரைப் பற்றிச் சொன்ன போது அவர்தான் துன்பம் நேர்கையில் பாடலை இவர்தான் பாடியிருக்கிறார் என்று சொன்னார். அருமையான குரல் வளம். குழந்தை வாய்ஸ் நானும் நெட்டில்தான் அறிந்தேன்.

    ஸ்ரீராம் இன்னொரு தகவலும் கொடுத்தார் இவர் மறைவிற்குத் திரைப்படத் துறையினர் யாரும் செல்லவில்லை என்று அவர் மகன் வருந்தியதாகச் செய்தி வந்ததையும் சொன்னார்.

    சரி இப்ப மிஸ் ஆன பாடல்…நாயகன் படத்திற்கும் முன்னரே 1982 ல் வெளிவந்த தாய் மூகாம்பிகை படத்தில் “இசையரசி என்னாளும்” பாடலில் இவர் சுசீலா மற்றும் ஜானகியுடன்..பாடியிருக்கிறார் இசை இளையராஜா. ஜானகிக்குக் கடைசியில் தான் அதுவரை சுசீலாவும் ராஜேஸ்வரிய்ம் தான் மாறி மாறி பாடுவார்கள்.முதலில் ஆலாபனை…அப்புரம் .ஸ்வரங்களும் அத்தனை அருமையாகப் பாடியிருப்பார்….அருமையான பாடல். சூர்யா எனும் ராகத்தில் அமைந்த பாடல் செமையா இருக்கும்…

    நல்ல பதிவு. …தெரிந்திராத பாடல்களும் இங்கு பார்த்துக் கொண்டேன் அவர் பாடியது..

    கீதா

    Liked by 1 person

  6. @ கீதா:
    என்ன! இளையராஜா பி.சுசீலாவிற்கு வாய்ப்புக் கொடுத்திருக்கிறாரா? அதுவும் ராஜேஸ்வரி, ஜானகியுடன் சேர்த்து ஒரே பாடலில்? பக்திப்பாடலா இது? நான் இதனைக் கேள்விப்படவே இல்லையே. சங்கர் கணேஷின் இசையமைப்பில் இவர் பாடியது ஏதேனும் ஹிட்டாயிற்றா என்றும் தெரியவில்லை.

    Like

  7. பாடல்கள் நினைவுக்கு வரும்போது யார் பாடியது என்று எண்ணு வதில்லை ஆனால் ராஜேஸ்வரியை ஒரு ஸ்டீரியோ டைப்பாக்கி விட்டார்கள் என்று தோன்றுகிறது

    Like

    1. @Balasubramaniam G.M :

      சினிமா உலகில் ஏதாவது முத்திரை குத்தி, திறமையை, பன்முகத்திறமையை காலி செய்துவிடுகிறார்கள் என்பது உண்மைதான்.
      அந்தப் பாடலில் ஆண் குரலும் உண்டு.

      Like

  8. துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து என்னும் பாடல் ஆண்குரலில் கேட்ட நினைவு

    Like

  9. அத்தனையும் மிக அருமையான பாடல்கள் தந்திருக்கிறார்.. உடல் மறைந்தாலும் குரல் என்றும் மறையாது, மகள் மனதை விட்டு நீங்காது.

    * நான் அவசரத்தில் எல் ஆர் ஈஸ்வரியை நினைச்சு நடுங்கிப்போயிட்டேன் ஒரு கணம்..

    Liked by 1 person

  10. @athiramiya :

    வாங்கம்மா..வாங்க! ரொம்ப நாளாச்சு!
    குழந்தைக்குரல் பாடகி எனும் முத்திரை இருப்பினும், அழகான டூயட்டுகளையும், ஸோலோக்களையும் பாடியவர். எப்படி மறக்கமுடியும் இவரை?

    Like

    1. ஹா ஹா ஹா ஹையோ ஏகாந்தன் அண்ணனின் வரவேற்பைப் பார்க்க நேக்குப் பயம்ம்ம்ம்ம்மாக்கிடக்கூஊஊஊஊ:)..

      Like

Leave a comment