ஸ்ரீதேவி எனும் சினி சகாப்தம்

இவரை எப்படிப் பார்ப்பது? இந்திய சினி இண்டஸ்ட்ரியின் இன்னுமொரு புகழ்பெற்ற நடிகை என்றா? தெற்கிலும், வடக்கிலுமாக சில வருடங்கள் நன்றாக ஓட்டியிருக்கிறார் என்று சொல்லிக் கடந்துவிடலாமா? இவ்வளவுதானா இந்த மனுஷி?

பத்தோடு பதினொன்னாக என்றும் இருந்தவரல்ல ஸ்ரீதேவி. இந்திய சினிமா அல்லது இந்திய எண்டர்டெய்ன்மெண்ட் இண்டஸ்ட்ரி எனும் ஒரு உலகப்புகழ்பெற்ற பெரும் கலை, தொழிலமைப்பில், ஐம்பது வருடகாலம் அயராத தாக்கம் ஏற்படுத்திய ஆர்ட்டிஸ்ட். சீரியஸ் ரோல்களை இயல்பாகச் செய்த திறனுடன், கண்களில் விஷமம் மின்னும் நாசூக்கான காமெடித் திறனும் அவரிடமிருந்து வெளிப்பட்டது பல படங்களில். நடிப்புலகில் ஒரு அபூர்வத் திறனாளர் என்பதில் எந்த சந்தேகமும் இருந்ததில்லை. தன்னிடம் மையம் கொண்டிருந்த கலாதேவியின் கருணையினால், ஆரம்பத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், பின்னர் ஹிந்தி என வணிகசினிமாவில் செயல்பட்டபோதிலும், சில அழுத்தமான, நெஞ்சிலிருந்து நீங்காத படைப்புகளைக் கொடுத்த உயரிய பெண் கலைஞர். நாடுமுழுதும் பெருகிப் பரவியது இவரின் ரசிகர் கூட்டம். The only female Super Star என்று ஸ்ரீதேவியைக் குறிப்பிடுகிறது புகழ்பெற்ற நாளேடான இந்தியன் எக்ஸ்ப்ரெஸ். இன்னும் திரையுலகின் எத்தனையோ பிரபலங்கள் எப்படியெல்லாமோ அவரைப் புகழ்ந்திருக்கிறார்கள். இருந்தும் ஒரு தனிமனுஷி என்கிறவகையில் அவரிடம் காணப்பட்ட குணங்கள் – குழந்தைத்தனம், வெளிப்படுத்திய அவையடக்கம், நம்பமுடியா எளிமை. பாலிவுட்டில் பணியாற்றத்துவங்கிய ஆரம்ப வருடங்களில் அவரை ஒரு ’குழந்தைப்பெண்’ என்று பொருள்பட, ‘a child-woman’ என்றே பலர் குறித்தார்கள். துரதிர்ஷ்டவசமாக நம்மிடையே இன்று இல்லாத நிலையில், நாம் நினைத்து ஆச்சரியப்பட, உருகிட நிறைய நினைவுகளை, திரைச்சித்திரங்களை விட்டுவிட்டுச் சென்றிருக்கிறார் ஸ்ரீதேவி .

மூன்றரை வயதுக் குழந்தையான ஸ்ரீதேவி ஒரு சோப் விளம்பரத்திற்காக, கிருஷ்ணனாக வேடமிட்டு கேமராவின் முன் நிற்கவைக்கப்படுகிறார். கேமராமேனாக அப்போது எதிர்நின்றவர், பின்னாளில் சிறந்த மலையாள இயக்குனர்களில் ஒருவராக அறியப்படவிருந்த பரதன்.(தமிழில் கமல், சிவாஜி நடித்த தேவர் மகன் படத்தை இயக்கியவர்). 1996-ல் ஸ்ரீதேவி பாலிவுட்டின் டாப் ஸ்டார். அப்போது தேவராகம் என்கிற தன் படத்தில் ஸ்ரீதேவி நடித்தால் நன்றாக இருக்கும், ஆனால் அவரது கால்ஷீட் கிடைப்பது அரிதாயிற்றே எனக் குழம்பியே ஸ்ரீதேவியை சந்திக்க அவரது இல்லத்துக்கு வருகிறார் இயக்குனர் பரதன். ஸ்ரீதேவி அப்போது அங்கில்லை. அவரது அம்மா ராஜேஸ்வரி பரதனை அடையாளம் கண்டுகொள்கிறார். நீங்கள்தானே என் மகளைக் குழந்தைப்பருவத்தில் விளம்பரத்துக்காக ஃபோட்டோ எடுத்தது எனக் கேட்க, ஆச்சரியப்பட்ட பரதன் ஆம் என்கிறார். என் மகள் உங்கள் படத்தில் நடிப்பாள், கவலைப்படாமல் போய்வாருங்கள் என்று கூறி அவரை அனுப்பிவைத்தாராம் ஸ்ரீதேவியின் அம்மா. ஸ்ரீதேவியின் நெருக்கடியான வருடத்தில் அவர் இன்னொரு படத்தில் நடிக்க வாய்ப்பில்லை. இருந்தும் அம்மா வாக்குக் கொடுத்துவிட்டாரே என்பதனால், அதே அம்மாவுக்கு மூளை ஆப்பரேஷன் அமெரிக்காவில் நடக்கையில், அமெரிக்காவில் ஒருகால், தேவராகம் ஷூட்டிங்கிற்காக இந்தியாவில் ஒரு கால் என அலைந்து பரதனுக்குப் படத்தை முடித்துக்கொடுத்தார். ஒருபக்கம் அம்மாவின் உயிரையும், மறுபக்கம் அம்மாவின் வார்த்தையையும் காப்பாற்றிய மென்மனம் கொண்டவர் ஸ்ரீதேவி.

பொதுவாக கேமரா முன்னரேயன்றி, சொந்த வாழ்வில் அதிகம் பேசாத இந்த நடிகை அபூர்வமாக ஒரு நேர்காணலில், கமல், ரஜினி இருவரும் எனது நண்பர்கள் என்று கூறியிருக்கிறார். 2011-ல், ரஜினிகாந்த் உடல்நிலை மோசமாகி சிங்கப்பூரில் சிகிச்சை பெற்றுவருகையில், அவர் சீக்கிரம் குணமாகவேண்டி ஒரு வாரம் விரதம் இருந்திருக்கிறார். விரதத்தை முடித்து ஷிர்டி பாபா கோவிலுக்கு சென்று, ரஜினிக்காக, ஸ்ரீதேவி பிரார்த்தனை செய்து திரும்பியது சினிமா உலகிலேயே பலருக்குத் தெரியாது.

ஆறாவது வயதில் சின்னப்பத்தேவரின் துணைவன் படத்தில் குழந்தை முருகனாக வெளிப்பட்டு, வெள்ளைப்பேச்சில் நம் மனதை அள்ளியவர். தன் எட்டாவது வயதில், 1971- மலையாளப்படமான ’பூம்பாட்டா’வில் தாய் தந்தையை இழந்து, உறவினர் வீட்டில் வளரும் தாயில்லாப்பிள்ளையாய் பார்த்தோரின் மனதை உருகவைத்த குழந்தை ஸ்ரீதேவி. பலனாக 1971-ல், கேரள மாநிலத்தின் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான பரிசு அவருக்கு வழங்கப்பட்டது. 13 வயதினில் இயக்குனர் கே.பாலச்சந்தர் இவரைத் தமிழ்ப் படமான மூன்று முடிச்சின் ஹீரோயினாகத் தேர்ந்தெடுக்கிறார். (வேறொரு காலகட்டத்தில் நன்றியுணர்வோடு இதுபற்றிப் பேசியிருக்கிறார் ஸ்ரீதேவி). மூன்று முடிச்சு திரைப்படத்தில் அவர் சந்தித்தது, பின்னாளில் தமிழின் சிறப்புக் கலைஞர்களாக, ஆளுமைகளாக ஒளிரவிருந்த கமல் ஹாசனையும், ரஜினிகாந்தையும். அந்தப் படத்தில் நடிப்பில் இந்த இருவரும், அனுபவமில்லாத கத்துக்குட்டியான ஸ்ரீதேவியுடன் மோதி நிரூபிக்கவேண்டியிருந்தது! ரசிகர்கள் மறக்கமாட்டார்கள். பாரதிராஜா தன் ‘பதினாறுவயதினிலே’ படத்தில் நடிக்கக் கூப்பிட்டபோது, முதலில் தயங்கிய ஸ்ரீதேவி, பின்னர் ஒப்புக்கொண்டார். மயிலாக வந்து ஒயிலாக ரசிகர்களின் மனதில் நிரந்தரமாக அமர்ந்துகொண்டார். ‘என்னோட பேரு குயில் இல்ல… மயில்!’ என்பார் வெகுளியாக ஒரு இடத்தில். (அவர் மறைவுக்குப்பின் கடந்த இரண்டு மூன்று நாட்களாகப் பறந்துகொண்டிருக்கும் வாட்ஸப் மெசேஜ்களில் இது தெரியும்.) வேறு யாரையும் அப்போது அந்த ரோலில் நினைத்துப் பார்த்திருக்கமுடியுமா? அப்படியே யாருக்காவது கிடைத்திருந்தாலும் ஸ்ரீதேவியைப்போல் அந்த அப்பாவித்தனத்தைத் திரையில் கொண்டுவந்திருக்கத்தான் முடியுமா? இந்தப்படத்தின் ஹிந்தி ரீ-மேக்கான ’சோல்வா(ன்) சாவன்’ படத்தில் 1979-ல் நடித்து பாலிவுட்டில் கால்பதித்தார் ஸ்ரீதேவி. (இதற்கு முன் ஹிந்தியில் நடிகை லக்ஷ்மி நடித்த ஜூலி படத்திலும் ஸ்ரீதேவி குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்). வடநாட்டு ரசிகர்கள் கவனிக்கத் தொடங்கிவிட்டனர். 1983-ல் வெளியான, ரஜினிகாந்த் டபுள்ரோலில் நடித்த ஜானி படத்தில், பாடகி அர்ச்சனாவாக வந்து ’என் வானிலே ஒரு வெண்ணிலா’, ’காற்றில் எந்தன் கீதம்..’ ஆகிய பாடல்களுக்கான காட்சிகளுக்குத் தன் உணர்வினால் உயிரளித்த நடிகை.

தமிழ், தெலுங்கு, ஹிந்திப்படங்கள் என கமல் ஹாசனுடன் 27 படங்களில் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் ஸ்ரீதேவி. அந்தக் காலகட்டத்தில், பெரிய திரையில் மிகவும் விரும்பப்பட்ட ஜோடியாக இருந்தது இது. தமிழில் பாரதிராஜாவின் 16 வயதினிலே( கமல், ரஜினி, ஸ்ரீதேவி), சிகப்பு ரோஜாக்கள், கே.பாலச்சந்தரின் மூன்று முடிச்சு (கமல், ரஜினி, ஸ்ரீதேவி), வறுமையின் நிறம் சிகப்பு (தெலுங்கில் ஆகலி ராஜ்யம்),பாலுமகேந்திராவின் மூன்றாம் பிறை {ஹிந்தியில் சத்மா (Sadma)} ஆகிய புகழ்பெற்ற படங்களோடு, கல்யாணராமன், மீண்டும் கோகிலா, வாழ்வே மாயம் போன்ற படங்களில் சிறப்பாக பங்களித்துள்ளார் ஸ்ரீதேவி. ரஜினிகாந்துடன் மேலும் படங்கள்: காயத்ரி, வணக்கத்துக்குரிய காதலியே, அடுத்த வாரிசு, போக்கிரி ராஜா, தனிக்காட்டு ராஜா, நான் அடிமை இல்லை போன்றவை. எம்ஜிஆர்-உடன் குழந்தை நட்சத்திரமாக ’நம் நாடு’ என்கிற படத்தில் வருகிறார். சிவாஜி கணேசனின் மகளாக பைலட் ப்ரேம்நாத், கவரிமான் போன்ற படங்களில் பாத்திரமேற்று செய்திருக்கிறார். 2015-ல் வெளிவந்த ’புலி ’ என்கிற படந்தான் தமிழில் ஸ்ரீதேவியின் கடைசிப்படம்.

தெலுங்குப்பட உலகில் கிருஷ்ணாவுடன் அவரது ஜோடி பிரசித்தம். பங்காரு பூமி, பங்காரு கொடுக்கு, கைதி ருத்ரய்யா, ப்ரேம நக்ஷத்திரம், கிருஷ்ணாவதாரம் போன்று 29 படங்களில் இருவரும் இணைந்துள்ளனர். 1992-ல் வெளியான, இயக்குனர் ராம் கோபால் வர்மாவின் ’க்ஷ்ண க்ஷ்ணம்’ படம் புகழ்பெற்ற தெலுங்குப் படங்களில் ஒன்று. 1993-ல் வெளியிடப்பட்ட ’கோவிந்தா கோவிந்தா’ தெலுங்கு படத்தில் நாகார்ஜுனுடன் ஜோடி சேர்ந்துள்ளார் ஸ்ரீதேவி. இவையன்றி, ஆத்யபாடம், நாலுமணிப்பூக்கள், அங்கீகாரம், ஆ நிமிஷம், ஊஞ்சல் என இருபத்தைந்து மலையாளப் படங்களில் கமல் ஹாசன், மது, சோமன், மம்மூட்டி போன்ற பல்வேறு ஹீரோக்களுடன் ஸ்ரீதேவி பணியாற்றியுள்ளார் . பெரிய இடைவெளிக்குப்பிறகு 1996-ல் நடித்ததுதான், பரதனின் மலையாளப்படமான தேவராகம் (ஹீரோ:அரவிந்த்ஸ்வாமி).

1979-ல் பாலிவுட்டில் நுழைந்திருந்தாலும், ஹிந்திமொழி பிடிபட ஸ்ரீதேவிக்கு சிலவருடங்கள் ஆயின. ஆரம்பத்தில் நடிகை ரேகா உட்பட பலர் அவருக்கு ஹிந்திப்படங்களில் குரல் கொடுத்திருக்கின்றனர். 1989-வாக்கில் அவர் தன் வெற்றிப்படங்களான ச்சால்பாஜ் (Chaalbaaz), சாந்தினி ஆகிய படங்களில் நடிக்கையில் ஹிந்தி மொழி அவரிடம் வசப்பட்டுவிட்டிருந்தது. பாலிவுட்டில் அவரின் ஆரம்பப்படங்களில் ஒன்று ஹிம்மத்வாலா. இந்தப்படத்தின் ஹீரோவான ஜிதேந்திரா அப்போது மங்கிக்கொண்டிருந்த ஒரு ஸ்டார். ஆனால், படங்களின் பாட்டுக்களும் அதற்கேற்ப ஸ்ரீதேவியின் நாட்டிய, நடிப்புத்திறமையின் காரணம் கொண்டே படம் பிரபலமாகி, பணத்தை அள்ளிக் குவித்தது. வடநாட்டில் ஸ்ரீதேவி ரசிகர் வட்டம் உருக்கொண்டது. ’நாகினா’, புகழ்பெற்ற இயக்குனரான சேகர் கபூர் இயக்கிய சையன்ஸ்ஃபிக்ஷன் படமான ’மிஸ்டர் இண்டியா’ என வெற்றிகள் தொடர, இந்தியாவிலும் இந்தியாவுக்கு வெளியேயும் அறியப்பட்ட பிரபலமான பாலிவுட் ஸ்டாரானார் ஸ்ரீதேவி. இந்த வகையில் பார்த்தால் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகிய புகழ்பெற்ற நட்சத்திரங்கள் தமிழ் மற்றும் இதர தென்னிந்தியப்படங்களோடு பாலிவுட் படங்களிலும் நடித்திருந்தபோதிலும், ஸ்ரீதேவி அளவுக்கு தெற்கு, வடக்கு என ஒருசேர வென்று கோலோச்ச முடியவில்லை அவர்களால். முன்னர் வைஜயந்திமாலா, பிறகு ஹேமமாலினி, ரேகா ஆகிய தமிழ்நாட்டு நடிகைகள் பாலிவுட்டில் புகழ்பெற்றனர். ஆனால் தென்னிந்திய மொழிப்படங்களில் அவர்களால் காலூன்ற முடிந்ததில்லை. ஸ்ரீதேவி மட்டுமே இத்தகு வியத்தகு சாதனையாளர். அதனால்தான் ’இந்தியாவின் ஒரே பெண் சூப்பர்ஸ்டார்’ என்கிற பட்டம் வெகு இயல்பாகப் பொருந்துகிறது அவருக்கு.

2012-ல் பதினைந்து வருட பெரிய இடைவெளிக்குப்பின், அவரது லைட் காமெடிப் படமான, இளம் பெண்இயக்குனர் கௌரி ஷிண்டே இயக்கிய ‘இங்கிலீஷ்-விங்கிலீஷ்’ வெளியானது. ஸ்ரீதேவியைத் தவிர படத்தில் தெரிந்த முகமென்று யாருமில்லை. ’மீண்டும் ஸ்ரீதேவி’ எனப் பெரும் உற்சாகத்தை ரசிகர்களிடையே அந்தப்படம் கிளப்பியது. கனடாவின் டொரொண்ட்டோ திரைவிழாவில் திரையிடப்பட்டு ரசிகர்கள் மற்றும் திரைவிமரிசகர்களின் கவனத்தைக் கவர்ந்தது. இளம்இயக்குனருக்கான பரிசை வென்றதோடு படம் நன்றாக ஓடி, வணிகரீதியிலும் ஹிட்டானது. அவரது 54-ஆவது வயதில், 2017-ல் அவரது கடைசி ஹிந்திப்படமான ‘மாம்’ (அம்மா) வெளியிடப்பட்டது. ரவி உத்யவர் இயக்க, ஸ்ரீதேவியுடன் நவாசுதீன் சித்திக்கி மற்றும் சிலர் நடித்த குறைந்த பட்ஜெட் படம். படம், போட்ட காசை மீட்டதோடு, கொஞ்ச லாபத்தையும் கொடுத்தது.

படம் வெளிவரவிருந்த நிலையில் தமிழ் நாளேடொன்றில் அவரது சிறிய நேர்காணலொன்று வந்தது. அதில் ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில் மாம் என்றால் தமிழில் அம்மா. ஆனால் இது அம்மாபற்றியது மட்டுமல்ல, வளர்ந்துவரும் மகள் பற்றியதுமாகும் என்கிறார். இந்தப்படத்தில் நடித்தபோது, தன்னோடு எப்போதும் ஸ்டூடியோவுக்குக் கூடவந்த தன் அம்மாவின் நினைவு தாக்கியதாகக் குறிப்பிடுகிறார். மா என்றால் அம்மாவைக் குறிக்கும். ஆனால் தமிழில் அம்மா என்றால் ஜெயலலிதாதான். ஜெயலலிதாவின் வாழ்க்கைபற்றி படமெடுக்கப்பட்டால் அதில் நடிப்பீர்களா என்று கேட்கப்பட்டதற்கு, ’அவரைப் போன்ற ஒரு ஆளுமை கொண்டவரின் கதாபாத்திரத்தில் நடிப்பது பெரிய பொறுப்புமிக்க பணியாகும். அத்தகைய கதாபாத்திரத்துக்கு நான் இவ்வளவு விரைவில் நியாயம் வழங்க முடியாது என்று உணர்கிறேன். ஆனால் நான் குழந்தை நட்சத்திரமாக இருந்த போது ஜெயலலிதாவை இறைவியாகவே கருதினேன். அவருடன் உரையாடிய கணங்கள் குறித்த இனிய நினைவுகள், இப்போதும் என்னிடம் அழியாமல் இருக்கிறது’ என்கிறார் ஸ்ரீதேவி.

நடிப்புத்தொழிலில் வெற்றிமேல் வெற்றிபெற்றபோதிலும், தன் பிராபல்யம்பற்றிய செருக்கு அவரிடம் காணப்பட்டதில்லை. அவருடைய பதின்மவயதில் காணப்பட்ட குழந்தைமை, ஒரு அப்பாவித்தனம் அவரில் நீடித்திருந்தது. அதுவே அவரது மாபெரும் சக்தியும், பலவீனமும். தனிமனுஷியாக எந்த நேர்காணலிலும் அவர் தன்னை முழுமையாக வெளிப்படுத்தியவரில்லை. மிகவும் குறைவாக, ஜாக்ரதையாகப் பேசுபவர். உள்ளுக்குள்ளே அவர் மிகவும் மென்மையானவராகவும், வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களில் மருண்டுபோய், சந்தேகத்துடன் இந்த உலகை நோக்குபவராகவே இருந்திருக்கிறார். வெளியே சந்தோஷமாக இருப்பதாகத் தெரிந்தாலும், உள்ளே தன் அகத்தின் பாதுகாப்பின்மையை, தன்னுடைய துக்கத்தைக் காட்டிக்கொள்ளாது, தன்னைச் சுற்றிலும் ஒரு உளவியல் கட்டமைப்புடனேயே அவர் எப்போதும் இருந்திருக்கிறார் என்கிறார் அவரது படங்களை இயக்கியவரும் அவரை அருகிருந்து அறிந்தவருமான இயக்குனர் ராம் கோபால் வர்மா. ஸ்ரீதேவி தன் சிறுவயதிலேயே பேரும்புகழும் அடைந்ததனால் தன் வாழ்வை ஸ்திரமாகப் பிடித்துக்கொள்ளவே அவருக்கு வாய்ப்பில்லாது போனதெனவும், தந்தை இருந்தபோதுகூட சொத்துபத்து விஷயங்களில் அவரது உறவினர்களாலேயே வஞ்சிக்கப்பட்டதும், அப்பாவின் மறைவுக்குப்பின் அவர் அம்மாவையே சார்ந்திருக்கவேண்டியிருந்ததும் காரணங்களெனக் கூறுகிறார் ராம் கோபால் வர்மா.

அவரது கல்யாணமும்கூட அவரால் விரும்பி அமைத்துக்கொள்ளப்பட்டதல்ல. அவரது ஒரே துணையான அம்மாவும் இறந்துவிட்ட நிலையில், இவ்வுலகில் தனித்து விடப்பட்டு செய்வதறியாது உள்ளுக்குள்ளே தவித்தபோது, யாரோ ஏதோ சொன்னார், வேறுயாரோ சிபாரிசு செய்தார், இதுதான் சரியோ, வேறுவழியில்லையோ என்கிற குழப்பமான நிலையிலேயே இறுதியில் திருமணத்திற்கு சம்மதித்திருக்கிறார் என்கிறார்கள். அவர்போய்ச்சேர்ந்த குடும்பத்திலும் அவரை மதித்தவரோ, உண்மை அன்பு காட்டியவரோ எவரும் இல்லை என்றுதான் தெரியவருகிறது. போதாக்குறைக்கு, ஸ்ரீதேவி சம்பாதித்த பணத்தைவைத்து, கணவரென வந்தவர் தன் பெருங்கடன்களை அடைத்துக்கொண்டார் என்றும் கேள்வி. ஸ்ரீதேவி சண்டைபோடும் குணத்துக்காரர் இல்லையாதலால், எல்லாவற்றையும் அனுசரித்துப்போவதாக எண்ணி, உண்மையில் எல்லாவற்றையும் இழந்தே வாழ்ந்திருந்ததாகத் தெரிகிறது. குழப்பத்தோடு குழப்பமாக, இரண்டு குழந்தைகள் – அதுவும் பெண் குழந்தைகள், பிறந்துவிட்ட நிலையில் அவர்களின் வளர்ப்பிலேயே தன் மனதை முழுதும் ஈடுபடுத்தி இருபது வருடங்களைக் கடத்தியிருக்கிறார்போலும், தனக்கென எந்த சுகமும் இல்லாமலேயே.

’மாலினி ஐயர்’ என இவர் நடித்த ஒரு காமெடி டிவி சீரியல், சஹாரா சேனலில் 2004-ல் வெளிவந்து, ஜனரஞ்சகமாக அமைந்தது. 2012-ல் பெரியதிரைக்கு ‘இங்கிலீஷ்-விங்கிலீஷ் (ஹிந்தி படம்)’ மூலம் திரும்பினார். 2013-ல் ஸ்ரீதேவிக்கு இந்தியாவின் உயர் விருதுகளில் ஒன்றான ‘பத்மஸ்ரீ’ வழங்கப்பட்டது. சிலவருடங்களுக்கு முன், அமிதாப் பச்சனின் ’கோன் பனேகா க்ரோர்பதி?’(Kaun banega crorepati – கோடீஸ்வரர் ஆகப்போவது யார்) டிவி நிகழ்ச்சியில், ஒருமுறை ஸ்பெஷல் கெஸ்ட்டாக ஸ்ரீதேவி வந்தபோது, அமிதாப் மிகவும் வாஞ்சையுடன், மரியாதையுடன் அவரை நடத்தியது நினைவில் இருக்கிறது. உடம்பை அதீதக் கட்டுப்பாட்டில் வைத்து நடித்ததோடு, மாடலிங் வேறு செய்துவந்தார் பிற்காலத்தில். இதையெல்லாம் அவர் விரும்பித்தான் செய்தாரா, செய்யுமாறு, மேலும் சம்பாதித்துக்கொடுக்குமாறு நிர்பந்திக்கப்பட்டாரா – அந்த இறைவனுக்கே வெளிச்சம். கடைசியில் துபாயில் எப்படித்தான் அவர் மறைந்தார் என்பதையும் நாம் அந்தப் படைத்தவனிடமே விட்டுவிடலாம். சதிகார உலகில், நம்மைப்போல் அப்பாவிகள் தெரிந்துகொள்ள வேறேதுமில்லை.

**

18 thoughts on “ஸ்ரீதேவி எனும் சினி சகாப்தம்

  1. எங்கள் உள்ளங் கொள்ளைக்கொண்ட மயில் மீளாத்துயிலில் 😦
    அந்த கண்கள் எப்பவும் குழந்தைத்தனம் கொண்டவை அவ்ளோ இன்னொசண்ட் தெரியும் .அவர் கண் இமைகள் நெருக்கமா லேசா வளைந்து இருக்கும் மீன் மாதிரி அழகு வடிவம் .எத்தனை ரசித்திருக்கிறேன் அர்ச்சனாவையும் விஜியையும் .
    நேற்றுகூட ஜானி படத்தில் லவ்வை சொல்வாரே அந்த சீனை ரிப்பீட் செய்து பார்த்தேன் .
    இங்கிலிஷ் விங்கிலீஷில் தான் கற்ற முதல் ஆங்கில வார்த்தையை சொல்லிக்கொண்டே ஆங்கில வகுப்பைவிட்டு நடந்து செல்வாரே ..ஸோ இன்னொசண்ட் .அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன்

    Liked by 1 person

    1. @ ஏஞ்சலின்:

      நீங்கள் நிறைய பார்த்திருக்கிறீர்கள்.

      குறிப்பிட்ட சில படங்களை நான் பார்க்கவில்லை. ஸ்ரீதேவியின் படங்களைத் தவறவிடுவது தப்பு! 15 வருட இடைவெளிக்குப்பின் அவர் தோன்றிய படங்களை நிதானமாகப் பார்க்கவேண்டும் என நினைக்கிறேன்.

      Like

  2. மிகப் பெரிய ஒரு அலசல்.. நிறைய விடயங்கள் தெரியாதவை எனக்கு. உலகில் எல்லோராலும் விரும்பப்படும் அவருக்கு வாழ்க்கையில் எவ்வளவு சோதனைகள். ஸ்ரீதேவியின் குணம் பற்றி தெரியாது ஆனா அவவைப்போல அழகில் இதுவரை சினிமாவில் யாரும் இல்லை என்றே நான் சொல்லுவேன்.
    மரணம் எப்படி ஆனதோ ஆனா.. பாவம் அந்தப் பிள்ளைகள்தான்.
    இதுவும் கடந்து போகும்.

    Like

    1. @ அதிரா:

      கருத்துக்கு நன்றி.

      //.. பாவம் அந்தப்பிள்ளைகள்தான். இதுவும் கடந்து போகும்.
      இப்படி எல்லாமே கடந்துபோய்க்கொண்டிருந்தால், கடவுளும் கடந்து போய்விடுவார் !

      Like

  3. நாளை நமதே படத்தில் வருவது ஸ்ரீதேவி இல்லை என்று நினைக்கிறேன். நீங்கள் நம்நாடு படத்திப் பற்றி குறிப்பிட நினைத்தீர்களோ? பாபு படத்திலும் சிவாஜியுடன் குழந்தையாக நடித்திருக்கிறார். சிவாஜியுடன் ஜோடியாக சந்திப்பு, விஸ்வரூபம் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். ஜெய்சங்கருடன் குழந்தையாகவும் (கணிமுத்துப் பாப்பா) , அவர் ஜோடியாகவும் ( இது எப்படி இருக்கு) நடித்திருக்கிறார்! கமலுடன் நடித்த படங்களில் மீண்டும் கோகிலா முக்கியமான படம். தமிழில் அவரது கடைசி படம் விஜய் நடித்த புலி. அதில் அவர் வில்லி.

    Like

    1. @ஸ்ரீராம்:

      உண்மை. நாளை நமதே.. பாட்டு மனதில் தட்டிக்கொண்டிருக்க அதைப்போட்டுவிட்டேன்! நம்நாடு எனத் திருத்தியிருக்கிறேன். விஜய்யின் புலியில் இவர் வந்திருக்கிறார் என்பது என் அலசலில் சிக்காது போய்விட்டது. சேர்த்துவிட்டேன் இப்போது . நன்றி.

      Like

  4. ராம் கோபால் வர்மா ஸ்ரீதேவியை கன்னாபின்னா என்று காதலித்தித்ததாகவும், அதை அவரிடமே வெளிப்படுத்தியதாகவும் சொல்லி இருக்கிறார். விளையாட்டு என்று நினைத்து விட்டாராம் ஸ்ரீ.

    Liked by 1 person

    1. RGV-யின் தொடர் ட்வீட்டுகளை நானும் பார்த்து ஆச்சரியப்பட்டேன். க்ரஷ்ஷோ, காதலோ (இவரும் ஒரு வகையான ஆசாமி!) என எனக்கும் தோன்றியது.

      Like

  5. ஸ்டீஃபன் ஸ்பீல்பர்க் இரங்கல் தெரிவித்து விட்டு, ஜுராஸிக் பார்க் படத்தில் நடிக்க அழைத்ததாகவும் ஸ்ரீ மறுத்ததாகவும் சொல்லியிருக்கிறார். பாஹுபலியின் ரம்யா கிருஷ்ணன் ரோலிலும் முதலில் ஸ்ரீயை அழைத்தார்கள்.

    Like

    1. ஜுராஸிக் பார்க் ஆஃபர் பற்றிப் படித்தேன். போட மறந்துவிட்டேன். பாஹுபலிபற்றியும் எங்கோ படித்தேன். இருக்கட்டும். ஏற்கனவே ரொம்ப நீண்டுவிட்டது கதை !

      Like

  6. தெற்கிலிருந்து வடக்கே சென்று தன் ஆளுமையை நிரூபித்து, தக்கவைத்தவர் என்ற நிலையில் பாராட்டப்படவேண்டியவர்.

    Liked by 1 person

    1. @Dr B Jambulingam :

      அப்படி மட்டும் பார்த்தால் வைஜயந்தி மாலாதான் முன்னோடி.

      Like

  7. அவர் வாழ்க்கை பரிதாபமானது. எனக்கு எப்பொழுதும் நடிப்பது போலவே தோன்றும். சிவாஜியைப் போல.
    சுயத்தை இழக்கவில்லை. நிஜத்தை வெளியில் காண்பிக்கவில்லை. இத்தனை விமரிசனங்கள் இல்லாமல் கடந்திருக்கலாம். அந்தக் குழந்தை முகமே என் நினைவில் பதிகிறது.
    மிக முக்கியமான பதிவாகக் கருதுகிறேன். மிக நன்றி ஏகாந்தன்.

    Liked by 1 person

    1. @ Revathi Narasimhan :

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      அவரை வெறும் நடிகையாக என்றும் பார்த்ததில்லை நான். ஒரு ஆர்ட்டிஸ்ட்அவர். அந்த வகையிலும் மிகத் திறமையானவர்.

      வடக்கில் அவருக்கு நல்ல இயக்குனர்கள் கிடைத்ததில்லை. ஷ்யாம் பெனெகல், சத்யஜித் ரே, சயீத் மிர்ஸா, Sai Paranjpye, கோவிந்த் நிஹலானி போன்ற திறமைமிகு இயக்குனர்கள் ஸ்ரீதேவியை ஹிந்தியில் இயக்காதுபோனது நம் துர்பாக்யம் எனக் கருதுகிறேன்.

      இவரைப்போலவே ரேகாவின் (ஹிந்தி) திறமையும் மசாலா இயக்குனர்களிடம் சிக்கிக்கொண்டதால முழுமையாக வெளிப்படவில்லை. விதிவிலக்கு: உம்ராவ் ஜான், ஜுனூன்,

      Like

  8. மின்னஞ்சல் பின்னூட்டம் -கீதா சாம்பசிவம்:

    //சிவாஜியுடன் ஜோடியாக சந்திப்பு, விஸ்வரூபம் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். ஜெய்சங்கருடன் குழந்தையாகவும் (கணிமுத்துப் பாப்பா) , அவர் ஜோடியாகவும் ( இது எப்படி இருக்கு) நடித்திருக்கிறார்! // க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், ஜிவாஜி போன்ற கிழவருடன் ஜோடியாக நடிக்கும்போது அவரை விடச் சின்னவரான ஜெய்சங்கருடன் நடித்தால் என்னவாம்? இரண்டுமே சகிக்காது என்பது வேறே விஷயம்! 🙂

    இப்போவும் நேரடியாகக் கொடுக்க முயன்று முடியவில்லை. முன்னர் என்ன சொல்லி இருந்தேன் என்பது நினைவில் இல்லை. ஆனாலும் ஶ்ரீதேவி தன் சோகத்தை மறைத்துக்கொண்டு வாழ்க்கையிலும் நடித்தே வந்திருக்கிறார். ஒருவேளை அவர் விரும்பியபடி மிதுன் சக்கரவர்த்தியைத் திருமணம் செய்திருந்தால் சந்தோஷமாக இருந்திருப்பாரோ என்னவோ! பாவம்! அவருடைய பல படங்கள் பார்த்ததில்லை. முக்கியமாய் அனைவரும் போற்றும் ஜானி! என்றாலும் பார்த்தவரை அவரைப் போல் திரைப்படங்களில் திறமை உள்ளவர் அரிதே!

    Liked by 1 person

  9. @ கீதா சாம்பசிவம் :

    பிரமாதமான திரைக்காவியங்களைத் தந்த மனுஷிக்கு, பிரமாதமான – குறைந்தபட்சம் நிம்மதியான வாழ்க்கைகூட அமையவில்லை. சொந்த வாழ்க்கையில் ஒரு brave,happy face-ஐ {உண்மைக்குப் புறம்பாக வெளிப்படுத்துமாறு (நடிக்குமாறு)} ஆகிவிட்டது அவருக்கு. மித்துன் ஆங்கிள் எனக்குப் புதுசு.

    நமது நடிகைகளின் சோகக்கதைகள்..(ஷோபா, ஃபட்டாஃபட் ஜெயலட்சுமி, ஸில்க் ஸ்மிதா, ஜெயலலிதா இப்போது இவர்) தொடர்கின்றன போலும்.

    Like

  10. ஸ்ரீதேவியின் மரணத்தைப் பற்றி பேச வேண்டுமானால் நான் லேட்…ஆனால் ஒரு திறமையுள்ள ஆர்டிஸ்டாக என்றால் லேட்டில்லை…

    உங்கள் பதிவு நிறைய விஷயங்களைச் சொல்லுகிறது. எனக்கு அவரை நல்ல திறமைஉள்ள பெண்ணாகத் தெரியு,ம் ஆனால் இத்தனை விவரங்களை இப்போதுதான் அறிகிறேன்….

    இங்கிலிஷ் விங்கிலிஷ் பார்த்தேன் செம படம்….ரொம்ப ரசித்துப் பார்த்தேன்…அவரது திறமை இத்தனை வயதானாலும் மறையவில்லை…என்று நினைத்துக் கொண்டேன்…அவரது கண்களே பேசிவிடும்…..முகமே பல உணர்ச்சிகளைச் சொல்லிடும்…வசனம் கூட வேண்டாம்…காமெரா முன் நின்று பாவங்களை முகத்தில் காட்டினால் போதும் அந்தக் கண்கள் சொல்லிவிடும்….வெரி எக்ஸ்ப்ரெஸிவ் ஐய்ஸ்….அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்களே….இங்கிலிஷ் விங்கிலிஷில் என்னவோ எனக்கு அவரது அகம் வெளிப்பட்டதோ என்றும் கூடத் தோன்றியது அப்போது….உங்கள் பதிவைப் பார்க்கும் போது அதுவும் உண்மைதானோ என்றும் தோன்றியது…எப்படியோ…வந்தார் வென்றார் (எதை? மக்களின் மனதை…பாராட்டுகளை….ஆனால் அவர் தன் வாழ்க்கையில்? சந்தோஷத்தை வென்றாரா?!) சென்றார் என்று சென்றுவிட்டார்…

    மரணம் பற்றி பல பேசப்படுகிறது. இனி ஆராய்ந்து என்ன பயன்? என்றாலும் பல நடிகைகளின் மரணக் கதைகள் பல பேசத்தான் செய்கின்றன அந்த லிஸ்டில் இவரும் ஆகிவிட்டாரோ?!! புலியில் நடித்திருக்கிறாரா? அதுவும் வில்லியாக? அப்போ பார்க்கணுமே அந்தப் படம்….

    நல்ல திறமைசாலியை அதுவும் விரல் எண்ணிவிடக் கூடிய அளவில் இருக்கும் திறமைசாலிகளில் ஒருவரான ஒரு திறமைசாலியை இழந்துவிட்டது

    Liked by 1 person

    1. @ கீதா:
      அபாரமாகத் திரையில் மிளிர்ந்து, நிஜத்தில் இருளுடன் வாழ்ந்து சென்றுவிட்டார் எனவே தோன்றுகிறது. எல்லோருக்கும் எல்லாமும் கிடைப்பதில்லை வாழ்வில்.

      Like

Leave a comment