கிருஷ்ணன் நம்பியின் சிறுகதை ’மருமகள் வாக்கு’கிருஷ்ணன் நம்பி:
1932-ல் அழகியபாண்டிபுரத்தில் (குமரிமாவட்டம்) பிறந்தவர். தனது 18 –ஆவது வயதில் இவரது இலக்கியப் படைப்புகள் வெளிவர ஆரம்பித்தன எனலாம். முதலில் ஒரு கட்டுரை. பிறகு குழந்தைகளுக்கான கவிதைகள் ‘கண்ணன்’ என்கிற பத்திரிக்கையில் வெளிவரலாயின. ஆரம்பத்தில் சசிதேவன் என்கிற புனைபெயரில் எழுதி, பிறகு ‘கிருஷ்ணன் நம்பி’ ஆக எழுத ஆரம்பித்தார். மிகக் குறைவான சிறுகதைகளே எனினும் சில இலக்கியத்தரம் வாய்ந்தவை எனப் பின்னர் விமரிசகர்களால் கருதப்பட்டன. புற்றுநோயினால் அவதிப்பட்ட நம்பி, தனது 44-ஆவது வயதில் 1976-ல் காலமானார். சுஜாதா, சுந்தர ராமசாமி போன்ற இலக்கிய ஆளுமைகளால் நல்ல எழுத்தாளர் எனக் கருதப்பட்டவர். சிறந்த குழந்தைப்பாடல்களை எழுதியவர் என சு.ரா.வினால் பாராட்டப்பட்டவர். ஆயினும், நம்பியின் சில படைப்புகளே புத்தக வடிவம் பெற்றன. அவற்றில் சில :

யானை என்ன யானை– குழந்தைப் பாடல்கள் தொகுப்பு
காலை முதல் மற்றும் நீலக்கடல் – சிறுகதைத் தொகுப்புகள்

சிறுகதை ‘மருமகள் வாக்கு’ : எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் சமீபத்தில் தொகுத்த தமிழின் 100 சிறந்த சிறுகதைகளில் ஒன்றாக இடம்பெற்ற ‘மருமகள் வாக்கு’ சிறுகதையின் மூலம் தமிழ் இலக்கிய வாசகர்களின் கவனத்திற்கு மீண்டும் வருகிறார் கிருஷ்ணன் நம்பி. கதை எப்படி?

கதையின் காலம் இங்கே முக்கியம். இந்திய சுதந்திரத்துக்குப் பின்னான காலம். புதிய சுதந்திர நாட்டில், ஜனநாயகத்தில், உள்ளாட்சித் தேர்தல்கள் பரபரப்பாக, உத்வேகத்துடன் நடக்க ஆரம்பித்துள்ளன என்று தெரிகிறது. அதன் பின்னணியில், நம்மை ஒரு மத்தியதரக் குடும்பத்திற்கு அழைத்துச்சென்று கதையை ஆரம்பிக்கிறார் நம்பி. மீனாட்சி அம்மாளுக்குக் கொஞ்சம் நிலம், சொந்த வீடு உண்டு. சொந்தமாய்ப் பசு ஒன்றும் உண்டு என்பதனால் அவளுடைய அந்தஸ்தைப்பற்றி நீங்கள் எளிதில் புரிந்துகொள்ளலாம். பால் வியாபாரத்தில் கில்லாடி. அரசாங்கத்தில் பியூனாக வேலைசெய்த தன் கணவன் போனபின், தன் ஒரே மகனுக்கு அந்த வேலையை அரசாங்கம் கருணையோடு போட்டுக்கொடுத்துவிட்டதில் அவளது தலை மேலும் நிமிர்ந்துள்ளது. ஒரு கட்டுப்பெட்டியான, ஒல்லியான, ஏழைப் பெண் ருக்மிணியை மருமகளாக வீட்டுக்குக் கொண்டுவந்துவிட்டாள். மருமகளுக்கு நாளெல்லாம் சமையல்கட்டு, மாட்டுத்தொழுவம் என்று மாயாத வேலை. அவளும் இதுதான் தன் வாழ்வு எனப் புரிந்துகொண்டு சளைக்காமல், நொடிக்காமல் செய்கிறாள். மாமியாரின் நேரடி கண்ட்ரோலில் மருமகள். சமையற்கட்டு, மாட்டுத்தொழுவம் தவிர வெளிஉலகம் பார்த்திராத அப்பாவி ருக்மிணி. வீட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் மீனாட்சி அம்மாளின் ஆர்ப்பாட்டந்தான், கோலோச்சுதல்தான்.

ருக்மிணிக்கு சமையலில் நல்ல கைமணம். பால் கறக்கவும் தெரியும். பால் கறந்தால் மார் வலிக்கும் என்றெல்லாம் சொல்வார்கள். அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளக்கூடாது; ஏன், எதற்கும் பதிலே சொல்லாதிருப்பதுதான் உத்தமம் என்று மாமியார்க்காரி ஆரம்பத்திலிருந்தே மருமகளுக்குக் போதனைசெய்திருந்தாள். வீட்டில் எல்லா வேலைகளும் ருக்மிணிதானா? மாமியார் என்னதான் செய்கிறாள்? நம்பியின் வார்த்தைகளில்:

மருமகளை ஏவி விட்டுவிட்டு மாமியார் மீனாட்சி அம்மாள் ஒன்றும் கையைக் கட்டிக்கொண்டு சும்மா இருந்துவிடவில்லை. அவளுக்கும் வேலைகள் உண்டு. பாலுக்குத் தண்ணீர் சேர்ப்பது, அளந்து விற்பது, வருகிற காசுகளை (ராமலிங்கம் சம்பளம் உள்பட) வாங்கிக் கணக்கிட்டுப் பெட்டியில் பூட்டுவது, பார்த்துப் பார்த்துச் செலவு செய்வது, தபால் சேவிங்க்ஸில் பணம் போடுவது எல்லாம் அவள் பொறுப்புதான். இவை மட்டுமா? ஓய்ந்த நேரங்களில் ஸ்ரீராமஜெயம், ஸ்ரீராமஜெயம் என்று ஒரு நோட்டுப் புத்தகத்தில் லட்சத்துச் சொச்சம் தரம் எழுதி, அக்ரகாரத்துப் பெண்களை அதிசயத்தில் ஆழ்த்திவிட்டிருக்கிறாள். சாவதற்குள் பத்து இலட்சத்து ஒன்று எழுதி முடித்துவிட வேண்டும் என்பது அவள் திட்டம்.

ருக்மிணியை வெளியே பார்ப்பதே அபூர்வம். எப்போதாவது கோயிலுக்கோ குளத்திற்கோ மாமியார் அனுப்பிவைத்தால், அக்கம்பக்கத்துப் பெண்கள் அவள் பின்னேயே ஓடி, அவளது வாயைக் கிளறப் பார்ப்பார்கள். ஆனால் ருக்மிணி வாயே திறக்கமாட்டாள். இவளை முயற்சிப்பதில் அர்த்தமில்லை என்று தெரிந்துகொண்டுவிட்ட அக்கம்பக்கம், மாமியாரையாவது சீண்டுவோம் என நினைத்தது. மருமகள் எப்படி இருக்கா என்று அவ்வப்போது கேட்டுப் பார்த்தது. மீனாட்சி அம்மாளா? அவளுக்கென்ன, நன்னா இருக்கா என்று எங்கோ பார்த்துக்கொண்டு சொல்லிவிட்டு பேச்சை உடனே மாற்றிவிடுவாள்.

அடுத்த நாள் அதிரடித் தேர்தல். பூனை அபேட்சகருக்கும் கிளி அபேட்சகருக்கும் கடும் போட்டி. எங்கும் தேர்தல் பற்றியே பேச்சு. யாருக்கு வாக்களிப்பார்கள் மாமியாரும் மருமகளும் என்று பெண்டுகள் கிண்டிப் பார்த்தன:

மீனாட்சி அம்மாள் வாக்கு யாருக்கு என்பது நன்றாகத் தெரிந்திருந்தும், “ஒங்க ஓட்டு கிளிக்குத்தானே மாமி?’’ என்று விஷமமாக வாயைக் கிளறினாள் ஒருத்தி. “ஏண்டி எல்லாம் தெரிஞ்சு வெச்சுண்டே என்னச் சீண்டறயா?’’ என்றாள் மீனாட்சி அம்மாள். “ஒங்க மாட்டுப் பொண் ஆருக்குப் போடப் போறாளோ?’’ என்று இன்னொருத்தி கண்ணைச் சிமிட்டவும், மீனாட்சி அம்மாளுக்குக் கோபம் வந்துவிட்டது. “பொண்டுகளா, என்னயும் அவளயும் பிரிச்சாப் பேசறேள்? நானும் அவளும் ஒண்ணு, அது தெரியாதவா வாயிலே மண்ணு’’ என்று அவள் ஒரு போடு போடவும் எல்லாரும் பெரிதாகச் சிரித்தார்கள்.

தேர்தல் அன்று காலையிலேயே போய் ஓட்டுப் போட்டுவிட்டாள் மீனாட்சி அம்மாள். ஆற்றங்கரைக்குப் பக்கத்தில்தான் ஓட்டுச்சாவடி. ராமலிங்கம் (ருக்மிணியின் கணவன்) குளித்துவிட்டு வரும்போதே அவனை இழுத்துப்போய்விட்டார்கள் ஓட்டுச்சாவடிக்கு. ஈரத்துண்டுடனேயே அவன் ஓட்டுப் போடும்படி ஆனது.

ருக்மிணி? அவள் மாட்டுத் தொழுவத்தில் பசுவுக்குத் தீனி போடுகிறாள். அது சாப்பிடுவதை ஆசையாய்ப் பார்த்துக்கொண்டிருக்கிறாள். மாட்டைத் தடவிவிட்டுக்கொண்டே, அதோடு மனம்விட்டுப் பேசுவதில் அவளுக்கு ஒரு ஆத்ம திருப்தி. இதற்கு மீனாட்சி அம்மாளின் அனுமதி தேவையில்லை :

“நான் இன்னிக்கு ஓட்டுப் போடப்போறேன். ஒனக்கு அந்த ஒபத்ரவம் ஒண்ணும் கெடையாது. நான் ஆருக்குப் போடணும் நீ சொல்லு. சொல்லுவியா? நீ ஆருக்குப் போடச் சொல்றயோ அவாளுக்குப் போடறேன். ஒனக்குப் பூனை பிடிக்குமோ? கிளி பிடிக்குமோ? சொல்லு, எனக்கு ஆரப் பிடிக்குமோ அவாளைத்தான் ஒனக்கும் பிடிக்கும், இல்லையா? நெஜமாச் சொல்றேன், எனக்குக் கிளியைத்தான் பிடிக்கும். கிளி பச்சப்பசேல்னு எம்பிட்டு அழகா இருக்கு! அது மாதிரி பறக்கணும்னு எனக்கு ரொம்ப ஆசை. பூனையும் எனக்குப் பிடிக்கும். ஆனா, அதைவிடக் கிளியைப் பிடிக்கும். ஆனா பூனைக்குக் கிளையைக் கண்டாலே ஆகாது.’’

மீனாட்சி அம்மாளின் ஏற்பாட்டின்படி பக்கத்துவீட்டுப் பெண்கள் மதியம் வந்திருந்தார்கள், ருக்மிணியை வாக்குச்சாவடிக்குக் கூட்டிக்கொண்டுபோக. ருக்மிணி இருக்கிறதிலேயே சுமாராக உடுத்திக்கொண்டு, தலையை வாரிக்கொள்ள சீப்புக் கிடைக்காமல் அவசர அவசரமாக கையினால் தலைய ஒதுக்கிக்கொண்டுப் படியிறங்குகிறாள். மாமியார் கூப்பிடுகிறாள் :

’’இந்தா, சொல்ல மறந்துட்டேனே, ஒரு நிமிஷம் இங்க வந்துட்டுப் போ’’ என்று வீட்டுக்குள் கூட்டிப் போனாள். குரலைத் தணித்து, “ஞாபகம் வைச்சிண்டிருக்கியா? தப்பாப் போட்டுடாதே. ஒரு சீட்டுத் தருவா. பூனப் படமும் கிளிப் படமும் போட்டிருக்கும். பூனப் படத்துக்குப் பக்கத்திலெ முத்திரை குத்திடு. வழிலெ இதுகள்கிட்ட வாயெக் குடுக்காத.. போ! ’’ என்றாள்.

வாக்குச்சாவடிக்கு வந்த ருக்மிணிக்கு எல்லாமே விசித்திரமாக, வேடிக்கையாகத் தெரிந்தன. தூரத்து அனிச்ச மரமொன்று அவளது பால்யகால நினைவை மீட்டது. சின்ன வயதில் வேம்பனூரில், அவள் படித்த பள்ளிக்கூடத்தில் இருந்த அந்த மரத்தில் ஏறி எத்தனைப் பழம் பறித்துத் தின்றிருக்கிறாள். அவளுக்கு சந்தோஷமாக இருந்தது. சாவடியிலிருந்து ஓட்டுப் போட்டவர்கள் விதவிதமான முகபாவத்துடன் வெளியேறினர். ருக்மிணியின் கியூவும் வேகமாக நகர்ந்தது.

ருக்மிணி என்ன செய்தாள்? கிருஷ்ணன் நம்பியின் கதைக்குள் பயணியுங்கள் அன்பர்களே:

லிங்க்: http://azhiyasudargal.blogspot.in/2008/10/blog-post_3258.html

நன்றி: அழியாச்சுடர்கள் இணைய தளம். படத்திற்கு நன்றி: விகடன்.காம்/இணையம்
w

**

Advertisement

18 thoughts on “கிருஷ்ணன் நம்பியின் சிறுகதை ’மருமகள் வாக்கு’

 1. அருமையான விமர்சனப் பகிர்வுக்கு நன்றி.

  Liked by 1 person

 2. @கில்லர்ஜி :

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர் கில்லர்ஜி

  Like

 3. அருமையாக எழுதி இருக்கிறார். பழகிப்போன அடிமை உணர்வு. யானையைச் சிறுவயதாய் இருக்கும்போது சங்கிலியால் பலமாகக் கட்டி இருப்பார்களாம். விடுதலைக்காகப் போராடி இழுத்து இழுத்து முடியாமல் பழகிய யானை பின்னாளில் அதே நினைவில் விடுதலைக்காக முயற்சிக்கக் கூட செய்யாதாம். அதுதான் நினைவுக்கு வருகிறது.

  Liked by 1 person

 4. @Sriram:
  உண்மைதான். இப்படித்தான் மனிதர்கள் – ஆணோ, பெண்ணோ. சுதந்திரம் மறுக்கப்பட்டால், அது பழகியும் போனால் அப்படி ஒன்று இருப்பதே மறந்துவிடும். எல்லாம் இந்த மனசு..

  Like

 5. மனசு ருக்மணியின் கணங்களோடேயே பயணப் பட்டு கதையின் முடிவில் மனம் கனத்து போவதை தவிர்க்க முடிய வில்லை

  Liked by 1 person

 6. மொபைலால் கொமெண்ட் போடலாம் எனில் அது பாஸ்வேர்ட் எல்லாம் கேக்குது.. எந்தப் பாஸ்வேர்ட் கேக்குது எண்டே தெரியல்ல.. எதைச் சொன்னாலும் தப்பு எண்டது கர்:).. அதனால விட்டு விட்டேன்.. அதுதான் தாமதத்துக்கு காரணம்:)..

  //கோலோச்சுதல்தான்./// இது புரியாத சொல்லாக இருக்கே…

  //கிளி பச்சப்பசேல்னு எம்பிட்டு அழகா இருக்கு! அது மாதிரி பறக்கணும்னு எனக்கு ரொம்ப ஆசை. பூனையும் எனக்குப் பிடிக்கும். ஆனா, அதைவிடக் கிளியைப் பிடிக்கும். ஆனா பூனைக்குக் கிளையைக் கண்டாலே ஆகாது.’’///

  ஹா ஹா ஹா..

  Liked by 1 person

  1. அதிராஜி, வருக!

   கோலோச்சுதல்: ஆட்சி செய்தல்

   பூனையின் ரெஃஃபரென்ஸ் வந்தவுடன் உங்களுக்கு இந்தக் கதைப் பிடித்துவிடும் எனத் தெரிந்துகொண்டேன்!

   Like

 7. ஆஹா கதை படிச்சு முடிச்சேன்.. மருமகள் வாக்கு மாமியாருக்கு:).. எனத் தலைப்புப் போட்டிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்…:).. அந்தக்காலத்து இந்த மாமியார்களின் கொடுமை என்ன கொடுமை சாமீஈஈஈஈ:).. ஆனா இப்பவும் இப்படிக் கொடுமைகள் சில கிராமங்களில் இருக்கிறதுதானே.

  இப்போ சமீபத்தில் நான் கேள்விப்பட்டது.. அதுவும் சென்னையில்… எஞ்சினியறிங் முடித்த மருமகள் .. திருமணமான முதல் மாதமே குழந்தை தங்கவில்லை என மாமியார் குறைபட்டாவாம்… 2ம் மாதமும் எதையும் காணவில்லை என்றதும், உடனே பெற்றோரிடம் பெண்ணை அனுப்பி விட்டார்களாம்.. போய் மருந்தெடுத்து செக் பண்ணி வா என….

  ஆனா கடவுள் கைவிடவில்லை, பெற்றோர் கூட்டிப்போய்ச் செக் பண்ணிய இடத்தில் அப்பெண் கர்ப்பமாக இருக்கிறாவாம்… அந்த மாமியாரை திருவையாற்றில் தள்ளி விடோணும்:).. அனைத்துக்கும் வாய்மூடி இருக்கும் கணவரை எங்கு தள்ளுவது?:)..

  Liked by 1 person

 8. @ அதிரா:

  இந்த மாதிரி ராட்சஸ மாமியார்களை கங்கையில் தள்ளிவிட்றலாமா? வயசான மனுஷிகள்-போகிற இடத்துக்குப் புண்ணியத்தோடு போய்ச்சேரட்டும்!

  இந்த ஹஸ்பண்டுகளுக்கு ஒங்க தேம்ஸ்தான் லாயக்கு!

  Like

  1. ஏகாந்தன் சகோ ! எங்கூர் எழுத்தாளர் பற்றி இங்குப் பகிர்ந்து கொண்டமைக்கு முதலில் மிக்க நன்றி! எழுத்தாளர் தெரியும் ஆனால் அவர் கதைகள் வாசித்ததில்லை. ப்ராப்பர் எங்கள் கிராமத்திலிருந்து குறுக்கால போனா அப்பால என்ற் சொல்லலாம்….
   கதையும் வாசித்தாயிற்று! அருமை. ருக்மணி பாவம்! மாமியாருக்கு என்று சொல்லிவிட்டுப் போவது எவ்வளவோ சொல்லுது. வெளியில் கொடுமை தெரியாத மாமியாரோ?!! ருக்மணியின் உணர்வுகள் பசுவுட்ன் பேசும் போதும், கிளியை ரசித்து… வரிசையில் நிற்கும் போது அனிசம் மரத்தைப் பற்றி நினைத்துத் தன் பள்ளி ஆசிரியர்களை நினைத்துக் கொள்வது என்று மென்மையான உணர்வுகள். பசுவிடம் உண்டு சுருக்கல் பற்றிச் சொல்லி நினைப்பதை மிகவும் ரசித்தேன்…

   அருமையான கதைப் பகிர்விற்கு மிக்க நன்றி

   கீதா

   Liked by 1 person

   1. @ கீதா:

    நம்பி ஒங்க ஊர் எழுத்தாளரா? ஆ! பாத்தீங்களா, எவ்வளவு புகழ்பெற்ற இடத்திலேர்ந்து நீங்க வந்திருக்கீங்க. உங்களயும் தேடிவரும் புகழ், சற்று தாமதித்தாலும்.
    .
    மருமகளின் பாத்திரத்தை படிப்பவரின் மனதில் உட்கார்த்திவைத்துவிட்டார் நம்பி. அதுதான் அவருடைய எழுத்தின் சாகஸம்.

    சுஜாதா இவருடைய குழந்தைப்பாடல் ஒன்றைக் குறிப்பிட்டு (கற்றதும் பெற்றதும்) அவர் படித்த மிகச்சிறந்த குழந்தைப்பாடல் என்று சொல்லியிருக்கிறார். அவர்மூலம்தான் நம்பியைப்பற்றி முதன் முதல் கேள்விப்பட்டேன். குழந்தைகளுக்காக நம்பியின் எழுத்துபற்றி தனியொரு பதிவு போட எண்ணம்.

    Like

  2. ஏகாந்தன் சகோ கங்கையில் என்று சொல்லிவிட்டீர்கள் இல்லையா ஏற்கனவெ அதிரா காசிக்குப் போய்டுவேன்னு சொல்லிட்டிருப்பாங்க…இப்ப தேம்ஸ் லருந்து கங்கைக்குக் ஷிஃப்ட் ஆகிடுவாங்க பாருங்க!!…இல்லையாஅ அதிரா??!!

   கீதா

   Liked by 1 person

   1. @ கீதா:

    கங்கை அதிராவை ஈர்த்தால் நாம் என்ன செய்யமுடியும்!

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s