குரல் உயர்த்தும் கமல் ஹாசன்

இதுநாள்வரை அடக்கி வாசிப்பதுபோல் வாசித்துவிட்டு இப்போது குரல் உயர்த்துகிறார்; திடீரென ‘தலைவன் இருக்கிறான்!’ என்கிறார்! அவரைப்பற்றிய செய்திகளுக்கு அலட்சியம் காட்டுவோரும்கூடத் திரும்பிப் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். நாளுக்குநாள், ட்விட்டர் தடதடக்கிறது. தமிழ்ப் பத்திரிக்கைகள்/ சேனல்களின் பேட்டரிகள் ஃபுல் சார்ஜில் தயாராய் இருக்கின்றன.

தமிழ்த்திரை உலகின் தீர்க்கமான நடிகர் கமல் ஹாசன். ஏன், இந்தியாவிலேயே விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய சிறப்பான நடிப்பாற்றலுடையவர்களில் ஒருவர். சராசரிக் கலைஞர்களைப்போலல்லாமல் சினிமா, இலக்கியம் போன்றவற்றில் ஆழ்ந்து இறங்குபவர். ஆரம்பத்திலிருந்தே இறைமறுப்புக் கொள்கையில் விசுவாசம் காட்டுபவர். தீவிர இலக்கிய வாசிப்புக்குத் தன்னை உட்படுத்திக்கொள்ளும் மனிதர். நெடுங்காலமாகவே, நல்ல எழுத்துக்கு மனம் கொடுப்பவராக இருக்கிறார். தமிழ் எழுத்துலகில் முன்பு சுஜாதா, தற்போது ஜெயமோகன் எனத் தொடர்ந்து அணுக்கமாயிருப்பவர் கமல் ஹாசன். கவிதை எழுதும் திறனும் வாய்த்திருக்கிறது. சினிமா என்கிற கலையைப்பற்றி கூரிய அறிவுள்ளவராக விமர்சகர்களாலும் அறியப்படுகிறார். தற்கால சினிமா, அதன் பல்வேறு துறைகள் சார்ந்த மாற்றம்பற்றி நுட்பமாக, தீவிரமாகப் பேசும் வல்லமை அவரிடம் காணப்படுகிறது. டிவி நேர்காணல்களில் கேட்கப்படும் கேள்விகளைத் தாண்டி, அடுத்த தளத்திற்கு விவாதக்களத்தை எடுத்துச் செல்லக்கூடியவர். ஆனால் அதனை விரும்பாதவர்களாக, தாங்கமுடியாதவர்களாக, பேட்டியாளர்கள் கேள்வியை மாற்றியோ, அல்லது அசடுவழிந்தோ நேர்காணல்களை பேருக்கு நடத்திச்செல்வதை, தேசிய சேனல்களில் சிலவருடங்களாகக் கண்டு வருகிறேன். ஒன்று – கமல் ஹாசன் எடுத்துவைக்கும் கருத்துக்கள், அவரிடம் காணப்படும் துறைசார்ந்த அறிவு ஆகியவற்றைப் புரிந்துகொள்ளும் அளவிற்கு பேட்டியாளர்களிடம் சரக்கில்லை. அல்லது – அவ்வளவு விஸ்தாரமாக நேர்காணல் செல்வதை அந்த சேனலே விரும்பவில்லை என இதற்கான காரணங்கள் இருக்கக்கூடும்.

தான் சார்ந்த துறைதாண்டியும், ஜனநாயகம், குடியரசு, மக்களுரிமை, தனிமனித உரிமை என அக்கறைகொள்ளும் மனிதராகத் தன் அடையாளத்தை அமைத்துக்கொண்டுள்ளவர் கமல் ஹாசன். ஆனால் இவைபற்றி பொதுவெளியில் முன்பெல்லாம் அதிகமாக, தீவிரமாக அவர் ப்ரஸ்தாபித்ததில்லை. கடந்த டிசம்பரில் சென்னையை மூழ்கடித்த அசுரவெள்ளத்தின்போது கொஞ்சம் வாய் திறந்து மக்களின் துன்பம்பற்றிப் பேசியும், நேர்காணல்கொடுத்துமிருந்தார். அப்போதும் அவர் சொன்னவை சரியாகப் புரிந்துகொள்ளப்படாமலும் அல்லது திரித்து சொல்லப்பட்டும் சிக்கல் ஏற்பட்டபோது, அதனை அவரே விளக்கித் தெளிவுபடுத்தவேண்டியதாயிற்று. தனது விமர்சனத்தைக் கவிதையாக சமூக தளங்களில் அவர் எழுதிவிட்டாலோ கதையே வேறு. ’ஐயோ, தலைவா! என்ன எழுதியிருக்கீங்க, புரியலையே!’ என அவரது ரசிகர் குழாமே அலறுகிறது! அவரோ, பிறரோ பிற்பாடு அதனை விளக்கிச்சொல்லவேண்டிய நிலை. ஒரு சமயத்தில், ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின், யாரோ எழுதிய கவிதை ஒன்று முகநூலில் உலாவர, கமல் ஹாசனின் கவிதை அது என முந்திரிக்கொட்டை மீடியாவில் முதலில் குறிப்பிடப்பட்டது. பிறகு கமலே ‘அதை நான் எழுதவில்லை’ என வேகமாக மறுக்கும்படியும் ஆனது. ஜல்லிக்கட்டுப் போராட்டங்களின்போதும் தமிழ் இளைஞர் எழுச்சிக்கும் ஒற்றுமைக்கும் துணைபோகுபவராக அறியப்பட்டவர் கமல்.

மக்கள் செல்வாக்குடன் ஆட்சிக்குத் திரும்பிய ஆளுமையான ஜெயலலிதாவின் அதிர்ச்சி மறைவுக்குப்பின், தமிழ்நாட்டில் ஒரு குழப்பமான, ஸ்திரமற்ற அரசியல் சூழல் நிலவி வருகிறது. விதம்விதமான அரசியல் பித்தலாட்டங்கள், குட்டைகுழப்பல்களுக்குப் பதமான நிலமாகப்போய்விட்டது தமிழ்மண். இதனைப் புரிந்துகொள்ள எவரும் எந்தக் கட்சியையும் சார்ந்திருக்கவேண்டிய அவசியமில்லை. அரசியல் நிபுணராக ஆகவேண்டியதில்லை. முதன் முதலில் இந்த அவலநிலைபற்றிக் கவலைப்பட்டுக் கருத்துச்சொன்னவர் ரஜினிகாந்த். ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின் ஒரு மர்மமான சூழல் தமிழ்நாட்டில் நிலவுகிறது என்று சொல்லி எண்ணற்ற தன் ரசிகர்களோடு, நடுநிலையாளர்கள், அரசியல் விமரிசகர்களையும்கூட கவனிக்குமாறு செய்தார் அவர். அப்போது சில அரசியல்வாதிகளால் ரஜினி மட்டம் தட்டப்பட்டார். பிறகு கொஞ்ச நாட்கள் சென்றபின் ‘சிஸ்டம் சரியில்லை’ என ரஜினி தடாலெனச் சொன்னபோது, எங்கே இந்தமுறை அரசியல் களத்தில் குதித்தேவிடுவாரோ எனப் பேச்சு தீவிரமாக அடிபட ஆரம்பித்தது. அத்தகைய வாய்ப்புபற்றிய மனத்தோற்றமும்கூட, சில அரசியல் குழுக்களுக்கு வயிற்றில் புளியைக்கரைக்க ஆரம்பித்திருக்கிறது. இந்நிலையில், தமிழ்நாட்டின் தற்போதைய குழப்பும் அரசியல் பற்றி, முன்னேற்றம் தடுக்கும் மலிந்துபோன ஊழல்பற்றி குரலுயர்த்திப் பேச ஆரம்பித்திருக்கிறார் கமல்ஹாசன் ; மனம் திறந்து, சமூகத்தளங்களில் கருத்துக்களை முன்வைக்கிறார். ’’முந்திச்செல்வதல்ல, முன்னேற்றத்தின்பின் செல்வதுதான் பெருமை’’ என முழங்குகிறார். ஊழல் புகார்களைப் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அமைச்சரின் மின்முகவரிக்கே நேரடியாக அனுப்புமாறும் கோரி பரபரப்பைக் கிளப்பிவிட்டிருக்கிறார்! மக்கள்நலன்மீது உண்மையான அக்கறையுடன் பேசும், கேள்விகேட்கும் நல்மனங்கள் – அவர்கள் யாராயினும் – ஊக்குவிக்கப்படவேண்டும். பொதுஆதரவு அவர்களுக்குத் தரப்படவேண்டும். இந்த ரீதியில்தான், இந்திய ஜனநாயகத்தில், மாநில முன்னேற்றத்தில், அக்கறைகொண்ட கமல் ஹாசன் போன்ற கட்சிசாரா பிரபலங்கள், பொதுவெளியில் கூறும் கருத்துக்கள், விமர்சனங்கள் கவனிக்கப்படவேண்டும். ‘நேற்றுத்தானே கமல் இந்தக் கேள்வியைக் கேட்டார், முந்தாநாள் ஏன் கேட்கவில்லை?’ என்பது போன்ற குருட்டுவாதங்கள் இங்கே அர்த்தமற்றவை; மக்கள்மேடையின் முன் அவை எடுபடாது.

ஊழலுக்கெதிராக கமல் ஹாசன் எழுப்பும் நேரிடையான கருத்துக்கள், சமூகவலைத்தள விமர்சனங்கள் பலருக்கு ஆச்சரியத்தையும், சிலருக்கு, குறிப்பாக அவருடைய பரவலான ரசிகர்களுக்கு கிளுகிளுப்பையும் ஏற்படுத்தியிருக்கின்றன. ஆனால், ஆட்சியாளர்களுக்கோ இவை தீராத குடைச்சல்களாக மாறியிருக்கின்றன. ஜெயலலிதாவின் ஆட்சியில் பொத்திய வாயோடு, அங்கிங்குமாக உலவிய அவரது கட்சிப் பிரமுகர்களெல்லாம், கமல் ஹாசனை எதிர்க்கிறேன் பேர்வழி என்று, இப்போது இஷ்டம்போல் எதிர்வசனம் பேசிவருகின்றனர். ’தமிழ்நாட்டிற்காக என்ன செய்திருக்கிறார் கமல் ஹாசன்? அரசியலில் நேரடியாகக் குதிக்க தைரியம் உண்டா?’ என்றெல்லாம் ஏகத்துக்கும் கமல் ஹாசனின்மீது பாய்ச்சல். கேலி, கிண்டல். கமல் ஹாசனும் விடாமல் ‘இந்த ஆட்சி தானாகவே கலையும்..’ என்று விவாதத்தை முடுக்கிவிடுகிறார். வெறும் வாயை மென்றுகொண்டிருந்த மீடியாவின் வாயில், வேகவேகமாக அவலை அள்ளிப்போட்டுக்கொண்டிருக்கிறார்கள் இருதரப்பினரும்! கேட்கவேண்டுமா இனி?

**

5 thoughts on “குரல் உயர்த்தும் கமல் ஹாசன்

  1. கமல்ஹாசனுக்கு பலவகையிலும் இங்கு எதிர்ப்புதான் அதிகம். அவரின் நாத்திகம் இந்து மதத்தோடு நின்று விடுகிறது என்பது அவர் மேல் வைக்கப்படும் விமர்சனங்களில் ஒன்று. ரஜினி எப்போதுஅரசியலில் அரசியலில் இறங்குவார் என்பது புதன் புதிர்! மன்னிக்கவும்.. புரியாத புதிர்! இவரோ அறிவிப்பு வெளியிடாமல் இறங்கி விட்டார்.

    Liked by 1 person

  2. @ஜி.எம்.பாலசுப்ரமணியம்: இதில் புரியாதது என்ன இருக்கிறது!

    @ஸ்ரீராம்: உண்மை. கமல் சர்ச்சைக்குரிய மனிதராகத்தான் தன்னைக் காட்டிக்கொண்டிருக்கிறார் ஆரம்பத்திலிருந்தே. இப்போது அரசியலுக்கு வேகவேகமாகப் பின்னூட்டம் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்!

    Like

  3. @கில்லர்ஜி தேவகோட்டை: மென்று களிக்கட்டும் மீடியாக்கள் !

    Like

Leave a comment