உலகக்கோப்பை கிரிக்கெட்: குவார்ட்டர்-ஃபைனல்ஸில் இந்தியா

இன்று (06-03-15) நடந்த லீக் மேட்ச்சில், இந்தியா மேற்கிந்திய தீவுகள்(West Indies) அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கிரிக்கெட் உலகக்கோப்பையின் காலிறுதிப்போட்டிக்குள் காலெடுத்து வைத்துள்ளது.

போட்டி நடந்தது மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள பர்த் (WACA Grounds, Perth) மைதானம். முகத்துக்கு மேலே எகிறும் வேகப்பந்துகளுக்காக உலகப்புகழ் பெற்றது. பௌன்சர்களை சரியாகச் சமாளிக்கத் துப்பில்லாத பேட்ஸ்மன்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்குவது இந்த மைதானம். இன்றையப் போட்டி வெஸ்ட்-இண்டீஸின் வேகப்பந்துவீச்சாளர்களுக்கும் இளம் இந்திய பேட்ஸ்மன்களுக்குமான மோதல், சேலஞ்ச் என நிபுணர்களால் வர்ணிக்கப்பட்டது. டாஸ் ஜெயித்த வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட் செய்தது. வெஸ்ட் இண்டீஸ் என்றாலே க்ரிஸ் கேல் (Chris Gayle) -தான் நினைவுக்கு வருகிறார். உலகக்கோப்பையில் முதல் டபுள் சென்ச்சுரி அடித்த அதிரடி மன்னன். ரசிகர்களின், கிரிக்கெட் நிபுணர்களின் கவனமெல்லாம் இன்று அவர் மீதுதான். ஒருவேளை இவர் பௌலிங்கை ஒரு பிடி பிடித்தால், இந்தியப் பந்துவீச்சாளர்கள் எப்படிச் சமாளிப்பார்கள் என்கிற கேள்வி உயர்ந்து நின்றது. ஷமியும், யாதவும் நமது பௌலிங் கணக்கை ஆரம்பித்தார்கள். மிகக் கவனமாக ஆட ஆரம்பித்தது வெஸ்ட் இண்டீஸின் கேய்ல்-ஸ்மித் துவக்க ஜோடி.

முதல் 5 ஓவர்களில் வெறும் 8 ரன்கள்.. என்ன! விளையாடுவது வெஸ்ட் இண்டீஸ்தானா? பௌண்டரியை இஷ்டத்துக்கும் விளாசமுடியாத அளவிற்கு அமைந்திருந்தது இந்தியாவின் ஷமி-யாதவ் ஜோடியின் சிறப்பான பந்துவீச்சு. சிங்கிள் எடுப்பதிலுமா சிக்கல்? ஆமாம். பெரிய ஷாட் வரமாட்டேன் என்கிறது சிங்கிள் ஓடவும் முடியவில்லை; கேய்ல் தடுமாறுவது தெரிந்தது. மேலும், இந்த ஆட்டத்தில் இறங்குவதற்கான முழு ஃபிட்னெஸ் அவரிடம் இல்லை என்பதும் கண்கூடாகத் தெரிந்தது. அடுத்தமுனையில் 6 ரன்னுக்கே தடவிக்கொண்டிருந்த ட்வேன் ஸ்மித்(Dwayne Smith), வேறுவழியின்றி ஷமியின் வேக எகிறலில் தோனியிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் ஓடினார். அடுத்து வந்த மார்லன் சாமுவேல்ஸ் (Marlon Samuels), பந்தின் வேகத்துக்கு ஈடுகொடுக்கமுடியாமல், முக்கலும் முனகலுமாகக் காட்சி கொடுத்தார். கேய்ல் அடித்த ஒரு ஷாட்டில் ஒரு ரன் வரவேண்டிய சந்தர்ப்பம். கேய்லை நோக்கி ஓடிவந்தார் சாமுவேல்ஸ். ஆனால் கேய்ல் சிங்கிள் ரன் எடுக்கும் மூடில் இல்லை. சாமுவேல்ஸ் கதிகலங்கித் தன் இடத்துக்குத் திரும்பப் பாய்வதற்குள் பந்து ஃபீல்டு செய்யப்பட்டு வீசப்பட, ஐயா பரிதாப ரன்-அவுட். கோபத்தில் முணுமுணுத்துக்கொண்டு சாமுவேல்ஸ் வெளியேற, வந்த கடுப்பில் சிக்ஸர், பவுண்டரி என்று தாக்க ஆரம்பித்தார் கேய்ல். ஆட்டம் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது என்று நினைத்தனர், வண்ண தொப்பி அலங்காரத்துடனும், ட்ரம்ஸ்களுடன் வந்திருந்த வெஸ்ட்-இண்டீஸ் ரசிகர்கள். ஆனால் இன்று அவருடைய நாளில்லை. ஷமியின், வேகமாக முகத்துக்கு எதிரே எகிறும் பந்தை நிதானிக்காமல், கேய்ல் தூக்கி அடிக்கப்போய், பௌண்டரியில் காத்திருந்த மோஹித் ஷர்மாவின் ஏந்திய கைகளில் தஞ்சம் புகுந்தது பந்து. மூன்றாவது விக்கெட் காலி. கேய்லின் வெளியேற்றத்தில் வெஸ்ட் இண்டீஸ் ஆட்டம், ஆட்டம் கண்டது. அடுத்து வந்தார் ஜோனதன் கார்ட்டர்(Jonathan Carter). கொஞ்சம் அதிரடி காண்பித்த கார்ட்டர் அஷ்வினின் சுழல் வீச்சில் சிக்கி அவுட். மறுபக்கம் யாதவ் துல்லியமாகப் பந்துவீச, வெஸ்ட் இண்டீஸ் தோனியின் பொறியில் மாட்டிக்கொண்ட எலியானது. ஒரே பந்தில் தினேஷ் ராம்தின் முட்டைபோட்டுவிட்டு ஓடிவிட, மற்றவர்களும் பேருக்கு கொஞ்சம் தட்டிவிட்டு, அவரைப் பின் தொடரும் கடமையைச் செய்தார்கள்! 7 விக்கெட்டுக்கு 85 என்கிற பரிதாபமான ஒரு நிலையில் கிறுகிறுப்பு வந்துவிட்டது வெஸ்ட் இண்டீஸுக்கு.

9-ஆவது பேட்ஸ்மனாகக் களமிறங்கிய 23 வயது இளம் கேப்டன் ஜேஸன் ஹோல்டர் (Jason Holder), கவிழ்ந்து கொண்டிருக்கும் வெஸ்ட் இண்டீஸின் கப்பலைக் காப்பாற்ற கடும் முயற்சி மேற்கொண்டார். முதலில் நிதானமாக பந்துவீச்சின் தரத்தைக் கவனித்து ஆடி, ஒரு வியூகம் அமைத்து, பிறகு இந்திய பௌலர்களைத் தாக்கினார். 4 பௌண்டரி, 3 சிக்ஸர் எனப் போட்டுத்தள்ளிய அவரது வீரத்தை ஜடேஜா தன் சுழல் பந்தினால் ஒரு முடிவுக்குக் கொண்டுவந்தார். 64 பந்துகளில் 57 அருமையான ரன்கள் எடுத்து வெஸ்ட் இண்டீஸின் கௌரவத்தை ஓரளவாவது நிலைநாட்டியக் கேப்டன் ஹோல்டர் பாராட்டுக்குரியவர். பின்னவர்கள் தாக்குப்பிடிக்காமல் தலைதெறிக்க ஓட, வெஸ்ட் இண்டீஸ் 182-ல் சுருண்டது. இந்திய வேகப்பந்துவீச்சாளர்களுக்கு 6 விக்கெட்டுகளும், சுழல் பந்துவீச்சாளர்களுக்கு 3 விக்கெட்டுகளும் கிடைத்தன.

183 என்கிற இலக்கை ‘அட, இது ஒன்னுமில்லடா!’ என்கிற பாவனையில் சந்திக்க இறங்கினார்கள் இந்திய துவக்கவீரர்கள் ஷிகர் தவன், ரோஹித் ஷர்மா இருவரும். வெஸ்ட் இண்டீஸின் அதிவேக பௌன்சர்களைத் தாக்குப்பிடிக்க முடியாமல் ஒருவர்பின் ஒருவராக வீழ்ந்தனர். மூன்றாவதாக வந்த விராட் கோஹ்லி வேகமாக ஷாட்டுகளை அடித்துத் தன் திறமையைக் காண்பிக்க ஆரம்பித்தார். 36 பந்துகளில் 33 ரன். 4 பௌண்டரி. ஆனால் ஆந்த்ரே ரஸ்ஸலின் (Andre Russel) வேகத்தில் அவரும் காலியானார். ரஹானே,ரெய்னா, ஜடேஜா ஆகிய இந்தியாவின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மன்களும், வெஸ்ட் இண்டீஸின் கோபப்பந்துவீச்சிற்கு இரையானார்கள். 6 விக்கெட் இழப்பிற்கு இந்தியா 134 என்றது ஸ்கோர்போர்டு. என்னடா இது, இந்திய பேட்டிங்குக்கு வந்த சோதனை ! 183-ஐ நெருங்கவே முடியாது போய்விடுமோ என்கிற மாதிரி இருந்தது ஆட்டத்தின் போக்கு.

மைதானத்தில் வந்து இறங்கினார் இந்தியக் கேப்டன் எம்.எஸ்.தோனி. நிறைய ஓவர் இன்னும் பாக்கி இருக்கிறது. விக்கெட் 4-தான் கைவசம். வெஸ்ட் இண்டீஸின் வேகத் தாக்குதலை நிதானமாக நோட்டம் விட்டார் தோனி. பௌண்டரி அடிப்பது அவ்வளவு எளிதில்லை என்று தெரிந்தது. அடுத்த பக்கத்தில் ஆடிக்கொண்டிருந்த அஷ்வினுடன் சைகை மூலம் அடிக்கடி ஏதேதோ சூசகமாகப் பேசினார். சீறும் பந்துகளைத் தந்திரமாக சிங்கிள், சிங்கிளாகத் தட்டிவிட்டு போக்குக் காட்டினார்கள் தோனியும், அஷ்வினும். பெரிய ஷாட்டுகள் வராவிட்டாலும், கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவின் ரன் கணக்கு ஏற ஆரம்பித்தது. இந்தியா மீண்டும் ஜெயித்துவிடும் போலிருக்கிறதே என்கிற மனஅழுத்தம் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் முகத்தில் எழுதியிருந்தது. பௌலர்களை மாற்றி மாற்றிப் போட்டுப் பார்த்தார் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டர். ம்ஹூம்..பயனில்லை. மலையில் ஏறுவதுபோல் அடிமேல் அடியெடுத்துவைத்து ஏறி, சிகரத்தைத் தொட்டுவிட்டார்கள் தோனியும் அஷ்வினும். 51-ரன் -பிரிக்கப்படாத பார்ட்னர்ஷிப் இருவரிடையே. சிக்கலான நிலையில் சிறப்பான, பொறுமையான ஆட்டம். தோனி 45 ரன்களுடனும், அஷ்வின் 16 ரன்களுடனும் அவுட்டாகாமல் இருக்க இந்தியா வென்றது மேட்ச்சை. உலகக்கோப்பையின் காலிறுதிக்குள் நுழைந்துவிட்டது.

இந்த மேட்ச்சில் இந்தியா ஜெயித்தபோதிலும், 183 என்கிற சிறிய இலக்கைக் கஷ்டப்பட்டுத்தான் எட்டியிருக்கிறது. இதனால், இந்திய டீம், சில பாடங்களை உடனடியாகக் கற்றுக்கொள்ளவேண்டிய அவசர நிலை. முதலில் ஃபீல்டிங். அவ்வளவு சரியாக இல்லை இன்று. இரண்டு எளிதான கேட்ச்சுகளைக் கோட்டை விட்டனர் ரவீந்திர ஜடேஜாவும், ரோஹித் ஷர்மாவும். கொடுமை. இன்னொரு விஷயம் – வேகமான பிட்ச்சுகளில், சூடாக முகத்துக்கு நேரே எகிறும் பந்துகளை இந்திய பேட்ஸ்மன்களால் திறமையாகக் கையாள முடியாது என்பது, முந்தைய ஆட்ட அனுபவத்தினால் ஏற்பட்டிருக்கும் ஒரு கணிப்பு. அது சரிதான் என்பது போலிருந்தது சில இந்திய பேட்ஸ்மன்களின் இன்றைய பாடாவதி ஆட்டம். தோனி, கோஹ்லி தவிர்த்து, ஏனைய இந்திய பேட்ஸ்மன்களின் இன்றைய ஆட்டத்தில் ஒரு சத்தில்லை; தரம் ஏதுமில்லை. இன்றைய மேட்ச்சில் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டர் ஒருவர்தான் அரைசதம் எடுத்தவர். இந்தியத் தரப்பில் அரைசதம் ஏதுமில்லை என்பதைக் கவனியுங்கள். தோனி எடுத்த 45 தான் அதிகபட்ச ஸ்கோர். ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் ஏதாவது ஒன்றை இந்தியா குவார்ட்டர்-ஃபைனல் அல்லது ஃசெமி-ஃபைனலில் சந்திக்க நேர்ந்தால், இன்றைய இந்திய பேட்டிங் வெளிப்பாடு- நிச்சயம் போதாது.

இந்திய வீரர்கள் மிச்சம் இருக்கும் நாட்களில், இன்றைய ஆட்டத்தின் வீடியோவைப் போட்டுப்பார்த்து தங்களது தவறுகளை/குறைகளைச் சீர்செய்ய முனையவேண்டும். பயிற்சியாளர்கள் இவர்களுக்குத் துணையாயிருக்கவேண்டும். ஃபீல்டிங் பயிற்சியில் இன்னும் முனைப்பு தேவை என்பது வெட்டவெளிச்சமாகியிருக்கிறது. கிரிக்கெட் எப்போதுமே ஒரு டீம் கேம் (Team game). ஒவ்வொருவரின் உழைப்பு, முனைப்பு கேப்டனுக்குத் தேவைப்படுகிறது. அணியின் வெற்றிக்கு அத்தியாவசியமாகிறது.

ஒன்றுபட்டால்தான் உண்டு – வாழ்வு, வெற்றி, சந்தோஷம் எல்லாம்.

ஆட்டத்திற்கு முந்தைய தினம் கொடுத்த பேட்டியில் வெஸ்ட் இண்டீஸின் முன்னாள் கேப்டன் டேரன் சாமி (Darren Sammy) இந்த மேட்ச்சின் வெற்றி வாய்ப்பு பற்றிக் கூறுகையில், இந்தியா ஹோலி (Holi-Festival of colours celebrated mostly in the northern region of India)யைக் கொண்டாடட்டும்; நாங்கள் எங்கள் வெற்றியைக் கொண்டாடுவோம் என்றார். வண்ணங்களைப்பூசி மகிழ வேண்டிய பண்டிகை நாளில், நம் முகத்தில் வெஸ்ட் இண்டீஸ் எங்கே கரியைப்பூசிவிடுமோ என்கிற சந்தேகம் சில ரசிகர்களிடம் காணப்பட்டது. நமது இந்திய அணி நல்லகாலம் அதை அனுமதி அளிக்கவில்லை. வெற்றிவண்ணத்தை இந்தியர்மீது பூசி மகிழ்ந்தது. இந்தவருடம் ஹோலி கொண்டாட்டத்தில் இந்திய முகங்களில் புதுவண்ணம், புதுப்பொலிவு தெரிந்தது. டெல்லியில் பொதுவாக, மதியம் 2 மணிவரை கலர்ப்பொடி வீசி, பிச்காரி (Pichkaari – a small toy gun that shoots colour water) மூலம் கலர்த்தண்ணீர் பாய்ச்சி விளையாடும் பொடியன்கள் எல்லாம் 12 மணிக்குள் விளையாட்டை அவசரமாக முடித்துக்கொண்டு,வீடு திரும்பி டிவியின் முன் உட்கார்ந்து கொண்டார்கள். குஜியா (Gujia-ஹோலி தினத்தன்று வட இந்திய வீடுகளில் செய்யப்படும் ஓவல் சைசில் இருக்கும், லேசாக இனிக்கும் தின்பண்டம்) தின்றுகொண்டு இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் ஆட்டத்தை ஆர்வமாகப் பார்க்க ஆரம்பித்தார்கள்.

**