இந்திய-நியூசிலாந்து கிரிக்கெட் தொடர் – 2014

 நியூசிலாந்தில் ஜனவரி, பிப்ரவரியில் நடக்கவிருக்கும் 2 டெஸ்ட்டுகளிலும், 5 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடுகிறது இந்திய அணி. இதற்கான அணிகளை இந்திய கிரிக்கெட் போர்டு அறிவித்துள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த தென்னாப்பிரிகாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவின் தோல்விகளுக்குப் முக்கிய காரணம் ’முன்னணி  வேகப்பந்து வீச்சாளர்கள்’ என நமது மீடியாவால் கொண்டாடப்படும் ஜகீர்கான், இஷாந்த் ஷர்மா என்கிற இருவரும் பந்து போட்ட அழகுதான். வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான பிட்ச்களில் அவர்கள் மெனக்கெட்டு சொதப்பி நாட்டிற்காக சாதனை புரிந்தார்கள். அதுவும் டர்பன் டெஸ்டில் தென்னாப்பிரிக்க அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் சர்வசாதாரணமாக 500க்கு எகிறியதற்கு இந்த இரண்டு ’அனுபவ வீரர்கள்’ தான் காரணம். புதியவரான முகமது ஷமியிடம் இருந்த தீவிரம், முனைப்பு இந்த இரண்டு பிரஹஸ்பதிகளிடமும் எள்ளளவும் இல்லை. டெஸ்ட் மேட்சில் தான் போடும் 30-க்கும் மேற்பட்ட ஓவர்களில் ஒரு தரமான யார்க்கர் கூடப் போடத் துப்பில்லாதவர்களை வேகப்பந்துவீச்சாளர் என அழைப்பது இந்தியாவில் மட்டும்தான் நடக்கும்.  இந்த இரண்டு வேக ஜாம்பவான்களும் புதிய டெஸ்ட் அணியில் மீண்டும் எப்படியோ இடம் பிடித்துவிட்டார்கள்! அதுவும் எதிரி டீமிற்கு ’ரன் வழங்கும் வள்ளல்’ எனப் பெயர் பெற்றிருக்கும் இஷாந்த் ஷர்மா ஒருநாள் போட்டிக்கான அணியிலும் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்பது இந்திய ரசிகர்களுக்கு எரிச்சலைத் தரும். இஷாந்த் ஷர்மா செலக்‌ஷன் – கோரி ஆண்டர்ஸன், ஜெஸ்ஸி ரைடர்  போன்ற அதிரடி வீரர்களைக் கொண்டிருக்கும் ‘நியூலுக்’ நியூசிலாந்துக்குக் குஷியைத்தரும் என்பதில் சந்தேகமில்லை.

தென்னாப்பிரிக்க பிட்சில் சரியாக சாதிக்காத பேட்ஸ்மன்களான ரோஹித் ஷர்மாவும், ஷிகர் தவனும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளில் தங்கள் இடங்களைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்கள். அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் பலம் என்பது இனி, விராத் கோஹ்லி, செத்தேஷ்வர் புஜாரா, அஜின்க்யா ரஹானே என்கிற மையத்தைச் சார்ந்திருக்கும் எனக் காட்டியிருக்கிறது சமீபத்தில் நடந்து முடிந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடர்.  டேல் ஸ்டேன், மார்னே மார்க்கெல் & கோ.-வின் அதிவேகத்தைப் பொறுமையாகவும், திறமையாகவும் சமாளித்த முரளி விஜய் டெஸ்ட் ஓப்பனராகத் தொடர்கிறார். ரஞ்சியில் நன்றாக விளையாடிக் காண்பித்த, இடதுகை துவக்க வீரரான கௌதம் கம்பீர் டெஸ்ட் அணியில் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்பட்டது. அது இந்தியாவின் அடுத்த தொடரில் நிகழக்கூடும்.

இந்திய அணியின் வரவேற்கத்த புதுமுகங்கள் மத்தியப் பிரதேச மிதவேகப் பந்துவீச்சாளர் ஈஷ்வர் பாண்டேயும் (Ishwar Pandey), பௌலிங் ஆல்ரவுண்டரான ஸ்டூவர்ட் பின்னியும் (Stuart Binny). பாண்டே 24 வயதானவர். கடந்த ரஞ்சி சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் செலக்டர்களின் கவனத்தை ஈர்த்தவர். பின்னி கர்னாடகாவின் லோயர் மிட்டில் ஆர்டர் பேட்ஸ்மன் –மிதவேகப் பந்துவீச்சாளர். ராஜஸ்தான் ராயல்ஸின் அதிரடி பேட்ஸ்மன். இவர்களோடு, ஜார்கண்டின் வேகப்பந்துவீச்சாளர் வருண் ஆரோன் இரண்டாண்டு காய-ஓய்வுக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளுக்கென,  மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். 150.கி.மீ வேகத்தை எட்டிய ஒரே இந்திய பந்துவீச்சாளர் ஆரோன். இவர்கள்  மூவரின் தேர்வு, வரவிருக்கும் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான இந்திய டீம் பற்றிய செலக்டர்களின் சிந்தனை ஓட்டத்தைக் காண்பிக்கிறது. வாழ்த்துகள்.

தென்னாப்பிரிக்கா போலவே நியூசிலாந்திலும் நம் அணி சந்திக்கவிருப்பது கிரீன் பிட்ச்சுகளைத்தான். வெல்லிங்டன், ஆக்லண்ட் மைதானங்களில் கடுமையான ‘டெஸ்ட்’ நமது பேட்ஸ்மன்களுக்காகக் காத்திருக்கிறது. ‘When the going gets tough, the tough gets going‘ என்பார்கள். நமது பேட்ஸ்மன்களில் tough-ஆனவர்கள் தப்பிப்பிழைப்பார்கள். மற்றவர்கள் அனாயாசமாக வெளியே வந்து விழுவார்கள். பார்ப்போம்.

***

இருள் இன்னும் இருக்கையில்

அதிகாலையில் எழுந்து நடப்பது என்பது

என் வழக்கமாக இருந்ததில்லை என்றும்

இருந்தும் எழுந்தேன் நடந்தேன் அன்று

இருள் விலகாத புலர் காலைப் பொழுதில்

மெல்லிய குளிர் இருந்தது காற்றில்

அடையாளம் தெரியா முகங்கள் சில

வாங்கிய காலைப் பாலுடன் எதிரே விரைந்தன

அடுக்கு மாடிவீடுகள் இன்னும் விலகாத

இருட்டினை அணைத்து குலவிக்கொண்டிருந்தன

இரவெல்லாம் குலைத்துத் தூக்கம் கலைத்த

தெரு நாய்களைக் காணவில்லை இப்போது

அயர்ந்து சுருண்டிருக்கவேண்டும் ஒரு மூலையில்

சில வீடுகளின் சமையலறைகள்  தூண்டப்பட்ட

திடீர் வெளிச்சத்தில் நிலை தடுமாறின

அவசரமாகத் தங்களைத் தயார்படுத்திக்கொண்டன

அகாலத்தில் துயிலிழக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது

அங்கிருக்கும் ஆணுக்கா  இல்லை பெண்ணுக்கா ?

பெருமரங்களின் இருண்ட கிளைகளிலிருந்து

பறவைகள் சில, விசித்திர ஒலி எழுப்பி

ஏதேதோ தங்களுக்குள் சொல்லிக்கொண்டன

குளிர் ஏறிய அந்தக் காலைப்பொழுதில் இருளுடன்

ரகஸ்யமான ஒரு சுகந்தமும் கலந்திருந்தது

***

Happy New Year Sri Hanuman Ji !

புத்தாண்டு மாலையில் புது டில்லி ராமகிருஷ்ணபுரம் ஸ்ரீநிவாசர் கோயிலுக்குச்சென்றிருந்தேன். குளிர் அதிகமானதாலும், இன்னும் ஆஃபீஸிலிருந்து வருகிறவர்களின் நேரம் ஆகவில்லை என்பதனாலும், கோவிலில் கூட்டம் குறைவாகக் காணப்பட்டது. புத்தாண்டு தினமே ஹனுமத் ஜெயந்தியும் ஆதலால் வடை மாலை கழுத்தில் அணிவகுத்து அலங்கரிக்க,  கம்பீர காட்சி தந்தார் ஆஞ்சனேயர்.சிறுகூட்டம் சன்னிதிக்கு முன் நிற்கிறது. அர்ச்சனைக்கு முன் புஷ்பம் நிரம்பிய தட்டை பக்தர்களுக்குக் காண்பித்து தொட்டுக் கொடுக்கச் சொல்கிறார் அர்ச்சகர். எல்லோரும் மெதுவாகத் தொட்டு வணங்கினோம். ஒரு மத்திம வயதுப் பெண்மணி, கைக்கும் காதுக்கும் இடையில் செல்ஃபோனை அழுத்திக்கொண்டு, ஒரு கையால் தட்டை தொடுவதுபோல் காண்பித்து ’ஹேப்பி நியூ இயர்!’ என்று சொல்லிக்கொண்டே ஃபோனில் மும்முரம் காட்டுகிறார். முகத்தில் ஃபோன் உரையாடலின் தீவிரம். நிற்பது ஆஞ்சநேயரின் முன்னால். சொல்வது ஹேப்பி நியூ இயர்! நான் ஒரு கணம் அயர்ந்தேன். வாழ்த்து ஆஞ்சனேயருக்கா! அப்படியானால் அனுமாருக்கு, நேரில் வந்து புத்தாண்டு வாழ்த்துத் தெரிவித்த ஒரே பெண்மணி என கின்னஸ் புக்கில் இடம் பெறத் தகுதி வாய்ந்தவர்தான் அவர்.

வழிபட என்று ஆண்டவனின் சன்னிதி முன்  வருபவர் அனைவரும் பக்தர்கள் தான். இருந்தும் சிலருக்கு குறிப்பாக, பொது இடங்களில் வழிபடுதலில்,  சில behavioural corrections, some fine tuning தேவைப்படுகிறது போலும். நாளுங்கிழமையுமாக, டெல்லி போன்ற நகரில் மெனக்கெட்டு கோயிலுக்கு வருகிறவர்கள் கடவுளை வணங்கத்தான் வருகிறார்கள். மறுக்கவில்லை. இருந்தும், சன்னிதியில் நின்று சத்தம் போட்டு யாருடனோ நேரிலோ, ஃபோனிலோ பேசுவது, அரட்டை அடிப்பது என்பது அனேகமாக ஒவ்வொரு கோயிலிலும், அவ்வப்போது நிகழ்ந்து கொண்டுதானிருக்கிறது. கேட்பாரில்லை. பக்தி சிரத்தையோடு சன்னிதியில் வழிபடும் மற்றவர்களின் பிரார்த்தனையை இது எவ்வளவு பாதிக்கும் என்பது பற்றி இவர்களுக்குக் கவலையில்லை. தானுண்டு. தன் பேச்சுண்டு என்றிருப்பவர்கள். கோயிலுக்குள் நுழைந்ததும் அந்த பாழாய்ப்போன செல் ஃபோனை சில நிமிடங்களுக்காகவது அணைத்து வைத்தால்தான் என்ன? குடியா முழுகிப்போகும்? இதையெல்லாம் இது போன்றவர்களுக்கு யார் புரியவைப்பது? யாராவது இதமாக சொல்ல முயன்றால்தான் இவர்கள் கேட்டுவிடுவார்களா? இதுபோன்ற நபர்கள் சிறுசுகளை எதற்கெடுத்தாலும் ஓவராகக் கண்டிப்பவர்களாகவும் இருப்பார்கள். இந்த வயதிலும் சில அடிப்படைகள் பெரிசுகளுக்கே புரியவில்லை எனில், இளசுகளை எதற்கெடுத்தாலும் குறை சொல்லி என்ன பயன்?

***