பெண்கள் படுத்தும்பாடு !

’ஏதோ கொஞ்சம் படிச்சிடுத்துகளாம். சம்பாதிக்கிறதுகளாம். இதுகளுக்கு இருக்கிற திமிரு இருக்கே..அடேங்கப்பா ! எங்கே போயி சொல்றது..’ என்று அங்கலாய்த்தார் ஒரு மாமி. தன் பிள்ளைக்குப் பெண் தேடும் படலத்தில் ஒரேயடியாக சலித்துப்போயிருக்கவேண்டும். ’அத ஏன் கேக்கறே, பையன் நாப்பது நாப்பத்தஞ்சாயிரம்னு சம்பளம் வாங்கினாப் போதாதாம். குறைஞ்ச பட்சமா எழுபதாயிரம், எண்பதாயிரமாவது கையில வந்தாத்தான் கல்யாணத்தப்பத்தி யோசிக்கவே முடியுமாம். இப்படியெல்லாம் பெரியமனுஷத்தனமா பேசறுதுகள். இதுகளோட எப்படி சம்பந்தம் வச்சிக்கறது!’ என்றார் இன்னொருவர். ’அட, அதவிட்டுத்தள்ளுங்கோ.. கல்யாணத்துக்கப்பறம் மாமியார் மாமனார் எங்ககூட இருக்கக்கூடாதுங்கறா! பிள்ளையப் பெத்தவா – அதுவும் ஒத்தப்பிள்ளைக்காரா- வயசான காலத்துல தன் பிள்ளையோட இருக்காம எங்கதான் போயிருக்கணுங்கறா? பொண்ணப்பெத்தவாளும் இதுகளோடப் பேச்சக்கேட்டுண்டு ஆடறா. இது எங்கபோயி முடியும்னே தெரியலையே..’ சூடான காஃபியை உறிஞ்சிக்கொண்டே கவலையும் கோபமும் தெறிக்கும் உரையாடலில் இரண்டு மாமிகள் ஆழ்ந்திருப்பதை ஒரு ஃபங்க்‌ஷனில் கவனித்தேன்.

உண்மைதான். உலகமயமாக்கல், பொருளாதார, தொழில்துறை முன்னேற்றம், வெளிநாட்டுக் கம்பெனிகளின் அதிரடி வருகை, உயர்கல்வியில் பெண்களின் தொடரும் உழைப்பு, முன்னிலை, இளையோருக்கான புதிய வேலைவாய்ப்புகள், உயர்ந்துவிட்ட சம்பள விகிதங்கள், தராதரங்கள் என கடந்த இருபதுவருடங்களில் மாற்றத்தில் இந்தியா கனவேகம் எடுத்திருக்கிறது. இவற்றின் தாக்கம் சமூகத்தின்மீது, குறிப்பாக மத்தியதர வர்க்கத்தின்மீது வெகுவாகப் படிந்துவிட்டது. அப்போதெல்லாம் நல்ல உத்தியோகத்திலிருந்த பிள்ளைகளைப் பெற்றோர், கல்யாணச்சந்தையில் ஒரு பக்கம் தங்கள் கோரிக்கைகளோடு கூத்தடிக்க, தெண்டத்துக்கு ஒரு டிகிரியுடன், மற்றபடி ஒன்னுக்கும் லாயக்கில்லாத, சாமர்த்தியமில்லாத அசட்டுப் பிள்ளைகளை வைத்துக்கொண்டிருந்தவரும்கூட போடாத ஆட்டமெல்லாம் போட்டார்கள். ’என் பிள்ளக்கு ஒம்பொண்ண கல்யாணம்பண்ணி வைக்கணுங்கிறியா? எத்தன நகை போடுவே? வீடு, வாசலிருக்கா? மாப்பிள்ளைக்கு ஸ்கூட்டர், பைக் ஏதாவது வாங்கித் தருவியா? – என்றெல்லாம் அவர்கள் ஏழ்மையிலிருந்த, அல்லது போதிய பொருளாதார வசதியில்லாமல் தடுமாறிய பெண்வீட்டுக்காரர்களை சீண்டிப் பார்த்ததையும், சித்திரவதை செய்ததையு்ம் எளிதில் இந்த சமூகம் மறந்துவிடாது. பிள்ளைவீட்டுக்காரர்களின் தடித்தனம், நியாயமற்ற கோரிக்கைகளின் காரணமாக எத்தனையோ ஏழை, மத்தியவர்க்க யுவதிகள் கல்யாணம் செய்துகொள்ளமுடியாமல் தவித்தார்கள். பெற்றோருக்கு பாரமாய் நின்றதில், மன உளைச்சலில் உழன்றார்கள். அந்தக்காலந்தான் இப்போது ஒருவழியாக மலையேறிப்போய்விட்டது. காலச்சக்கரத்தின் சுழற்சியில் ஆண்கள் சரிய, பெண்கள் மேலே வந்துவிட்டார்கள். Poetic justice !

தற்காலப் பெண்கள் பெரும்பாலும் நன்றாகப் படித்திருக்கிறார்கள். சிலர் சிறப்பான உயர்கல்வித்தகுதிகளையும் பெற்றிருக்கிறார்கள். நல்ல வேலைகளுக்கு, சவாலான வேலைகளுக்கும்கூடப் போகிறார்கள். பை நிறைய சம்பாதிக்கிறார்கள். பொருளாதார ரீதியில் சொந்தக்காலில் உறுதியாய் நிற்பவர்கள் இவர்கள். இவர்களுக்கென ப்ரத்தியேக சமூக, நட்பு வட்டமும் உண்டு. சுய சிந்தனை, தீர்க்கமான முடிவு இவர்களுக்குக் கைவந்திருக்கிறது. இவர்களெல்லோரும் காதலித்துத்தான் கல்யாணம் செய்துகொள்கின்றனர் என்றில்லை. பெரும்பாலானோர் பெற்றோர் பார்த்துக் கல்யாணம் செய்துவைப்பதை விரும்புகின்றனர். ஆனாலும், தங்களுக்கான வாழ்க்கைத் துணை எப்படி இருக்கவேண்டும் என்பதில் இவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். இன்னொரு விஷயம்: தற்போதெல்லாம் பெண்ணைப் பெற்றவர்களின் confidence level-ம் அதிகமாகியிருக்கிறது. வேகமாக முன்னேறிவரும் நாட்டில், சமூகமாற்றங்கள், புதிய வாழ்வியல் மதிப்பீடுகள் போன்றவை காலப்போக்கில் நிகழத்தான் செய்யும். தவிர்க்க இயலாதவை இவை.

இந்தக்கால யுவதிகளின் கல்வித்தகுதி, சம்பாத்யம், சுதந்திரம், துணிவு ஆகியவற்றைக் கவனிக்கும் பெற்றவர்கள் – அதாவது பிள்ளையைப் பெற்றவர்கள், நல்ல மருமகளாக நம்வீட்டுக்கு வரவேண்டுமே எனக் கவலைப்படுகிறார்கள். பெண்ணைப் பெற்றோர் ஒன்றும் எந்தக் கவலையுமின்றிக் காத்துவாங்கிக்கொண்டிருக்கவில்லை. அவர்களும், வரப்போகிற மாப்பிள்ளைப் பையன் நன்றாகச் சம்பாதிப்பதோடு மட்டுமல்லாமல், நல்ல குடும்பத்திலிருந்தும் இருக்கவேண்டுமே, குணாளனாக அமையவேண்டுமே என்று கவலைப்படத்தான் செய்கிறார்கள். மாறிவரும் உலகில் இருதரப்பு அக்கறைகள், கவலைகள் எல்லாம் நியாயமானதுதான். ஆனால், சுதந்திரம், சுயமான முடிவு என்கிற பெயரில் இளைஞர்கள் தான்தோன்றித்தனமாகக் காரியம் செய்து குடும்பவாழ்வில் குழப்பங்கள் ஏற்பட்டுவிடாதிருக்க, என்ன செய்யவேண்டும்? பெற்றோர் முதலில் தங்களது பிள்ளையை, பெண்ணை நினைத்து ’நம்பளோட கொழந்த’ என்று பெருமிதம்கொள்வதோடுமட்டும் நின்றுவிடாமல், அவர்களைச் சரியாக அவதானிக்கவேண்டும். நம்வீட்டுப் பிள்ளைகள்தான் எனினும், தனிப்பட்ட மனிதர்கள் என்கிற நிலையில் இவர்கள் யார், எப்படி உருவாகியிருக்கிறார்கள், எத்தகைய நம்பிக்கைகள், வாழ்வியல் மதிப்பீடுகளை நம் பிள்ளைகள் கொண்டிருக்கிறார்கள் எனப் புரிந்துகொள்ள பெற்றோர் முயற்சிக்கவேண்டும். அவர்களிடம் ஒரேயடியாக புத்திமதி சொல்கிறேன் பேர்வழி என்று லெக்சர் அடிக்காமல், புலம்பாமல், போரடித்து விரட்டிவிடாமல், கனிவோடு, தோழமையோடு பேசி இணக்கம் கொள்வது முக்கி
யம். இப்படி ஒரு சூழலை வீட்டில் அமைத்துக்கொண்டால் மட்டுமே கல்யாணம், கார்த்திகை போன்ற விஷயங்களில் குடும்பமாக சேர்ந்து உட்கார்ந்து பேச வாய்ப்புகள் ஏற்படும். இப்படி எடுக்கப்படும் முடிவுகள் சரியாக அமைந்துவிட வாய்ப்புகள் அதிகம். காலங்காலமாக, ஒரு தனிமனித, சமூகத் தேவையாக உருவெடுத்துவிட்ட ’குடும்பம்’ என்கிற institution-மீது, அமைப்பின்மீது வளர்ந்த பிள்ளைகள் நம்பிக்கை இழந்துவிடாதிருக்க இது பெரிதும் உதவும். இத்தகைய ஹோம்வொர்க்கைச் சரியாகச் செய்யாமல் பெற்றோர்கள் வெறும் குழப்பமும், அனாவசியப் பதற்றமும், தடுமாற்றமும் கொள்வதில் ஒரு புண்ணியமும் இல்லை எனத் தோன்றுகிறது.

**