மீண்டும் இந்த நாய்

என்னுடைய முந்தைய டெல்லி வருகைகளின்போது இந்த நாயைக் கவனித்திருக்கிறேன். மென்பழுப்பு நிறம். எங்கள் அடுக்குமாடிக்குடியிருப்பின் கீழ் தளத்தில் சுற்றிக்கொண்டிருக்கும். நிழலில் எப்போதாவது படுத்துக்கொண்டிருக்கும். எங்கள் காம்ப்ளெக்சில் வசிக்கும் பெரும்பாலானவர்களை இது கண்டுகொள்வதில்லை என்பதைப் பார்த்திருக்கிறேன். செலக்டிவ்-ஆகத்தான் வாலாட்டும் அல்லது பின்னே வரும். அதிகம் குலைக்காது. ஆனால் விசிட்டர்களில் சிலரைப் பார்த்ததும் ஏதோ புரிந்துகொள்கிறது. அவர்களை குரைத்து விரட்டிவிடப்பார்க்கும். குறைந்தபட்சம் அவர்கள் காரேறி, பைக்கேறி வெளியேறியபின்தான் நிம்மதியாகத் தன் இருப்பிடத்துக்குத் திரும்பும். எதனாலேயோ அவர்களில் ஓரிருவரை இது ப்ளாக்-லிஸ்ட் செய்துவைத்திருக்கிறது. பாஷை தெரியாததால் இதனை இண்டர்வியூ எடுக்கமுடிவதில்லை எனும் வருத்தமுண்டு. நாய்களில் இது கொஞ்சம் வித்தியாசமானது. இரவிலோ, பகலிலோ மற்ற தெருநாய்களின் கூச்சல், குழப்பங்களை இது சட்டை செய்வதில்லை. சேர்ந்து குரைப்பதில்லை. அதிகாலையில் ஊளையிடுவதில்லை. நாய்களின் சத்தமான பகல் பஞ்சாயத்துகளில் மூக்கை நுழைப்பதேயில்லை. தூரத்திலிருந்து பார்க்கும். சிந்தனை வயப்படும். அவ்வளவுதான். நாய் சமூகத்தின் அறிவுஜீவியோ என்னவோ, யார் கண்டது?

இதற்கு ஏதாவது திங்கக் கொடுக்கலாம் என்று அவ்வபோது தோன்றும். ஆனால் அதுவும் அவ்வளவு எளிதல்ல. ஏற்கனவே சொல்லியிருக்கிறேன் – கொஞ்சம் தனித்துவமானது இது. பத்தோடு பதினொன்னு என்று நினைத்துவிடமுடியாது. சாப்பாட்டிலும் அப்படித்தான். யார் எதைப்போட்டாலும் சாப்பிட்டுவிடாது. அருவருத்த சாப்பாட்டிற்கு விறுவிறுத்த பட்டினிமேல் எனும் சித்தாந்தம் கொண்டது. கீழ்வீட்டுக்காரி (ஹிமாச்சல் ப்ரதேஷி) ஒருத்தி, ஒரு குளிர்காலக் காலையில், முந்தைய நாளின் மிஞ்சிப்போன ப்ரெட்-ஸ்லைஸை இதன் பக்கத்தில் வீசிவிட்டுப் போவதைப் பார்த்தேன். நாய்தானே.. தின்னுடும் என்கிற மனித மேட்டிமைவாத எண்ணம். ஆனால், நம்ப ஆளென்ன – ஐ மீன் – நாயென்ன, லேசுப்பட்டதா? கீழே கிடந்த ப்ரெட்டைப் பார்த்தது. அவள் உள்ளே போவதையும் நோட்டம்விட்டது. நகன்றுவிட்டது அந்த இடத்திலிருந்து. எனக்கும் வயசு பத்தாகப்போகுது. ஒன்னப்போல எத்தனப்பேரப் பாத்திருப்பேன் என்று நினைத்திருக்குமோ?

கீழ் தளத்திலே இன்னொரு வீட்டில் ஒரு பஞ்சாபிக் குடும்பம். வீட்டுக்காரர் பொதுவாக நாய்களின்மீது ப்ரியமுள்ளவர் என்று தோன்றுகிறது. இரவில் சாப்பாடுபோடுவதோடு (என்ன போடுகிறாரோ), குளிரில் இது நடுங்குமே என்பதற்காக ரப்பர்-மேட்டை, படுப்பதற்காக வாசலில் போட்டுவைப்பார். அதில் சுருண்டு படுத்துக்கொள்ளும். என்னுடைய நேரெதிர் வீட்டில் ஒரு உத்தராகண்ட் உத்தமி. எப்போதாவதுதான் கதவைத் திறந்துகொண்டு அவள் வாசலுக்கு வந்து நிற்பாள். சொல்லிவைத்தாற்போல், அந்தச்சமயம் பார்த்து இது அங்கே நின்றுகொண்டிருக்கும். அவள் அந்தப்பக்கம், இந்தப்பக்கமென வேடிக்கைப் பார்த்திருக்கையில், மெல்ல முன்னேறி வீட்டுக்குள் தலை நீட்டுவதைப் பார்த்திருக்கிறேன். இதன் நடவடிக்கையைக் கவனித்தவுடன் அவள் படபடத்து, ‘ச்சல்! ச்சல்! ஜா இதர்ஸே!’ (போ! போ! போய்த்தொலை இங்கிருந்து) என்று வெடிப்பாள். இதனை வெளியே தள்…ளி, வாசலை மறைத்து நின்றுகொள்வாள். இதற்கும் அவளைச் சீண்டுவதில் ஆனந்தமோ? ஒருநாள், நான் இந்த டிராமாவை பார்த்துவிட்டதைக் கவனித்தவள், ‘ஜாத்தாஹி நஹி ஹை Bhaahar.. அந்தர் ஆநா ச்சாத்தா ஹை! (வெளியே போகமாட்டெங்கிறது (சனியன்)..உள்ளே வரணுமாம்!) என்றாள். ‘இதற்கு ஏதாவது சாப்பிடக்குடுத்திருக்கீங்களா? என்னதான் சாப்பிடும் இது?’ என அவளைத் துருவப் பார்த்தேன். ’குச் நஹி!’ என்றாள். ஒன்றுமே சாப்பிடாதா என்றேன் ஆச்சரியமாக. ’கபீ, கபீ.. பிஸ்க்கூட் காத்தா ஹை. Bachchonwaali பிஸ்க்கூட். மேரி-கோல்ட்!’ {சிலசமயம் பிஸ்க்கெட் சாப்பிடும். குழந்தைகளுக்கான பிஸ்க்கெட். மேரி-கோல்ட்(Marie Gold)} என்றுமென்சிரிப்போடு சொன்னவள், கதவை அழுத்திச் சாத்திவிட்டு உள்ளே சென்றுவிட்டாள்.(இவனோடு ஜாஸ்தியாகப் பேசுகிறோமோ என்று நினைத்திருக்கலாம். பெண்மனதில் எப்போது, என்ன தோன்றுமோ, யாருக்குத் தெரியும்?)

இரண்டாவது தளத்தில் இன்னுமொரு உத்தராகண்ட். (டெல்லிக்குள் இப்போதெல்லாம் நிறையப் புகுந்துவிட்டது உத்தராகண்ட்). அந்த வீட்டில் இரண்டு கன்னிகைகள். அவர்களில் மூத்தவள் கருணை தேவதை – நாய் விஷயத்தில். நம்ப நாயைப் பார்த்ததும் மெல்லச் சிரித்துக்கொண்டே தலையில் தட்டுவாள், தடவிக்கொடுப்பாள். இது சிலிர்த்துக்கொண்டு நெளியும்.வளையும். ரெண்டுகால்களில் நின்று முன்னங்கால்களை உயர்த்தும். பிஸ்கட்டை உடைத்துப்போடுவாள். இப்படி சில கைங்கரியங்கள். சின்னவள்? பார்த்துக்கொண்டிருப்பாள். இருவரும் காலையில் கீழிறங்கிச் செல்கையில் அவர்கள் பின்னே செல்லும் நம்ப தோஸ்த். அவர்கள் தங்களின் பழைய மாருதி ஜென்னின் கதைத் திறந்து உள்ளே போவதைப் பார்த்து நிற்கும். கதவைச் சரியாகச் சாத்திக்கொண்டார்களா என்று உன்னிப்பாகக் கவனிக்கும். கார் கிளம்பி மறைந்ததும் தன் இருப்பிடத்துக்குத் திரும்பிவிடும்.

சமீபத்தில் டெல்லிக்கு மீண்டும் வந்தபின் ஒரு பிற்பகலில், பக்கத்துக்கடையில் கொஞ்சம் சாமான் வாங்கிக்கொண்டு படியேறினேன், அடுக்குமாடிக்குடியிருப்பின் முதல் தளத்திலிருக்கும் ஃப்ளாட்டை நோக்கி. கீழ்வீட்டு வாசலில் படுத்திருந்த இது மெல்ல எழுந்தது. மெல்ல? ஆம், கொஞ்சம் குண்டு, வயதும் ஆகிறதல்லவா? என்னைத் தொடர்ந்து படியேறி மேலே வந்தது. இரும்புக்கதவு, உள்கதவெனத் திறந்து உள்ளே போகையில், இதுவும் தலையை உள்ளே நுழைத்துக்கொண்டு, தலை உள்ளே, உடம்பு வெளியே என அகமும் புறமுமாக நின்றது. உள்ளே வர ஆசையா? கதவை சாத்தாதே – நான்தான் நிற்கிறேனே காவலுக்கு என்கிறதா? திங்க ஏதாவது வேண்டுமா? அதன் தலையை லேசாகத்தட்டிவிட்டு, மெதுவாக வெளியே தள்ளி இரும்புக்கதவை சாத்தினேன். ஓட்டை வழியே வெளியே பார்க்கையில், கதவைப் பார்த்து நிற்பது தெரிந்தது. சில நொடிகளில் அங்கேயே படுத்துக்கொண்டுவிட்டது. என்னடா இது, காலை வேளையில் தர்னா?

இதற்குப் போடுவதற்காக அவள் சொன்னமாதிரி, குழந்தைகள் பிஸ்கட் பாக்கெட் ஒன்று வாங்கி வந்திருக்கலாம். ஞாபகத்தில் இல்லை. கடைக்காரனோடு கேஜ்ரிவாலைப்பற்றிக் கதைத்துவிட்டு சாமானை வாங்கிக்கொண்டு வந்துவிட்டேன். (கேஜ்ரிவாலை நினைத்த மனதில் அப்போது, நாயைப்போன்ற அப்பாவி ஜீவன் வருவதற்கான சாத்தியம் குறைவுதான்). ஏதாவது இதற்குத் தின்பதற்குப் போட்டால் நல்லது. கிட்ச்சனைத் திறந்து ஆராய்ந்தேன். சப்ஜி கதகதப்பாக இருந்தது. ப்ரயோஜனமில்லை. பக்கத்தில் ஒரு பாத்திரத்தில், ரெஸ்ட்டாரண்ட்டிலிருந்து வாங்கிவந்திருந்த ஃபுல்க்கா ரொட்டி. அதனைக் கொஞ்சம் விண்டு (இதனை நம்பி முழுசாகப்போட்டால், சாப்பிடாது; எறியவும் மனசு வராது. தர்மம் தோய்ந்த சங்கடம்!) வாசலைத் திறந்து அதன் முகமருகே ரொட்டித்துண்டைக் காட்டிவிட்டு (ஏதோ கடவுளுக்குக் காட்டுவதுபோல்), பக்கத்தில் வைத்தேன். குனிந்து பார்த்தது. போனால்போகிறதென்று என்னையும் பார்த்தது. தலையைத் திருப்பிப் பக்கத்துப் பார்க்கைப் பார்க்க ஆரம்பித்தது. வேண்டாமாம். பிடிக்கவில்லையா? பசியில்லையா? பிஸ்க்கெட்டிற்காக இப்போது நான் கடைக்குப்போகப்போவதில்லை.

உள்ளே நுழைந்து நான் சாப்பிடுவதற்காக, ஃபுல்க்காவில் நெய்தடவி, மைக்ரோவேவுக்குள் தள்ளி, முப்பது செகண்ட் கொடுத்தேன். ஃபுல்க்கா சூடாகி, நெய்யால் மினுமினுத்தது. ஒரு தட்டில் எடுத்துக்கொண்டு, சப்ஜிக்குப்போகையில், மீண்டும் மனதில் வாசலில் படுத்திருக்கும் நாய். ஒருவேளை, நெய்தடவிய, கதகதப்பான ’ஃபுல்க்கா-வர்ஷன் 2’-ஐ இதற்குப் பிடிக்குமோ? கொஞ்சம் அதிலிருந்து விண்டு எடுத்துக்கொண்டேன். வாசல்கதவைத் திறந்து, அதன்முன்னே வைத்தேன். முகர்ந்தது. ஆராய்ந்தது. வாயில் கவ்வி எடுத்துக்கொண்டு மெதுவாக சாப்பிட ஆரம்பித்தது. அட! நெய் தேவைப்படுதா இந்தக் கழுதைக்கு? சே, இந்த நாய்க்கு? உள்ளே சென்று மிச்சமுள்ள விள்ளலை எடுத்துவந்து போட்டேன் ஒரு முழு ஃபுல்க்காவை சண்டித்தனம் செய்யாமல் சாப்பிட்டது. அதற்குமேல் உள்ளே போகாது. தெரியும்.

இப்போது நம்பநாய், நெய்ரொட்டி சாப்பிட்ட கதையைச் சொல்லிவிடவேண்டுமென்று ஆசை. எதிர்த்தவீட்டு எழில், எப்போது திறப்பாளோ கதவை ?

**