வெங்கட் சாமிநாதன்: அஞ்சலியும் மேற்கொண்டும்

சமீபத்தில் மறைந்த வெங்கட் சாமிநாதனுக்கான கூட்டம் 1-11-2015 அன்று காலையில் பெங்களூர் – சி.வி.ராமன் நகரில் நடக்க இருப்பதுபற்றிய அறிவிப்பை எழுத்தாளர்-பதிவர் ராமலக்ஷ்மியின் வலைப்பக்கம் வழியாக அறிந்தேன். கலை-இலக்கிய விமரிசன உலகின், தவிர்க்கமுடியாத ஆளுமையான வெ.சா.வுக்கான கூட்டமா? விடக்கூடாது எனத் தோன்றியது. கூட்டத்திற்குச் சென்றேன்.

நண்பர் சம்பந்தம் & கோ-வின் சீரிய முயற்சிகளினால் நன்றாக ஏற்பாடுகள் செய்யப்பட்ட கூட்டம். பெங்களூரில் வசிக்கும் எழுத்தாளர் பாவண்ணன் கலந்துகொண்டார். கூடவே பெங்களூர்வாழ் தமிழ் எழுத்தாளர்கள், ஆர்வலர்கள் வந்திருந்தனர். பெண்கள் சிலரும், இளைஞரும் காணப்பட்டனர்.

வெ.சா.வின் உருவப்படம் திறந்து வைக்கப்பட்டது. அனைவரும் எழுந்து நின்று, மறைந்தவருக்காக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செய்தோம். சம்பந்தம் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து வெ.சா. என்கிற ஆளுமையைப் பற்றிக் கொஞ்சம் பேசித் துவங்கிவைத்தார். ராமசாமி, கிருஷ்ணன், கிருஷ்ணசாமி, ஜடாயு போன்றோர் வெங்கட் சாமிநாதனின் விமரிசனப்பாங்கு, அவர்களால் வெ.சா.வின் விமரிசனத்தில் காணப்பட்ட நிறை, குறைகள், அவருடனான தங்கள் பரிச்சயம் பற்றிப் பேசினார்கள். கிருஷ்ணசாமி பேசுகையில், திருவனந்தபுரத்தின் பின்னணியில் எழுத்தாளர்கள் ஹெப்சிகா ஜேசுதாசன், ராஜமார்த்தாண்டன் இவர்களின் மூலம் தனக்கு வெ.சா.வுடன் நீண்டகால நெருக்கம்பற்றிக் குறிப்பிட்டார். பேச்சின், விவாதத்தின் போது, தன் கருத்தை நிறுவும் வகையில் நிர்தாட்சண்யமாக, ஆவேசமாகப் பேசக்கூடியவர் வெ.சா. என்பதால், அவரைப்பற்றி பொதுவாக தமிழ்ப்பரப்பில் நிலவும் பிம்பம் அவர் மூர்க்க சுபாவம் உடையவர், சண்டைக்கோழி என்பன என்று சிலர் சொன்னார்கள். மாறாக, வெ.சா.வுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புப்பெற்ற இன்னொருவரான ஜடாயு, அவரது நேசமனம் பற்றி சிலாகித்துப் பேசினார். இளைஞர் என்கிற வயது வித்தியாசம் பாராமல், தோளில் கைபோட்டு அன்னியோன்யமாகப் பேசி வெ.சா. பழகியது ஆச்சரியம் அளித்ததாகச் சொன்னார். அசோகமித்திரன் போன்ற ஒரு சிறந்த ஆளுமையின் படைப்புகளை வெ.சா. கண்டுகொள்ளாததைத் தன்னாலும் ஒப்புக்கொள்ளமுடியவில்லை என்று மேலும் கூறினார் அவர். மறைவதற்குச் சிலநாட்கள் முன்பு வரை நாடகக்கலைஞர் செ.ராமானுஜம் பற்றிக் கட்டுரை ஒன்றை எழுதிக்கொண்டிருந்தாராம் வெ.சா. பிறகு பாவண்ணன் பேசினார்.

ஜெயகாந்தனின் `ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்` நாவலில் நாயகி, நாயகனிடையே ரோஜாச் செடி வளர்ப்பதின் பயன், பயனின்மை குறித்தான உரையாடலின்வழி வெளிப்படுத்தப்பட்ட அழகு பற்றிய படைப்பாளியின் அவதானிப்பை நினைவு கூர்ந்தார் பாவண்ணன். புற அழகில் மனம் ஈடுபட்டு லயிப்பதின் மூலம், அக அழகினுள்ளும் மனம் நுழையும் சாத்தியம், நுட்பம் பற்றிக் குறிப்பிட்டார். வெங்கட் சாமிநாதனின் உலகம் இத்தகையதுதான் என்றார். வெ.சா. எந்தவித கலைப் படைப்பையும் நுட்பமாகக் கவனித்தார் என்றும், அது சரியாகத் தோன்றாதபோது, அதுபற்றிய தன் விமரிசனத்தைக் கடுமையாக முன்வைத்தார்; அதன் காரணம் அது மேலும் சரியாக, அழகுற வந்திருக்கவேண்டும் என்கிற விமரிசகனின் ஆதங்கம்தான் என்று எடுத்துரைத்தார். லினோகட் ஓவியம் பற்றி வெ.சா. எடுத்துக் கூறுகிறவரை, அப்படி ஒரு ஓவிய வகை இருப்பதே தமிழ் உலகில் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை என்றார் பாவண்ணன். இது நிகழ்ந்தது 1970-களில். இணையம் போன்ற வசதிகள் இல்லாத காலம் அது. இப்படி கலை, இலக்கியத்துறைகளின் பல்வேறு வடிவங்களை நுட்பமான, கறாரான ஆய்வுக்குள் நிறுத்தியவர் வெ.சா. அவைபற்றி, எதிர்ப்புகள், கேலிகளுக்கு மத்தியில், ஒரு அரை நூற்றாண்டுக் காலம், தீவிரமாக சிறுபத்திரிக்கைகளில், இணைய இதழ்களில் எழுதிவந்தார்.

கூட்டத்தின் இறுதிக் கட்டமாக, ஆவணப்பட இயக்குநர் அருண்மொழி தயாரித்திருந்த வெ.சா.பற்றிய ஆவணப்படம் (இன்னும் முழு வடிவம் தரப்படவில்லை)-சில காட்சிகள்- திரையிட்டுக் காண்பிக்கப்பட்டது. விட்டல்ராவ், இந்திரா பார்த்தசாரதி, நாஞ்சில் நாடன், திலீப் குமார், சாரு நிவேதிதா, இந்திரன், வண்ணநிலவன், ந.முத்துசாமி, அம்ஷன் குமார் போன்ற எழுத்தாளர்கள் வெங்கட் சாமிநாதனைப்பற்றி, அவரின் விமரிசனப்போக்குபற்றிக் கூறிய கருத்துகள் அவற்றில் இருந்தன. தற்காலத் தமிழ்ச்சூழலில், வெங்கட் சாமிநாதன் போன்ற, வெகுவாக சர்ச்சைக்கு உள்ளான ஆளுமையைப் படமாக்குவது எளிதான காரியமல்ல என்றார் இயக்குனர் அருண்மொழி. வெ.சா.வுடன் நெடுங்காலம் தனிப்பட்ட முறையில் பழகியவர். அவருடைய குணநலன்களை அறிந்தவர் அவர். வெ.சா.பற்றிய முக்கிய விஷயங்கள் மேலும் சேர்க்கப்பட்டு, எடிட் செய்யப்பட்டு விரைவில் இது வெளியாகும் எனத் தெரிகிறது.

முன்னதாக, கூட்டத்துக்கு நான் வந்து இறங்கியவுடன் நண்பர் சம்பந்தத்தினால் அறிமுகம் செய்யப்பட்டு, எழுத்தாளர் பாவண்ணனைச் சந்தித்தேன். மிருதுவான குரலில், பிரியத்துடன் பேசிக்கொண்டிருந்தார். திண்ணை இணைய இதழில் வெ.சா.பற்றி அவர் எழுதியிருக்கும் அஞ்சலிக் கட்டுரையை நான் படித்ததைச் சொன்னேன். `நிசப்தம்` வா.மணிகண்டன் அங்கு நின்றிருந்ததைப் பார்த்து சுயஅறிமுகம் செய்துகொண்டேன். கூட்டத்திலும் அவரிடமிருந்து வந்தது நிசப்தமே. பெங்களூர் வாசிகளான டாக்டர் கணபதி, விஜயன், முகமது அலி, ஜடாயு, கிருஷ்ணன், மகாலிங்கம் ஆகிய மொழிஆர்வலர்களைச் சந்திக்கும் வாய்ப்பும் கிட்டியது. பக்கத்தில் இருந்து ஃபோட்டோ எடுத்துத் தள்ளிக்கொண்டிருந்த, படு இளைஞராக இருந்தவரைப் பார்த்துப்பேசியதில், அவர் ராம் சின்னப்பயல் என்று தெரிந்தது. முன்பே அவரைப்பற்றி அறிந்திராததால், ப்ளாக் ஏதும் எழுதுகிறீர்களா எனக் கேட்டேன். தன் கவிதைகள் தினமணி, விகடன், மற்றும் நிறைய இணைய இதழ்களில் வந்திருப்பதாகச் சொன்னார். பெரியப்பயல் போலும் என நினைத்துக்கொண்டேன்.

மதியச் சாப்பாட்டின்போது, கிருஷ்ணன், காலச்சுவடு இதழ் பெங்களூரில் தனக்கு அஞ்சல்வழி சரியாகக் கிடைப்பதில்லை என்றார். தற்போதைய இழில் வெளிவந்திருக்கும் கோபால் கிருஷ்ண காந்தியின் அம்பேத்கர் பற்றிய மொழிபெயர்ப்புக் கட்டுரையில் மிகைப்படுத்தல்கள், நிஜத்திலிருந்து மாறுபட்டவை உள்ளன என்றார் கிருஷ்ணன். ஒருவரை ஹீரோ ஒர்ஷிப் செய்கையில், இல்லாத குணங்கள், சிறப்புகளையெல்லாம் இருப்பதாகக் காட்டி உயர்த்திப் பிடித்தல், இந்திய கலாச்சார மரபுகளில் ஒன்று என்றேன். முடவன்குட்டி முகமது அலியின் கட்டுரை ஒன்று காலச்சுவடின் சு.ரா.சிறப்பிதழில் வெளிவந்திருப்பதாகச் சொன்னார் மகாலிங்கம். எதிரே உட்கார்ந்திருந்த முகமது அலியைப் பார்த்தேன். சலனமில்லை! வீட்டுக்கு வந்ததும் திருச்சியிலிருந்து வாங்கி வந்திருந்த காலச்சுவடு இதழைத் திறந்து முகமது அலியைப் படித்தேன். சுந்தர ராமசாமியுடனான 1980-ல் நிகழ்ந்த தனது முதல் சந்திப்பிலிருந்து சு.ரா.காட்டிய பரிவு, தொடர்ந்து வளர்ந்த நட்பினைப்பற்றி எழுதியுள்ளார் அலி. சொல்வனம் (www.solvanam.com) இணைய இதழ் வெ.சா. சிறப்பிதழாக 31.10.2015-ல் வெளிவந்துள்ளது. அதில் இருக்கிற ஜடாயுவின் கட்டுரை, வெ.சா. மீதான வெட்டி விமரிசனங்களைச் சந்திக்கிறது.

மறைந்த ஆளுமை வெங்கட் சாமிநாதனின் நினைவாக நிகழ்த்தப்பட்ட கூட்டம், தமிழ் எழுத்தாளர், ஆர்வலர், வாசகரின் பங்களிப்பில், ஒரு இலக்கிய நிகழ்வாகப் பரிணமித்தது. தமிழ்ப் படைப்புகள்பற்றிய ஆர்வத்தை மேலும் கிளறுவதாய், வெ.சா.எழுத்துபற்றி, கலை-இலக்கிய விமரிசனம்பற்றி இன்னமும் அறிந்துகொள்ளத் தூண்டுவதாய் அது அமைந்தது, மனதுக்கு நிறைவு தந்தது.

**