ரோஹித்? மார்க்ரம்? யார் கைக்கு வரும் T-20 உலகக்கோப்பை?

ஒரு மாதமாக வெஸ்ட் இண்டீஸிலும், அமெரிக்காவிலுமாக நடந்துகொண்டிருக்கும் கிரிக்கெட்டின் டி-20 உலகக்கோப்பை, இன்று இந்திய இரவில் (29-6-2024) பார்படோஸில் (Barbados) முடிவுக்கு வருகிறது. இறுதி மோதலில் இந்தியாவும், தென்னாப்பிரிக்காவும்! சவால் விட்டுக்கொண்டிருந்த ஆஸ்திரேலியா, இங்கிலாந்தெல்லாம் அடி, உதை வாங்கி ஓடிவிட்டனர். ஒரு மேட்ச்சையும் இதுவரையிலும் தோற்காத இரு அணிகள் இன்று ஃபைனலில் – இதுவே ஒரு ஆச்சர்யம்தான். தென்னாப்பிரிக்கா இதுவரை உலகக்கோப்பைப் போட்டிகளில் செமிஃபைனலைத் தாண்டியதில்லை. இந்த உலகக்கோப்பையில், செமிஃபைனலில் ஆஃப்கானிஸ்தானைத் தோற்கடித்து, ஃபைனலுக்கு வந்திருக்கிறது. நடப்பு சேம்பியனான இங்கிலாந்தை துவம்சம் செய்துவிட்டு, இறுதிக்குள் நுழைந்திருக்கிறது இந்தியா. ஃபைனல் ஒரு கத்திமுனைப் போட்டி. மழையின் இடைநுழைவால் சிக்கலாகும் மேலும். மைதான ரசிகர்கள் சீட் நுனியில் !

ஐடன் மார்க்ரம் (Aiden Markram)தலைமை தாங்கும் தென்னாப்பிரிக்க அணியில் க்யுண்டன் டி காக் (Quinton de Kock) , க்ளாஸன், மில்லர், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் (Tristan Stubbs) ஆகிய பேட்ஸ்மன்கள் அதிரடி காட்டக்கூடியவர்கள். பௌலர்களில் துல்லியம், கூர்மைக்குப் பேர்போன வேகப்பந்துவீச்சாளர்கள் ககிஸோ ரபாடா (Kagiso Rabada), மார்கோ யான்ஸென் (Marco Jansen), ஆன்ரிச் நோக்யா (Anrich Nortje) ஆகியோர். ஸ்பின்னில் கேஷவ் மஹராஜும், தாப்ரெய்ஸ் ஷம்ஸியும் (Tabraiz Shamsi) இந்தியாவுக்கு நெருக்கடி தருவார்கள் என எதிர்பார்க்கலாம்.

ரோஹித்தின் தலைமையிலான இந்திய அணியில் அதிமுக்கிய வீரர்கள் என இவர்கள் தென்படுகிறார்கள். பௌலிங்கில் பும்ரா, குல்தீப், அக்ஷர் பட்டேல் ஆகியோர். பேட்டிங்கை கவனிக்கையில் ரிஷப் பந்த், சூர்யகுமார், ரோஹித் மற்றும் பாண்ட்யா தென்னாப்பிரிக்க பௌலர்களுக்கு சவாலாக அமைவார்கள் எனத் தோன்றுகிறது. இதுவரை பேட்டிங்கில் ஏதும் குறிக்கும்படி செய்யாத கோஹ்லியும், ஜடேஜாவும் இந்த இறுதி மோதலில் ஏதேனும் வித்தை காண்பிப்பார்களா.. ஒன்றும் சொல்வதற்கில்லை. கிரிக்கெட் எளிதில் யூகித்துவிடக்கூடிய விளையாட்டல்ல – குறிப்பாக இந்த டி-20 வகைமை. பார்ப்போம்.

ஃபைனல் நடக்கப்போகும் வெஸ்ட் இண்டீஸின் பார்படோஸில் வருண பகவானும் அடிக்கடி வந்து போகிறவர். இன்றும் மேட்ச் பார்க்க வந்து இறங்குவார் என்றே தெரிகிறது. மைதானத்திற்குள் நுழைந்துவிடாமல், தூரத்திலிருந்தே அவர் போட்டியை கண்டு களித்தால், ரசிகர்கள் பெருமூச்சு விடுவார்கள். மழையினால் மேட்ச்சே நடக்காது போய்விட்டால், ரிஸர்வாக நாளை (30-6-24) தினத்தை ஐசிசி பெரிய மனதுபண்ணி ஒதுக்கியிருக்கிறது. மழை கணிப்பு என்னவோ இரண்டு நாளிலும் பெய்யலாம் என்கிறது..

ஃபைனலில் இந்தியா ஜெயிக்கவேண்டும் என ஒரு அதிசயம்போலே… அண்டை நாட்டான பாகிஸ்தானிலும் எதிர்பார்க்கிறார்கள், ஆசைப்படுகிறார்கள் – குறிப்பாக அரசியலைப் பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளாத, கிரிக்கெட் போதை ஏறியிருக்கும் அந்நாட்டு யுவர்கள், யுவதிகள். பாகிஸ்தானியக் கன்னியர்களில் பலர் கோஹ்லி, ரோஹித் ரசிகைகள்! சும்மா அடித்துவிட்டுக்கொண்டிருக்காமல், நம்மவர்களின் ஆட்டத் திறன்பற்றி நிஜமாகவே அதிகம் தெரிந்து வைத்திருக்கிறார்கள். அந்நாட்டிலிருந்து கிரிக்கெட் யூ-ட்யூபர்களும் அதிகம். பாகிஸ்தா உலகக்கோப்பையிலிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டாலும், இந்திய அணியின் போக்கை ஃபால்லோ செய்து ரசிக்கிறார்கள். லைவ்லியாகப் பேசுகிறார்கள். ரோஹித், பும்ரா, சூர்யா, குல்தீப் .. ஆஹா.. என்று ஆர்ப்பரிக்கிறார்கள். இந்திய அணிக்கு எங்கெங்கிருந்தெல்லாம் ஆதரவு வருகிறது.. ஹ்ம்ம்.. அவர்களின் மனம் சோர்ந்துவிடாதிருக்க, சோபிக்கட்டும் இறுதி ஆட்டம். விளாசட்டும் இந்தியா!

கிரிக்கெட்டில் இதுவரை ஐசிசி கோப்பை எதனையும் வென்றிராத, உலகின் குறிப்பிடத்தக்க அணியான தென்னாப்பிரிக்காவுக்கு, அந்நாட்டின் ரசிகப் பெருமக்களுக்கு இன்றைய ஆட்டம் மிக, மிக முக்கியம். தென்னாப்பிரிக்க கேப்டன் மார்க்ரமின் கைகளில் இன்று இரவு கோப்பை வந்துவிடும் என எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் உலகெங்குமுள்ள ஆஃபிரிக்க கிரிக்கெட் ரசிகர்கள். ஃபைனலுக்கு முன்பான போட்டிவரை சிறப்பாக ஆடியும், போன வருட ஒரு-நாள் உலகக்கோப்பையை ஆஸ்திரேலியாவிடம் இழந்து நொந்துபோன இந்தியாவுக்கு மட்டும் இது முக்கியமில்லையா என்ன? இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள கோடானுகோடி இந்திய ரசிகர்களும் இன்று தூக்கமிழப்பார்கள். அவர்களின் கேப்டன் ரோஹித் ஷர்மா உலகக்கோப்பையை உயர்த்திப் பிடிப்பதைக் காண ஏங்கிக்கொண்டுதானே இளைத்திருக்கிறார்கள் அவர்களும்..

நீலஆரஞ்சா? பச்சைமஞ்சளா? எதைக் காட்டப்போகிறது இந்த மர்மமான இரவு !

Leave a comment