ICC T-20 WC 2024: இந்தியா ஃபைனலுக்குப் போகுமா?

வெஸ்ட் இண்டீஸின் கயானாவின் தலைநகரான ஜார்ஜ் டவுனில் மழை இப்போது பெய்கிறதா? என்ன, தூறல்தானா? ஆ.. அதுவும் நின்றுவிட்டதா ! – என்றெல்லாம் பரபரப்பாக விஜாரித்துக்கொண்டிருக்கிறார்கள், உலகெங்கும் பலர். குறிப்பாக இந்தியாவிலும், இங்கிலாந்திலும். அங்கே வெயில் காய்ந்தால் என்ன, வெள்ளம் வந்தாலென்ன இவர்களுக்கு என்று கேட்டால் நம்மை ஒருமாதிரியாகப் பார்ப்பார்கள் இவர்கள். கிரிக்கெட் ஜுரம் ஒரேயடியாகத் தாக்கியிருக்கும் நிலையில் அவர்களும் என்னதான் செய்வார்கள், பாவம்..

இன்று இன்னும் இரண்டு மணிநேரத்தில் அங்கே ப்ராவிடென்ஸ் ஸ்டேடியத்தில் துவங்க இருக்கிறது ஐசிசி டி-20 கிரிக்கெட் உலகக்கோப்பையின் இரண்டாவது செமி ஃபைனல் -இந்தியா, இங்கிலாந்திற்கிடையே. மழை பெய்யாதிருந்தால்தான் பிட்ச் தப்பிக்கும். ஆட்டம் முழுசாக நடக்கும். கடந்த சில நாட்களைப்போல் இன்றும் அங்கு மழை தொடர்ந்தால், மேட்ச் பாதிக்கப்படும். ஓவர்கள் குறைக்கப்பட்டு மோதவேண்டியிருக்கும். அத்தகைய நிலை எந்த அணிக்கும் பாதகமாகப் போய்விட வாய்ப்பிருக்கிறது. இந்தியா ஃபைனலுக்குப் போய், கோப்பையையும் வென்றுவந்துவிடவேண்டும் என்கிற துடிப்பில், ஏக்கத்தில், தவிக்கும் ரசிகப் பெருமக்கள் எப்படி நிம்மதியாக இருக்கமுடியும்? வெதர் ரிப்போர்ட்டைப் பார்த்துப் படபடத்துக்கொண்டிருக்கவேண்டியதுதான் !

முதல் செமிஃபைனலில் இன்று (27-6-2024) காலையில் ஆஃப்கானிஸ்தானை தோற்கடித்து, முதன்முறையாக உலகக்கோப்பை கிரிக்கெட் சேம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிற்குல் நுழைந்திருக்கிறது தென்னாப்பிரிக்கா. இறுதிப்போட்டியில் (29-6-2024) அதனுடன் இந்தியா மோத, இன்று இங்கிலாந்தை எப்படியாகிலும் காலி செய்துவிடவேண்டும் என்கிற பதற்ற நிலை ரோஹித் ஷர்மாவின் இந்திய அணிக்கு.

ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி வலிமையோடு இருக்கிறது. ஃபில் சால்ட், பட்லர் (Jos Butler), பேர்ஸ்டோ (Johny Bairstow), ப்ரூக் (Harry Brook), மொயின் அலி, சாம் கர்ரன், லிவிங்ஸ்டன் என அபார பேட்டர்கள். ஆர்ச்சர், ஜோர்டன், டாப்லி, ஆதில் ரஷீத், மொயின் அலி, கர்ரன் ஆகிய திறன் வாய்ந்த பௌலிங் அமைப்போடு இந்தியாவைத் தாக்கத் தயாராக நிற்கிறது.

இந்திய அணி ஆஸ்திரேலியாவை சூப்பர்-8-ல் விரட்டிவிட்ட வீரதீரத்துடன் இங்கிலாந்தையும் சுருட்டி வீசும் முனைப்பில் காணப்படுகிறது. ஃபார்மில் இல்லாத விராட் கோஹ்லியால் ரசிகர்களுக்கு டென்ஷன்! ஒருவேளை, போன மேட்ச்சில் ஆஸ்திரேலியாவை ரோஹித் ஷர்மா போட்டுத் தாக்கியதுபோல், இங்கிலாந்து பௌலர்களை இன்று துவம்சம் செய்வாரா கோஹ்லி? பலர் இப்படி ஆவலோடு எதிர்பார்க்க்கிறார்கள். மிடில் ஆர்டரில் ரிஷப் பந்த், சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே (Shivam Dube), ஹார்திக் பாண்ட்யா ஆகியோரின் பங்களிப்பு மிகவும் முக்கியம். இவர்கள் நொடித்தால், இடிந்துபோய்விடும் இந்தியா. பௌலிங்கில் வேகப்பந்துவீச்சாளர்கள் அர்ஷ்தீப் சிங், ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோரின் ஃபார்ம் இந்தியாவுக்கு வலிமை சேர்க்கிறது. சுழலில் இடதுகை வீச்சாளர் குல்தீப் யாதவ் இன்று எப்படி வீசுவார் என்பதில் இருக்கிறது இங்கிலாந்து பேட்டர்கள் (batters) கட்டுப்படுவதோ, வீழ்வதோ. ஜடேஜா இதுவரைத் தன் வேலையைக் காண்பிக்கவில்லை! அக்ஷர் பட்டேல் இன்று என்ன செய்யவிருக்கிறாரோ.. பாண்ட்யாவின் மீடியம் பேஸ் சரியான தருணத்தில் இதுவரை இந்தியாவுக்குக் கைகொடுத்திருக்கிறது.

மழை அடிக்கடி மைதானத்தில் நுழைந்து தொந்திரவு செய்யலாம். மைதான சரித்திரம் அப்படி. அப்படி இன்றும் நடந்தால், 20 ஓவர் மேட்ச்சை, 10, 15 ஓவரெனக் குறைக்க வாய்ப்பு அதிகம். எப்படி இருப்பினும் இறங்கியவுடன் தாக்கும் மனநிலையும் பேட்டிங் திறனும் நம்மவர்களுக்கு வாய்க்கவேண்டும். இல்லையென்றால் இங்கிலாந்து புகுந்து விளையாடி, ஃபைனலில் நுழைந்துவிடும் ஆபத்து!

ரோஹித் இந்தியாவை டி-20 உலகக்கோப்பை ஃபைனலுக்கு இட்டுச் செல்வாரா? இந்த இரவின் அடுத்த சில மணிநேரங்கள் மர்மத்தைக் கட்டவிழ்த்துக் காட்டிவிடும்!

**

Leave a comment