ICC T20 WC 2024: Bumrah ஜாலத்தில் வீழ்ந்த பாகிஸ்தான்

நேற்று நள்ளிரவுக்குப் பின்பட்டாஸுகள் வெடித்தன. கொண்டாட்ட சத்தங்கள் இரவின் நிசப்தத்தைத் தள்ளிக்கொண்டு சீறின. எங்கே? இங்கே, இந்தியாவில். பாகிஸ்தானில் நிகழ்ந்திருக்கவேண்டிய குதூகலம் இது. பும்ரா காண்பித்த டெத் ஓவர் ஜாலம், வெற்றியை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்த பாகிஸ்தானை பிடித்துத் தூக்கி எறிந்தது. இந்தியா 6 ரன் வித்தியாசத்தில் நியூயார்க் மேட்ச்சை வென்றது. ”இந்தியாவை, பாகிஸ்தானால் ஜெயிக்க முடியாது. நா சொன்னேன்ல!: என்றெல்லாம் அண்டை நாட்டில் குமுறல்..அலறல். என்ன செய்ய !

நியூயார்க் ரசிகர்கள் ஒரு புறமிருக்க, பாகிஸ்தானின் ராவல்பிண்டியிலும் மற்ற நகரங்களிலும் கிரிக்கெட் ஃபேன் பார்க்குகளில் (Fan Parks) ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் உட்கார்ந்து பெரிய பெரிய ஸ்க்ரீன்களில் பார்த்துக்கொண்டிருந்தார்கள், பாகிஸ்தான் பௌலர்கள் இந்திய பேட்டிங்கை துவம்சம் செய்துகொண்டிருந்ததை. இந்திய பேட்டிங் தடுமாறுகையிலெல்லாம் ”பாகிஸ்தான் ”ஜீதேகா.. இந்தியா ஹாரேகா !” என அவ்வப்போது அதிர்ந்தது அங்கே. இந்தியா 19 ஓவரில் 119-ல் ஆல் அவுட் ஆகி வெளியேறியபொது அவர்கள் முடிவுசெய்திருந்தார்கள் – இன்று பாகிஸ்தானுக்கே வெற்றி.. தொலைந்தது இந்தியா! யுஎஸ்ஏ-வுக்கு எதிரான பாகிஸ்தானின் படுதோல்வி மனதைவிட்டு மறைந்திருந்தது..

நேற்று இரவு அப்படி என்னதான் நடந்தது? நியூயார்க்கின் சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் பிட்ச்சில் இந்தியாவை முதலில் பேட்டிங் செய்ய அழைத்த பாகிஸ்தான், 19 ஓவரிலேயே இந்தியாவை சொற்ப ஸ்கோரில் (119) வெளியேற்றிவிட்டது. அதிர்ச்சி. சூப்பர் ஸ்டார்களான கோஹ்லி, ரோஹித்தையும் மற்றும், சூர்யா, ஷிவம் துபே, பாண்ட்யா – எல்லோரும் காலி. பாகிஸ்தானின் ஸ்விங் பௌலிங்  டாப் கிளாஸாக இருந்தது – குறிப்பாக இளம் நஸீம் ஷா, சீனியர் ஹாரிஸ் ராஃப் இந்தியர்களைத் திணறவைத்தார்கள். மேலே எம்புவதும், கீழே பம்முவதுமாய் பாச்சா காட்டிக்கொண்டிருந்தது பந்து. இந்தியர்கள் திணறித் தத்தளித்தார்கள். ரிஷப் பந்த் மட்டும் ரிஸ்க் எடுத்து, பாகிஸ்தான் பௌலர்களைத் தூக்கி அடித்து விளாசினார் அல்லது அப்படிச் செய்ய அவ்வப்போது முயற்சித்தார். 4-ஆவது நம்பரில் இறக்கப்பட்ட ஆல்ரவுண்டர் அக்ஷர் பட்டேல் பந்த் உடன் ஒத்துழைத்தார் எனலாம். சிக்ஸரும் அடித்தார். ஆனால் திடீரென வெளியேறிவிட்டார். துபே, ஜடேஜா ஆகியோர் பாகிஸ்தானி ஃபீல்டர்களுக்கு அசட்டுத்தனமாக கேச்சிங் பயிற்சி கொடுத்து வெளியேறினார்கள். கடைசியில் வந்த அர்ஷ்தீப்பும், சிராஜும் கொஞ்சம் ரன் சேர்க்க, 119 என்கிற ஸ்கோர் வந்தது இந்தியாவுக்கு. எளிய டார்கெட் பாகிஸ்தானுக்கு.

பாகிஸ்தானின் துவக்க ஜோடியான ரிஸ்வான் – ஆஸம் உற்சாகமாக இறங்கியது. அவர்கள் ஆட ஆரம்பிக்கையில், பிட்ச்சின் நடத்தை கொஞ்சம் சரியாகிவிட்டதுபோல் இருந்தது. ரன்கள் வர ஆரம்பித்தன பாகிஸ்தான் அக்கவுண்ட்டில். இருந்தும் 2,3,4 என பேட்டிங் வரிசையில் வந்த பாபர் ஆஸம், உஸ்மான் கான், ஃபகர் ஜமன் ஆகியோருக்கு எண் 13 –ன் மீது என்னதான் ஆசையோ! அதிலேயே விழுந்து ஓடினார்கள். விரட்டிவிட்டவர்கள் பும்ரா, பட்டேல், பாண்ட்யா. இருந்தும் சமாளித்து, ஒரு கட்டத்தில் 73 க்கு 3 விக்கெட்கள் என பாகிஸ்தான் வெற்றி நடை போட்டுக்கொண்டிருந்தது. 45 பந்துகளில் 47 ரன்கள்தான் தேவை வெற்றிக்கு. 7 விக்கெட்கள் கைவசம். இந்திய பௌலிங் அப்படி ஒன்றும் சாய்த்துவிடவில்லை என்கிற நிலை. அப்பறம் என்ன, பாகிஸ்தான் ஜெயிச்சாச்சு.. ஜீத் கயா பாகிஸ்தான்! என்று பாக் ரசிகர்கள் நியூயார்க்கிலும், பாகிஸ்தானிலும் துள்ளியதில், பிஸ்ஸா, ட்ரிங்க்ஸ் ஆர்டர் செய்ததில்  ஒரு நியாயம் இருந்தது.

ஆனால் இது டி-20 மேட்ச் அல்லவா. அதுவும் நியூயார்க்கின் நஸ்ஸாவ் கௌண்ட்டியின் அடாவடி பிட்ச்சில்..! அப்படி எளிதில் விட்டுவிடுமா? பாண்ட்யா ரன் கொடுத்து காரியத்தைக் கெடுப்பாரோ என்கிற நிலையில் ஷதப் கானை (Shadab Khan) வீட்டுக்கு அனுப்பிவிட்டார். மறுபக்கத்தில் விக்கெட் எடுக்க முடியாத சிராஜ், ரன் கொடுக்காது பாகிஸ்தானி பேட்டர்களை நெருக்கிவைத்திருந்தார். 44 பந்துகளில் 31 எடுத்திருந்த நம்பிக்கையில்,  பும்ராவின் பந்தை க்ராஸ் பேட் அடித்து சிக்ஸருக்கு அனுப்பப் பார்த்தார் ரிஸ்வான். அங்கேதான் விதி தன் வேளையைக் காட்ட ஆரம்பித்தது. பந்து சந்திரயான் வேலையைக் காண்பித்து,  ஓரமாகப் போய் கீழே இறங்கியது. ரிஷப் பந்த் ஓடிப்போய்ப் பிடிக்க, ரிஸ்வான் தலையைக் குலுக்கியவாறு வெளியேறினார். பச்சைச் சட்டை ரசிகர்களிடம் மூச்சுத் திணறல்.

Bumrah exalts on taking a Pak wicket

19 ஆவது ஓவரின் இறுதியில் இஃப்திகார் அஹ்மதையும் (Chacha Ifthikar!) பும்ரா சாய்த்துவிட, பாகிஸ்தானுக்கு உதறல். கடைசி ஓவரில் 6 பந்தில் 15 அடித்தால் வெற்றி என்கிற நிலை பாகிஸ்தானுக்கு. அர்ஷ்தீப் சிங் கடைசி ஓவரை வீசி இமாத் வாஸிமை வீழ்த்தினார். கடைசியில் 6 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி இந்தியாவுக்கு. ஜெயித்திருக்கவேண்டிய மேட்ச்சை இந்தியாவிடம் தோற்றதினால், பாகிஸ்தானின் அழுகைப் படலம் ஆரம்பித்தது. ஐசிசி-யும் இந்தியாவும் சேர்ந்து செய்த சதிதான் இது – என்கிற இறுதிப் புலம்பலில் இதுபோய் நிற்கிறது இப்போது.

அடுத்த அணிகளின் (குறிப்பாக அமெரிக்கா) இனி வரும் வெற்றி, தோல்வியைப் பொறுத்தே இருக்கிறது பாகிஸ்தானின் சூப்பர்-8-க்குள் நுழைவதற்கான வாய்ப்பு. ரோஹித்தின் இந்திய அணி, கனடாவை ஜூன் 12-ஆம் தேதி   சந்திக்கிறது.

**

Story in Short : 

Bumrah magic chokes Pakistan

Unpredictable Nassau County pitch in New York for the India-Pak duel. Annoying showers before the start of the Indian batting. Expected batting collapse barring Rishab Pant’s  plucky 42 and Axar Patel’s crucial 20 in the middle. Scrambling, India folded in 19 overs for just 119. Lethal bowling by Pak pacers –especially Naseem Shah and Harris Rauf- in a windy, seam-friendly surface. India rattled but not out yet..

In response, Pakistan started cautiously.  Were 73/3 at one stage sailing smoothly towards the target. What happened suddenly during the middle overs? Rohit’s astute captaincy showcased itself as he smartly shuffled his pacers and spinners to scuttle the easy  run chase by the rivals. In the end, India won by a slender margin of 6 runs.

What really stood between Pakistan and victory? Just one jewel – Jasprit Bumrah. “He is a genius with the ball..” remarked Rohit while talking to Ravi Shastri at the end of the match.

Scores:  India 119 (19 overs)

              Pakistan 113/7 (20 overs)

**

Leave a comment