ICC T20 WC 2024 இந்தியா-பாகிஸ்தான் Cricket Classic

இன்னும் சில மணி நேரங்களில் நியூயார்க்கின்  மைதானத்தில் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் மேட்ச் ஒன்று ஆரம்பமாகிறது. எல்லைக்கு இந்தப் பக்கம் 140 கோடியும், அந்தப் பக்கம் 25 கோடியும் பெரும் எதிர்பார்ப்புடன், பரபரப்புடன் காத்திருக்கும் நாளிது – இரவிது. இந்தியா- பாகிஸ்தான் உலகக்கோப்பை மேட்ச் என்பது 2-3 வருடங்களுக்கு ஒரு முறை நிகழும். இந்த வருடம், உலகக்கோப்பையை வெஸ்ட் இண்டீஸும், அமெரிக்காவும் சேர்ந்து நடத்துவதால், இந்த போட்டி நியூயார்க்கின் மைதானத்தில் இந்திய நேரம் இரவு 8 மணிக்கு ஆரம்பித்து நள்ளிரவு வரை செல்லும்.

ஆட்டத்தின் முடிவில், எந்த நாட்டில் நள்ளிரவில், பட்டாஸு வெடிகளின் சத்தம், கொண்டாட்டம் எகிறும் என்பதைக் கணிப்பது கடினம். பாகிஸ்தான் ரசிகர்களிடையே ஒரு பக்கம் மஹா எதிர்பார்ப்பையும், கூடவே நேரடியாக ஒத்துவைத்துக்கொள்ளவைக்கும் அளவிற்கு பீதியையும் கிளப்பிவிட்டிருக்கும் போட்டி இது! ஆசை, ஆசையாக எதிர்பார்ப்பு சரி. பீதி ஏன்?

6-ஆம் தேதி நடந்த போட்டியில் பாகிஸ்தானைத் தோற்கடித்துவிட்டது – கத்துக்குட்டி கிரிக்கெட் நாடான அமெரிக்கா! போயும் போயும் அமெரிக்கா போன்ற, கிரிக்கெட் உலகின் புதுமுக அணியிடமும் தோத்துத் தொலைய வேண்டுமா? ” அவமானம்! நீங்க கிரிக்கெட் ஆடிக் கிளிச்சது போதும் .. திரும்புங்கடா நாட்டுக்கு! ”- என்று கதறும் அளவிற்கு பாகிஸ்தான் ரசிகர்களைக் கொண்டுபோய்விட்டிருக்கிறது அமெரிக்கா கொடுத்த அடி. பாக் டிவி சேனல் விவாதங்களில், முன்னாள் வீரர்கள் ஷோயப் அக்தர், ரமீஸ் ராஜா போன்றவர்கள் பாகிஸ்தான் அணியை, குறிப்பாக கேப்டன் பாபர் ஆஸமை வையாத வசவு பாக்கியில்லை. பொதுவாக ஆசையாக எதிர்பார்ப்பார்கள் இந்தியாவுடனான மேட்ச்சை பாகிஸ்தானியர்கள். இந்த முறை தலையைப் பிய்த்துக்கொண்டு..”ம்ஹூம்.. நம்பிக்கையில்லை.. நம்ம டீம் இந்தியாவைத் தோற்கடிக்காது !” – என்று முடிவுசெய்துவிட்டதுபோல் பலர் புலம்பியவண்ணம் இருக்கிறார்கள் அங்கே. இருந்தாலும் இருநாட்டிலும், கண்ணில் எண்ணெய் விட்டுக்கொண்டு விடாது பார்ப்பார்கள் மேட்ச்சை! நியூயார்க்கில் வாழும் இந்திய, பாகிஸ்தான் வம்சாவளியினர் ஏகப்பட்ட அளவில் மேட்ச் பார்க்க வருவார்கள். இதோடு நியூயார்க்கின் டைம் ஸ்கொயர் பகுதியில் பெரிய ஸ்க்ரீனில் மேட்ச் பார்க்க, ஆட, பாட, களிக்க என ஏற்பாடுகள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.

இன்றைய India-Pak Classic -ற்கான இந்திய அணி உத்தேசமாக, இப்படி இருக்கும் எனத் தோன்றுகிறது(அயர்லாந்திற்கு எதிராக ஆடிய இந்திய அணி):

ரோஹித், கோஹ்லி, ரிஷப் பந்த், சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே (Shivam Dube), ஹார்திக் பாண்ட்யா, ஜடேஜா, அக்ஷர் பட்டேல், பும்ரா (Bumrah), அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ். (In that order)

ஒருவேளை ஷிவம் துபேயின் இடத்தில்  சஞ்சு சாம்ஸன் வரலாமோ என்கிற பேச்சும் அடிபடுகிறது. மேற்கண்ட அணியில் இந்தியாவின் இளம் ஸ்டார் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இல்லை என்பது கவனிக்கத் தக்கது. ரோஹித்-கோஹ்லி ஆட்டத்தைத் துவக்கும் பட்சத்தில், ஜெய்ஸ்வாலுக்கு எங்கே இருக்கும் இடம்?

பாகிஸ்தான் அணியில், குறிப்பாக பௌலர்களில் மாற்றம் நிகழும் எனத் தெரிகிறது. நியூயார்க் பிட்ச் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு வசதியாக இருப்பது தெரியவந்திருக்கிறது. பாகிஸ்தானிடம் ஷஹீன் ஷா அஃப்ரிதி, முகமது ஆமீர், நஸீம் ஷா, ஹாரிஸ் ராஃப் என நான்கு அதிரடி வேகப்பந்துவீச்சாளர்கள் உண்டு. இமாத் வாஸிம் அல்லது ஸ்பின்னர் அப்ரார் அஹ்மது இந்த முக்கியமான போட்டிக்காக சேர்க்கப்படலாம் என்று தெரிகிறது. சரியான ஸ்பின்னர் இல்லாத பாகிஸ்தானை அமெரிக்க அணி (பெரும்பாலும் இந்தியர்) முந்தைய மேட்ச்சில் அடித்து விரட்டியது பாகிஸ்தானைக் கலங்க வைத்துள்ளது. பாகிஸ்தானின் கிரிக்கெட் போர்டும் கடும் விமர்சனத்திற்கு வந்திருக்கிறது. கோச் கேரி கர்ஸ்டன் (Gary Kirsten) அதிக அழுத்தத்தில் இருக்கிறார்.

நெருப்புக்குள் தூக்கி வீசிய போன்ற ஒரு போட்டியில், ரிசல்ட் எதுவாயினும், ரசிகர்களுக்கு ஒரு அருமையான கிரிக்கெட் மேட்ச் காணக் கிடைக்கும்; கிரிக்கெட் எனும் மாபெரும் விளையாட்டின் ரசிகர்களுக்கு சுவாரஸ்ய விருந்து தரப்படும் என்பது திண்ணம். மழை இடையில் நுழைந்து காரியத்தைக் கெடுக்காது இருக்கவேண்டும்.  சரிவர, முறையாகத் தயார் செய்யப்படாத, ஐசிசி யைக் கடும்  விமர்சனத்தில் தள்ளியிருக்கும் இந்த நியூயார்க் பிட்ச், இன்றைக்கு எந்த டீமுக்கு என்ன கதையைச் சொல்லப்போகிறதோ… ஆண்டவா…!

**

2 thoughts on “ICC T20 WC 2024 இந்தியா-பாகிஸ்தான் Cricket Classic

Leave a comment