உலகக்கோப்பை கிரிக்கெட் வந்தாச்சு !

கத்தி போச்சு, மாங்கா வந்தது டும்..டும்..டும்.. என்று செல்லும் சிறுபிராயப் பாடலொன்றின் வரிகள். பல ஆண்டுகளுக்குப் பிறகு மனத் திரையில் ஓடுகின்றன, தங்களைக் கொஞ்சம் மாற்றிக்கொண்டு: ஐபிஎல் போச்சு.. வர்ல்ட் கப் வந்தது.. டும்.. டும்.. டும்.. என அது கேட்க ஆரம்பித்துவிட்டது இப்போது. உலகெங்கும் பரவியிருக்கும் கிரிக்கெட் ப்ரேமிகளுக்குப் படுகொண்டாட்ட காலந்தான் இது!

உலகக்கோப்பைக்கு முன்னாள் ஒரு ரெஃப்ரெஷராக, பரபரவென்று ஆரம்பித்து, விறுவிறுவெனச் சென்று சென்னையில் KKR கேப்டன் ஷ்ரேயஸ் ஐயரின் கைகளில் கோப்பையைக் கொடுத்துவிட்டு நகர்ந்தது இந்த வருட ஐபிஎல். சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. இந்த வருடம் சிறப்பான பங்களிப்புகளைத் தந்து ரசிகர்களை உசுப்பேற்றிய அணிகள் என ஹைதராபாத், ராஜஸ்தான், கொல்கத்தா அணிகளைச் சொல்லலாம்.

நடந்து முடிந்த ஐபிஎல் 2024, வரவிருக்கும் உலகக்கோப்பைப் போட்டிகளுக்காக இந்திய அணிவீரர்களின் திறமையைக் கூர்மைப்படுத்திக் கொடுத்ததாய் அமைந்துவிட்டது. உலகின் டாப் ட்-20 லீக்கான ஐபிஎல்-இல் பங்கேற்ற இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஆஃப்கானிஸ்தான், ஸ்ரீலங்கா,தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் போன்ற வெளிநாட்டு வீரர்களுக்கும் டி-20 வகைமையின் கிரிக்கெட் பயிற்சி அவ்வாறே கடந்த இரு மாதங்களில் கிடைத்திருக்கும். டி-20 உலக்கோப்பைப் போட்டிகளை  டாப்-11 கிரிக்கெட் நாடுகளில் ஒன்றான, பழம்பெருமை பல வாய்ந்த வெஸ்ட் இண்டீஸும், ஐசிசி அஸொஷியேட் நாடுகளில் ஒன்றும், கிரிக்கெட் உலகக் கத்துக்குட்டியுமான அமெரிக்காவும் சேர்ந்து நடத்துகின்றன. வெஸ்ட் இண்டீஸ் என்பதே சின்னச் சின்ன கரீபியன் தீவு நாடுகளின் (கிரிக்கெட்டிற்கான) ஒரு கூட்டமைப்புதான் என்பதை முதலில் மனதில்  கொள்ளவேண்டும்.

நான்கு பிரிவுகளாக 20 அணிகளை மேலே பார்க்கலாம். குரூப் ஏ -யில் இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து, அமெரிக்கா, கனடா ஆடும் ஆரம்ப சுற்று ஆட்டங்கள் Dallas, Lauderhill (Florida), New York ஆகிய அமெரிக்க மைதானங்களில் நடக்கும். கிரிக்கெட் உலகக்கோப்பையின் முதல் இரண்டு  மேட்ச்கள் ஜூன் 2-ஆம் தேதி அமெரிக்கா, கனடா, மற்றும் வெஸ்ட் இண்டீஸ், பாப்புவா நியூ கினீ அணிகளுக்கிடையே நிகழவிருக்கின்றன. இந்தியாவிற்கான முதல் போட்டி அயர்லாந்துக்கு எதிராக ஜூன் 5-ல் நடைபெறும். உலக்கோப்பையின் ஹை-ஆக்டேன் போட்டிகளில் ஒன்றான, ஐசிசி-க்கு   ஏகப்பட்ட பிஸினெஸ் தரும் மேட்ச்சான  இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் அல்லது ’உணர்ச்சிகரப் போராட்டம்(!)’ நியூயார்க்கில் ஜூன் 9, இந்திய நேரம் இரவு 8 மணிக்கு ஆரம்பிக்கும். இரு ‘எதிரி’ நாடுகளின் கிரிக்கெட் ரசிகர்களால் பெரும் துடிப்போடு எதிர்பார்க்கப்படும் இந்த மோதலுக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன எனத் தனியாகச் சொல்லத் தேவையில்லை. பின்னே? யுத்தம் அல்லவா இது! என்ன விலையில் டிக்கெட் விற்றால்தான் என்ன..

உலகக்கோப்பையில் பங்குபெறும், ஐசிசி யின் டாப் 11 அணிகளின் (Test playing countries) கேப்டன்கள் இவ்வாறு:

ஆஸ்திரேலியா – மிட்செல் மார்ஷ், இங்கிலாந்து – ஜோஸ் பட்லர், நியூஸிலாந்து – கேன் வில்லியம்சன், தென்னாப்பிரிக்கா – ஐடன் மார்க்ரம், இந்தியா – ரோஹித் ஷர்மா, வெஸ்ட் இன்டீஸ் – ரோவ்மன் பவல் ,  பங்களாதேஷ் – நஜ்முல் ஹுசேன் ஷாண்ட்டோ, பாகிஸ்தான் – பாபர் ஆஸம், ஸ்ரீலங்கா – வனிந்து ஹஸரங்கா, ஆஃப்கானிஸ்தான் – ராஷித் கான், அயர்லாந்து – பால் ஸ்டர்லிங்.

இந்த  நாடுகளோடு ஐசிசி அஸோஷியேட் நாடுகள் என்றழைக்கப்படும் அணிகளிலிலிருந்து உலகக்கோப்பைக்காகத் தேர்வு செய்யப்பட்ட, மேலும் ஒன்பது தேசங்களான ஸ்காட்லாந்து, உகாண்டா, நேப்பால், பாப்புவா நியூ கினீ (Papua New Guinea), நமீபியா, அமெரிக்கா, கனடா, நெதர்லாந்து, ஓமன் ஆகியவையும் பங்கேற்கின்றன. மொத்தம் 20 நாடுகள்/அணிகள்.

27 ஜூன், அன்று இரண்டு செமி ஃபைனல் போட்டிகளும் வெஸ்ட் இண்டீஸில் நடக்கின்றன. உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி ஜூன் 29 ஆம் தேதி Bridge Town, Barbados, வெஸ்ட் இண்டீஸில் ஆடப்படும். உலகக் கோப்பையை உயர்த்திப் பிடித்து ஆர்ப்பரிக்கப்போகும் கேப்டன் யார் என அன்று தெரிந்துவிடும்.

ICC-யின் உலக டி-20 தரவரிசைப் பட்டியல் (Top 10) :

  1. இந்தியா. 2. ஆஸ்திரேலியா  3. இங்கிலாந்து. 

4. வெஸ்ட் இண்டீஸ்  5. நியூஸிலாந்து. 6. பாகிஸ்தான்  

7. தென்னாப்பிரிக்கா 8. ஸ்ரீலங்கா 9. பங்களாதேஷ்

10. ஆஃப்கானிஸ்தான்.

உலக ரேங்கை வைத்துக்கொண்டு ஒரு குறிப்பிட்ட மேட்ச்சில் எந்த நாடு சிறப்பாக ஆடும், எது மண்ணைக் கவ்வும் என்றெல்லாம் அனுமானிப்பது ஏமாற்றத்தில் போய்முடியும். கிரிக்கெட்டின் க்ரேஸி ஃபார்மேட் இது. ஜாலியான ரசிகர்களையும் சில தருணங்களில் தலையைப் பிய்த்துக்கொள்ளச் செய்துவிடும். டி-20 ஜாதக அமைப்பில் ராகுவின் ஆட்டம் தீவிரம்போலும்.

இந்திய டி-20 அணிபற்றி இன்னுமொரு பதிவில் பேசுவோம்…

**