FIFA 2022: உலகின் உச்சியில் அர்ஜெண்டினா

கத்தாரில் (Qatar) உலகக்கோப்பைக் கால்பந்துப் போட்டிகளை ஒரு தோல்வியில் ஆரம்பித்த அர்ஜெண்டினா, போகிறபோக்கில் தூள்கிளப்பி, முன்னாள் சேம்பியன் ஃப்ரான்ஸை நேற்றைய (18-12-2022) இறுதிப்போட்டியில் போராடிப் போராடி வீழ்த்திவிட்டது. 20 வருட இடைவெளிக்குப்பின் உலகக் கால்பந்து கோப்பையை மெஸ்ஸியின் தலைமையில் வென்று சாதித்திருக்கிறது. அணியின் கோச்-கம்-மேனேஜரின் (Lionel Scaloni) கடும் திட்டமிடல், மாறுபட்ட எதிரிகளுக்கேற்ற வியூகங்கள், அணி வீரர்களின் அயராத உழைப்பு ஆகியவற்றினால் கிடைத்த மாபெரும் வெற்றி இது. உலகக் கால்பந்தில் பாப்புலாரிட்டி, புகழ் என்றெல்லாம் பார்த்தால் அர்ஜெண்டினா, ப்ரேஸில் ஆகிய தென்னமெரிக்க நாடுகள், ஐரோப்பிய நாடுகளைவிட உலகெங்கும் அதிதீவிர ரசிகர்களைக் கொண்டவை. ’கால்பந்து ஆட்டம், உலகை ஒன்று சேர்க்கிறது (Football unites the world)’ என்று கத்தாரில் (Qatar) எதிரொலித்த உற்சாக கோஷம் சாதாரணமானதல்ல. உண்மை இருக்கிறது இதில். ஒரு மாதத்துக்கும் மேலாக உலகையே கட்டிப்போட்டு வைத்திருந்த அபாரமான விளையாட்டுப் போட்டிகள் இவை.

ஏற்கனவே நடந்த சில முக்கிய போட்டிகளைப்போலவே இறுதி ஆட்டமும் எக்ஸ்ட்ரா டைமைத் தாண்டி பெனல்ட்டி ஷூட்-அவுட்டில் போய் முடிவைக் காண்பித்தது. முதல் பாதியில் 2-0 என்று அர்ஜெண்டினா இருக்க, 90 நிமிட நார்மல் ஆட்டகாலத்திலேயே கதையின் முடிவு தெரிந்துவிடும் என்றும், அர்ஜெண்டினா எளிதில் ஜெயிக்கும் எனவும் ரசிகர்களைக் கனவு காணவைத்தது ஆரம்பத்தில்.  பின்னர் 2-2, 3-3 என ஸ்கோரைத் திகிலோடு நகர்த்தி திருப்பங்களைத் தந்தது. அர்ஜெண்டினாவுக்கு 90+ நேரத்திலேயே  4-ஆவது கோலைப் போட்டு விட ஒரு அபூர்வ வாய்ப்பு. ஆனால் மெஸ்ஸியின் ஷாட்டை ஃப்ரென்ச் கோல்கீப்பர் ஹூகோ யோரிஸ் (Hugo Lloris) அபாரமாகத் தடுத்துவிட்டார். ஆட்டத்தில் ஃப்ரான்ஸின் கேப்டன் 23-வயது கிலியன் மபாப்பே (Kylian Mbappe) 3 கோல்களை விளாசியதில் அர்ஜெண்டினாவுக்கு மரணபயம். அர்ஜெண்டினாவின் மெஸ்ஸியும், ஆல்வரெஸ், டி மாரியா போன்ற சூரர்களும் விடுவதாயில்லை. எதிரணியைப் போட்டுத் தாக்கிக்கொண்டே இருந்தார்கள்.

கீழே: மெஸ்ஸியின் அர்ஜெண்டினா உலகக்கோப்பையை உயர்த்திப் பிடிக்கிறது

வேறுவழியில்லை. வந்தது பெனல்ட்டி ஷூட்-அவுட். ரசிகர்களிடையே இதயத்துடிப்பை வேகமாக்கி வேடிக்கை காட்டி,  கடைசியில் இந்தா பிடி என்று அர்ஜெண்டினாவின் கையில் கோப்பையைக் கொடுத்தது 2022-ன் இறுதி ஆட்டம். ஷூட்-அவுட்டில் 4 கோல்களை வரிசையாக அர்ஜெண்டினா போட, ஃப்ரான்ஸ் இரண்டு கோல்கள் மட்டுமே போட்டது. அர்ஜெண்டினாவின் கோல்கீப்பர் அபார ஆட்டம். சரியான போட்டி. Pure thriller. இதற்குமுன் 1978-லும், 1986-லும் உலகக்கோப்பையை வென்ற நாடு அர்ஜெண்டினா.

கீழே: தோற்ற அதிர்ச்சியில் ப்ரமைபிடித்து உட்கார்ந்துவிட்ட தங்கள் அணிக்கேப்டனைத் தேற்றும் ஃப்ரான்ஸ் ஜனாதிபதி எமானுவெல் மாக்ரோன்.

இந்த உலகக்கோப்பையில் அதிக கோல்கள் அடித்த ஃப்ரெஞ்ச் கேப்டன் கிலியன் மபாப்பே கோல்டன் ஷூ பரிசை வென்றார். உலகக்கோப்பையின் மிகச்சிறந்த வீரராகத் தங்கப்பந்து பரிசை தட்டிச் சென்றார் அர்ஜெண்டினாவின் லியனெல் மெஸ்ஸி. சிறந்த கோல்கீப்பர் பரிசு அர்ஜெண்டினாவின் எமிலியானோ  மார்ட்டினெஸுக்கு (Emiliano Martinez) . அதே அணியின் என்ஸோ ஃபெர்னாண்டஸுக்கு (Enzo Fernandez) உலகக்கோப்பையின் சிறந்த இளம் வீரர் பரிசு.  இதுவரை உலகக்கோப்பைப் போட்டிகளில் அதிகமான கோல்கள் (12) அடித்த வீரராக கால்பந்து உலகின் சூப்பர் ஸ்டாரான ப்ரேஸிலின் பீலே (Pele) திகழ்ந்தார். அந்த கௌரவம் இந்த உலகக்கோப்பையில் மெஸ்ஸிக்குப் போய்விட்டது. மொத்தம் இதுவரை 13 உலகக்கோப்பை கோல்களை அவர் அடித்துள்ளார்.

FIFA 2022 உலகக்கோப்பையை வென்ற அணிக்கு  ரூ. 344 கோடி பரிசுத்தொகை!  இரண்டாவது இடத்தைப் பிடித்த (முன்னாள் சேம்பியன்) ஃப்ரான்ஸ் அணிக்கு ரூ.245  கோடி. ஆக்ரோஷமாக ஆடி 3-ஆவது, 4-ஆவது இடங்களைக் கைப்பற்றிய க்ரோஷியா, மொராக்கோ அணிகளுக்குப் பரிசுத்தொகையாக முறையே ரூ. 220 கோடி, ரூ.204 கோடி. கொழுத்த பணம் ஆட்டம்போடும் விளையாட்டு இது.

ஏகப்பட்ட சர்ச்சைகள், விமர்சனங்களுக்கிடையே, மத்தியகிழக்கின் சிறு நாடான கத்தார்  முதல்முறையாக FIFA கோப்பைப் போட்டிகளை சிறப்பாக நடத்தி, உலக அரங்கில் புகழ் பெற்றுவிட்டது. கூடவே அந்த நாட்டிற்கு உலக பெருவணிக முதலீடுகள், வெளிநாட்டு ஒத்துழைப்புத் திட்டங்கள், வளரும் சுற்றுலாத்துறை என நிறைய உபரிபலன்கள். இதற்கடுத்த கால்பந்து உலகக்கோப்பை 2026-ல் நிகழவிருக்கிறது. அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ ஆகிய மூன்று நாடுகள் கூட்டாகச் சேர்ந்து இதை நடத்தவிருக்கின்றன. இப்படி 3 நாடுகள் கூட்டணி உலகக்கோப்பை கால்பந்தை நடத்தவிருப்பது இதுவே முதல்முறை. உலகெங்குமிருந்தும் தேர்வுசெய்யபடவிருக்கும் 48 முக்கிய அணிகள் பங்குகொள்ளும்.

**

4 thoughts on “FIFA 2022: உலகின் உச்சியில் அர்ஜெண்டினா

      1. மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள்!
        நானும் குடும்பத்தோடு இறுதி வரை ரசித்துப்பார்த்தேன்.

        Liked by 1 person

  1. @ : Mano Saminathan:

    குடும்பத்தோடு பார்த்து ரசிக்கும்படி சிறப்பாக அமைந்த அபூர்வ டிவி நிகழ்ச்சி இது!

    வருகை, கருத்திற்கு நன்றி.

    Like

Leave a comment