FIFA – கால்பந்து உலகக்கோப்பை 2022

மத்தியகிழக்கின் கத்தாரில் (Qatar) நடைபெறும் உலகக் கால்பந்து கோப்பைக்கான போட்டிகளில் இதுவரை சில அதிர்ச்சி முடிவுகள், ரெஃப்ரீ சர்ச்சைகள். ஆரம்பச்சுற்று போட்டி ஒன்றில் முன்னாள் சேம்பியன் அர்ஜெண்டினாவைத் தோற்கடித்த கால்பந்து உலகின் கத்துக்குட்டி சவூதி அரேபியா, மத்திய கிழக்குப்பகுதியில் பெரும் பரவசத்தை ரசிகர்களிடையே விளைவித்தது. சவூதி வீரர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கார் என அந்த நாட்டு அரசு அறிவிப்பில் போய் நின்றது அந்த குதூகலம்! முன்னாள் சேம்பியன்களான ஜெர்மனியையும் ஸ்பெய்னையும் அட்டகாசமாகத் தாக்கி ஆடி வீசியது ஆசிய கால்பந்து ஜாம்பவானான ஜப்பான். காலிறுதிக்கு முந்தைய ஆட்டங்களில் சிறப்பாக பங்காற்றிய ஜப்பான், காலிறுதியை நிச்சயம் எட்டிவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெளியேறி, தன் வளர்ந்து வரும் ரசிகர் கூட்டத்திற்குப் பெரும் அதிர்ச்சி தந்தது. கால்பந்து உலகின் தாதாக்களில் ஒன்றான ஜெர்மனியைத் தோற்கடித்த முதல் ஆப்பிரிக்க நாடு எனும் பெருமையைப் பெற்ற திருப்தியில் ஆரம்ப நிலையிலே வெளியேறிய காமரூன்! நடப்பு சேம்பியனான ஃப்ரான்ஸை வீழ்த்திய ஆப்பிரிக்க சிறுநாடான டுனீஷியா.. இப்படி சில அதிர், புதிர் முடிவுகள், சுவாரஸ்யங்கள் இந்த உலகக் கோப்பையில்.

ஆப்பிரிக்க நாடுகளில் கால்பந்து ஆட்டத்தில் பெயரெடுத்த செனகலிடம் மிகவும் எதிர்பார்ப்பு இருந்தது இந்த உலகக்கோப்பையில் ரசிகர்களுக்கு. அது சோடைபோனது. ஆனால் இன்னொரு ஆப்பிரிக்க நாடான மொராக்கோ தன் சிறப்பான ஆட்டங்களினால் உலகக் கால்பந்து உலகத்தில் அதிர்வுகளை நிகழ்த்தியது. ரசிகர்களை ஆச்சரியத்தில் திணறவைத்தது. அரையிறுதியில் நுழைந்த முதல் ஆப்பிரிக்க நாடாக ஆட்டம்போட்ட  மொராக்கோ, இறு ( 17-12-2022 ) உலகக்கோப்பையின் மூன்றாவது இடத்தை அடைய,  இதுவரை மிகச் சிறப்பாக ஆடி அர்ஜெண்டினாவிடம் செமிஃபைனலில் தோற்ற ஐரோப்பிய நாடான க்ரோஷியாவுடன் மோதுகிறது. இரு அணிகளும் உலகளாவிய கால்பந்தில் தங்களது இடங்களை நிறுவ முயற்சிக்குமாதலால், போட்டி அதி சுவாரஸ்யமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Below: France’s Kylian Mbappe , Argentina’s Lionel Messi

ஞாயிறு (18-12-2022)  இறுதிப்போட்டியுடன் நிறைவுக்கு வருகின்றன கத்தாரில் நடைபெற்றுவரும் ஃபிஃபா உலகக்கோப்பை 2022 போட்டிகள். அன்று இரவு நடக்கவிருக்கும் மெகா ஃபைனலில் நடப்பு சேம்பியன் ஃப்ரான்ஸ், தென்னமெரிக்க நாடான முன்னாள் உலக சேம்பியன் அர்ஜெண்டினாவுடன் மோதுகிறது. உலகக் கால்பந்தில் மிகவும் கவர்ச்சிகரமான அணியான ப்ரேஸில் (Brazil) காலிறுதியிலேயே வெளியேறி அதிர்ச்சி தந்த நிலையில், தென்னமெரிக்க, மற்றும் உலகெங்குமுள்ள கால்பந்து ரசிகர்களின் ஆர்வம், முழுகவனம் அர்ஜெண்டினாவின் பக்கம் திரும்பிவிட்டிருக்கிறது.  ஃபைனல் ஆட்டம் கடுமையானதாக இருக்க வாய்ப்பு. க்ரோஷியாவுக்கெதிரான செமிஃபைனலில் அர்ஜெண்டினாவின் ஜூலியன்  ஆல்வரேஸின் (Julian Alvarez) அபார கோல்கள் ரசிகர்களுக்கு போதையேற்றியிருக்கின்றன. பாலோ தைபெலா (Paulo Dybela), லௌதாரோ மார்டினெஸ்(Lautaro Martinez), அன்ஹெல் தி மாரியா (Angel Di Maria) போன்ற திறனான வீரர்கள் அணியில். அணியின் உலகப் புகழ்பெற்ற கேப்டன் லியனல் மெஸ்ஸி (Lionel Messi) உலகக்கோப்பையில் 11 கோல்கள் அடித்து சாதனை புரிந்திருக்கிறார். தான் விளையாடும் இறுதி உலகக்கோப்பைப் போட்டியாக இது இருக்கும் என்றுவேறு அறிவித்து, உலகெங்குமுள்ள தன் ரசிகர்களின் இதயப் படபடப்பை அதிகரித்துவிட்டிருக்கிறார்!

காமரூன் –அல்ஜீரிய வம்சாவளியில் வந்தவர் ஃப்ரான்ஸின் சூப்பர் ஸ்டாரான கிலியன் மபாப்பே (Kylian Mbappe). ராண்டல் கோலோ முவானி (Randal Kolo Muani),  கரீம் பென்ஸமா (Karim Benzama), அந்தாய்ன் க்ரீஸ்மன் ((Antoine Griezmann)  போன்ற attacker-களையும், , இங்கொலோ காந்தே (Ngolo Kante) போன்ற சிறப்பான, mid-fielder-களையும், லூகாஸ் ஹெர்னாண்தஸ் Lucas Hernandez போன்ற defender களையும் கொண்ட ஃப்ரென்ச் அணி வலிமையாகக் காட்சி தருகிறது.

உலகக்கோப்பையின்ன் இறுதி ஆட்டம் உலகெங்குமுள்ள கால்பந்தின் தீவிர ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையப்போகிறது.

FIFA-Qatar 2022 Final : France vs Argentina

18 Sports / Jio Cinema 2030 (IST)

**

2 thoughts on “FIFA – கால்பந்து உலகக்கோப்பை 2022

  1. மகன்கள் இரவில் கன்னாபின்னா நேரத்துக்கெல்லாம் விழித்து மேட்ச்கள் பார்த்தார்கள். மறுநாள் பணியும் செய்தார்கள்!

    Liked by 1 person

Leave a comment