அடங்காத பேய் !

சுமார் 4 மாதங்கள். ஒரே பேயாட்டம். ஒரே ஒரு நாட்டில், ஒரு லட்சத்திற்கும் மேல் பரிதாப மரணங்கள். பரிதாபம் ஏனெனில், தொற்று என ஒட்டிக்கொண்டிருக்கும் வியாதிக்கு ஒரு முறையான மருந்தில்லை, மாயமில்லை. பரிதவித்து, பரிதவித்து மனிதர்களின் சாவு. உலகின் எந்த நாடாயிருந்தாலென்ன? ஒரு நோய்க்கு, ஒரு லட்சம் பேரை இவ்வளவு குறைந்த காலகட்டத்தில் பலிகொடுத்திருக்கிறதா சமீப காலத்தில்? இல்லை. இப்படியான ஒரு கொடுமையான, ஆபத்தான உலகில் தற்போது வாழ்கிறோம் நாம்.

கொரோனா எங்கிருந்து புறப்பட்டது என்கிற அசட்டுத்தனமான ஆராய்ச்சி இன்னமும் தேவையில்லை. எங்கும் வீடுகள் பற்றிக்கொண்டு எரிகின்றன. எவன் தீயை வைத்தான் என்பது எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. ஓரமாக நின்றுகொண்டு ஆனந்தமாக பீடிபிடித்துக்கொண்டிருக்கிறான் அவன். அந்த விபரீதம் ஒரு பக்கம். ஒரு நோய், தீநுண்மியால் கிளப்பட்ட நோய், கட்டுக்கடங்காமல் இன்னும் உலகெலாம் உலவி வருகிறதே அது எப்படி? சாவுகள் ஓரளவு குறைந்துவிட்டிருந்த நாடுகளும், திடீரென மீண்டும் பலிக்கணக்கு ஏறிவருவதைக் கண்டு பீதியில் இருக்கின்றன. கடுமையாகப் போராடி, நோயை ஒரு கட்டுக்குள் கொண்டுவந்த தென்கொரியா, மற்ற சில ஐரோப்பிய நாடுகளைப்போல, லாக்டவுனை சற்றே தளர்த்திப் பார்த்தது. ஓரிரண்டு வாரம் கூட ஆகவில்லை. மீண்டும் சாவுக்கணக்கு திறந்துகொண்டது. லாக்டவுன், சமூகவிலகல் நடவடிக்கைகளைத் திரும்பவும் நேற்று (28/5/20) கொண்டு வந்திருக்கிறது தென் கொரியா. வேறு வழி தெரியவில்லை.

கோவிட்-19 என்றொரு கொடும்நோய்- இதைவிட விஞ்ஞானத்திற்கு, மனித அறிவிற்கு எந்த பயங்கர சவாலும் இந்த நூற்றாண்டில் அமைந்ததில்லை. ஒவ்வொரு நாளும் தலையைப் பிய்த்துக்கொண்டு அலைகிறார்கள் விஞ்ஞானிகள், மருத்துவ நிபுணர்கள். இதுவரை உலகின் அதிபுத்திசாலியாக, அசுரசக்தியாகக் காட்சியளித்த அமெரிக்கா, சில மாதங்களிலேயே இப்படியொரு சாவு எண்ணிக்கையை சந்தித்ததும் ஆடிப்போய்விட்டது. எழுந்து நிற்கப் பார்த்து, கீழே, கீழே விழுகிறது. ‘மரண அடி’ என்பது இதுதானோ? ரஷ்யா, பிரிட்டன், ஃப்ரான்ஸ் எல்லாம் இன்னும் மூச்சுத்திணறியவாறுதான் காலம் தள்ளுகின்றன. தென்னமெரிக்காவில் ப்ரஸீலின் (Brazil) நிலை பரிதாபம். ஒன்றும் கட்டுக்குள் வரவில்லை, ஒன்றும் செய்யமுடியவில்லை அரசாங்கத்தால் அங்கே – சுகாதார அமைச்சர்கள் ராஜினாமா செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதைத் தவிர.

நாலுமாதமாக வெவ்வேறு நாடுகளில் ஆராய்ச்சியெல்லாம் நடந்துகொண்டிருக்கிறதே – இந்த சனியனுக்கு ஒரு vaccine கண்டுபிடிக்கவென. என்னதான் ஆயிற்று? ஒரு முன்னேற்றமுமில்லையா? அமெரிக்க நாளேடான வாஷிங்டன் போஸ்ட்-இல் இரண்டு நாள் முன்பு ஒரு தொற்றுநோய் நிபுணர் சொல்கிறார்: ’’ஆமாம், எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. ஒன்றுமே புரியவில்லை. ப்ளீஸ் ..’’ அழாத குறையாக, அதே சமயத்தில், சில மேதாவிகள் போல், இதுவரை ஏதோ வெட்டிச் சாய்த்துக்கொண்டிருப்பதுபோல் புருடா விடாமல், உள்ளதை உள்ளபடி சொல்லியிருக்கிறார் அந்த நிபுணர். ’நான் ஒரு நிபுணன் தான். ஆனால் உண்மையில் இந்த விஷயத்தில் என்ன நடக்கிறது என்று ஒரு எழவும் புரியவில்லை’ என எல்லோர் முன்னிலையிலும் ஒத்துக்கொள்ள அபார தொழில்நேர்மை, மனோதைர்யம் வேண்டும். இருக்கிறது அவருக்கு. உயர்ந்த கண்டுபிடிப்புகள் இத்தகைய நேர்மையாளர்களிடமிருந்துதான் வந்திருக்கின்றன உலகில். இன்னமும் வரும், காலம் தாமதமானாலும்.

**

10 thoughts on “அடங்காத பேய் !

 1. நோயைவிட அது குறித்த பயமே அதிகம்

  Like

 2. ஏதோ ஒரு நாட்டின் நிதி அமைச்சர் தற்கொலை செய்துகொண்டார்.  இத்தாலி?  உலகம்  கிறுகிறுத்துப்போய்க் கிடக்கிறது.  இதன் ஆரம்பத்தைக் கூடாக கண்டுபிடித்து விடலாம் போல..  முடிவு எங்கே என்று தெரியவில்லை.  சீனா மருந்து கண்டு பிடித்து விட்டதாகச் சொல்கிறது.  எந்த அளவு உண்மையோ…    அதில் என்ன ஆபதோ…

  Liked by 1 person

 3. உலகமே ஆடிக் கொண்டிருக்கிறது பயத்திலும், கவலையிலும், பொருளாதார ஸ்தம்பிதத்திலும். என்ன செய்வது என்றே புரியவில்லை. கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.

  Like

 4. @ Balasubramaniam GM, @ Dindigul Dhanabalan, @ Sriram, @ Geetha Sambasivam :

  பல நாடுகளின் பொருளாதாரம் அதளபாதாளத்தில். சரிசெய்ய வருஷங்களாகும். உலகளாவிய பெருவணிக நிறுவனங்களும் கையைப் பிசைந்துகொண்டிருக்கின்றன.
  மோசமான வருடம். இதற்குமேலும் ஏதும் வராமல் இருக்கவேண்டுமே எனப் பிரார்த்திக்கவேண்டிய நிலை.

  Like

 5. இந்த நோய் மனிதர்களை மட்டும் வீழ்த்தவில்லை. பொருளாதாரத்தையும் அசைத்து விட்டது. விடிவு காலம் வரும் என்று காத்திருப்பதை தவிர வேறு வழி தெரியவில்லை. 

  Liked by 1 person

  1. இந்த நோயைத் தினம் தரிசித்துக் கொண்டிருக்கிறோம்
   செய்தி சானல்களில்.
   இதை வென்று விட்டோம் என்று பேசுகிறவர்களும், பணமுதலைகளின் கைப்பிடியில்
   கதை பேசுகிறவர்களும் அனேகம். சமீபத்தில் வந்த
   வாட்ஸாப் ஃபார்வர்ட், எத்தனையோ வியாதிகளால் லக்ஷக்கணக்கில் மக்கள் அழியும் போது
   இந்த நோயால் சம்பாதிக்க முனைபவர்கள் மருந்துக் கம்பெனிகள் என்று சொல்ல அதை ஆமோதிக்கவும் சிலர் இருந்தனர்.

   அதுதான் பரிதாபம். நிலைமையின் தீவிரத்தைப் புரியாதவர்கள்,
   புரிந்து கொள்ள மறுப்பவர்கள் இருக்கும்போது பயமாகத்தான் இருக்கிறது.
   இறைவன் தான் காக்க வேண்டும்.

   Liked by 1 person

 6. @ Bhanumathy V, @ Revathi Narasimhan : பொருளாதார வீழ்ச்சி ஒரு பக்கம், விஷயம் புரியாமல் தவிப்பவர்கள், உளறுபவர்கள் இன்னொருபக்கம்.. எப்படியெல்லாமோ நடக்கிறது; வாழ்க்கையும் நகர்கிறது..

  Like

 7. உலகமே தத்தளித்துக் கொண்டிருக்கிறது. எல்லோருக்கும் ஏதோ ஒருவித பயம் எதிர்காலத்தைக் குறித்த அச்சம். என்ன ஆகப் போகிறது என்ற ஒரு கவலை. எதுவுமே தெரியாத ஒரு நிலை. உயிர்கள் ஒரு புறம் மற்றொரு புறம் பொருளாதரம் தத்தளித்தல்.என்னாகுமோ விரைவில் எல்லாம் சரியாகிட தொற்றும் ஒழிந்திட பிரார்த்திப்போம்.

  துளசிதரன்

  கீதா

  Liked by 1 person

  1. @ துளசிதரன், கீதா:
   வருகை, கருத்துக்கு நன்றி.
   இந்த வருடத்தில் இன்னும் என்னென்ன மிச்சமிருக்கிறது என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்!

   Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s