வசதியுடையோர், பணக்காரர்கள், அவ்வப்போது புழங்கும் கைகளில் ஸானிடைஸர் போட்டுத் தேய்த்துக்கொள்வார்கள். வெளியிலிருந்து வீட்டுக்குள் வர நேர்ந்தால், கால்களைக் கழுவிவிட்டு உள்ளே வருவார்கள் -அல்லது உள்ளே வந்தபின் டெட்டால் /சாவ்லான் கலந்த நீரில் கை, கால்களை நன்றாகத் தேய்த்து அலம்பிக்கொள்வார்கள். இன்னும் என்னென்னவோ தங்கள் ஞானப்படி செய்துகொண்டு பாதுகாப்பாக, ’உள்ளேயே’ இருப்பார்கள். உள்ளே இருந்துகொண்டும் காரியங்கள் பல செய்யத் தெரிந்தவர்கள். ம்… ஆனால், இந்த ஏழைகள்? வக்கில்லாதோர், போக்கிடம் இல்லாதோர் என நிறையப்பேர் இருக்கிறார்களே. அவர்கள் என்ன செய்வார்கள் இந்தக் கேடுகெட்ட கொரோனா காலத்தில்..
எப்போதும்போல் இருப்பார்கள். வழக்கம்போல், ஏதாவது வேலையாக வெளியேபோவார்கள். அலைவார்கள். பசியெடுத்துவிட்டால், ஜேபிலிருக்கும் காசுக்கேற்றபடி, ரோட்டோரக்கடையில் கிடைத்ததை வாங்கிச் சாப்பிடுவார்கள். ஒரு சிங்கிள் டீயாவது மரத்தடியில் நின்றுகொண்டு குடிப்பார்கள். அதிலே கொஞ்சம் ஆனந்திப்பார்கள். வேர்க்க விறுவிறுக்க மேற்கொண்டு நடப்பார்கள். அவர்களை இந்த கொரோனா என்ன செய்யும்? போயும் போயும் இந்தப் பரதேசிகளை நான் தொட்டு, என் கௌரவத்தை இழப்பேனா என நினைத்து விலகிக்கொண்டு விடுமோ?
இந்தியாவின் வடக்கில் யூனியன் பிரதேசம், நகரான சண்டிகர். அங்கே ஒரு பெரும் வணிக வளாகம். ஜே..ஜே.. என மக்கள்கூட்டம் எப்போதும் ததும்பும் இடம். வெறிச்சோடிக்கிடக்கிறது. சதுக்கத்தில் எப்போதும்போல் அன்றும், ஒரு மூலையில் தரையில் சம்மணமிட்டு அமர்ந்திருக்கும் ஜொகீந்தர். 70-க்கு மேலிருக்கும். முற்றிக் கனிந்த தோற்றம். தலையில் பர்ப்பிள் கலர் டர்பன். கையில் தம்புராபோன்று ஒரு நாட்டு வாத்தியம். வாயில் பாட்டின் முணுமுணுப்பு. பக்கத்தில் சிறு பை. எதிரே சிறிய துணி விரிக்கப்பட்டு ஆகாசம் பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறது. காசுதான் ஒன்றும் விழக் காணோம்.
என்ன நடக்கிறது? ஏன் ஜனங்களையே காணோம். அவருக்கு ஏதாவது தெரியுமா? கேட்டதற்கு பதில் சொல்கிறார்: ’’ஊர்ல ஏதோ வியாதி வந்திருக்காம்… யாரையுமே காணோம். ஒண்ணும் புரியமாட்டேங்குது. இவ்வளவு பெரிய ஊர்ல எல்லாருக்குமா வியாதி? ’’ அவரிடம் கொரோனாபற்றி எந்த செய்தியும் இல்லை. நோய் தொற்றிக்கொள்ளுமோ என்கிற பயமுமில்லை. செய்வதற்கும் ஏதுமில்லை, எப்போதும் போல் வாத்தியத்தை இசைப்பது, வாய்திறந்து பாடுவதைத் தவிர.
ராஜஸ்தானைச் சேர்ந்தவர் ஜொகீந்தர் சிங். பாடிப் பிழைப்பவர். இது ஒன்றுதான் தெரிந்த ‘தொழில்’. அதற்காகத்தான் சண்டீகர் வந்திருக்கிறார், பணக்காரர்கள், தொழில்காரர்கள் வசிக்கும் ஊர். காசுபணம் தாராளமாய்ப் புழங்கும் இடம் எனக் கேள்விப்பட்டு. அவருக்கு ஆறு மகள்களாம். நாலுபேருக்கு கல்யாணம் செய்துவிட்டாராம். இன்னும் ரெண்டு பேர் பாக்கி.. ’’இப்படி யாருமே பாட்டுக்கேட்க வராட்டா, எப்படிக் காசு சேரும்?’’ என அப்பாவியாகக் கேட்கும் சர்தார்ஜி. கேட்டுவிட்டு ஆகாசத்தை இடுங்கிய கண்களால் பார்க்கிறார். ஒரு பதிலும் தராமல், நிர்மலமாய்ப் பரவிக்கிடக்கிறது வானம். விரல்கள் தம்புராவின் நரம்புகளின் மீது ஊற, தன்னிச்சையாக பாட ஆரம்பிக்கிறார். எதிரே யாருமில்லையே.. பாடுகிறீர்களே? – என்றால், ‘யாருமில்லேங்கறதுனாலே பாடாமல் இருக்கமுடியுமா!’ என்று வருகிறது பதில். பாட்டுக்குப் பழகிய அடர்ந்த குரல், மெல்ல சீராக அவரிடமிருந்து வெளிப்படுகிறது. கானம் காற்றில் மிதக்கிறது. கேட்பதற்குத்தான் ஆளில்லை. ஒரு நாய்கூட. ஓ.. நோ! அப்படிச் சொல்லக்கூடாது. அப்போதுதான் கடந்து சென்ற அந்தத் தெருநாய், சர்தார்ஜியின் கானம் கேட்டு நின்று, திரும்பிப் பார்க்கிறது. அதன் தனிமையைக் கலைத்துவிட்டாரோ ஜொகீந்தர்? கேட்கிறது பாட்டை. ஆனால்.. காசுபோடவேண்டும் என்று அதற்குத் தெரியாது. ஒரு வேளை தெரிந்திருந்தாலும் ..
**
நான் மனதில் நினைத்துக்கொண்டிருந்த விஷயத்தை இடுகையாக எழுதியிருக்கீங்க. பாராட்டுகள் ஏகாந்தன் சார்.
நாளும் கிழமையும் நலிந்தோர்க்கு இல்லை
என்பதை எனக்கு இந்த கொரோனா நினைவுபடுத்துகிறது. வியாபார கஸ்டமர்கள் எல்லோரும் கொரோனாவுக்கு பயந்தால், ஏழைகள் எப்படி உணவு உண்ணுவது?
எங்கள் வளாகத்தில் வேலை செய்பவர்களுக்கு (இண்டீரியர், கார்பெண்டர் போன்றோருக்கு) அனுமதி இல்லை. இன்னும் கொஞ்ச நாட்களில் பொதுப் போக்குவரத்து நிறுத்தினாங்கன்னா…. அவ்வளவுதான். ஏற்கனவே தேவையோ தேவையில்லையோ மக்கள் பொருட்களை வாங்கிக் குவிக்கிறார்கள்.
ஏழைகள் பாடு மிகவும் பரிதாபத்துக்கும் அனுதாபத்துக்கும் உரியது.
LikeLiked by 1 person
மனதைத் தொட்ட பதிவு. இப்படியானவர்கள் வாழ்வில் இந்த மாற்றங்கள் அதிக பாதிப்பினை ஏற்படுத்துகின்றன.
LikeLiked by 1 person
கொரோனா பற்றி அறியாமல் இருக்கிறார் என்றால் ஆச்சர்யம்தான்! இங்கு ரோடில் போகும் சிறுவர்களுக்கு கூட தெரிந்திருக்கிறது. ஆனால் நீங்கள் சொல்லி இருக்கும் விஷயம் மனதைத் தைக்கிறது. போக்கிடமில்லாத ஏழைகள்.
LikeLike
ஜொகீந்தர் சிங் நிலை மிகவும் வேதனை…
மனதில் உள்ள சிலவற்றை இந்தப்பதிவில் வாசித்தேன்…
LikeLike
@ நெல்லைத்தமிழன்: பஞ்சாப், பொதுப்போக்குவரத்தை நேற்று நிறுத்திவிட்டது. டெம்ப்போக்கள் உட்பட! ஒவ்வொரு மாநிலமும் கடுமை காட்டுகின்றன. காட்டவேண்டிய தருணமிது. சாமான்கள் கிடைக்கின்றன, எனினும் அலையும் ஏழைகளுக்கு என்றும் பிரச்னைதான்.
@ வெங்கட் நாகராஜ்: வாங்க வெங்கட்ஜி. கருத்துக்கு நன்றி.
@ ஸ்ரீராம் : நாடோடிகள், தன்போக்குக்கு அலைபவர்கள், பிழைப்பவர்கள் ஆகியோருக்கு ஏதோ பிரச்னை எனத் தெரியும். விவரம் இருப்பதில்லை. கவலையுமில்லை!
@ திண்டுக்கல் தனபாலன் : ஜொகீந்தரைப்போன்று ஒவ்வொரு மாநிலத்திலும் ஏழைகள் இருப்பார்கள். தங்களுக்குத் தோன்றியபடி சின்னதாக இயங்குவார்கள். ஏழைகளால், அப்பாவிகளால் நிறைந்த நன்னாடு.
LikeLike
எங்கள் வீட்டிலும் இதைத்தான் பேசிக்கொண்டிருந்தோம். எங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் நடைபாதை கடைகள் மூடப்பட்டிருக்கின்றன. அந்த மக்கள் என்ன செய்வார்கள்? என்று தோன்றியது.
LikeLike
@ Bhanumathy V. : நடைபாதைக் கடைக்காரர்கள், கூலிக்காரர்கள், சிறு சிறு வேலைசெய்து அன்றாட சோத்துக்கு வழிசெய்பவர்கள் என ஆயிரம், ஆயிரம். நினைத்தாலே துக்கம்..
LikeLike