காதலுக்கு இதுதானா பரிசு ?

Bina Rai as Anarkali
ஒரே ஒருநாளைப் பிடித்துக் கொண்டு ஏன் தொங்கவேண்டும், உலகெங்கும் பரவிக்கிடக்கும் காதலர்கள்? அவர்கள் செய்த பாவம்தான் என்ன? காதலில் திளைத்திருப்பவர்கள் காலண்டரையும், கடிகாரத்தையுமா பார்த்துக்கொண்டிருப்பார்கள்? அவர்களுக்கு வருஷத்தில் ஒரே ஒரு நாள் என்று வழங்க, நீங்கள் யார் தர்மப்பிரபு? ஒருநாள்தான் அவர்களுக்கென்றால், மிச்சசொச்ச நாட்கள் யார், யாருக்கு? களவாணிகள், கொள்ளைக்காரர்கள் இத்தியாதிகள் எல்லாம் சாப்பிட்டுவிட்டுப்போகட்டும் எனப் பெருந்தன்மையோடு விட்டுவிட்டீர்களா அசடுகளே?
சரி, தொலையுங்கள். ஒன்றைக் கவனித்தீர்களா? பேரரசன் அக்பரை ’அக்பர் தி கிரேட்’ என்கிறது இந்திய சரித்திரம். என்ன பிரயோஜனம்? உன்னதமான காதலைக் கொன்றுபோட்டானே..  ’வில்லன் தி வொர்ஸ்ட்’ என்றல்லவா காதல் உலகம் அவனைக் கண்டிக்கிறது?
காலையில் கூகிளைத் திறந்தால் மதுபாலாவின் பிறந்தநாள் என்று சித்திரத்தைக் காண்பிக்கிறது. மதுபாலா. அந்நாளைய ஹிந்தி சினிமா உலகின் நிஜ அழகிகளில் ஒருவர். நல்ல நடிகையும். அவரைப்பற்றி நினைத்திருக்கையில் அந்தப் பாடலின் ஆரம்பத்தை முணுமுணுத்துப் பார்த்தது மனது:
யே   ஜிந்தகி  உஸீகி ஹை..
ஜோ கிஸீகா  ஹோ கயா..
ப்யார் மே ஹி  கோ கயா..
’இந்த வாழ்க்கை அவனுடையது..’ என உருக்கமாக ஆரம்பிக்கும் பாடல் வந்த படம் ஒருவேளை மதுபாலா நடித்த படமோ எனத் தேடினால், இல்லை. அனார்கலி. 1953-ன் திரை காதல்காவியம். இளவரசனை மயக்கிப்போட்ட நடனமாது அனார்கலியாக பீனா ராய். அனார்கலியா? யாரு? இங்கே மீண்டும் சக்ரவர்த்தி அக்பருக்கு வருவோம்.  அக்பரது மகன் இளவரசன் சலீம் (ஜஹாங்கீர்), அக்பரின் ஹிந்து மனைவியான ஜோதா பாய்க்கு (ஜோத்பூர் இளவரசி) பிறந்தவன்.  மென்மையான குணநலன்கள் உள்ளவன். அனார்கலி எனும் அழகிய மங்கையின் மனதிற்குள் புகுந்துவிட்டிருந்தான் அப்போது அவன்.
பேரரசன் அக்பர் அனார்கலியை (அவளது இயற்பெயர் நாதிரா) முதன்முதலாக சந்தித்தபோது அவள் அவனது அரண்மனைத் தோட்டத்தில் இளவரசனுக்காக ரகசியமாகக் காத்திருக்கிறாள். அவளது மென்மையான தோற்றமோ, சுபாவமோ, எதுவோ அக்பருக்கு அவள்மேல் மதிப்பை ஏற்படுத்தியிருக்கவேண்டும். அவளுக்கு பரிசு ஏதாவது கொடுக்க விரும்புகிறான். அவளோ எந்த பரிசையும் விரும்பவில்லை. ’ஏதாவது கேள் பெண்ணே..!’ என்கிறான். அவளோ, ‘சரி! மாதுளம்பழம் வேண்டும்’ என்கிறாள். அக்பர் ஆச்சரியப்படுகிறான். என்னமாதிரியான இளம்பெண் இவள். அவளை அனார்கலி என்று அன்றிலிருந்து குறிப்பிடுகிறான். அனார்கலி = மாதுளம் மொட்டு. இரண்டாவது முறை அக்பர் அவளைச் சந்தித்தது காபூல் போரில் அடிபட்டுத் திரும்பியிருந்த இளவரசன் சலீமைப் பார்க்கச் சென்றபோது. காயங்களுக்கு சிரத்தையாக மருந்திட்டுக் கட்டுப்போட்டுத் தடவிக்கொடுத்துக் கவனித்துக்கொண்டிருந்தாள் அனார்கலி. அவளது கடமையுணர்வில் மகிழ்கிறான். ஆனால் அந்த மூன்றாவது சந்திப்பு – அவளுக்கே வினையானது.
தன் சபையில் அன்று மாலை ஆடிக்கொண்டிருந்த நடன மங்கைகளுள் ஒருவளாக அனார்கலியை அக்பர் பார்க்கிறான். நடனமாதுக்களை கீழ்நிலையில்  வைத்திருந்த, கீழ்த்தரமாக கனவான்கள் பார்த்த காலமது. ரம்யமான மாலை நேரத்தில் அனார்கலி அபாரமாக ஆடுகிறாள். மனம்விட்டுப் பாடுகிறாள். கொஞ்சம் குடித்துமிருக்கிறாள் என்பதையும் கவனித்துவிட்டான் அரசன். கோபத்தில் அவளை சிறையில் தள்ளுகிறான். யாரும் எதிர்பாராதவகையில் தீவிரமாகக் குறுக்கிட்டான் இளவரசன். சபையிலேயே கடும் வாக்குவாதம். இளவரசனின் கோபத்தில், அவன் அனார்கலியின் மீது மையலில் இருக்கிறான் என்பதைப் புரிந்துகொண்டான் அக்பர். வெகுண்டான். தன் மகன், நாட்டின் இளவரசன், கேவலம் ஒரு நடனமாதுவிடமா மனதை இழப்பது? அவளுக்குப் பரிந்துகொண்டு, தன் தந்தையிடமே சண்டையிடுவதா? அவனைக் கடுமையாக எச்சரிக்கிறான் அக்பர். சலீமும் விடுவதாயில்லை. சண்டை நாளுக்கு நாள் தொடர்கிறது; அதிகரிக்கிறது. இடையிடையே அனார்கலியை அழைத்து இந்தக் காதலை நிராகரிக்கும்படி, மறந்துவிடும்படிக் கேட்டுக்கொள்கிறான். மிரட்டுகிறான். அவளுக்குப் புரிகிறது. தான் ஒரு ஏழை. கீழ்வர்க்கத்தில் பிறந்துவிட்ட அனாதை. யாருக்கும் பதில்சொல்லும் நிலையில்லை அவளுக்கு. அரசனை எதிர்ப்பதா? வேறு வினைவேண்டாம்.. பணிந்துபோக முற்படுகிறாள். விலகி, விலகிச் செல்கிறாள். மனதிலிருந்து விலக மறுக்கிறான் இளவரசன். சரியான உறக்கமில்லை, உணவில்லை. நிம்மதி இல்லவே இல்லை.
அந்தப்பக்கம் அரசன் சலீமுக்குக் கொடுத்த அழுத்தம் கடுமையான விளைவினை ஏற்படுத்தியது. அவன் காதல் நிச்சயமானது என்கிறான். அனார்கலியைத்தான் மணப்பேன் என அடம் பிடிக்கிறான். குறுக்கிட மன்னனுக்கு யோக்யதையே இல்லை என்கிறான். அக்பர் கோபத்தின் உச்சம் சென்றான். தன் மகனைக் கொன்றுபோட்டுவிட உத்தரவிடுகிறான். தகவல் பறக்கிறது அனார்கலிக்கு. அவள் கதறியவாறு ஓடிவருகிறாள். தன் காதலன் உயிர்பிழைக்கவேண்டி, அரசன் முன், இளவரசன் முன், காதலைத் துறப்பதாக அறிவிக்கிறாள் அனார்கலி. அதிர்ச்சியில் இளவரசன் சலீம். அனார்கலியா இப்படி? ஐயகோ! நான் எப்படி வாழ்வேன் இனி? அரசன் மகிழ்கிறான்.  ஆனால் அவன் யாரையும் நம்புபவனில்லை.
அனார்கலியை விடாது, கடுமையாகத் தண்டிக்கிறான் அக்பர். சங்கிலியால் கட்டப்பட்டிருக்கும் இளவரசன் முன், அனார்கலியை நிறுத்தி, அவள்மீது உயிரோடு சமாதி எழுப்பி அவளைத் தீர்த்துக்கட்ட உத்திரவு. அனாதை அனார்கலி என் செய்வாள்? நிர்கதியாய் நிற்கிறாள் கண்கலங்கி. சமாதி வேகவேகமாக எழுப்பப்படுகிறது. துடிக்கிறான் இளவரசன். அப்போது அவனுக்காக உருகி அவள் பாடும் பாட்டுதான் மேலே குறிப்பிடப்பட்டது. (லதா மங்கேஷ்கர் குரலில், சி. ராமச்சந்திராவின் இசையில் ராஜேந்திர கிஷனின் வரிகள்.)
கதையை மேலும் கேட்க விரும்புபவர்களுக்கு: சமாதி முழுமையாக எழுப்பப்பட்டபின் இப்படி நடந்ததாம்: அனார்கலி நின்ற இடத்திற்கு அருகில் சுரங்கப்பாதையின் வாயில் ஒன்றிருந்ததாகவும்,  அதன் வழி அனார்கலி ரகசியமாக அழைத்துச் செல்லப்பட்டு, ’இனி இந்தநாட்டுப் பக்கம் தலைவைத்தும் படுக்கப்படாது..ஓடிவிடு! ‘ என எச்சரிக்கப்பட்டு அந்த அனாதை நாடுகடத்தப்பட்டதாகவும் சரித்திரத்தின் ஓரப்பக்கம் தெரிவிக்கிறது.
ஆனால் அவள் காதலன்? ஆடிப்போன இளவரசனின் கணக்கில் அவனது அப்பன், அவனது காதலியை உயிரோடு கொன்றுபோட்டான். காதலை அழித்துவிட்டான்.  பித்துப்பிடித்தவன் போலானான் சலீம். ஜஹாங்கீர் என்கிற பெயரில் பிற்காலத்தில் ஆட்சி செய்தும், இறுதிவரை அவன் அனார்கலியின் நினைவில் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
அனார்கலி? அவள்தான் ஏழையாயிற்றே? ஏழைக்கேது சரித்திரம்?
*

8 thoughts on “காதலுக்கு இதுதானா பரிசு ?

 1. Neengal oru perum Kalanjiyam…

  Ungal varigalaip padikkum pozhuthu, neril ketpathu pol ullathu.

  Nandri … Melum thodarungal…

  Liked by 1 person

  1. @ Ramanujam, Congo :

   நன்றி. உண்மையில் கிரிக்கெட் பற்றி எழுதிக்கொண்டிருந்தேன். இடையில்,இந்தப்பாட்டும், அனார்கலியும் படுத்த, ட்ராக் மாறி எழுதிவிட்டேன், வாலண்டைன் தினத்தில் இருக்கட்டுமே ஒன்று என!

   Like

 2. நிறைவேறாத காதல்கள்தான் அமரத்துவம் பெறுகின்றன. நிறைவேறிய காதல்கள் திருமணத்தில் “முடிகின்றன”!

  Liked by 1 person

  1. @ ஸ்ரீராம்:

   சத்யம்.
   நிறைவேறிய காதல்களை, ‘போதும் நீங்கள் கிழித்தது’ என ‘முடித்து’விடுகிறாரோ கடவுள் !

   Like

 3. ஏகாந்தன் அண்ணா ஜஹாங்கீர் அனார்க்கலி கதை தெரியும் என்றாலும் நீங்க இங்கு சொன்னது சத்தியமா அப்படியே விஷுவலைஸ்டா இருந்தது…ஆனா அந்தக் கடைசி மட்டும் புதுசு அதாவது அந்த ஓரத்தில் சொல்லப்பட்டது!!!

  சரி வேலண்டைன்ஸ்டே அன்னிக்கு இப்படி தோல்வியுற்ற காதலையா சொல்லனும்…கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நல்ல வெற்றியடைந்ததுன்னு சரித்திரமா எதுவும் இல்லையா என்ன?!!!

  எல்லா நாளும் காதல்/அன்பு தினம் தானே இல்லையோ?!! …

  கீதா

  Liked by 1 person

  1. @கீதா:
   அனார்கலி (1953), முகல்-ஏ-ஆஸம்(1960) என இரண்டு புகழ்பெற்ற ஹிந்தி படங்கள் இந்தக் கதையைக் கருவாகக்கொண்டு எடுக்கப்பட்டவை -ரசிகர்களைக் காலத்துக்கும் கட்டிப்போட்டிருக்கின்றன. மேலும் பிறமொழிகளிலும் இது படமாக்கப்பட்டு ஓடியிருக்கிறது (கீழே கீதா Sr.-க்கான பதிலையும் பார்க்க).

   //தோல்வியுற்ற காதலையா சொல்லனும்..//
   காதல் எங்கே, என்று தோற்றது? வெற்றி, தோல்வியைத் தாண்டிய உலகல்லவா அது!

   ஆமாம். காதலுக்கும், அன்புக்கும் தனியாக நேரம், காலமா வேணும்? நேரமே, காலமே அதுதானே..

   Like

 4. .//.இளவரசனை மயக்கிப்போட்ட நடனமாது அனார்கலியாக பீனா ராய்.// மதுபாலா நடிச்சது வேறே, இது வேறேயா? மதுபாலா நடிச்ச படத்தில் தானே, ப்யார் கியா தோ டர்னா க்யோம்! பாடல், பிரபலமானது வரும்! கொஞ்சம் புரியலை. மற்றபடி மதுபாலா நடிச்ச படத்திலும் நீங்க சொல்லும் கதை தானே! அது பார்த்திருக்கேன்.

  Like

 5. @ கீதா சாம்பசிவம்:

  ஆமாம். முதலில் வந்த படம் பீனா ராய் (அனார்கலி), ப்ரதீப் குமார்(சலீம்) நடித்த அனார்கலி (1953)- நான் குறிப்பிட்டிருப்பது.

  நீங்கள் மேலே சொல்லியிருப்பது ’‘முகல்-ஏ-ஆஸம்’ – 1960-ல் வந்தது. மதுபாலா அனார்கலியாக, திலீப்குமாருடன் (சலீம்) நடித்த புகழ்பெற்ற படம். கதையும் கிட்டத்தட்ட அதுவேதான். அதில் நீங்கள் குறிப்பிட்ட ‘ப்யார் கியா தோ டர்னா க்யா..’ -பல பாடல்களுல் ஒன்றாக வருகிறது. வெவ்வேறு மொழிகளிலும் இதற்கு ரீ-மேக் உண்டு.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s